காப்பியம் காட்டும் கதாபாத்திரம்-விஸ்வாமித்திரர்



ஒன்றுக்கு நான்காக, ராமாயணத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் வருகையின் போது, மிகவும் தடபுடலாக ஆர்ப்பாட்டமாக இருக்கும். அதற்கு ஏற்றாற்போல, அக்கதாபாத்திரங்களும் விரைந்து வேகமாகச் செயல்படும்; வந்த வேலை முடிந்தவுடன், வந்ததைப் போலவே மறைந்து போய்விடும். அதன் பிறகு அக்கதாபாத்திரங்களைப் பற்றிய பேச்சே இருக்காது.

அப்படிப்பட்ட அபூர்வமான கதாபாத்திரங்களில் ஒன்று ‘விஸ்வாமித்திரர்’. நாம் யாருக்காவது ஏதாவது கெடுதல் செய்துவிட்டால், ‘‘என்னப்பா இப்பிடி செஞ் சிட்ட? சரி! விடு! போனது போகட்டும். ஒன்றிக்கு நாலா(நான்காக) நல்லது செஞ்சிடு! ” என்பார்கள். அவ்வாறு ஒன்றுக்கு நான்காக நல்லதைச் செய்தவர் தான் விஸ்வாமித்திரர்.  விஸ்வாமித்திரரின் வருகை, ராஜ சபையில் பலர் இருக்கும் போது இடம் பெறுகிறது. வந்த விஸ்வாமித்திரரைத் தரிசிக்கலாம் வாருங்கள்!

தசரதர் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். வசிஷ்டர், சுமந்திரர் முதலானோர் சபையில் இருந்தார்கள். அந்த நேரத்தில் விஸ்வாமித்திரர் சபைக்கு வந்தார். தகவலறிந்தவுடன் தசரதர் வேகமாகப் போய், விஸ்வாமித்திரரை வரவேற்று அமர வைத்தார். தசரதரின் அந்த வேகத்தை அப்படியே பதிவு செய்கிறார் கம்பர்.

வந்து முனி எய்துதலும், மார்பில் அணி ஆரம்,
அந்தரதலத்து இரவி அஞ்ச, ஒளி விஞ்ச,
கந்த மலரில் கடவுள் தன் வரவு காணும்
இந்திரன் என, கடிது எழுந்து அடி பணிந்தான்.
(கம்பராமாயணம்)
                                                                        
வாய் விட்டு ஒரு முறை இப்பாடலைச் சொல்லிப் பாருங்கள்! தசரதரின் வேகம் புரியும். விஸ்வாமித்திரரை வணங்கிய தசரதர், ‘‘சுவாமி! தங்களைப் போன்ற முனிவர்கள் இங்கே எழுந்தருளியது, அடியேனின் முன்னோர்கள் செய்த தவம்” என்று பணிவோடு கூறினார்.விஸ்வாமித்திரர் தான் வந்த காரியத்தைச் சொல்லத் துவங்கினார்; ஆனால் எடுத்தவுடன், நேராகப் பேச்சைத் துவக்கவில்லை; ‘‘தசரதா! என்னைப் போன்ற முனிவர்கள் எல்லாம், இடையூறு வந்தால் வேறு எங்கு போவோம்? இங்கு தானே வருவோம். இவ்வளவு ஏன்? தேவேந்திரன் ஆளும் அந்த ஆட்சியே, நீ கொடுத்தது தானே மன்னா! ” என்றார்.

இது தான் விஸ்வாமித்திரர்! விஸ்வம்-உலகு; மித்திரர்-நண்பர். விஸ்வாமித்திரர் என்ற சொல்லுக்கு உலகத்திற்கு நண்பர் என்பது பொருள். ஒரு காரியத்திற்காக அடுத்தவரிடம் போகும் போது, எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை, ஒரு நண்பனைப் போலப் பாடம்
சொல்கிறது விஸ்வாமித்திர கதாபாத்திரம்.

