திருமூலர் கூறும் அக்னி வழிபாடு



தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில் திருமூலர் அக்னி வடிவமாக விளங்கும் சிவபெருமானின் வழிபாட்டையும் அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார்.
முதல் தந்திரத்தில் அக்னி காரியம் என்ற தலைப்பில் சிவபெருமான் அழல் வடிவமாக விளங்குவதைக் குறித்து அவர் நான்காம் தந்திரத்துள் நவகுண்டம் என்ற தலைப்பில் சிவபெருமானை அக்னியின் வடிவமாகப் போற்றி வழிபட வேண்டியதையும் அதனால் உண்டாகும் அருட்பயனையும் முப்பது பாடல்களில் அருளிச் செய்கின்றார்.

இதன் கருத்தாவது : நாற்கோணம், பிறை, முக்கோணம், வட்டம், தாமரை, யோனி, ஐங்கோணம், அறுகோணம், எண்கோணம் ஆகிய ஒன்பது வகையான குண்டங்களில் தீயின் வடிவாக பெருமான் விளங்குகின்றான். இந்த அக்னி குண்ட வழிபாட்டை முறையாகக் கடைபிடிப்பதால் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஆக்கி அழிக்கலாம் என்று எல்லையற்று பரந்து கிடக்கும் அனைத்துச் சமய நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளன.

சாதகன் வெளியே கனல் வழிபாடு செய்வதைப் போலவே தன் உடலுக்குள்ளேயுள்ள பதினாறு இடங்களில் அக்னியைத் தியானிக்கப் பதினாறு பிரசாத கலைகளும் நமக்கு உள்ளருள் பதினாறு வழங்கும். இதனால் சாதகனின் வினைகள் நீங்கும். இந்த குண்டங்களில் பன்னிரண்டு ராசிகளையும் பாவித்து வழிபட எல்லா தேவர்களும், கோள்களும் மகிழ்கின்றார்கள்.

இக்குண்டத்தில் வளரும் தீயின் சுடர்களே சிவபெருமானுக்குச் சிரமாகும். வட்டமிட்டு நிற்பது முகமாகும். பக்கவாட்டில் நீளும் தீப்பிழம்புகள் கரங்களாகும். நீலமாக உள்ள நடுப்பகுதி உடலாகும். இதுவே சிவலிங்கம் என்று பார்வதி எனக்குக் கூறினாள் என்று கூறுகின்றார். பராசக்தியே இந்த வேள்வியில் சொல்லப்படும் மந்திரங்களாக இருக்கின்றாள். அவளை அறிவதே இந்தச் சாதனையை அறிந்ததாகும்.

வேள்வித் தீ நடராஜரின் வடிவமாகவும் இருக்கின்றது. இதுவே முருகனின் வடிவான குகாக்கினியாகவும் இருக்கின்றது. உயிரின் உள்ளே ஆன்மத் தீயாகவும், உலகில் வேள்வித்தீயாகவும் விளங்கும் சிவபெருமானே கோயில்களில் உள்ள திருஉருவங்களிலும் கலந்து நிற்கின்றான். இதனால் தினமும் கோயில்களில் அக்னி வழிபாடு செய்ய வேண்டியது அவசியமாகும். சிவாக்கினியின் திருவுருவம் மூன்று திருவடிகளையும் கருத்துக் கோபிக்கும் இரண்டு முகங்களையும், வலிய நான்கு கொம்புகளையும், விரிந்த ஆறு, கண்களையும் ஏழு நாக்குகளையும் ஏழு கரங்களையும் கொண்டு விசித்திரமாக அமைகின்றது.

இந்தச்  சிவாக்கினியைத் தம்முன் அடக்கி கொள்ளத்தக்க பொருளில்லை, அதனை அளந்து அளவிட முடியாது. அதற்குக் கால எல்லை இல்லை. எனவே, அதனை நமது அகத்துள் உணர்ந்து அறிவதே அறிவுடைமையாகும். மேலும், சிவாக்கினி தேவனுக்கு ஒரு வடிவம் உள்ளது. அதன்படி அவர் ஐந்து முகங்கள், இருபது கரங்கள், பதினைந்து கண்கள், ஐந்து வாய், பத்து காதுகள், இரண்டு திருவடிகள் கொண்டவராய் அர்த்தநாரீஸ்வரராக விளங்குகின்றார். சதாசிவ மூர்த்தியையொத்த இந்த மூர்த்தியினின்று இருபத்தைந்து மகேஸ்வர மூர்த்தங்கள் தோன்றி உலகினைக் காத்து அருள்புரிகின்றன. சிவவேள்வியினால் முக்தியின்பம் கூடுகின்றது.

ஏழுலக மக்களுக்கும் வேள்வித்தீ வழிபாடு ஒன்றே சிறந்து பலனளிக்கவல்லது.வேள்வித்தீயுள் சிவபெருமான் பாலகனாகவும், காளைப் பருவத்தினாகவும் விளங்குகின்றான். புறத்தில் வளர்க்கின்ற நவகுண்ட வேள்வியைப் போலவே ஞானி யோகத்துடன் தனது அகத்தில் யோகாக்னியை வளர்க்கின்றான். தீயின் வடிவமாக ஒன்பது குண்டங்களில் விளங்கும் சிவபெருமானை வழிபடுவதால் சிறந்து பயன்கள் கிடைக்கின்றன என்று கூறுவதுடன் ஒவ்வொரு வகையான குண்டத்தில் வளரும் தீயினை வழிபடுவதால் கிடைக்கும் சிறப்புப் பயனையும் கூறுகின்றார்.

இதன்படி யோனி குண்ட வழிபாட்டைச் செய்வதால் சக்தியருள் கிடைப்பதுடன், காய சித்தி, மாறா இளமை முதலியன கிடைக்கின்றன. இதுபோன்றே, நாற்கோண குண்டத்தினை வழிபடுவதால் அரிய சாதனைகளை நிகழ்த்தலாம். முக்கோண குண்ட வழிபாடு நாம் வாழ்வில் செய்ய வேண்டிய வேள்விக் கடன்களின் பயனை நல்குவதாகும்.

வில் போன்ற சந்திரவடிவமான குண்டம் வெற்றிகளையும், வட்டமான குண்டத்து அழல் துன்பங்களை நீக்கிச் சுகத்தையும் தருகின்றது.  அனைத்து நற்பயன்களை அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு எண்கோண குண்டமும் ஆசிரியனாகி கற்பிக்கும் தகுதிபெற பத்ம குண்டத்தையும் அரச போகத்தை அடைந்து அனுபவிக்க பஞ்சகோண குண்டத்தையும் பூசிக்க வேண்டும் என்று கூறுகின்றார். இதில் வேதம், ஆகமம் ஆகிய இரண்டிலும் கூறப்பட்டுள்ள அக்னிவடிவங்கள் கூறப்பட்டுள்ளது நோக்கத்தக்கதாகும்.

ஆட்சிலிங்கம்