காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்



கண்ணனும் துர்வாசரும்

“எனக்குக் கோபம் வந்திச்சின்னு வெச்சிக்க! நான் துர்வாசராஆயிடுவேன்”
“என்னப்பா இது? அந்தாளுக்கு துர்வாசர் மாதிரி ‘முணுக்’ குங்கறதுக்குள்ள மூக்குக்கு மேல கோபம் வருது” நம்மில் பலர் பேசக்கூடிய வார்த்தைகள்தாம் இவை. துர்வாசரின் தவம், அம்பிகையை நேருக்கு நேராகத் தரிசித்த அவரது பக்தி, அம்பிகையைக்குறித்து அவர் வகுத்துத் தந்த பூஜைமுறைகள் ஆகியவற்றைப்பற்றி நமக்குத் தெரியுமோ; தெரியாதோ! ஆனால், அவருடைய கோபம் மட்டும் நம் எல்லோரிடமும் கூடாரமடித்துப் பதிந்திருக்கிறது.

வாருங்கள்! கோபமில்லாத துர்வாசரைப் பார்க்கலாம்.சால்வ தேசத்து மன்னர் பிரம்மதத்தன்; தர்மம், இரக்கம் ஆகியவைகளில் தலைசிறந்து விளங்கிய அவரிடம் கடுகளவு கூடக் காமமோ, குரோதமோ இல்லை. வேதாந்தங்களில் கரைகண்ட அவருக்கு, இரு மனைவியர் இருந்தார்கள்.

என்ன இருந்து என்ன பலன்? அரசருக்குக் குழந்தைச் செல்வம் இல்லை.அரசருக்கு நண்பன் ஒருவன் இருந்தான்; மித்திரசகன் என்று பெயர்பெற்ற அந்தணனாகிய அவருக்கும் மழலைச் செல்வம் இல்லை. நண்பர்கள் இருவரும் குழந்தை வேண்டுமென்பதற்காகத் தவம் செய்யத் தீர்மானித்தார்கள். அரசர் சிவபெருமானை நோக்கியும்; மித்திரசகன் மகாவிஷ்ணுவை நோக்கியும் தவமிருந்தார்கள்.

 தவத்தின் பலனாக; அரசருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஹம்சன், டிம்பகன் எனப் பெயர் வைத்தார்கள். அரசரின் நண்பரான மித்திரசகனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது; அவனுக்கு ஜனார்த்தனன் எனப் பெயர் இட்டார்கள்.குழந்தைகள் மூவரும் ஒன்றாகவே வளர்ந்தார்கள்; வேதங்கள், நீதி சாஸ்திரம், வில்வித்தை ஆகியவற்றில் திறமைசாலிகளாக விளங்கினார்கள்.

சாதாரணமாக மனித உள்ளம் சுகங்களையும் இன்பங்களையும் தேடியலைவது மனித இயல்பு. அதிலும் கொஞ்சம் படித்து சில விவரங்களைத் தெரிந்து கொண்டு விட்டால்.... கேட்கவே வேண்டாம்; தான் அனுபவித்து வரும் சுகங்களையும் இன்பங்களையும் மேலும்மேலும் பெருக்கி, அவற்றை நிலையாக நிறுத்திக்கொள்ளப் பாடுபடும்; எதையும் இழக்கச் சம்மதிக்காது; சாதாரண மனிதர்களுக்கே இப்படியென்றால், அரச குமாரர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

அரசகுமாரர்களான ஹம்சனும் டிம்பகனும் இளமைப் பருவத்தை அடைந்ததும், “அரசகுமாரர்களான நாம் நம் சுக வாழ்வைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். யாராவது குறுக்கே வந்தால், அவர்களை விட்டு வைக்கக்கூடாது; முடித்துவிட வேண்டும். பலவற்றையும் பெற்றுப் பகையில்லாமல் வாழ வேண்டும். அதற்காக சிவபெருமான் அருளால் பிறந்த நாம், சிவபெருமானை நோக்கித்தவம் செய்ய வேண்டும்” என்று தீர்மானித்தார்கள்.
இருவரும் இமயமலைச் சாரலுக்குப் போய்க் கடுந்தவம் செய்தார்கள்; மனதை அலையவிடாமல் ஒருமித்த மனதுடன், காற்றையும் தண்ணீரையும் மட்டுமே உணவாகக் கொண்டு, ஐந்து வருடங்கள்கடுந்தவம் புரிந்தார்கள்.

