நலம் தரும் நரசிம்மர் தரிசனம்-38வெண்ணாற்றங்கரையின் அற்புத ஆலயங்கள்

சோழ தேசமாம் தஞ்சையில் வீர நரசிங்கப் பெருமாள் கோயில்,நீலமேகப் பெருமாள் கோயில், மணிக்குன்ற பெருமாள் கோயில் என மூன்றும் ஒரே இடத்திலேயே அமைந்துள்ளன.தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள். பழைய பேருந்து நிலையத்திலிருந்து வந்து, அங்கிருந்து பள்ளி அக்ரஹாரத்திற்குச் செல்லும் வழியில், இடது புறம் சென்றால், வெண்ணாற்றங் கரையில் மூன்று பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. மூன்று ஆலயங்களுமே, கிழக்கு நோக்கி அமைந்துள்ளன என்பது கூடுதல் சிறப்பு என்கிறார்கள், ஆச்சார்யப் பெருமக்கள்.

பராசர மகரிஷி மணிமுக்தா நதிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் செய்து வந்தார். அந்த நதியில் தான் கொண்டு வந்த அமிர்தத்தைக் கலந்தார். அப்போது சிவனிடம் சாகா வரம் பெற்ற தஞ்சகன், தண்டகன், தாராசுரன் என்ற அசுரர்கள் அவரைத் தொந்தரவு செய்தனர். பராசரர் அவர்களை எச்சரித்தார். அவர்களோ கேட்பதாக இல்லை. எனவே, அவர்களை தண்டிக்கும்படி சிவனிடம் வேண்டினார். சிவன் காளிதேவியை அனுப்பி அசுரர்களை வதம் செய்தார். ஆனால், அசுரர்கள் மூவரும் அமிர்தம் கலந்த நதி நீரைப் பருகி, மீண்டும் மீண்டும் உயிர் பெற்று முனிவர்களை கொடுமைப்படுத்தினர்.  

பராசர முனிவரையும் துன்புறுத்தினார்கள். மக்களும் ஓடிவந்து முனிவரிடம் முறையிட்டார்கள். ‘எங்களைக் காப்பாற்றுங்கள்’ என கதறினார்கள். அனைவரின் நலனுக்காகவும் அரக்கர்களை அழிக்க வேண்டியும் பராசர முனிவர், மகாவிஷ்ணுவைப் பிரார்த்தித்தார். அங்கே, பிரத்யட்சமானார் திருமால். அசுரர்களை அழிக்க முனைந்தார்.

பராசரர் மகாவிஷ்ணுவிடம் வேண்டினார். மகாவிஷ்ணு அசுரர்களை அழிக்கச் சென்றார். அப்போது தஞ்சகன் யானை வடிவம் எடுக்கவே, விஷ்ணு அவனை அழிக்க நரசிம்ம அவதாரம் எடுத்து, தன் மடியில் கிடத்தி வயிற்றைக் கிழித்தார். அவரது ஸ்பரிசம் பட்டதும் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் ஒழியப் பெற்ற அவன் மகாவிஷ்ணுவிடம், ‘‘எனக்காக நரசிம்மராக வந்த நீங்கள் இங்கேயே தங்கி மக்களுக்கும் அருள வேண்டும், எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்” எனக் கேட்டான்.

அவரும் அருள்புரிந்தார். அவனது பெயரால் இத்தலம் ‘‘தஞ்சமாபுரி’’ எனப்பட்டது. (பிற்காலத்தில் தஞ்சாவூர் ஆனது) தஞ்சகனின் அழிவைக்கண்ட தண்டகன், பூமியை பிளந்து கொண்டு உள்ளே சென்றான். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பின் காளியை அனுப்பி தாரகனை வதம் செய்தார். மூன்று அசுரர்களும் அழிக்கப்பட்ட பிறகு அவர் பராசரருக்கு நீலமேகப்பெருமாளாக காட்சி தந்தார். வீர நரசிம்மர், மணிக்குன்றப் பெருமாள் என்ற பெயர்களிலும் இங்கு அருள்பாலிக்கிறார். மூன்று கோயில்களும் ஒரே வளாகத்தில் உள்ளன. ஒரே திவ்யதேசமாகப் போற்றப்படுகின்றன.

