மறக்க முடியாத திருவடிகள்




அருணகிரி உலா  94

உத்தரகோச மங்கைத் தலபுராணத்திற்கும் மாணிக்கவாசகருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அம்பிகைக்கு அருளிச் செய்த உபதேசத்தைத்  தங்களுக்கும் அருளுமாறு சிவகணநாதர் ஆயிரவர் சிவபெருமானை வேண்டி நின்றனர். அவர்களை உத்தரகோச மங்கைக்கு வருமாறு சிவன்  ஆணையிட்டார். அவர்கள் விருப்பப்படியே அங்கு உபதேசம் செய்தார்.

அவ்வாறிருக்கையில், இலங்கையில் மண்டோதரி சிவனை எண்ணிக் கடுந்தவம் மேற்கொண்டிருந்தாள். ‘‘மண்டோதரிக்கு அருள் புரிய இலங்கை  செல்கிறேன். ராவணன் என் மேனியைத் தீண்டுவானாகில் அப்போது இப்பொய்கையில் தீப்பிழம்பு தோன்றும்’’. என்று கூறி இலங்கை சென்றார்  இறைவன்.

மண்டோதரியிடம் குழந்தை வடிவில் சிவனார் சென்றபோது, திக் விஜயம் முடிந்து அங்கு வந்த ராவணன் ‘இவ்வழகிய குழந்தை யார்’ என்று கேட்டு  அதைத் தன் மடியில் இருத்திக் கொண்டான். உடனே இங்கு பொய்கையில் தீப்பிழம்பு தோன்றியது. ஒரு சிஷ்யரிடம் ஆகம நூல்களை ஒப்படைத்து  விட்டு 999 பேரும் தீப் பாய்ந்தனர்.

அந்த ஒருவர் மட்டும் நூல்களைப் பாதுகாக்கும் பொருட்டு சிவனார் வருகைக்காகக் குளக்கரையிலேயே தங்கிவிட்டார். திரும்பவந்த சிவனார்  அகமிழ்ந்து ’’ பூவுலகிற் சென்று பிறந்து  எம்மைப் பாடிப் பரவுவாயாக; தக்க தருணத்தில் வந்து உம்மை ஆட்கொள்வோம்’’ என்று அவருக்கு  ஆசியளித்தார். அந்த சிவகணநாதரே அடுத்த பிறவியில் வாதவூரில் ஓர் அந்தணர் குலத்தில் பிறந்து வாதவூரன் எனும் பெயருடன் வளர்ந்து, பின்னால்  இறைவனாலேயே மாணிக்கவாசகன் என்று பெயர் சூட்டப் பெற்றார் என்கிறது உத்தரகோச மங்கைத் தலபுராணம்.

குளக்கரையிலுள்ள தனி மாணிக்கவாசகர் சந்நதியில் மார்பு வரைச் சந்தனக்காப்பு இடப்பட்டு விளங்கும் திருவுருவம் கண்டு வணங்குகிறோம். எதிரே  ஸஹஸ்ரலிங்க சந்நதி உள்ளது. இங்கு இக்குளத்தில் எழுந்த தீயின் வடிவமாகத் தோன்றிய பெரிய லிங்கமும், அதனுள் மூழ்கிச் சிவகதி பெற்ற 999  சிவகணநாதர்களைக் குறிக்கும் சிறுசிறு லிங்கங்களும் உள்ளன. தல மரமான இலந்தையின் அடியையும் காணலாம்.

மணிவாசகரும் சிவகணநாதர்களும் கால் பதித்த உத்தரகோச மங்கைத் திருத்தலத்தில் மணிவாசகர் பாடிய ஒரு பாடலைச் சமர்ப்பித்த பின்னர்  கோயிலை விட்டு வெளியே வருகிறோம்.