அவர்களின் கடுந்தவம், சிவபெருமானை அவர்கள் முன்னால் நிறுத்தியது; கண்முன்னால் தரிசனம் தந்த கயிலைநாதரை, ஹம்சனும் டிம்பகனும் வணங்கி எழுந்தார்கள். தாங்கள் தவம்செய்தநோக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.“சிவபெருமானே! தேவ, அசுர, ராட்சசர்களால் கூட, நாங்கள் ஜெயிக்கப்படாதவர்களாக இருக்க வேண்டும். மாகேஸ்வரம், ரௌத்ரம், பிரம்மசிரசு எனும் அஸ்திரங்கள்; உடைக்க முடியாத கவசங்கள், உடைக்க முடியாத வில், அதேபோன்ற கோடாரி ஆகியவற்றை எங்களுக்கு அருள வேண்டும்.

“மேலும் போர்க் களத்தில் பாதுகாவலர்களாக எப்போதும் எங்களுடன் இருக்கும்படியாக இரண்டு பூதங்களையும் அருள வேண்டும்!” என்று ஹம்சனும் டிம்பகனும் வரம் வேண்டினார்கள்.“அப்படியே ஆகட்டும்!” என்ற சிவபெருமான், குண்டோதரன் -விரூபாட்சன் எனும் இரு பூதங்களை அரச குமாரர்
களுக்கு யுத்த காலத்தில் உதவியாளர்களாக நியமித்து மறைந்தார்.

எண்ணிவந்த காரியம் நிறைவேறியதும் ஹம்சனும் டிம்பகனும் அரண்மனைக்குத் திரும்பினார்கள்; பெற்றோர்களிடம் நடந்தவற்றையெல்லாம் விவரித்தார்கள். அரண்மனையே ஆனந்தத்தில் மூழ்கியது.அரச குமாரர்களின் நண்பனான ஜனார்த்தனன் தனக்கு உண்டான முறைப்படி முறையாக வேதங்களைப் பயின்று, விஷ்ணு பக்தனாக இருந்து கொண்டு, அரசகுமாரர்களுடன் இணை பிரியாது இருந்தான்.

சிறிது காலம் சென்று ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன்- இம்மூவருக்கும் திருமணம் நடந்தது. இல்லற தர்மத்தை முறையாக நடத்தி வந்தார்கள்.
அரச குமாரர்களின் விதி அவர்களை, காட்டிலுள்ள ஆசிரமங்களை நோக்கி இழுத்தது. ஒருநாள்...அரச குமாரர்கள் இருவரும் காட்டிற்கு வேட்டையாடப் போனார்கள்; நண்பனான ஜனார்த்தனனும் கூடப்போனான். வெகுநேரம் வேட்டையாடிக் களைத்தார்கள்.

நடுப்பகல் நேரம். அனைவரும் புஷ்கர தீர்த்தத்தை அடைந்தார்கள்; ”ஆஹா! களைப்பு தீரக் குளிக்கலாம்”என்று ஆனந்தமாக நீராடினார்கள். எல்லோரும் கரையேறிய சற்று நேரத்தில், அங்கே வேதகோஷம் கேட்டது.“நல்ல சகுனம்! வேத வல்லுனர்களின் கோஷம் கேட்கிறது. அந்த உத்தமர்களைத் தரிசித்து வழிபட வேண்டும். வீரர்களே! நீங்கள் அனைவரும் இங்கேயே நில்லுங்கள்! நாங்கள் மூவர் மட்டும் சென்று வேத வல்லுனர்களை வணங்கி விட்டு வருகிறோம்” என்று மகிழ்ச்சியோடு சொன்ன அரச குமாரர்கள், ஜனார்த்தனனையும் அழைத்துக்கொண்டு வேதகோஷம் வந்த இடத்தை நோக்கிச் சென்றார்கள்.

