வளமருள்வார் வாசுதேவன் -தர்மபுரி



ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட திருமாலின் திருத்தலங்கள் திவ்ய தேசங்கள் என்றும், திருமால் தானே சுயமாக அர்ச்சாவதாரமாய் தோன்றிய தலங்கள் ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை தவிர பக்தர்களுக்கு அருளும் பொருட்டு அபூர்வமான திருவடிவங்களில் பரந்தாமன் அருளும் தலங்கள் அநேகமுள்ளன. அவற்றில் வர மகாலட்சுமியுடன் பரவாசுதேவனாக நாராயணன் அருளும் தர்மபுரியும் ஒன்று.

ஔவையாரால் பாடப்பெற்ற தலப் பெருமை உடையது தகடூர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக மல்லிகார்ஜுனேஸ்
வரர் கோயிலும், பரவாசுதேவர் கோயிலும் அருகருகே அமைந்துள்ளன. இத்தலம் மகேந்திரநுளம்பன் காலத்தில் கட்டப்பெற்று, மூன்றாம் குலோத்துங்கனாலும், சிறந்த வைணவ பக்தரான விஸ்வநாத நாயக்க மன்னனாலும் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புகளையும் பெற்று இயற்கை எழிலோடு சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் இங்கு சனத்குமார நதி மிகவும் புண்ணிய நதியாக ஓடியுள்ளது. அதில் நீராடி பாவம் நீங்கி, ஞானம் கிட்டியவர்கள் பலருண்டு என்பதை செவிவழிச் செய்திகள் கூறுகின்றன.

அர்த்த மண்டபத்தைக் கடந்தால் கருவறையில் பரவாசுதேவப் பெருமாள் பேரழகுடனும் காட்சி தருகிறார். இவர் பிரம்ம தேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தேவர்கள், முனிவர்கள், பஞ்ச பாண்டவர்கள் போன்றோரால் பூஜிக்கப்பட்ட பெருமையுடையவர் எனக் கூறப்படுகிறது.
பல்வேறு தலங்களில் சயனத் திருக்கோலத்திலும், நின்ற திருக்கோலத்திலும் தோற்றமளிக்கும் திருமால் இங்கு அமர்ந்த திருக்கோலத்தில் உள்ளார்.

அதுவும் எப்படி? ஆதிசேஷன் தன் ஏழு தலைகளையும் குடையாகப் பிடித்தபடி, தன் உடலை மூன்று சுற்றுகள் கொண்ட இருக்கையாக்கிக்கொள்ள அதையே ஆசனமாகக் கொண்டு அருள்கிறார் பரந்தாமன். பரவாசுதேவன் பொலிந்து நின்று ஒளி வீசும் திருமுகமண்டலத்தோடு, சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றைத் தாங்கி இடது கீழ்க்கையை ஆதிசேஷன்மேல் சாய்வாக ஊன்றி ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார். தன் இடது மடிமேல் வரமகாலட்சுமி தாயாரை அமர்த்தியிருக்கிறார். அவரது மலரனைய பாதத்தைத் தாங்கும் தாமரைக்கு இருபுறமும் சிறிய திருவடி எனப்படும் அனுமனும், பெரிய திருவடியாகிய கருடனும் அமர்ந்திருக்கிறார்கள். இந்த அமைப்பு முழுமையாக ஒரே  கல்லால் ஆனது என்றறியும்போது வியப்பு மேலிடுகிறது.

சுமார் எட்டு அடி உயரமுள்ள அந்தத் திருவுருவத்தைத் தரிசிக்க கண்கள் கோடியிருந்தாலும் போதாது. தம்மை நாடி வரும் அன்பர்கள் கோரும் வரங்களை அண்ணலிடம் சொல்லி வாரி வாரி வழங்குவதால், தாயார் வரமகாலட்சுமி என்று திருநாமம் கொண்டாள் போலும். அவள் அணிந்துள்ள திருவாபரணங்கள் அன்னையின் அழகிற்கு மேலும் அழகு செய்கின்றன. தன் திருமார்பை விட்டு அகலகில்லேன் எனும் அலைமகளை தன் மடியில் தாங்கிய பரவாசுதேவனும் சர்வ அலங்காரங்களுடன் காட்சியளிக்கிறார்.

திருமாலின் புகழ் பாடும் விஷ்ணு ஸஹஸ்ர நாமத்திலும் புரந்தரதாசர் பாடிய ‘ஜகதோ தாரணா’ எனும் கீர்த்தனையிலும் பரவாசுதேவனின் புகழ் ஓங்கி ஒலிக்கிறது. வில்வ மரமும், வேப்ப மரமும் தல மரங்களாகத் திகழ்கின்றன. பரவாசுதேவர் கோயில், தர்மபுரி பேருந்து நிலையத்திற்கு 2 கி.மீ. தொலைவில் உள்ளது.

- அபிநயா