திருவாதிரையும் திருப்பணியும்..!?38 வயதாகும் என் மகன் பி.இ. படித்தும் நல்ல குணம், தோற்றம் இருந்தும் பெண் அமையவில்லை. அவருக்கு திருமண பாக்கியம் உண்டா? சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பாரா? எங்கள் மனம் உறுத்துகிறது. என்ன பரிகாரம் சொன்னாலும் செய்கிறோம்.
- ஸ்ரீரங்கம் வாசகி.

உங்கள் மகனின் ஜாதகத்தை பஞ்சாங்கத்தின் துணைகொண்டு கணிதம் செய்து பார்த்ததில் திருமணத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக உள்ளது. ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் களத்ர ஸ்தானாதிபதி குரு 2ல் அமர்ந்திருப்பது நல்ல நிலையே. 28 வயதிற்குள் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக திருமணத்தை தாமதப்படுத்தியதன் விளைவாக தற்போது சிரமப்பட்டு வருகிறீர்கள்.

அவருடைய ஜாதக கணிதத்தின்படி தற்போது துவங்கியுள்ள சந்திரதசை என்பது திருமண விஷயத்தில் சாதகமான சூழலைத் தோற்றுவிக்கிறது. சந்திரன் புதனின் சாரம் பெற்று ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதும் புதன் லக்ன கேந்திரத்தில் உச்சம் பெற்றிருப்பதும் சாதகமான நிலையே. இருந்தாலும் புதனின் வக்கிர பலம் சிறு தடையினைத் தோற்றுவிக்கும். குடும்ப சாஸ்திரிகளின் துணைகொண்டு கந்தர்வராஜ விஸ்வாவசு என்ற ஜப ஹோமத்தினை வீட்டில் செய்யுங்கள்.

அத்துடன் புதன்கிழமை நாளில் வயதான தம்பதியரை அழைத்து அவர்களை லக்ஷ்மி நாராயண ஸ்வரூபமாக எண்ணிவஸ்திரம், போஜனத்துடன் கூடிய தாம்பூலம் அளித்து உங்கள் குமாரரை அவர்களுக்கு நமஸ்காரம் செய்யச் சொல்லுங்கள். கல்யாண உற்சவம் செய்வதாக பெருமாளுக்குப் பிரார்த்தனை செய்து கொள்வதும் முழுமையான பலனைத் தரும். ஏற்கெனவே கல்யாண யோகத்திற்கான வாய்ப்பினை தவறவிட்டிருந்தாலும் தற்போது நடந்து வரும் நேரத்தினைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய தீவிர முயற்சியின் மூலம் 08.07.2021க்குள் மகனுடைய திருமணத்தை நடத்திவிட இயலும் என்பதையே அவரது ஜாதகம் உறுதியாகச் சொல்கிறது.

?பழைய ஈஸ்வரன் கோயிலை இடித்துவிட்டு புதிதாக கோவில் கட்ட முடிவு செய்து பேஸ்மென்ட் போட்டு வேலை அப்படியே நிற்கிறது. பூஜைகளை எல்லாம் செய்துதான் வேலையை ஆரம்பித்தோம். இருந்தும் தடைபட்டிருக்கிறது. என்னால் கோயிலை கட்டி முடிக்க முடியுமா என்பதை என் ஜாதகம் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
- கிருஷ்ணன், வேலூர்.

73 வயதிலும் இறைபணியில் உண்டான தடையினைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுக்கு அந்த ஆண்டவனின் துணை என்பது நிச்சயம் இருக்கும். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகம் இறைவனின் திருப்பணியைச் செய்து முடிப்பதற்கு நிச்சயமாகத் துணை நிற்கிறது.

அதிலும் பரமேஸ்வரனின் திருநட்சத்திரமான திருவாதிரையில் பிறந்திருக்கும் உங்களால் நிச்சயமாக சிவாலயத் திருப்பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும். தற்போது நடைபெற உள்ள குருபெயர்ச்சியும் சனிபெயர்ச்சியும் சாதகமான சூழலைத் தராவிட்டாலும் தனிப்பட்ட முறையில் உங்களுடைய கடுமையான முயற்சியின் மூலம் எடுத்த பணியில் வெற்றியினைக் காண்பீர்கள்.

ஜாதக கணிதத்தின்படி தற்போது நடந்து வரும் சுக்கிர தசையில் குரு புக்தியின் காலம் உங்கள் முயற்சிக்குத் துணைநிற்கும். ஆகம விதிகளை நன்கு கற்றறிந்த சிவாச்சாரியர்களின் துணையோடு நீங்கள் கையில் எடுத்திருக்கும் பணியை விரைந்து முடிக்க இயலும். பஞ்சாட்சர மந்திர ஜபத்தினை தினமும் 1008 முறை செய்து வாருங்கள்.