அங்கே ஓர் அழகிய யாக மண்டபத்தில் காஸ்யப மகரிஷி ‘வைஷ்ணவம்’ என்னும் உயர்ந்ததான யாகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அங்கே ஏராளமான மகரிஷிகள் இருந்தார்கள்.அவர்களைப் பார்த்ததும் ஹம்சன், டிம்பகன், ஜனார்த்தனன் ஆகியோர் வணங்கி, தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்; ‘‘அரண்மனையில் ராஜசூய யாகம் நடக்கப் போகிறது. நீங்கள் எல்லோரும் அதற்கு வந்திருந்து, எங்களுக்கு அருள்புரிய வேண்டும்” என்ற வேண்டுகோளையும் அங்கிருந்த மகரிஷிகளிடம் வெளியிட்டார்கள்.

மகரிஷிகளில் ஒருவர்கூட மறுக்கவில்லை;’’ அப்படியே ஆகட்டும்” என்று தங்கள் ஒப்புதலைச் சொல்லி ஆசிகூறினார்கள்.அதைக் கேட்டதும் மூவரும் மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்டு, வடதிசை நோக்கிச் சென்றார்கள்.அங்கேதான் துர்வாச முனிவர் துறவுநிலையை மேற்கொண்டு, தன் சீடர்கள் புடைசூழத் தவம் செய்து வந்தார். பரமபதத்தை அடைய வேண்டும் என்பதற்காக மகாவிஷ்ணுவை நோக்கிக் கடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார், துர்வாசர்.
 யாருடைய கோபத்தைக் கண்டு தேவர்கள் கூடப் பயந்து நடுங்குவார்களோ,அப்படிப்பட்ட துர்வாசர் காவி வண்ணக் கோவணத்தை அணிந்து, பொறுமையே விரதமாகக் கொண்டு தவம் செய்துவந்தார்.

துர்வாசரும் அவர் சீடர்களும் மிகவும் அமைதியான நிலையில் தவம் செய்து வருவதை, ஹம்சனும் டிம்பகனும் பார்த்தார்கள்; ‘‘துர்வாசரா இப்படி? இவரைச்சீண்டிப் பார்க்க வேண்டும்” எனநினைத்தார்கள். காரணம்? பாம்பு சீறினால்தான் மக்கள் பயந்து ஒதுங்குவார்கள். அது சீறவில்லை என்றால், சீண்டிப் பார்க்க நினைக்கிறார்களல்லவா?அதுபோல... துர்வாசர் என்றாலே கடுங்கோபம் கொண்டவர். அப்படிப்பட்ட அவர்போய், கோப-தாபங்களை எல்லாம் முழுமையாக விட்டு, அமைதியின் வடிவாக இருந்து தவம் செய்தால்... அதனால்தான் அவரைச் சீண்டிப் பார்க்க நினைத்தார்கள்.

மேலும்... ஹம்சனும் டிம்பகனும் துடுக்குத்தனம் நிறைந்த வாலிப வயதினர்; அனைவரையும் ஆட்டிப் படைக்கும் அரச குமாரர்கள்; அனைத்திற்கும் மேலாக, ‘சிவபெருமானிடம் இருந்தே வரம் வாங்கி இருக்கிறோம்’ என்ற கர்வம் வேறு; இவற்றுடன் அவர்களின் கெட்டகாலமும் சேர்ந்து கொள்ள, அதன் காரணமாகவே ஹம்சனும் டிம்பகனும் துர்வாசரைச்சீண்டிப் பார்க்க நினைத்தார்கள்.

நல்லது செயல்பட நாளாகும்; கெட்ட தென்றால்....கேட்கவே வேண்டாம்.அப்போதே நடைமுறைக்கு வந்துவிடும்.ஹம்சனும் டிம்பகனும் உடனே செயல்பாட்டில் இறங்கினார்கள்; “என்ன இது அக்கிரமம்! இவர்களெல்லாம் யார், சந்நியாசியாகி இப்படித்தவம் செய்யச் சொன்னார்கள்? இல்லறத்தான் அல்லவா உயர்ந்தவன்? இல்லறத்தான் தான்ஜீவநாடியாக இருந்து கொண்டு, எல்லோரையும் தாய்போல் காப்பாற்றுகிறான்.

