தனித்த யாத்திரை



வணக்கம் நலந்தானே!

ஸ்ரீ மத் பாகவதத்தில் தத்தாத்ரேயர் யது மன்னனுக்கு தன்னுடைய இருபத்து நான்கு குருக்களைப்பற்றி விவரிப்பார்.  அதில் ஒற்றை வளையலோடு நெல்குத்தும் பெண்ணையும் அவர் குருவாக ஏற்றுக்கொள்ளும் விதத்தை மிக ஆழமாக சொல்லியிருப்பார். ‘‘யது மன்னா, ஆன்மிக ஞான யாத்திரையில் பயணிக்கும் சாதகன் நிவிர்த்தி என்கிற மனதை ஒடுக்கும் வித்தையை, கைக்கொள்ள வேண்டும்.

ஒரு யோகியானவன் எப்படியிருக்க வேண்டும் என்றும் எனக்கொரு பெண் சொல்லிக் கொடுத்தாள். நான், உலக விவகாரங்களை அறியும் ஆவலோடு நகரத்தில் அங்கும் இங்குமாக அலைந்தேன். ஒரு வீட்டின் முன்பு நின்றேன். அழகான கன்னிகை வெளியே வந்தாள்.

என்ன வேண்டுமென கேட்டாள். அமைதி காத்தேன். நான் உணவை யாசித்து வந்திருப்பதாக அவளுக்குள் புரிந்து கொண்டாள். வீட்டிற்குள் செல்ல முற்படும்போது வாயிலில் குதிரை பூட்டிய வண்டி ஒன்று வந்து நின்றது. சட்டென்று அவள் முகத்தில், நாணக் கோடுகள் பரவின.

என்னை என்ன செய்வதென்று தெரியாமல், ஒரு மரத்தை சுட்டிக் காட்டி அமரச் சொன்னாள். விருந்தினரை உபசரிக்கும் முன்பு, என்னை பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சற்று நேரம் பொறுங்கள் என்று மன்னிப்பு கேட்கும் பாவனையோடு, பேசிவிட்டு உள்ளே நகர்ந்தாள்.

வந்தவர்கள் கூடத்திற்குள் அமர வைக்கப்பட்டனர். கன்னிகையோ உணவளிப்பதற்காக நெல்லை குத்த துவங்கினாள். அவள் கைகளில் நிறைய வளையல்கள் இருந்தன. ஒவ்வொரு முறை நெல் குத்தும்போதும், பெரிய சப்தத்தோடு சிணுங்கின.

சட்டென்று நெல் குத்துவதை நிறுத்தி கைகளில் இரண்டு வளையலை மட்டும் நிறுத்தி, மீதியை உடைத்து போட்டாள். மீண்டும் நெல்லை குத்த, இரண்டு வளையலும் உரசின. அந்த சிறு சப்தம்கூட அவளை தொந்தரவு செய்தது. வந்தவர்கள் இவள் அடங்கா பெண்ணோ...

நாம் வந்தது பிடிக்கவில்லையோ... வெளியே செல்லுங்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறாளோ... அதற்குத்தான் இத்தனை சப்தங்களோடு நெல்லை குத்துகிறாளோ என்று நினைத்து விடுவார்கள் என்று பயந்தாள். எனவே இரு வளையலில் ஒன்றை உடைத்துப் போட்டாள். இப்போது ஒற்றை வளையல் மட்டுமே மிஞ்சியது. சப்தமும் நின்றது.

யது மன்னா, அவள் செய்தது, அவள் சொந்த விஷயத்துக்காக இருக்கலாம், ஆனால், எனக்கு அது வேறு விதமாக புரிந்தது. யோகப் பாதையில் பயணிப்போர் கூட்டமாக இருக்கக் கூடாது. சாதகர்கள் கூட்டமாக வசிக்கக் கூடாது. குழுக்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது. நான்கு பேராக சேர்ந்து கடவுளை தேடலாமே என்பது அபத்தத்தில் முடியும். இலக்கை நோக்கி பாயும் அம்புபோல் ஒரே நேர்க் கோட்டில் தனியாக பயணிக்க வேண்டும். ஆன்மிக பாதை எப்போதுமே ஒரு வழிப்பாதைதான்.

திசை காட்ட, ஆங்காங்கு பலர் வருவர். போவர். ஆனால் தனியே பயணிப்பதுதான் யோகிக்கு அழகு. நான்கு பேருடன் சேர்ந்திருப்பது என்பது சப்தங்களைத்தான் உருவாக்கும். வீணாக சக்தி அங்கு விரயப்படும்.

இரையப்படும். அநேக மனிதர்களோடு ஆத்ம சாதகன் வாசம் செய்வதில் கலகம் உண்டாகும் எல்லாவற்றையும் விலக்கி ஆதார ஸ்ருதி எது என்று தேட வேண்டும். ஆதார ஸ்ருதி என்பது ஒற்றை வளையல்போல தனித்திருக்கும். அந்த தனித்து இருக்கும் வஸ்துவே ஆத்மா என்று அழைக்கப்படுகிறது என்று “தத்தாத்ரேயர் முடித்தார்”.

கிருஷ்ணா

(பொறுப்பாசிரியர்)