அதோடு பணி நிற்கின்ற இடத்தில் பரமேஸ்வரனுடைய அஸ்த்ர மந்த்ர ஜபத்தினைச் செய்வதும் பணியில் உள்ள தடைகளை உடைக்க துணைபுரியும். உங்கள் ஜாதக பலத்தின்படி வருகின்ற 26.08.2021ற்கு மேல் திருப்பணியில் வேகத்தினைக் காண்பீர்கள். சிவாலய திருப்பணியை உங்களால் வெற்றிகரமாக செய்து முடிக்க இயலும் என்பதையே உங்களுடைய ஜாதக பலம் தெளிவாகச் சொல்கிறது.

?நான் ஓய்வுபெற்று 12 ஆண்டுகள் முடிந்து விட்டது. இதுவரை ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அரசுத் தரப்பிலிருந்து கிடைக்க வேண்டிய தொகை எதுவும் வந்து சேரவில்லை. நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக வழக்கு நடந்து சாதகமாக தீர்ப்பு வந்தும் இன்னும் பிரச்னை தீரவில்லை. குடும்பத்தில் மதிப்பிழந்து தவிக்கிறேன். ஏன் இந்த நிலை? என்னதான் குறை உள்ளது என் ஜாதகத்தில் என்பதை தெரிவிக்க வேண்டுமாய் கோருகிறேன்.
- திருநெல்வேலி வாசகர்.

ஆறாம் பாவகத்தில் இணைந்துள்ள கிரகங்களின் சூழலே உங்களுக்கு இதுபோன்ற பிரச்னையைத் தந்திருக்கிறது. உங்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வரும் காலத்தை நெருங்கி விட்டீர்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. தற்போது நடக்கவுள்ள குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் உங்கள் ராசிக்கு சாதகமான பலனையே தருகின்ற வகையில் அமைந்துள்ளதால் கவலைப்பட வேண்டாம்.

உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள நீங்கள் பணியில் இருந்த காலத்தில் அலட்சியத்தின் காரணமாக கவனிக்காமல் விட்ட ஒரு சிறு தவறின் காரணமாக இத்தனைகாலமாக சிரமத்தை அனுபவித்து வந்துள்ளீர்கள்.

தற்போது துவங்கியுள்ள ராகு தசையில் சுக்கிர புக்தியின் காலத்தில் உங்கள் பிரச்னைகள் முடிவிற்கு வந்துவிடும். நிலுவையில் உள்ள ஓய்வூதியத்துடன் சேர்த்து நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய தொகை மொத்தமாக வந்து சேரக் காண்பீர்கள். உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வலிமையுடன் அமர்ந்திருப்பதால் தற்போதைய தசாபுக்தியில் தனலாபம் காண்பீர்கள்.

உங்கள் ஜாதகத்தில் புதன் உச்சபலத்துடன் நான்காம் வீட்டில் அமர்ந்திருப்பதும் கூடுதலாக வலிமை சேர்க்கிறது. குடும்பத்தில் இழந்த பெருமையை மீட்பதுடன் அசையாச் சொத்து ஒன்று வந்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. உங்களால் இயன்ற தொகையை பெருமாள் கோவில் உண்டியலில் சேர்ப்பதாக பிரார்த்தனை செய்து கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வாருங்கள். வருகின்ற மார்ச் மாதம் 20 தேதிக்கு முன்னதாக பெருமாளின் அம்சமாக உங்கள் கண்களுக்குத் தோன்றும் ஒரு அதிகாரியின் மூலமாக உங்கள் பிரச்னை முடிவிற்கு வரக் காண்பீர்கள்.

?73 வயதாகும் நான் சமீபத்தில் எனது மனைவியை இழந்தேன். மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். நான் மட்டும் தனியாக தற்போது சீனியர் சிட்டிசன் ஹோமில் வசிக்கிறேன். மகனிடமிருந்து தேவையான பண உதவி தொடர்ந்து கிடைத்து வந்தாலும் அவர்களோடு இணைந்து வாழ ஆசைப்படுகிறேன்.நடக்குமா?
- ஞானசம்பந்தன், கோவை.