‘‘கொம்பர் இல்லாக் கொடிபோல் அலமந்தனன்,
கோமளமே
வெம்புகின்றேனை விடுதி கண்டாய், விண்ணர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய் மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே !
அம்பரமே, நிலமே, அனல், காலொடு அப்பு
ஆனவனே !
[ நீத்தல் விண்ணப்பம் ]

[ ‘‘கொம்பர் இல்லாக் கொடி போல் அலமந்தனன்’’  எனவரும் பொருளில் ‘‘துணையேதுமின்றித் தாவிப்படர கொழுகொம்பில்லாத தனிக் கொடி போல்  பாவித் தனிமனம் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதோ’’ என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் பாடுகிறார்]

அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் தலம் பிரான்மலை என்று அழைக்கப்படும் திருக்கொடுங்குன்றம். உத்தரகோச மங்கையிலிருந்து சிவகங்கை  வழியாக இத்தலத்தை வந்தடையலாம். [மதுரையிலிருந்து வருவதானால்60கி.மீ. பயணிக்க வேண்டும்] வெகு தொலைவிலிருந்தே மலைச் சரிவில்  கோயில் இருப்பது பார்க்க முடிகிறது.
             
‘‘மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்
குயிலின்னிசை பாடும் குளிர் சோலைக் கொடுங்குன்றம்
அயில் வேல் மலி நெடுவெஞ்சுடர் அனல் ஏந்தி நின்று ஆடி
எயில் முன்பட எய்தான் அவன் மேய வெழில் நகரே’’
 - சம்பந்தர் தேவாரம்.

[ ஆண்மயில் பெண் மயிலோடு சேர்ந்து ஆடுவதும், குயில் பாடுவதும் ஆக விளங்கும் குளிர்ச் சோலைகளை உடைய கொடுங்குன்றம். கூரிய வேலை,  கொடும் வெஞ்சுடர் போன்ற தீயைக் கையிலேந்தி நின்று தாண்டவம் செய்து, முப்புரக் கோட்டைகளை அழியுமாறு செய்த பிரான் விளங்கும். அந்த  எழில் நகரே ]  

சிவபெருமான் இங்கு, பூமி, அந்தரிஷம், சொர்க்கம் எனும் மூன்று இடங்களைக் காட்டி எழுந்தருளியிருக்கிறார். [ பாதாளம், பூமி, கயிலாயம் என்றும்  கூறுவதுண்டு]. எனவே இக்கோயில் மற்ற சிவாலயங்களிலிருந்தும் மாறுபட்டு விளங்குகிறது.

கோயில் வளாகத்தில் நுழைந்து வலப்பக்கம் திரும்பினால் மலைச் சரிவிலுள்ள தேனாடி தீர்த்தம் நம்மை வியக்க வைக்கிறது. இடப்பக்கம் திரும்பி   கொடுங்குன்ற நாதர் [சுடோரகிரீஸ்வரர்] குயிலமுத நாயகி சந்நதிக்குச் செல்லலாம். ஈசன் விளங்கும். கருவறையைச் சுற்றி உள்ள விநாயகர்,  அறுபத்து மூவர், சொக்கநாதர் -மீனாட்சி, ராமநாதர் - பர்வதவர்த்தினி, காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, தட்சிணா மூர்த்தி ஆகியோர் திரு  உருவங்களைக் கண்டு வணங்குகிறோம். ஜூரதேவர் [ சரியாகச் சொல்வதானால் ஜூரத்தைப் போக்கும் ஜூர ஹரேஸ்வரர்] வீற்றிருக்கிறார்.

அம்பிகை சந்நதிக்கெதிரில் கொடி மரம் நந்தி, பலிபீடம் உள்ளன. திருச்சுற்றில் தனி முருகனைக் கண்டு வணங்குகிறோம். எதிரில் சாளர அமைப்பைக்  கடந்து யானை வாகனம், கொடி மரம், பலிபீடம் உள்ளன. இத்தலத்தின் திருப்புகழ்ப் பாக்களை முருகன் முன்
சமர்ப்பிக்கிறோம்.

