பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில்



பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், 9ம் நூற்றாண்டில் உருவானதாக வரலாறு கூறுகிறது. சேரமான் பெருமான் எனும் மன்னனால் கட்டப்பட்ட  இக்கோயிலின் மூலவர் சிலை போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது - எங்கும் இல்லாத சிறப்பு இது. இது வீரம், பூரம், ரசம்,  ஜதிலிங்கம், கண்டகம், கவுரி பாசாணம், வெள்ளை பாசாணம், மிருதர்சிங், சிலசட் ஆகிய வீரிய பாஷாணங்களின் கலவையாகும். நவபாஷாணத்தால்  உருவாக்கப்பட்ட மூலவர் சிலையில் அபிஷேகம் செய்யப்படும் பொருட்களை - பிரசாதங்களை - உண்டால் தீராத நோய்களும் தீரும் என்பது  ஆண்டாண்டுகாலமாக நிலவிவரும் நம்பிக்கை.

அதனால்தான் மூலவரை உருவாக்கிய போகரும் இன்றளவும் பேசப்படுகிறார். இந்த தண்டாயுதபாணி சிலை இரவில் வியர்க்கும் தன்மை உடையது.  இந்த வியர்வை துளியில் அறிவியலே வியக்கும்வண்ணம் மருத்துவத்தன்மை கொண்டது. இராக்கால பூஜையின் போது, சிலைக்கு சந்தனம் பூசப்படும்.  பின்பு அடியில் பாத்திரம் ஒன்று வைக்கப்படும். மறுநாள் காலை அந்த சந்தனம் கலைக்கப்படும்போது, வியர்வைத்துளிகள் பாத்திரத்தில் வழிந்து  நிற்கும். சந்தனமும் பச்சை நிறமாக மாறி இருக்கும். வியர்வை, கவுபீன தீர்த்தம் எனப்படும். சந்தனமும், கவுபீன தீர்த்தமும் அருமருந்தாக  கருதப்படுகின்றன.இன்றும் போகர்-புலிப்பாணி பரம்பரையில் வந்தவர்கள் கோயில் நிர்வாகத்தின் உதவியோடு இந்த இடத்தை பராமரித்து  வருகின்றனர். போகர் வழிபட்ட புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம், எந்திர சக்கரங்கள் இன்றும் சுவாமி வழிபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 - கார்த்திக்