தை பூசத்தில் பக்தி காவடி



வேலுண்டு மயிலுண்டு நலம்பெற
வேலவன் துணையுண்டு
பாலுண்டு பழமுண்டு பசிக்கு
பரிமாற  திருப்புகழுண்டு
நாகவுரு கொண்ட முருகன்
தேகவுருவானது சஷ்டியில்
யோககுரு  சுந்தரன் பழனியில்
போகரால்  எழுந்தருளி
பக்தரை காப்பது தைப்பூசத்தில்
பால்குடம் காவடிகள் பாசத்தில்!

பாம்புச்சித்தன் சுப்பிரமணியன்
பரப்பிரம்ம மூலாதார சக்தி
பரம்பொருள் என்றுணர்வாய்
படைவீடு  சென்று வணங்கிடுவாய்
பகைவனுக்கு அருளும் மருதாசலன்
பூசத்தில் ஞானக்கொழுந்தாய்
பரவசஒளிதரும் அருளாளன்!
பலயுகங்கள் கடந்தும்
பாரினில் நிலைத்த சுகமாய்
தேரோட்டும் இளஞ்சூரியன்!

வள்ளிமணாளனை திருத்தணிகையில்
அள்ளித்தமிழமுது படைத்து
சொல்லாத பெருமைதனை
சொல்தொடுத்து பாடிட
சொர்க்கம் புகுந்து மீண்டு
தர்க்கம் செய்து பூமியில்
தண்டபாணி ஆட்கொள்ள
எள்ளுக்குள் எண்ணெய்யாய்
என்னுள் ஒளிந்திருக்கும்
ஏரகன் பதமே அணைத்திருப்பேன்!

கந்தன் சிந்தனை தமிழ்
சந்தன எண்ணமாகும்
கருணைவள்ளல் குருவருள்
கர்மவினை தீர்த்திடும்
கண்புருவ மத்தியில்
கடம்பனை போற்றிட
மனதில் பேரானந்தம்
மடைதிறந்த பிரவாகமாகும்
மயில்தோகை விரித்தாடும்
மனிதப்பிறவி ரகசியம் விளங்கும்!

தடைகள் விலக்கிடும்
தண்டபாணி சித்தனை
தனிப்பெரும் கருணையை
தைப்பூசத்தில் சேவித்து
தலைமுறை தொடரும்
பாவம்  கரைத்து வாழ்வோம்!

விஷ்ணுதாசன்