 ‘‘அதை விட்டுவிட்டு, முட்டாளைப்போல  எப்போதும் தியானம் செய்பவனைப்போல இருந்து, இந்தத் துர்வாசர் ஏமாற்றுகிறாரா? இவர்கள் எல்லோரையும் இல்லறம் ஏற்கும்படிச் செய்வேன் நான். குறிப்பாக இந்தத் துர்வாசருக்கு நல்லபுத்தி சொல்லி விட்டுத்தான், நான் இங்கிருந்து போவேன்” என்று கோபத்துடன் கத்திக்கொண்டே, கூடவந்த ஜனார்த்தனனையும் இழுத்துக்கொண்டு ஹம்சனும் டிம்பகனும் துர்வாசரை நெருங்கினார்கள்.
“இல்லறத்தை விட்டுத் துறவறம் மேற்கொண்டவரே! துர்வாசரே! உம்மைப்பார்த்தால், அறிவில்லாதவனைப் போலத் தெரிகிறது. நீர் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்? துறவுதான் உயர்ந்தது உங்கள் எண்ணமா?

“இல்லறத்தை விட்டுத் துறவறத்தை மேற்கொண்டதால், நீங்கள் என்ன லாபம் கண்டீர்கள்? நீங்கள் கெட்டது போதாது என்று, கூட இருப்பவர்களையும் அல்லவா கெடுக்கிறீர்கள்? உங்களைக் கேட்பதற்கு யாருமில்லை என்ற எண்ணமா?“உங்களுக்கெல்லாம் தண்டனை கொடுத்தாலும் தவறு இல்லை. உடனடியாக நீங்கள் இந்தத் துறவறத்தை விட்டு, இல்லறத்தை ஏற்று, அதற்குண்டானகடமைகளைச் செய்ய வேண்டும்.

“அப்படிச் செய்தால்தான், உங்களுக்கு நல்லகதி கிடைக்கும். உயிர்மீது உங்களுக்கு ஆசை இருந்தால், நாங்கள் சொன்னதைக் கேளுங்கள்! உயிர் பிழைப்பீர்கள். இல்லாவிட்டால் அவ்வளவுதான்” என்றுமிரட்டினார்கள்.அவர்களுடன் வந்திருந்த அவர்களின் நண்பனான ஜனார்த்தனன் மனம் வருந்தி, அவர்களுக்காகத் துர்வாசரிடம் மன்னிப்பு கேட்டான்; ஹம்சனுக்கும் டிம்பகனுக்கும் புத்திமதி சொன்னான்.

“அரச குமாரர்களே! நீங்கள் இப்படிப் பேசுவது நல்லதல்ல. துர்வாசரின் மகிமையும் சந்நியாச ஆசிரமத்தின் பெருமையும் உங்களுக்குத் தெரியாது. உங்களைப்போல இழிவான வார்த்தைகளைப் பேசுபவர்களும் அவற்றைக் கேட்பவர்களும் கோரமான நரகத்தை அடைவார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.

“உங்களுக்கு அழிவுகாலம் நெருங்கி விட்டது. அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்கள். துறவிகள் மிகவும் உயர்ந்தவர்கள் என எல்லோரும் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட மகான்களை நெருங்கி, நல்ல அறிவைப் பெறாததால்தான் இப்படிப் பாகவதர்களை இழிவாகப் பேசிப்பாவத்தைச் சுமந்து கொள்கிறீர்கள்.

“நான் என்ன பாவம் செய்தேனோ? நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்கும்படி ஆயிற்றே! ” என்று சொல்லி வருந்தினான் ஜனார்த்தனன்.
 இவ்வளவு நடந்தும் துர்வாசர், தன் பொறுமையைக் கை விடவில்லை; சிறு சம்பவம் நடந்தால் கூடச் சீறிப் பாய்ந்து சாபம் கொடுத்துப் பலரை வருத்தப்படுத்திய அவர், அப்போது மிகவும் அமைதியாக இருந்தார். ஆனால், அவர் மனம் சற்றே கலங்கியது.

(தொடரும்)

பி.என். பரசுராமன்