நீங்கள் அனுப்பியிருக்கும் பிறந்த தேதி, இடம் மற்றும் நேரத்தினைக் கொண்டு உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் நீங்கள் ஒரு வெள்ளை மனதினைக் கொண்டவர் என்பது புரிகிறது. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்துள்ள நீங்கள் எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள். உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. தற்போதைய கிரஹ சூழலின் படி நீங்கள் மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு அத்தனை பிரகாசமாக இல்லை.

அவர்களோடு சேர்ந்து இருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்கும் நிம்மதியும், சுகமும் அங்கு கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அவர்களுடைய பணிச்சுமையும், சூழ்நிலையும் உங்கள் மனநிலையுடன் ஒன்றிணையாது. சிறிது காலம் பொறுத்திருங்கள். 05.12.2021ற்குப் பின் உங்கள் விருப்பம் நிறைவேறும். ஓய்வாக இருக்கும் நேரத்தில் தனிமையில் இருக்காமல் நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆலயத்திற்குச் சென்று வாருங்கள்.

அங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற சேவையைச் செய்து வாருங்கள். ஆலயத்தில் ஒலிக்கும் மந்திரங்களின் அதிர்வு உங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். நீங்கள்எதிர்பார்க்கும் சுகம் அங்கு கிடைக்கும். உங்கள் மகனின் பிறந்தநாள் அன்று ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்யுங்கள். இறைவனின்திருவருளால் உங்கள் ஏக்கம் காணாமல் போகும்.

?எனது சகோதரருக்கு கடந்த இரண்டு வருட காலமாக சரியான வேலை அமையவில்லை. ஒரு நல்ல வேலை கிடைக்குமா அல்லது ஏதாவது தொழில் தொடங்கலாமா? உத்யோகம் நிரந்தரமாக அமைய வாய்ப்பு உள்ளதா?
- திலகவதி, மும்பை.

உங்கள் சகோதரரின் ஜாதகப்படி தற்போது சனி தசை நடந்து வருகிறது. திருவோணம் நட்சத்திரம், மகர ராசியில் பிறந்துள்ள அவர் தற்போது ஏழரை நாட்டுச் சனியின் காலத்தில் உள்ளார். கும்ப லக்னத்தில் பிறந்துள்ள அவருடைய ஜாதகத்தின்படி ஜீவன ஸ்தானாதிபதி செவ்வாய் ஒன்பதில் கேதுவின் இணைவினைப் பெற்றுள்ளதால் சுயதொழில் செய்யும் அம்சம் அவருக்கு துணை புரியவில்லை.

அதோடு லாபஸ்தானாதிபதி குரு ஆறில் அமர்ந்திருப்பதும் சுயதொழிலில் லாபத்தினைத் தராது. அவருடைய ஜாதகப்படி அவர் சொந்தமாக தொழில் தொடங்குவதைவிட ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணி செய்து வருவதுதான் நல்லது. இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட துறையிலேயே அவர் பணி செய்ய இயலும். கௌரவம் பார்க்காமல் ஏற்கெனவே பணியாற்றிய நிறுவனத்திலேயே முயற்சிக்கச் சொல்லுங்கள். இவருடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் நிச்சயமாகக் கிடைக்கும்.

அமாவாசை நாளில் பிறந்துள்ள இவரது ஜாதகத்தின்படி ஏற்றத்தாழ்வுகள் என்பது அவ்வப்போது இருந்துகொண்டுதான் இருக்கும். ஒரு நேரத்தில் நல்ல முன்னேற்றம் காணும் இவர் மற்றொரு நேரத்தில் சரிவினை சந்திக்க நேரிடும். இந்த ஏற்ற இறக்கமான நிலை என்பது அவ்வப்போது வந்துகொண்டுதான் இருக்கும்.

இதனைப் புரிந்துகொண்டு நல்ல நேரத்தில் சேமிக்கவும், நேரம் சரியாக இல்லாதபோது இருக்கும் சேமிப்பினைக் கொண்டு வாழ்க்கையை நடத்தவும் தயாராக இருக்கச் சொல்லுங்கள். அமாவாசையில் பிறந்த உங்கள் தம்பியை பிரதி மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாட்களில் ஆதரவற்ற நிலையில் இருக்கும் முதியவர்களுக்கு அவரால் இயன்ற அன்னதானத்தினைச் செய்து வரச் சொல்லுங்கள். வயதானவர்களின் ஆசிர்வாதம் அவரை நன்றாக வாழவைக்கும்.

?என் மகன் பி.இ., முடித்துள்ளார். கடின உழைப்புடன் பல முறை முயற்சித்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. இன்டர்வியூ-வில் தேறியும் ஆஃபர் லெட்டர் வரவில்லை. எப்போது என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் நிரந்தர வேலை கிடைக்கும்? எப்போது
திருமணம் நடக்கும்?
- சாவித்திரி, சென்னை.

நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்ததில் ஜென்ம லக்னத்திற்கும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதி ஆகிய புதன் வக்கிரம் பெற்றிருப்பதால் நல்ல வேலை கிடைப்பதில் தாமதம் உண்டாவதை அறிய முடிகிறது. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, கன்னியா லக்னத்திலேயே பிறந்துள்ளார். லக்னாதிபதி, ராசியாதிபதி, ஜீவன ஸ்தான அதிபதி என்று மூன்று பொறுப்புகளை சுமக்கும் புதன் உங்கள் மகனின் ஜாதகத்தில் செவ்வாயின் சாரம் பெற்று வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார். மேலும் தற்போது ராகு தசை என்பது முடிவுறும் தருவாயில் உள்ளது. 14.04.2021 முதல் குரு தசை துவங்கினாலும் குரு கேதுவின் சாரம் பெற்றிருப்பதோடு எட்டாம் வீட்டில் வக்ர கதியில் அமர்ந்துள்ளார்.

இதனால் குரு தசையின் காலத்திலும் பெரிய மாறுதல்களைக் காண இயலாது. நல்ல சம்பளம், பெரிய வேலை என்ற கனவோடு காத்திருப்பதை விடுத்து தற்போது கிடைக்கும் வேலையை சிரத்தையோடு செய்து வரச் சொல்லுங்கள். குறைந்த சம்பளம் ஆக இருந்தாலும் அதிலும் குடித்தனம் செய்ய இயலும். அவரது ஜாதகத்தில் உள்ள பலவீனங்களைப் பெரிதாக எண்ணாமல் பலமாக உள்ளதை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதுவே புத்திசாலித்தனமும் கூட.

ஜென்ம லக்னத்தில் புதன் வக்ரம் பெற்றாலும் உச்ச பலத்துடன் அமர்ந்துள்ளார். அதோடு லாபாதிபதி சந்திரன், தைரிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆகியோரும் உடன் இணைந்துள்ளனர். கூடவே இருக்கும் கேது அவ்வப்போது சிறு சிறு மன சஞ்சலத்தைத் தந்து வந்தாலும் அதனைத் தாண்டி சாதிக்கும் திறனை மற்ற கிரகங்கள் வழங்குகிறார்கள். இவரது ஜாதக பலத்தின்படி பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பதை விட சிறிய அளவிலான சம்பளமாக இருந்தாலும் பெயரளவில் ஒரு வேலையில் இருந்து கொண்டு சொந்தமாக தொழில் செய்ய முயற்சிப்பது நல்லது.

அது பரம்பரையில்ஏற்கெனவே செய்து வந்த தொழிலாகக் கூட இருக்கும். மூலதனம் ஏதுமின்றி செய்யும் தொழிலாகவும் அமையும். தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக்கிரன் நல்ல சம்பாத்தியத்தைத் தருவார். காலத்தை விரயம் செய்யாமல் உடனடியாக சுய தொழிலில் இறங்கச் சொல்லுங்கள். சம்பாத்தியத்திற்கும் குறைவு உண்டாகாது, கௌரவத்திற்கும் குறைவு உண்டாகாது.

மேலும் அவரது வயதினைக் கருத்தில் கொண்டு அதிக எதிர்பார்ப்பு ஏதுமின்றி உடனடியாக பெண் பார்த்து திருமணத்தை நடத்துங்கள். கால நேரத்தை தவற விட்டால் பின்பு திருமணம் நடப்பது என்பது கனவாகவே போய்விடும். தற்போதைய கிரக நிலையின்படி வருகின்ற சித்திரை, வைகாசி மாத வாக்கில் இவருக்கு திருமணம் முடிவாகிவிடும். சுய தொழிலில் சாதிக்க வேண்டும் என்பதையே இவரது ஜாதகம் வலியுறுத்திச் சொல்கிறது.

தம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண விரும்பும் வாசகர்கள் தங்களுடைய ஜாதக நகலுடன் தங்கள் பிரச்னையைத் தெளிவாக எழுதி அனுப்பலாம். கீழ்க்காணும் முகவரிக்கு அவ்வாறு அனுப்பி வைக்கும் உங்களுக்கு இப்போதே, வண்ணமயமான, வளமான வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.

என்ன சொல்கிறது, என் ஜாதகம்?
ஆன்மிகம், தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை - 600 004

சுபஸ்ரீ சங்கரன்