வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர்



நலம் தரும்  நரசிம்மர் தரிசனம் 26

சென்னை - சைதாப்பேட்டை


சிரிக்கும் கண்களும் பேரின்ப அமுதூறும் இதழ்களுமாய் நிற்கும் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; இந்திரலோகம் ஆளும் அச்சுவை  வேண்டாம்; இச்சுவையை மிஞ்சுமா எச்சுவையும் என கூறுமளவுக்கு அழகு காட்டும் இனிய மாதவன், தன் பக்தனுக்கு ஒரு துயரென்றால் பார்க்கவே  அஞ்சும் அளவுக்கு நரசிங்கத் தோற்றம் கொண்டு துஷ்டர்களுக்குக் கடுமையானவராகவும் காட்சி தருகிறார்.

சென்னை - மேற்கு சைதாப்பேட்டையில் கோயில் கொண்டுள்ள அலர்மேலு மங்கைத் தாயார் சமேத பிரசன்ன வேங்கட நரசிம்ம பெருமாள்  ஆலயத்திற்குள் நுழைந்து எம்பெருமானை தரிசிக்கும் யாவருக்கும் இப்படியொரு எண்ணம் எழுவது இயற்கையே. இந்த ஆலயம் அமைந்த விதம்  அலாதியானது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை, திருக்காரணீஸ்வரம், செங்குந்தகோட்டம், திருநாரையூர், ஸ்ரீரகுநாதபுரம் என நான்கு பகுதிகளாகப்  பிரிக்கப்பட்டிருந்தது. திருக்காரணீஸ்வரத்தில் காரணீஸ்வரரும், செங்குந்த கோட்டத்தில் சிவசுப்ரமணியரும், திருநாரையூரில் சௌந்தரீஸ்வரரும்,  அருட்பாலிக்க, ரகுநாதபுரத்தில் கோதண்டராமர் அருளாட்சி புரிந்தார். இந்த ரகுநாதபுரம் கோதண்டராமர் கோயில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இந்த பகுதியில் வளையல் வியாபாரம் செய்யும் பலிஜாநாயுடு மக்கள், வீடுகள் கட்டி குடியேறினார்கள். தங்கள் மனம் கவர்ந்த ராமன் இங்கு கோயில்  கொண்டிருப்பது கண்டு குதூகலித்தார்கள். சக்ரவர்த்தி திருமகனும் தன் பாதம் பணிந்த மக்களை கண்ணை இமை காப்பதுபோல காக்க, குடி உயர்ந்தது.  குடி உயர நன்றியோடு கோயில் வளர்க்க விரும்பினார்கள் அம்மக்கள். அப்படி ராமர் கோயிலை விரிவுபடுத்தி புதுப்பிக்கும் பணி நடந்த போதுதான் ஓர்  அதிசயம் நிகழ்ந்தது.

ஆலயத் திருப்பணிக்காக தோண்டிய பள்ளத்தில் சுவாமி விக்ரகங்கள் அழகு காட்டி சிரித்தன. எங்களுக்கும் இங்கேயே ஆலயமெழுப்புங்கள் என  குறிப்பால் உணர்த்தின. ராமனின் ஆலயப் பணியில் பிரசன்னமான இவருக்கு பிரசன்ன வேங்கடவன் என பெயரிட்டு, அழகிய ஆலயமெழுப்பி  அமர்த்தினார்கள். அந்த வைபவத்தை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் உள்ள நரசிம்மர் எழுந்தருளி நடத்தி வைத்ததால், இவர்  பிரசன்ன வேங்கட நரசிம்மராய் மலர்ந்தார்.சுமார் 80 அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜ கோபுரம் கட்டப்படத் தொடங்கியது 1992ல். ஒன்பது  வருடங்களில் பணி பூர்த்தியாகி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த அதிசயம் ஏராளம்.