இவ்வாறு விஸ்வாமித்திரர் சொன்னதும் நெகிழ்ந்து போனார் தசரதர்; ‘‘சுவாமி! அரசனாக இருந்த பயனை இன்று தான் அடைந்தேன் நான். சொல்லுங்கள் சுவாமி! அடியேன் என்ன செய்ய வேண்டும்?” என்று பணிவோடு கேட்டார்.இது தான் சமயம் என்று விஸ்வாமித்திரர், தான் வந்த நோக்கத்தை வெளிப்படுத்தினார்; ‘‘மரங்கள் அடர்ந்த வனத்தில் நான், ஒரு தவவேள்வி செய்கிறேன். அதற்கு இடையூறாக இரு அரக்கர்கள் வந்து, பெரும் துயரம் விளைவிக்கிறார்கள். அந்த அரக்கர்களிடம் இருந்து காப்பாற்றி யாகத்தை முடிக்க வேண்டும். அதற்காக ராமனை என்னுடன் அனுப்பு! ” என்றார். விஸ்வாமித்திரர் சொன்ன தன் சாரம் இவ்வளவு தான். இதை அவர் வெளிப்படுத்திய விதம்தான் அருமை. கம்பர் பாடலின்
மூலமாகவே பார்க்கலாம்.

‘தரு வனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு இடையூறு, தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என, நிருதர் இடை விலக்கா வண்ணம்,
‘‘செருமுகத்துக் காத்தி” என, நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என, உயிர் இரக்கும் கொடுங் கூற்றின், உளையச் சொன்னான்
(கம்பராமாயணம்)

தரு - கற்பக மரம்;
யார் எதைக் கேட்டாலும் கொடுக்கக் கூடிவை கற்பக மரங்கள். ‘‘அப்படிப்பட்ட கற்பக மரங்கள் உள்ள வனத்தில் இருந்து வருகிறேன்” என்கிறார் விஸ்வாமித்திரர். ‘‘கேட்டதை எல்லாம் கொடுக்கும் கற்பகத்திடமே நான் வரங்கள் பெற்று யாகத்தை முடித்திருக்கலாமே! இருந்தும் ஏன் இங்குவந்தேன்? கற்பக விருட்சத்தையெல்லாம் விடப் பெரும் கற்பகமான ராமர் இங்கு தான் இருக்கிறார். அந்த ராமரைப் பெற்றுப் போகவே
வந்தேன்” என்பதுகுறிப்பு.

யான் இயற்றும்- என்கிறார். ‘‘வேறு யாரையோ வைத்து அல்ல; நானே செய்யக் கூடியது” என்கிறார். ‘‘மன்னா! இது அடுத்தவரைக் கெடுக்கக் கூடிய யாகமல்ல. தவ வேள்வி” என்கிறார். ‘‘ஆரம்பத்திலேயே பிரச்னை என்றால் நான் பார்த்துக் கொள்வேன். இடையில் வரக் கூடிய பிரச்னை. யாகத்தைப் பாதியில் நிறுத்தி விட்டு, நான் எழுந்து செல்ல முடியாதல்லவா? அதற்காக யாகத்தைக் காப்பாற்ற, உன் மகனான ராமனைக் கொடு! ” என்கிறார்.  அதெல்லாம் சரி! யாகத்தைக் கெடுக்கும் அரக்கர்களான சுபாகு-மாரீசன் என்பவர்களைச் சொல்லவில்லையே என்றால், அந்த அரக்கர்களுக்குக் கம்பர் புதுப் பெயர்களைச் சூட்டுகிறார். ஒருவன் பெயர் ‘காமன்’; மற்றொருவன் பெயர் ‘வெகுளி (கோபம்) என்கிறார்.

 நாம் செய்யும் உயர்ந்ததான நற்காரியங்களைக் கெடுப்பவை - காமமும் கோபமுமே என, பாடம் நடத்துகிறார் கம்பரின் விஸ்வாமித் திரர்.  இதைஅடுத்து, ராம-லட்சுமணர் இரு வரையும் விஸ்வாமித்திரர் அழைத்துப் போகும் போது, அவர்களுக்குக் களைப்போ-இளைப்போ தெரியாமல் இருப்பதற்காக, இருவருக்கும் பலை - அதிபலை எனும் மந்திரங்களை உபதேசித்தார்.

விஸ்வாமித்திரர், ராம-லட்சுமணர்களை அழைத்துப் போகும் போது முதலில் நடந்தது ‘தாடகைவதம்’; அடுத்தது’ யாக சம்ரட்சணம்’; அடுத்தது ‘அகலிகை சாபவிமோசனம்’; அடுத்தது ‘சீதா கல்யாணம்’. அதன் பின் விஸ்வாமித்திரரைப் பற்றிய பேச்சே இல்லை.  இந்த நான்கிலும் உள்ள சில நுணுக்கமான தகவல்களைக் காணலாம்.

