வைணவத்தில் கார்த்திகை தீபம்-கல்யாணி நாகராஜன்மறையாய் விரிந்த விளக்குதிருமாலைத் தியானிக்க விரும்பிய பிரம்ம தேவருக்குத் தியானத்தில் மனம் ஈடுபடவில்லை. கவனம் சிதறிக் கொண்டே இருந்தது. தியானம் செய்ய முடியவில்லையே என்று பிரம்மா வருந்த, திருமால் அவரிடம் அசரீரியாகப் பேசினார். பிரம்மனே உனது பாபங்கள் தான் உன்னைத் தியானம் செய்ய விடாமல் தடுக்கின்றன. எனவே அந்தப் பாபங்கள் நீங்க நீ காஞ்சிபுரத்தில் ஓர் அசுவமேத யாகம் செய்வாயாக.

உன் பாபங்கள் நீங்கியவாறே நானே உன் கண் எதிரே தோன்றிக் காட்சி தருவேன் என்றார் திருமால். அவ்வாறே பிரம்மாவும் காஞ்சிபுரத்திலே யாகம் செய்ய, அதுநிறைவடையும் வேளையில், வேள்வித் தீயிலேயே அத்தி வரதராஜப் பெருமாளாகத் திருமால் காட்சி தந்து பிரம்மாவுக்கு அருள்புரிந்தார்.

ஆனால், இதற்கு இடையில், காஞ்சிபுரத்தில் பிரம்மா யாகம் செய்து கொண்டிருந்த போது, அசுரர்கள் அந்த யாகத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணினார்கள். அதனால் காஞ்சியையே இருள் சூழும்படிச் செய்து விட்டார்கள் அசுர சக்திகள். யாகம் செய்ய முடியாமல் பிரம்மா தவித்தார். திருமாலே நீ தான் என்னைக் காக்க வேண்டும் ஒளி தர வேண்டும் என்று வேண்டினார்.

அப்போது திருமால் விளக்கொளிப் பெருமாளாக வந்து பிரம்மாவுக்கு ஒளிதந்து, மேலும் யாகத்தைத் தொடரச் செய்தார். இன்றும் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா எனப்படும் தூப்புலில் தீபப் பிரகாசன் என்ற திருப்பெயரோடு திருமால் எழுந்தருளியிருப்பதைக் காணலாம். இவ்வாறு விளக்கொளியாகத் திருமால் தோன்றி ஒளி தந்ததன் நினைவாக, வைணவர்கள் கார்த்திகை தீபத் திருநாளில் விளக்குகள் ஏற்றி அவரை வழிபடுகிறார்கள்.

மகாபலிக்குச் செய்த அருள்நர்மதா நதிக்கரையில் மகாபலி யாகம் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வாமன மூர்த்தி, மகாபலியிடம் மூவடி நிலம் யாசித்து, ஈரடியால் அனைத்து உலகங்களையும் அளந்து, மூன்றாம் அடியைத் தர இயலாத மகாபலியைப் பாதாளத்தில் சிறை வைத்தார் என்பதை நாம் அறிவோமல்லவா?

மகாபலி பாதாளத்தில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவன் செய்து வந்த யாகம் பாதியில் தடைபட்டு விட்டதே! அதை யார் முடித்து வைப்பது என்ற கேள்வி எழுந்தது. ஒருவன் ஒரு யாகத்தைத் தொடங்கி விட்டு அதைப் பாதியில் நிறுத்தினால் பெரிய பாபம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. அத்தகைய பாபம் மகாபலிக்கு நேராமல் இருப்பதற்காகத் திருமால் ஒருகட்டளை இட்டார்.

மகாபலியின் யாகத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக, வருடந்தோறும் விஷ்ணு ஆலயங்களில் கார்த்திகை தீபத் திருநாளன்று என் பக்தர்கள் சொக்கப்பானை கொளுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் கொளுத்தும் சொக்கப்பானை மகாபலியின் யாகம் நிறைவடைவதற்கான அடையாளம் ஆகும் என்று திருமால் கூறினார். இவ்விஷயம் பாஞ்சராத்திர ஆகமத்தின் ஸ்ரீ பிரச்ன சம்ஹிதையில்சொல்லப்பட்டுள்ளது.

