தகதகக்கும் ஞானாக்னி



வணக்கம்  நலந்தானே!

‘‘அருணாசலனனுக்கும் ஜீவனாகிய நமக்கும் உள்ள உறவு எப்பேற்பட்டது?  

‘‘அருணாசல மகாத்மியத்தை வேறுவிதமாகவும் கூறலாம். அது நெருப்புக்கும் பொறிக்கும் உள்ள உறவு. கடலுக்கும் மேகத்திற்கும் உள்ள உறவு. அதுபோலவே அருணாசலம் எனும் பிரம்மமே ஜீவனுமாகும்.
பூரண பிரம்மத்திலிருந்து ஜீவன் எழுச்சி பெற்று அகங்காரமாக புறப்படும்போது அதே உயரத்திற்கு அருளும் கூடவே வருகிறது. கடல் காற்று கடலினின்று எழுந்த மேகத்தை குளிர் மலைப்பகுதிகளுக்கு கொண்டு சென்று மழையாகப் பெய்விக்கிறது. கடலினின்று சூரியனால் பிரிந்த நீர் இப்போது மீண்டும் கடலை நோக்கி வந்து கொண்டிருப்பதுபோலத்தான் இங்கும்.

ஜீவனை அக்னிப் பொறியாகக் கொண்டால், மீண்டும் அதுஅக்னியுடன் சேருவதற்குண்டான அனைத்தையுமே இந்த ஞானாக்னியான அருணாக்னி செய்யத் தொடங்குகிறது. ஏனெனில், அது வேறு; இது வேறு அல்ல. ஜீவனுக்குள் ஈசனான அதாவது எப்போதும் இருக்கிறேன் உணர்வு ரூபமாகவும், அது புரியாத அபக்குவிகளுக்கு தகுந்த நேரத்தில் வெளிமுகத்தில் குருவாகவும் தோன்றி பக்குவப்படுத்தி முடிவில் ஆத்மாவில் ஐக்கியப்படுத்துகிறது.

ஜீவனின் பிரியமும் பக்தியும் எல்லைக்குட்பட்டவை. அங்கு பிரியம் செலுத்துபவர், ஏற்றுக் கொள்பவர் என்கிற இருமை இருந்தபடியே இருக்கும். இதுவே கடவுளிடம் பக்தியாக இருக்கும்போதும் ஜீவனுக்கே திருப்தி வருவதில்லை. ஆனால், அதே பக்தியை, பிரியத்தை காரணமற்ற அவ்வியாஜ கருணையாக ஈசனே செலுத்தும்போது ஜீவனின் அன்பும், பக்தியும், பிரியமும் எல்லைகளை உடைத்துக்கொண்டு இருமை அகன்று அனன்யமாக கிடந்தொளிர்கிறது. நம்முள் தோன்றும் பிஞ்சு போன்ற பக்தியையும் ஈசன் தன்னருளால் சொக்கப்பனையின் நெருப்புபோல, சிகரத்தில் எரியும் தீப்பந்தம்போல தகதகத்து எரியவைக்கிறார்.

அந்த ஈசனருளால் எரியும்போதுதான் எனை ஆட்கொள்கிறாயே என்றும், பித்து பிடித்தலைகிறேனே, சேர ஒழித்தாய் அருணாசலா என்று நிலைகொள்ளாமல் பெரும் பிரேமையில் மனம் ஆத்மாவிற்கு உணவாகி சிக்குண்டு அழிகிறது. இருளழிந்து விடியலின் கிரணங்களால் உலகம் உய்வடைவதுபோல ஜீவன் அருணாசலமாகிறது’’

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)