‘‘தெனந்தெ னந்தெந் தெந்தெந் தெந்தெந் தெந்தெனானா
செறிந்தடர்ந்துஞ் சென்றும் பண்பின் தும்பிபாடக்
குனிந்தி லங்குங் கொம்புங் கொந்துந் துன்று சோலை
கொழுது கொடுந் திண் குன்றந் தங்குந் தம்பிரானே’’

தெனந்தென… என்று கூட்டமாக நெருங்கிச் சென்று பண்கள் இசைக்கும் வண்டுகளும் வளைந்த கிளைகளும் பூங்கொத்துகளும் நிரம்பி உள்ள காடுகள்  சூழ்ந்த செழுமையானதும் வலிமை மிக்கதுமான கொடுங்குன்றம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !’’

‘‘விலைமாதர்கள் மயக்கால் தடைபட்டு நின்ற போதிலும் நான் விடாது செயும் பக்தித் தொண்டைப் பார்த்தேனும் உளம் மகிழ்ந்து இப்போது கருணை  புரிய மாட்டாயா?’’ எனும் வேண்டுகோளையும் இப்பாடலின் நடுவில் வைத்துள்ளார்.கொடுங்குன்றத்தில் முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு நடன  தரிசனம் அளித்துள்ளான் என்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. ‘‘எதிர் பொருது’’ எனத் துவங்கும் நீண்டதொரு பாடலில்,

‘மட்டற்ற இந்திரிய சட்டைக் குரம்பையழி
பொழுதினிலும் அருள் முருக சுத்தக் கொடுங்கிரியில்
நிர்த்தச் சரண்களை மறந்திடேனே’’

என்று முருகனிடம் சரணடைகிறார். [ கடோரகிரி என்ற வடமொழிப் பெயரின் தமிழாக்கம் கொடுங்கிரி]
   
‘‘அளவற்ற இந்திரியங்கள் தங்கும்
சட்டையாகிய இந்த உடல் அழிகின்ற
போதிலும் அருட்பாலிக்கும் முருக வேளை, தூய கொடுங்குன்றத்தில் எனக்குக் காட்சியளித்து நடனம் செய்த அவன் திருவடிகளை ஒரு போதும்  மறக்கமாட்டேன்’’ என்கிறார்.

‘‘ தண்டையணி’’ எனத் துவங்கும் செந்தூர்த் திருப்புகழில் ‘‘கொண்ட நடனம் பதம் செந்திலிலும் ஒன்றன் முன் கொஞ்சி நடனம் கொளும் கந்த  வேளே’’ எனும் போது ‘செந்திலிலும்’ என்று பாடியிருப்பதால் மற்ற ஒரு தலத்திலும் அவருக்கு நடன தரிசனம் கிட்டியுள்ளதென்பது புலனாகிறது. அது  கொடுங்குன்றமே என்பது இத்தலத் திருப்புகழிலிருந்து தெளிவாகிறது. ‘‘இலாபமில்’’ எனத் துவங்கும் விராலிமலைப் பாடலில்,

‘‘விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை
விராலிமை மீதிலுரை பெருமாளே’’

என்று பிரான்மலையைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

‘‘நிர்த்தச் சரண்களை மறவேனே’’ எனப் பாடியிருக்கும் அதே கொடுங்குன்றப் பாடலில் தாளங்கள் பற்றியும் தாளக் கருவிகள் பற்றியும்  அருணகிரிநாதர் விரிவாகப் பாடியிருப்பது நம்மைப் பெரும் வியப்பிலாழ்த்துகிறது.

‘‘திதி திதிதி திதிதிதிதி   தித்தித்தி திந்திதித
தத்தத்த தந்ததத
தெத்த தெத தெதததெத  தெத்தெத்த தெந்ததெத
திக்கட்டி கண்டிகட
ஜெகண கெண கெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கத்த குந்தகுர்த திந்தி தீதோ
திகுடதிகு  தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு  டிக்கட்டி கண்டிகட
டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகு திகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகுகு என்று தாளம்
முதிர் திமிலை கரடிகை இடக்கைக் கொடுந்துடியு
டுக்கைப் பெரும் பதலை.
முழுவுபல மொரு மொகென ஒத்தி...’’