சுவாமியின் திருநாமம் - வீரநரசிங்கப் பெருமாள். வீற்றிருந்த கோலத்தில் இருந்தபடி, தன்னை நினைப்போர்க்கும் வந்து தரிசிப்போர்க்கும் அருளி வருகிறார்.நாமக்கல் தலத்திலுள்ள நரசிங்கரைப் போல, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது சிறப்பு. மார்க்கண்டேயருக்கு காட்சி தந்த கோலத்தில் அற்புதமான தரிசனமாகத் திகழ்கிறது.

நரசிம்மரின் விமானம் வேத சுந்தர விமானம் என்றும் கோயிலின் தீர்த்தம் சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது. வெண்ணாறு சோழ தேசத்து திவ்ய தேசங்களில், இது மூன்றாவது தலம் என்கிறது ஸ்தல புராணம். திருமங்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் இங்கே வந்து மங்களாசாசனம் செய்திருப்பதை விவரிக்கிறது ஸ்தல புராணம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில், வெண்ணாற்றங்கரை வீரநரசிங்கப் பெருமாளை தஞ்சையின் பல பகுதிகளில் இருந்தும் வந்து தரிசித்துச் செல்கின்றனர் பக்தர்கள்.

கோயிலுக்கான வளைவைக் கடந்து உள்ளே செல்லும்போது நுழைவாயில் உள்ளது. நுழைவாயிலை அடுத்து பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சந்நதி உள்ளது. முன் மண்டபத்திற்கு அடுத்து கருவறை உள்ளது. கருவறையில் வீரநரசிம்மப் பெருமாள் உள்ளார்.
மூலவர் சந்நதியின் இடப்புறம் ரங்கநாதர்,வரதராஜர், விஷ்வக்சேனர், பெரிய நம்பிகள், ஆளவந்தாரும், ராமானுஜர், மணவாள முனிகள் ஆகியோர் உள்ளனர்.

திருச்சுற்றில் தஞ்சைநாயகி சந்நதியும், ஆண்டாள் சந்நதியும், திருமங்கையாழ்வார் சந்நதியும் உள்ளன. இந்தக் கோயில் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்தது.தஞ்சாவூரில் நீலமேகப் பெருமாள், மணிக்குன்ற பெருமாள், வீரநரசிம்மர் பெருமாள் கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்யதேசமாக இருக்கிறது. இந்தக் கோயில்கள் அருகருகே உள்ளன.

வீரநரசிம்மர் கோயிலில் மகாவிஷ்ணுவே சக்கரத்தாழ்வாராக இருக்கிறார். வலப்புறத்தில் இருக்கும் யானையை தடவிக் கொடுத்தபடி இருக்க, இடப்
புறத்தில் தஞ்சகாசுரன் சுவாமியை வணங்குவதுபோல சிலை அமைப்பு இருக்கிறது. இவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் யோக பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். அவருக்கு இருபுறமும் இரண்யன், பிரகலாதன் இருக்கின்றனர். நரசிம்மரின் இடதுபுறத்தில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமி, நீலமேகப் பெருமாள் கோயில் பிராகாரத்தில் அவருக்கு வலப்புறத்தில் இருக்கிறாள். இவரை வலவந்தை ‘நரசிம்மர்’ என்கின்றனர்.

அசுரனை அழித்த நரசிம்மரின் இதயம் கோபத்தில் துடித்துக் கொண்டிருக்க இத்தலத்தில் அமர்ந்தார். கோபம் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதில்லை. எனவே, அவள் நரசிம்மருக்கு வலப்புறத்தில் அமர்ந்து கொண்டாள். கோபம் கொண்டவர்களுக்கு லட்சுமி கடாட்சம் கிடைக்காது என்பதை இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.