திருவரங்கத்தில் வருடந்தோறும் சக்கரத்தாழ்வார் சந்நதிக்கு எதிரே சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். உற்சவர் நம்பெருமாள் புறப்பாடு கண்டருளி வந்து அந்நிகழ்ச்சியை கண்டு களித்து அடியார்களுக்கு அருள்புரிவது வழக்கம்.

மங்கை மன்னரின் அவதாரம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தோன்றிய திருமங்கை ஆழ்வார் தமது பாசுரங்களாகிய தீபங்களால், நமது அறியாமை என்னும் இருளைப் போக்கியதன் நினைவாகவும் வைணவர்கள் இந்நாளில் தீபங்கள் ஏற்றுகிறார்கள்.

நெஞ்சுக்கு இருள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம்

அருசமயப்பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன்
பனுவல்களே
என்று திருமங்கை ஆழ்வாரைப் பற்றி ஒரு பாடல் உள்ளது.

நம்பிள்ளையின் அவதாரம் திருமங்கை ஆழ்வாரின் அம்சமாக, அவர் அவதரித்த அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் சோழ நாட்டில் நம்பூர் என்னும் ஊரில் அவதரித்தார் நம்பிள்ளை என்னும் வைணவ ஆச்சாரியார். இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

இவர் ஆழ்வார்களின் பாசுரங்களுக்குத் தலைசிறந்த உரைகளை வழங்கினார். இவர் வழங்கிய உரைகள் அனைத்தும் ஆழ்வார் பாசுரங்களின் பொருளை நமக்குத் தெளிவாகக் காட்டும் விளக்கு போல் திகழ்வதாலே, விளக்கு போன்ற உரைகளை அருளிய இவரது அவதார நாளில் வைணவர்கள் விளக்கேற்றிக் கொண்டாடுகிறார்கள் என்றும் ரசனையுடன் சொல்வதுண்டு.

வடுவூரில் கார்த்திகை

கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி வடுவூர் கோதண்ட ராமசுவாமி திருக்கோயிலில் பவித்ர உற்சவம் நடைபெறும். தீபத் திருநாளுக்கு ஏழு நாட்கள் முன்னதாகத் தொடங்கி, கார்த்திகை தீபத் திருநாளில் இவ்வுற்சவம் நிறைவடையும்.

இவ்வுற்சவத்திலே ஒரு சிறப்பு அம்சம் உள்ளது. தமிழில் நாலுகவிப் பெருமாள் என்று போற்றப்பட்ட திருமங்கை ஆழ்வாருக்கு, வடமொழிப் புலவராகத் தானே அவதரிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததாம். அதனால் தான் அதே கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், வடமொழிக் கவிச்சக்கரவர்த்தியான ஆசுகவி வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளாகத் திருமங்கை ஆழ்வார் அவதரித்தார் என்று சொல்வார்கள்.

1912-ம் ஆண்டு தோன்றிய ஸ்ரீநிதி சுவாமிகள், வடுவூர் ராமன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அந்த ராமனின் புன்னகையைக் குறித்து 317 ஸ்லோகங்கள் கொண்ட புன்னகை ராமாயணத்தை இயற்றினார். அவர் இயற்றிய புன்னகை ராமாயணம் பவித்திர உற்சவம் நடைபெறும் ஏழு நாட்களும் தினந்தோறும் மாலை வடுவூர் ராமன் திருமுன்பே பாராயணம் செய்யப்படும். ஸ்ரீநிதி சுவாமிகளின் வாரிசுகளோ, அவரது சிஷ்யப் பரம்பரையில் வந்தவர்களோ வந்து ராமன் முன்பு அந்தப் புன்னகை ராமாயணத்தைப் படிப்பார்கள்.

கார்த்திகை தீபத் திருநாளன்று வடுவூர் ராமபிரானின் பவித்திர உற்சவப் பூர்த்தியும், கோயிலுக்கு அருகில் உள்ள திருமாளிகையில் அந்த ராமனின் பக்தரான ஸ்ரீநிதி சுவாமிகளின் திருநட்சத்திர வைபவமும் ஒரே நேரத்தில்நடப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இவ்வாறு கார்த்திகை தீபத்தை ஒடித் தனக்கு நடக்கும் உற்சவத்தோடு தன்னைக் குறித்து ராமாயணம் பாடிய பக்தருக்கும் உற்சவம்
நடக்கும்படி வடுவூர் ராமன் அருள்புரிந்துள்ளான்.