[ ஒத்தி = ஒலிக்க] முருகன் போர்க்களத்தில் அசுரர்களை வெட்டியழித்தான் என்று பாடுகிறார். தாள நுட்பங்கள், இசைக் கருவிகள் பற்றிய  அருணகிரியாரின் நுண்ணறிவு நம்மை மிகவும் வியக்க வைக்கின்றன. அவரது மொத்தப் பாடல்களையும் ஆராய்ந்து பார்க்குங்கால் சுமார் 80  இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் கிட்டுகின்றன.

முருகப் பெருமானை வணங்கி வெளியில் வந்து பக்கவாட்டிலுள்ள 70 படிகள் ஏறி அந்தரிக்ஷித்திலுள்ள வடுக பைரவரைத் தரிசிக்க வருகிறோம்.  நுழைவாயிலருகே காசி விஸ்வநாதர் - விசாலாட்சி இருவரும் அருட்பாலிக்கின்றனர். நின்ற திருக்கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன்  எழுந்தருளியுள்ள வடுக பைரவர் வலது திருக்கரங்களில் சூலமும், உடுக்கையும், இடது கரங்களில் நாகபாசமும் கபாலமும் கொண்டுள்ளார்.

இங்கிருந்து 30 படிகள் ஏறிய பின் கஜலட்சுமி, பஞ்சாட்சர விநாயகர் ஆகியோரைக் கண்டு வணங்குகிறோம். மீண்டும் 8 படிகள் ஏறி ‘கயிலாயம்’ என  வழங்கப்படும் மேல் தளத்தை அடைகிறோம். நுழை வாயிலில் வல்லப கணபதி வீற்றிருக்கிறார். குடவரைச் சிற்பங்களாக அம்மையும் அப்பனும்  திருமணக் கோலத்தில் குடிகொண்டுள்ளனர்.

இங்கு கற்பூர ஆரத்தி கிடையாது. தீப ஒளியில் மிகக் கவனமாக உற்றுப் பார்த்தும் சரியாக தரிசிக்க முடியவில்லை. இச் சந்நதி ஆறாம்  நூற்றாண்டளவில் பாண்டிய நாட்டுக் குடவரைக் கோயில்களுக்கு மூலமாகக் குடைவிக்கப் பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். [  மற்றொன்று திருப்பரங்குன்றம்] மூலவர் சந்நதிக்கு எதிரே மலையில் சுந்தர பாண்டியனால் பெரியதொரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

[ ஒரு வேளை இதனால்தான் கருவறைக்குள் சூரிய ஒளி விழாமல் தடைபட்டு விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது] மங்கை பாகர் -  தேனாம்பிகை என அழைக்கப்படும் அம்மையப்பரை வணங்கிப் படிகள் இறங்குகிறோம். [ ஊரில் பல பெண்களுக்குத் ‘தேனம்மை’ என்ற பெயர்  வைக்கப்படுவதாகக் கேள்விப் படுகிறோம்].

பிரான்மலைக் கோயிலைப் பாரீஸ்வரம் என்றும் குறிப்பிடுவதுண்டு. முல்லை படரத் தன் தேர் கொடுத்த பாரிவள்ளல் வாழ்ந்த பறம்பு மலை இதுவே  என்பர். மலைச் சரிவில் மிகப் பெரிய அளவில் பாரி வள்ளல், தேர் ஆகிய சுதைச் சிற்பங்களைத் தொலைவிலிருந்து காணும்படியாக அமைத்துள்ளனர்.  மலை மேலிருந்து பார்க்கும் பொழுது தெரியும்இயற்கையழகு மனதைக் கொள்ளை கொள்கிறது.மலைச் சரிவில் செங்குத்தான படிகளில் ஏறுவது சற்று  கடினமாக இருப்பதால் உச்சி வெயிலில் படி ஏறுவது தவிர்க்கப்பட வேண்டும்

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி