திருமகளின் திருவருள் கிட்டிற்று!



உள்ள(த்)தைச் சொல்கிறோம்

வற்றாத செல்வமருளும் பதிமூன்று குபேரத் தலங்களைப்பற்றி எங்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பது அளவில்லா ஆனந்தம் அளிக்கிறது; ‘‘ஆன்மிக பலனில்’’ இடம் பெற்றுள்ள கடவுளர்களின் வண்ணப் புகைப்படங்கள் அனைத்தும் முற்றிலும் புது மாதிரியாக அமைந்துள்ளன. பாராட்டுகள் !
- வெ. லட்சுமி நாராயணன், வடலூர்.

வாழ்நாளெல்லாம் தேடிப் போராடும் செல்வத்தை நிறைவாகப் பெற வழிபாட்டுக்கு 13 குபேர தலங்களை தொகுத்துத் தந்தது, அதிரசமாக இனித்தது, குறள் வழி நடந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும் என்ற திருப்பூர் கிருஷ்ணனின் உபதேசம் லட்டுபோல சுவைத்தது. 16ஆம் நூற்றாண்டு முதல் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும், மகாவீரர் வீடுபேறு பெற்ற நாள் சமணர்களின் தீபாவளியானது எப்படி என்றும், ராமபிரான் தலை தீபாவளியை எங்கு கொண்டாடினார் என்றும், விளக்கிய சுவையான வரலாற்று ஆவணங்கள், போளிக்குள் புதைந்த பூரணமாய் ருசித்தது. 57 டிப்ஸ்கள் கொடுத்து மகாலட்சுமி நிரந்தரமாக நம் வீட்டில் வாசம் செய்ய வழி காட்டியதோ அல்வா போல அசத்தியது. மொத்தத்தில் தீபாவளி பக்தி ஸ்பெஷல் சுவையான ஸ்வீட் ஸ்டால்.
- அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

நரக வேதனை நகர, நரகா சூர வதம் நடந்து தீபாவளி பிறந்த கதையைப் படித்தபோது, ‘தீபாவளியன்று நாம் கிருஷ்ணரை வழிபடுவதில்லையே ! நரகாசூரனையும் நினைப்பதில்லையே, ஏன்! என்று யோசித்தேன். தீபாவளிக்கு மூன்று மாதங்கள் முன்பே, வாசலிலிருந்து பூஜையறை வரை பாதம் வரைந்து கிருஷ்ணரை நம்மில் ஒருவராக தங்க வைத்திருக்கிறோம். விடியலைத் தந்த வெளிச்சமான அவரையே தீபாவளியில் தரிசிக்கிறோம் என்பதால் தினந்தோறும் தெய்வீகமாக தீபம் ஏற்றி வழிபட்டாலே போதும். நம்மில் அகங்காரம் அழிந்து ஆனந்தம் பிறக்கும் என்பதையே தீபாவளி திருநாள் உணர்த்துவதாக, பொறுப்பாசிரியர் கடிதம் மூலம் புரிந்து கொண்டேன்.
- அ. யாழினி பர்வதம், சென்னை - 600078.

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவிழாக்களும், தீபாவளி வழிபாடுகளும் தொன்றுதொட்டு சிறப்புற நடைபெற்று வருகிறது என்பதை முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் தக்க சான்றுகளோடு விளக்கியிருப்பது எங்கள் புருவங்களை மலர வைத்தது!
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன்புதூர்.

தமிழகத்திலுள்ள குபேரத் தலங்களை தொகுத்து வணங்கியது மிகச் சிறப்பு. தெளிவு பெறுஓம் பகுதியில் பலரது வாழ்வில் ஏற்படும் சிறுசிறு குறைபாடுகளை பெரிதாக எண்ணி வருந்துவோருக்கு நல்ல ஆறுதல் தரும் வகையில் தெளிவாக விளக்கி பதிலளிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. இறை வழிபாட்டின்போது மின்சாரம் தடைபடுவது, விளக்கினை எந்த திசை நோக்கி ஏற்ற வேண்டும் என்கிற சந்தேகங்களுக்கும் மிக உறுதியான விளக்கமளித்துள்ளார்.  குறளின் குரல் பகுதியில் திருக்குறளுக்கு புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களை கொண்டும் விளக்கம் அளிப்பது மனதில் பதிய வைக்கிறது.
- ப. த. தங்கவேலு, பண்ருட்டி - 607106.