கண்ணன் பிறந்தான்... எங்கள் கண்ணன் பிறந்தான்!



கோகுலாஷ்டமி  11-8-2020

ஆவணி ரோகிணி அஷ்டமி திருநாளில் நள்ளிரவில், தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக, மதுரா நகரில் சிறைச்சாலையில் அவதரித்தான் கண்ணன். அவன் அவதரித்த நாளையே கோகுலாஷ்டமி, ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி, ஸ்ரீஜயந்தி உள்ளிட்ட பல பெயர்களால் அழைத்து, நாம் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

இத்திருநாளில் கண்ணன் பிறந்ததை அக்கால ரிஷிகள் தொடங்கி, இக்காலக் கவிகள் வரை எப்படி எல்லாம் அநுபவித்தார்கள் என்பதன் தொகுப்பே இக்கட்டுரை.

ஸ்ரீபராசர முனிவர் - விஷ்ணு புராணம்:
“ததோ அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானுனா
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத் மனா”
வாடிய தாமரை மலர வேண்டும் என்றால், சூரியன் உதிக்க வேண்டும். அதுபோல் இவ்வுலகம் என்னும் தாமரை வாடிக் கிடந்த போது, சூரியனைப் போல் அவதாரம் செய்தான் கண்ணன். கண்ணன் என்ற சூரியன் உதித்ததாலே, உலகம் என்னும் தாமரை மலர்ந்தது, அதாவது உலக மக்களுக்கெல்லாம் முகமலர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டானது.

சூரியன் கிழக்குத் திக்கில் உதிக்கும். கண்ணன் என்னும் சூரியன், தேவகியின் கர்ப்பத்தையே தான் உதிக்கும் கிழக்குத் திக்காகக் கொண்டு அவளது கருவிலிருந்து உதித்தான் என்றும் இந்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார் பராசர முனிவர்.சூரியனோடு கண்ணனை ஒப்பிட்ட பராசர முனிவர், கண்ணனுக்கும் சூரியனுக்கும் உள்ள வேறுபாட்டையும், இந்த ஸ்லோகத்தில் உள்ள ‘அச்யுத பானு’ என்னும் அடைமொழியால் காட்டுகிறார்.

சூரியன் காலையில் உதித்தாலும், மாலையில் அஸ்தமித்து விடுவதால், அதற்கு ‘ச்யுத பானு’ (மறையும் சூரியன்) என்று பெயர். ஆனால் கண்ணனோ, அஸ்தமிக்காமல், மறையாமல் எப்போதும் ஒளிவீசும் சூரியனாக இருப்பதால், ‘அச்யுத பானு’ (மறையாத சூரியன்) என்று கண்ணனைக் குறிப்பிடுகிறார்.

அதுமட்டுமின்றி, கர்மவினையால் நாம் பிறப்பது போல் அவன் பிறப்பதில்லை. தனது கருணையால் கீழே இறங்கி வந்து அவதரிக்கிறான். இதைத் தெளிவு படுத்தவே ‘ஆவிர்பூதம்’ (கண்ணன் ஆவிர்பவித்தான்) என்று இந்த ஸ்லோகத்திலே கூறுகிறார் பராசர முனிவர்.

இவ்வாறு கண்ணன் அவதாரம் செய்த போது, கடல்கள் வாத்திய கோஷம் போன்ற ஒலியை எழுப்பின. தேவ லோகத்துக் கந்தர்வர்கள் தேவ கானங்களைப் பாடினார்கள். தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள். அப்ஸரஸ் பெண்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். உலகிலுள்ள தீ எல்லாம் சாந்தமாக எரியத் தொடங்கியது. மேகங்கள் முழங்கின.

குழந்தை கண்ணன் எப்படி இருந்தான்?

“புல்ல இந்தீவர பத்ர ஆபம் சதுர் பாஹும் உதீக்ஷ்ய தம்
வத்ஸ வக்ஷஸம் ஜாதம் துஷ்டாவானக துந்துபி:”
என்கிறார் பராசர முனிவர். அதாவது, நன்கு மலர்ந்த கருநெய்தல் பூப்போன்ற நிறத்தோடும்,
நான்கு கரங்களோடும், திருமார்பில் திருமகள் அமரும் வத்சம் என்ற மறுவோடும் குழந்தை கண்ணன்
விளங்கினான் என்பது இதன் பொருள்.

 சுக முனிவர் - மத் பாகவத புராணம்:
“தேவக்யாம் தேவரூபிண்யாம் விஷ்ணு:
ஸர்வகுஹாசய:
ஆவிராஸீத் யதா ப்ராச்யம் திசி இந்துரிவ புஷ்கல:
தம் அத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம்
சதுர்புஜம் சங்க கதார்யுதாயுதம்
வத்ஸலக்ஷ்மம் கலசோபி கௌஸ்துபம்
பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம்
மஹார்ஹ வைதூர்ய கிரீட குண்டல
த்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ர குந்தலம்
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபி:

விரோசமானம் வஸுதேவ ஐக்ஷத”
“எல்லார் இதயத்திலும் ஒளிந்திருக்கும் திருமால், இருளடைந்த நள்ளிரவில், தேவப் பெண் போல் திகழ்ந்த தேவகியிடத்தில், கிழக்குத் திக்கில் பௌர்ணமி நிலவு உதிப்பது போல் வந்துதித்தார்.
தாமரைக் கண்களோடும்,
சங்கு சக்கரம் கதை போன்ற சிறந்த
ஆயுதங்களோடும்,
நான்கு தோள்களோடும்,

மார்பில் வத்சம் எனும் மறுவோடும்,
கழுத்தில் கௌஸ்துப மணியோடும்,
இடையில் மஞ்சள் பட்டாடையோடும்,
வைடூரியத்தாலான கிரீட குண்டலங் களோடும்,
அவற்றின் பிரகாசத்தால் ஒளிவீசும் குழல் கற்றைகளோடும்,
ஒளிவீசும் அரைநூல், தோள்வளை,
கங்கணம் ஆகியவற்றோடும்
விளங்கிய அந்த அற்புத இளங்குழந்தையை வசுதேவர் கண்டார்!” என்பது இந்த
ஸ்லோகங்களின் திரண்ட பொருளாகும்.

நம்மாழ்வார் - திருவிருத்தம்:
“சூட்டு நன்மாலைகள் தூயன ஏந்தி
விண்ணோர்கள் நன்னீர்
ஆட்டி அந்தூபந்தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப்
போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடை ஆடினை கூத்து அடலாயர்
தம் கொம்பினுக்கே”

“கண்ணா! வைகுண்டத்தில் உள்ள நித்திய சூரிகள் உனக்கு நன்றாக அபிஷேகம் செய்து, மணம்மிக்க மலர்மாலைகளைச் சமர்ப்பித்து, சாம்பிராணி தூபம் காட்டிய போது, அந்தப் புகை உன்னை முழுவதுமாக மறைத்த நிலையில், நீ ஒரு மாயம் செய்து, இப்பூமியில் கண்ணனாக அவதாரம் செய்து, வெண்ணெயைத் திருடி உண்டு, ஏழு காளைகளை அடக்கி, நப்பின்னையைத் திருக்கல்யாணம் செய்து கொண்டு, கூத்தாடி விட்டு, புகை அடங்குவதற்குள் மீண்டும் வைகுண்டத்துக்கே எழுந்தருளி விட்டாயே! உனது மாயத்தை என்னவென்று சொல்வேன்?” என்று இப்பாடலில் வினவுகிறார் நம்மாழ்வார்.

பெரியாழ்வார் திருமொழி:
திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டிருக்கும் சௌமிய நாராயணப் பெருமாளையே கண்ணனாகக் கண்டு, அந்தப் பெருமாளே ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்ததாகப் பெரியாழ்வார் பாடுகிறார்:

“வண்ணமாடங்கள் சூழ்த் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்றே”

திருக்கோஷ்டியூரில் கோவில் கொண்டுள்ள சௌமிய நாராயணப் பெருமாள், (மதுராவில் இருந்த கம்சனிடம் இருந்து தப்பி வந்து) ஆயர்பாடியில் நந்தகோபனின் திருமாளிகையில் குழந்தையாகத் தோன்றினான். அப்போது ஆயர்பாடியைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் எண்ணெயையும்
மஞ்சள் பொடியையும் மகிழ்ச்சியோடு ஒருவர் மீது ஒருவர் தூவிக் கொண்டு, கண்ணனின் அவதாரத்தைக் கொண்டாடினார்கள்.
அதனால் நந்தகோபனுடைய வீட்டின் பெரிய முற்றம் முழுவதும் சேறாகி விட்டது.

“உறியை முற்றத்து உருட்டி நின்று ஆடுவார்
நறுநெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து எங்கும்
அறிவழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே”

கண்ணன் பிறந்த சந்தோஷத்தில், ஆயர்கள் எல்லோரும் பால், தயிர் சேமித்து வைத்த உறிகளை முற்றத்தில் உருட்டி விட்டுக் கூத்தாடினார்கள். நெய், பால், தயிர் உள்ளிட்டவற்றை வறியவர்க்குத் தானம் செய்தார்கள். ஆய்ச்சியர்கள் தங்கள் கூந்தல் அவிழ்ந்து போனது கூடத் தெரியாமல் நடனம் ஆடினார்கள். பித்துப் பிடித்தவர்கள் போல் அனைவரும் கூத்தாடினார்கள்.
வேதாந்த தேசிகன் - யாதவாப்யுதயம்:

கண்ணனின் முழு வரலாற்றை யாதவாப்யுதயம் என்னும் இருபத்து நான்கு சர்கங்கள் கொண்ட மகாகாவியமாக வடித்துத் தந்தார் வேதாந்த தேசிகன். அதில்,

“புக்தா புரா யேன வஸுந்தரா ஸா
ஸ விச்வபோக்தா மம கர்ப பூத:”
என்கிறார். தேவகி எட்டாவது முறையாகக் கருவுற்றிருந்த நிலையில், மண்ணை உண்டாளாம். மண்ணை உண்டதன் மூலமாக, இந்த மண்ணுலகத்தை எல்லாம் உண்ட கண்ணன் என் வயிற்றுக்குள் தான் இருக்கிறான் என்பதை உலகுக்குச் சூசகமாகத் தெரிவித்தாள் தேவகி என்று இந்த ஸ்லோகத்தில் வேதாந்த தேசிகன் தெரிவிக்கிறார்.

மேலும், கண்ணன் அவதரித்த காலத்தை ஜோதிட
ரீதியில் துல்லியமாகத் தெரிவிக்கிறார் வேதாந்த தேசிகன்:
“அத ஸிதருசி லக்னே ஸித்த பஞ்ச க்ரஹோச்சே
வ்யஜனயத் அனகானாம் வைஜயந்த்யாம் ஜயந்த்யாம்
நிகில புவன பத்ம க்லேச நித்ரா அபனுத்த்யை
தினகரம் அனபாயம் தேவகீ பூர்வ ஸந்த்யா”
என்ற ஸ்லோகத்தில், “சந்திரோதயம் ஆனபின், ரோகிணி நட்சத்திரத்தோடு கூடிய ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியில் (ஆவணி மாதத் தேய்பிறை அஷ்டமியோடு ரோகிணி நட்சத்திரம் இணைந்து வந்தால் அந்நாளை ஜயந்தி என்று அழைப்பார்கள்), ரிஷப ராசியில் சந்திரனும், மகர ராசியில் செவ்வாயும், கன்னி ராசியில் புதனும், கடக ராசியில் குருவும், துலா ராசியில் சனியும் என ஐந்து கிரகங்களும் உச்சத்தில் இருந்த நேரத்தில், சந்திரனுக்கு உகந்த ரிஷப லக்னத்தில், பூமியாகிய தாமரையைத் துயில் எழுப்புவதற்காக, தேவகி என்னும் கிழக்குத் திக்கில், கண்ணன் என்னும் சூரியன் தோன்றினான்!” என்று வர்ணித்துள்ளார்.

நாராயண பட்டத்ரி - நாராயணீயம்:
“ஆனந்த ரூப பகவன்னயி தே அவதாரே
ப்ராப்தே ப்ரதீப்த பவத் அங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜை: இவ கனாகன மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷ வேலா”

“ஆனந்த வடிவமான குருவாயூரப்பா! உன் அவதாரக் காலம் நெருங்கிய போது, உன் திருமேனியில் இருந்து வெளிக்கிளம்பிய கதிர்ப் படலங்கள் போல் மேகங்கள் பெரிதாக வானில் தோன்றின. அவை வானையே மறைத்துக் கொண்டிருந்தன. இவ்வாறு கார்காலம் விளங்கிற்று.”
“ஆசாஸு சீதலதராஸு பயோத தோயை:
ஆசாஸிதாப்தி விவசேஷு ச ஸஜ்ஜனேஷு
நைசாகரோதய விதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹ த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:”

“மேகங்கள் பொழிந்த மழையால் திசைகள் எல்லாம் குளிர்ந்தன. நல்லோர் விரும்பிய அனைத்தும் கைகூடின. மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். நள்ளிரவில் சந்திரன் தோன்றும் வேளையில், மூவுலகின் துன்பத்தை அழிப்பவனான நீ தோன்றினாய்!”
“பால்யஸ்ப்ருசா அபி வபுஷா ததுஷா விபூதீ:
உத்யத் கிரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேன
மேகாஸிதேன பரிலேஸித ஸூதி கேஹே”

 “குழந்தை போல் தோற்றமளித்தாலும் வல்லமை மிக்க திருமேனி கொண்டவன் அல்லவோ நீ? கிரீடம், கைவளை, தோள்வளை, முத்து மாலை முதலியவற்றின் ஒளியோடும், சங்கு சக்கரம், தாமரை, கதை போன்றவற்றோடும் நீ விளங்கினாயே! கருமேகம் போல் நீல நிறத்தோடு நீ
விளங்கினாயே!”

ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள்:
மன்னார்குடியில் கோவில் கொண்டிருக்கும் வித்யா ராஜகோபாலனைக் குழந்தை கண்ணனாக அநுபவித்து,
அவனது தோற்றத்தை ஆசுகவி வில்லூர் நிதி சுவாமிகள் வடமொழியில் வர்ணித்துப் பாடுகிறார்
“லீலா யஷ்டி மனோஜ்ஞ தக்ஷிண கரோ பாலார்க்க துல்ய ப்ரப:
பாலாவேசித மௌலி ரத்ன திலகோ மாலாவலீ மண்டித:
சேலாவேஷ்டித மௌலி மோஹித ஜன: சோலாவனீ மன்மத:
வேலாதீத தயா ரஸார்த்ர ஹ்ருதயோ மே லாலிதோ மௌலினா”

வலக்கையிலே செண்டை ஏந்திக் கொண்டு, இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ என்று வியக்கும்படி, இளஞ்சூரியனைப் போன்ற பொலிவுமிக்க வடிவுடன், திவ்யமான ரத்தினத் திலகத்தை நெற்றியில் அணிந்து கொண்டு, செண்பகம் போன்ற பூமாலைகளை அணிந்து கொண்டு, அழகிய தலைப்பாகைக் கட்டால் அனைவரையும் மயக்கும் சோழநாட்டு மன்மதனும், கருணைக் கடலுமான ராஜகோபாலனைத் தலையால் வணங்குகிறேன் என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.

மகாகவி பாரதியார்:
கண்ணன் பிறந்தான்! - எங்கள்
கண்ணன் பிறந்தான்! - இந்தக்
காற்று அதை எட்டுத் திசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்! - மணி
வண்ணம் உடையான்! - உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்!
பண்ணை இசைப்பீர்! - நெஞ்சில்
புண்ணை ஒழிப்பீர்! - இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்று இதை
எண்ணிடைக் கொள்வீர்! - நன்கு
கண்ணை விழிப்பீர்! - இனி
ஏதும் குறைவில்லை! வேதம் துணையுண்டு!

இதைத் தழுவிக் கவிஞர் வாலி அவர்கள்
எழுதிய புதுக்கவிதையும் நோக்கத் தக்கது:
கண்ணன் பிறந்தான் - எங்கள்
கண்ணன் பிறந்தான் - புதுக்
கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் - எங்கள்
மன்னன் பிறந்தான் - மனக்
கவலைகள் மறந்ததம்மா

அயோத்தியில் ராமன் அவதரித்த போது, அதைத் தசரதச் சக்கரவர்த்தி கோலாகலமாகக் கொண்டாடினார். ஆனால் மதுராவில் சிறைச்சாலையில் கண்ணன் அவதரித்த வேளையில், விலங்குகளால் கட்டப்படிருந்த தேவகியாலும் வசுதேவராலும் பெரிதாக அவனது பிறப்பைக் கொண்டாட முடியவில்லை.

அக்குறை தீரவே, இன்று ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை நமது இல்லங்களில் எல்லாம் வெகு கோலாகலமாகக் கொண்டாடுகிறோம். பல்வகை இனிப்புகளை வீட்டில் செய்து, கண்ணன் நம் இல்லத்துக்குள் நுழைவதன் அடையாளமாக அவனது திருப்பாத வடிவில் இழைகோலம் இட்டு, பஜனைகள், பாடல்கள்,

பாராயணம் எனப் பலவிதமான
முறைகளில், நம்வீட்டில் குழந்தை
பிறந்தது போல் மகிழ்ச்சியோடு
ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி நன்னாளைக்
கொண்டாடுகிறோம்.

கிருஷ்ணஜயந்தி நாளில் விரதம் இருப்போர்க்கு, ஒரு வருடத்தில் உள்ள அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிட்டும். இந்நாளில் கண்ணனை வழிபடுவோர்க்குக் கண்ணனைப் போலவே ஒரு குழந்தை பிறக்கும் என்பதில் ஐயமில்லை!

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்