‘‘ராஜகோபுரப் பணி நடந்து கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில், சுமார் ஒரு லட்ச ரூபாய் தேவைப்பட்டதாம். என்ன செய்வது என தெரியாமல்  திகைத்து நின்றபோது ஒரு வயதான பெரியவர் அங்கு வந்தாராம் ‘கோபுர வேலை நடக்குதா? வெரிகுட். எவ்ளோ எஸ்டிமேட்?’ என்று கேட்டாராம்.  பணமில்லாத வருத்தத்தில் இருந்த திருப்பணி குழுவினர், அவரது ஏழ்மையான தோற்றத்தைக் கண்டு அலட்சியமாக ‘ இருபத்தி அஞ்சு லட்சம்’ என  பதில் சொல்ல, தன் பாக்கெட்டில் இருந்து ஒரு செக் எடுத்து கையெழுத்திட்டு கொடுத்துவிட்டு நடையைக் கட்டினாராம் பெரியவர்.செக்கைப்  பார்த்தவர்கள் மயக்கம் போட்டு விழாத குறை. அதில் எழுதியிருந்த தொகை ஒரு லட்ச ரூபாய். அப்பொழுதும் சந்தேகத்தோடு வங்கியை அணுக,  மூன்றாவது நாள் பணம் கிடைத்துவிட்டது! “இப்படி ஒவ்வொரு வேலையையும் ‘அவரே’ நடத்திக்கிறார்” என்று இப்போதும் கோயில் ஊழியர்கள்  நெஞ்சு விம்ம சொல்கிறார்கள்.

தனக்கான பணிகளை தாமே யார் மூலமாவது அழகாய் நிறைவேற்றிக் கொள்ளும் இந்த நரசிம்மனின் லீலையை எண்ணி வியந்தபடி, ஓங்கி உயர்ந்து  நிற்கும் ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால், கொடிமரம் வரவேற்கிறது. இதன் முன்பு விழுந்து வணங்கி ஆலய வலம் வரலாம்.  வெளிப்பிராகாரத்தில் சக்கரத்தாழ்வார் தனிச்சந்நதியில் அருள்கிறார். இவருக்கு அருகே அலர்மேலுமங்கைத் தாயார் சந்நதி. பேரழகோடு வீற்றிருக்கும்  அன்னை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் ஆலயத் திருப்பணியின் போது பூமியில் இருந்து கிடைத்தவர். நீண்ட காலம் பூமியுள் இருந்ததால் உற்சவர்,  மூலவர் விக்ரகங்களில் ஏராளமான புள்ளிகள். அவளருள்சிந்தும் அழகில், புள்ளிகள் மறைந்து போகின்றன. அன்னையை 27 நாட்கள் தினமும் 27  முறை வலம் வர வளமெல்லாம் கிடைக்கும். திருமணம் கைகூடும். குழந்தைப் பேறு நிச்சயம் என்கிறார்கள்.

தாயாரின் அருள் அன்பில் நனைந்து, மனமின்றி அந்த சந்நதியை விட்டு நகர்ந்து அடுத்து சூடித்தந்த சுடர்கொடியின் அழகு தரிசனம் காணலாம். தமிழை  ஆண்டவளைப் பணிய, கலைகள் கைகூடுகிறதாம். உட்பிராகாரத்துள்  கருடனும் அனுமனும் அருள, கூடவே சந்தான கிருஷ்ணரும் ஆழ்வார்களும்  தரிசனம் தருகிறார்கள். அடுத்து உத்தமன் ராமனின் தரிசனம். அடுத்து, கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீற்றிருக்கும் பிரசன்ன வேங்கட  நரசிம்மரின் அருட்காட்சி. துளசியும் முல்லையும் பச்சைக் கற்பூர வாசனையும் கலந்த மணத்தோடு வேங்கடவனின் அருள் மணமும் கலந்து  சுவாசத்தில் கலக்கும்போது, கவலை எல்லாம் நொடிப்பொழுதில் மறைகிறது. துன்பம் பனியாய் மறைகிறது. நின்ற திருக்கோலத்தில் அருளும்  பெருமாளின் கீழே  சிங்க முகம் காட்டாமல், சாந்த ரூபமாய் நரசிம்மர் சிரிக்கிறார். இந்த அழகிய திருமுகம் காட்டுவதாலேயே இவரை அழகிய
சிங்கராய் கொண்டாடுகிறார்கள்.

நெய்தீப ஒளியில் கிடைத்த வெங்கடேசரின் தரிசனமும் சடாரியால் கிடைத்த அவன் ஸ்பரிசமும்  இறையருகே அழைத்துச் செல்ல, துளசியும்,  தீர்த்தமும் அமுதமாய் உள்ளே இறங்கும்போதே உள்ளம்நிம்மதியில் நிறைகிறது. சித்திரை மாதபிரம்மோற்சவத்தின் அனைத்து நாட்களிலும்  இத்தலத்தில் நடைபெறும் ஒய்யாளி சேவையைக் காண கண் கோடி வேண்டும். வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பும் இங்கு விசேஷமாக  நடைபெறும். கேட்ட வரங்களை கேட்டவாறே அருளும் பரந்தாமனைப்பணிந்து பேறுபெறுவோம்.

(தரிசனம் தொடரும்)
ந.பரணிகுமார்