ராம-லட்சுமணர்களுடன் விஸ்வாமித்திரர் செல்கையில், தாடகையைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வந்தார்; பெரும் பாலைவனம் ஒன்று குறுக்கிட்டது; அதை ராமருக்குச் சுட்டிக் காட்டிய விஸ்வாமித்திரர், ‘‘ராமா! நற்குணஙகள் பல இருந்தாலும் அவற்றையெல்லாம் ஒரேயொரு உலோப குணம் அழித்து விடுகிறதல்லவா? அதைப் போல மருதமாக இருந்த இந்தப் பெரிய பகுதியைத் தாடகை ஒருத்தியே, பாலைவனமாக்கி விட்டாள். இந்த வனத்திலிருந்த விலங்குகள் அனைத்தும் அவள் வயிற்றில் தான்... கொஞ்ச நாளில் உலகையே அழித்து விடுவாள்” என்றார். விஸ்வாமித்திரர் உத்தரவிற்கு இணங்கி, ராமர் தாடகையைக் கொன்றார்.

அடுத்து விஸ்வாமித்திரர் யாகத்தைத் தொடங்கிய போது, கண்களை இமைகள் காப்பதைப் போலக் காத்தார்கள் ராம -லட்சுமணர்கள். யாகம் முடிந்த பின் ராம - லட்சுமணர்களை அழைத்துக் கொண்டு விஸ்வாமித்திரர் சென்றார்.  அடுத்து நிகழ்ந்தது அகலிகை சாப விமோசனம்.  ராமரின் திருவடி துகள்பட்டு அகலிகை சாப விமோசனம் அடைந்ததும், விஸ்வாமித்திரர் அகலிகையைப் பற்றிய வரலாறுகளைச் சொல்லி, அப்படிப்பட்ட அகலிகைக்கு ராமர் அருள் புரிந்ததை வாய் விட்டுப் பாராட்டினார். அந்தப் பாராட்டுதலைக் கம்பர் வாயிலாகவே காணலாம்.

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி, மற்றோர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மைவண்ணத்து அரக்கி போரில்,
மழைவண்ணத்து அண்ணலே! உன்
கைவண்ணம் அங்கு கண்டேன்;
கால்வண்ணம் இங்கு கண்டேன்.   
(கம்பராமாயணம்)
                                                               
தாடகை வதத்தைச் சொல்லி, அகலிகைக்கு அருள் புரிந்ததையும் சொல்லி, ‘‘கைவண்ணம் தாட கையைக் கொன்றது; கால் வண்ணம் அகலிகைக்கு அருள் புரிந்தது” என்று சொல்லி, கால் வண்ணத்தைக் கடைசியில் வைத்திருப்பது, அபூர்வமான சொற் பிரயோகம்.
விஸ்வாமித்திரரின் வாக்காக வெளிப்பட்ட இந்த ‘கால் வண்ணம் இங்கு கண்டேன்’ என்பது, ‘‘ராமா! நான் பார்த்தது கால் பங்கு மட்டுமே” என்ற பொருளைத் தரும். அதாவது’ மீதியுள்ள முக்கால் பங்கை என்னால் காண இயலாது’ என்பது பொருள். அபூர்வமான சொற் பிரயோகத்தை அனுபவிக்கலாம் வாருங்கள்!

தாடகை வதம்- -கால்பங்கு; வாலி வதம்- அரைபங்கு; கும்பகர்ண வதம்- முக்கால்பங்கு; ராவணவதம்- முழுபங்கு. இந்த நால் வகை வதங்களில் விஸ்வாமித்திரர் கண்டது ‘கால்பங்கான’ தாடகை வதம் மட்டுமே!அகலிகைக்கு அருள்- கால்பங்கு; சபரிக்கு அருள்- அரைபங்கு; சுக்ரீவனுக்கு அருள்- முக்கால்பங்கு; விபீஷணர்க்கு அருள்- முழுபங்கு. இந்த நால் வகை அருள் நிகழ்வுகளில் விஸ்வாமித்திரர் கண்டது’ கால்பங்கான’ அகலிகைக்கு அருள் செய்தது மட்டுமே!