அதிகமாக கோபப்படுபவர்கள் இவரை வணங்கி மன அமைதி பெறலாம். சிங்கப்பெருமாள் கோயிலில் வீர நரசிம்மர், முன் மண்டபத்தில் யோக நரசிம்மர், நீலமேகப் பெருமாள் கோயில் பிராகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கருடாழ்வார் விமானத்தில் அபயவரத நரசிம்மர், தாயார் சந்நதியில் உள்ள தூணில் கம்பத்தடி யோக நரசிம்மர் என இத்தலத்தில் பஞ்ச நரசிம்மர்கள் காட்சி தருகின்றனர். மூன்று மூலவர்களுக்கும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. இத்தலத்து தாயார் செங்கமலவல்லி,தஞ்சைநாயகி, அம்புஜவல்லி என்ற பெயர் களால் அழைக்கப்படுகிறாள்.

ஹயக்ரீவர் லட்சுமியுடன் இருக்கிறார். கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவர், செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிக்கு ஏலக்காய் மாலை சாத்தி, நெய்விளக்கு, கற்கண்டு படைத்து வணங்கினால் கல்வி, செல்வம் செழிக்கும்.பங்குனி, சித்திரை, வைகாசியில் மூன்று பெருமாள்களுக்கும் பிரம்மோற்சவம் நடக்கிறது. வைகாசியில் 18 கருடசேவைதிருவிழா விசேஷம்.

நவநீத சேவையின்போது தஞ்சாவூரிலுள்ள நீலமேகப் பெருமாள், நரசிம்மப் பெருமாள், மணிக்குன்னப் பெருமாள், கல்யாண வெங்கடேசப் பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு - ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவ கண்ணன் கோயில், கீழராஜவீதி வரதராஜப் பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராம பெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாத பெருமாள், படித்துறை வெங்கடேசப் பெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் ஆகிய பதினைந்து கோயில்களைச் சேர்ந்த பெருமாள்கள் கலந்து கொள்கின்றனர். அந்தக் கோயில் களில் இந்த கோயிலும் ஒன்றாகும்.

அடுத்த தலமான நீலமேகப் பெருமாள் திருக்கோயிலை பார்ப்போமா!
வெண்ணாற்றங்கரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருமங்கையாழ்வார் திருமாலை ‘கருமுகில்’ என்று பாடிக்கிறங்கினாரே... அதை நினைவூட்டும் விதமாக பெருமாளின் திருநாமம் நீலமேகப் பெருமாள் என்று போற்றப்படுகிறது. வெண்ணாற்றங்கரை வீர நரசிங்கப் பெருமாள் கோயில் போலவே இந்தக் கோயிலும் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது.

மூன்று நிலை கோபுரம் கொண்ட அழகிய தலம். இங்கே, தாயாரின் திருநாமம் - செங்கமலவல்லித் தாயார். தீர்த்தம் அமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. பராசர முனிவருக்கு பெருமாள் காட்சி கொடுத்தார் அல்லவா. அதே திருக்கோலத்தில், வீற்றிருந்த கோலமாகத் திகழ்கிறார் பெருமாள். நமக்கு என்ன பிரச்னையோ சிக்கலோ வந்தாலும் அவற்றை நீலமேகப் பெருமாளிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தால் போதும். விரைவில் சிக்கல்களையும் கவலைகளையும் தீர்த்து வைப்பார்பெருமாள், என்கின்றனர் பக்தர்கள்.

மூன்றாவது திருத்தலம் மணிக்குன்ற பெருமாள் திருக்கோயில். கோயிலின் விமானம் மணிக்கூடம். கிழக்கு நோக்கிய நிலையில் காட்சி தருகிறார் மணிக்குன்ற பெருமாள். இந்தப் பெருமாளும் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.வீரநரசிங்கப் பெருமாள் கோயிலுக்கு அருகில் கிழக்குப் பார்த்த கோயிலாக அமைந்துள்ளது இந்த திருத்தலம். அற்புதத் திருமேனியராக, தனி அழகுடன் ஜொலிக்கிறார் பெருமாள். கோயிலின் தீர்த்தம் ராம தீர்த்தம். தாயாரின் திருநாமம் - அம்புஜவல்லித் தாயார். தாயாரும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகிறார்.தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

(தரிசனம் தொடரும்)

ந.பரணிகுமார்