கால் வண்ணம் இங்கு கண்டேன் - எனும் விஸ்வாமித்திரர் ராமரிடம் சொன்ன வாக்கைப் பார்த்த நாம், விஸ்வாமித்திரர் ராமரைப் பற்றி ஜனக மன்னரிடம் சொன்ன ஆழமான சொற்களைக் காணலாம்.

ராம-லட்சுமணர்களுடன் விஸ்வாமித்திரர் மிதிலைக்குச் சென்றார். வந்தவர்களை வரவேற்றார் ஜனகர். அவரிடம் பேசத் தொடங்கிய விஸ்வாமித்திரர், ‘‘மன்னா! இவர்கள் நீ நடத்தும் யாகத்தைக் காண வந்தார்கள்; வில்லையும் பார்ப்பார்கள்” என்றார். அதாவது சீதா கல்யாணத்திற்கான வில்லையும் பார்ப்பார்கள் என்பது பொருள். இதன்பின், ராமர் அவதரித்த குலத்தின் பெருமையை விரிவாக விவரிக்கத் தொடங்கினார் விஸ்வாமித்திரர்; சூரியவம்சத்தின் முதல்வரிடமிருந்து சொல்லிக் கொண்டு வந்தவர், தன் அருகில் இருந்த ராமரைச் சுட்டிக் காட்டி, ராமாவதாரத்தின் காரணத்தைச் சொல்லத் தொடங்கினார்.

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்,
அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்,
இருங் கடகக் கரதலத்து இவ் எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள்.
(கம்பராமாயணம்)

‘‘பாவம் தன்னை அதிகமாக வளர்த்துக் கொண்டது. அதே சமயம் புண்ணியம் தன்னை அதிகமாக வளர்த்துக் கொண்டது. ஆகையால் பாவத்தை அழிக்கவும் புண்ணியத்தைக் காக்கவும் கௌசலையின் மகனாகப் பிறந்தான் ராமன்” என்பதே விஸ்வாமித்திரரின் வாக்கான
மேற்கண்ட பாடலின் கருத்து.

இவ்வாறு ராமாவதாரத்தின் காரணத்தைச் சொன்ன விஸ்வாமித்திரரைப் பற்றிய பேச்சு, சீதா கல்யாணத்திற்குப் பிறகு இல்லை. அரசவை கூடியிருந்த போது ‘விடுவிடு'வென வந்தார்; ராம-லட்சுமணர்களை யாகசம் ரட்சணத்திற்காக அழைத்துச் சென்றார்; ராமர் துணையால் தாடகை வதம் முடித்து யாகசம் ரட்சணமும் முடித்து, அகலிகை சாப விமோசனமும் முடித்து சீதா கல்யாணமும் முடித்தார். வந்த வேகத்திலே ஒன்றன் பின் ஒன்றாக வேலைகளை முடித்த விஸ்வாமித்திரர், அதன் பின் களத்திலேயே இல்லை.

சிலர் இப்படித்தான்; ‘பரபர’ வென வருவார்கள். அரும் பெரும் செயல்களைச் செய்வார்கள்; வந்த சுவடே தெரியாமல் ஒதுங்கி மறைந்து விடுவார்கள். அப்படித் தான் விஸ்வாமித்திரரும். விஸ்வாமித்திரரைப்பற்றிய மற்றொருதகவல்.

அரிச்சந்திரன் கதை நமக்குத் தெரிந்தது தான். அந்த அரிச்சந்திர தம்பதிகளை அலைக் கழித்து, பிரிய வைத்து அல்லலில் ஆழ்த்தியவர் விஸ்வாமித்திரர் தான். அந்தத் தம்பதிகளைப் பிரியவைத்து அல்லலில் ஆழ்த்திய அவர்,
ஒன்றுக்கு நான்காக நல்லது செய்துவிட வேண்டும் என்ற நோக்கில் தான்
 வெகு வேகமாக வந்து, யாகசம்ரட்சணம் என்ற பெயரில்
ராம-லட்சுமணர்களை அழைத்துப் போய்,
ராம-பரத-லட்சுமண-சத்ருக்னர் எனும்
நால்வருக்கும் திருமணம் முடித்து வைத்தார்.
விஸ்வாமித்திரர் வாழ்க்கை வரலாறு
விரிவானது. நாம் பார்த்தது ஒரு சில சம்பவங்களை மட்டுமே!

(தொடரும்)

பி.என். பரசுராமன்