பரிகாரம், ஹோமம், யாகம், அன்னதானம் ஆகியவைகளைச் செய்வதால் தோஷம் நீங்குமா?



தெளிவு பெறுஓம்

மருந்து  மாத்திரை சாப்பிடுவதால் உடல்நலம் சரியாகுமா என்று கேட்பதைப்போல்  இருக்கிறது உங்களது கேள்வி. நோய் தீருவதற்காகத்தானே  மருத்துவர் மருந்து  மாத்திரைகளைத் தருகிறார். அதுபோலத்தான் இதுவும். நம்மை பீடித்திருக்கும்  தோஷங்கள் நீங்குவதற்காகத்தான் பரிகாரம்,  ஹோமம், அன்னதானம் போன்ற  தீர்வுகளைச் சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அதே நேரத்தில்  மருந்துகளை பரிந்துரைக்கும்  மருத்துவர் அதற்குத் தகுதியானவராக இருக்க  வேண்டும். மெடிக்கலுக்குச் சென்று நாமே வியாதியைச் சொல்லி மருந்து  சாப்பிடுதல் என்பது  எத்தனை தவறானதோ அதே போல நாமாக பரிகாரத்தைச் செய்தல்  என்பதும் தவறானதே. முதலில் பரிகாரம் வேறு, ஜோதிடம் வேறு என்பதைப்  புரிந்து  கொள்ளுங்கள். ஜோதிடம் என்பது முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த ஒன்று.  

ஜோதிட நூல்கள் எதுவும் பரிகாரத்தைப் பற்றிச் சொல்லாது. ஜோதிடர் என்பவர்  உங்களுக்கு உண்டாகியுள்ள தோஷத்தைப் பற்றித் தெளிவாக  எடுத்துரைக்க இயலும்.  ஆனால் அதே ஜோதிடர் பரிகாரத்தைச் சொல்வது என்பது தவறு. பரிகாரத்தைச் சொல்ல  வேண்டும் என்றால் அந்த ஜோதிடர்  அது குறித்த அறிவினைப் பெற்றவராக இருக்க  வேண்டும். அதாவது பரிகாரத்தைப் பற்றி ஜோதிட நூல்கள் அல்லாத சாந்தி  குஸூமாகரம், சாந்தி  ரத்னாகரம் முதலான நூல்கள் தெளிவாகச் சொல்கின்றன. இந்த  நூல்களையும் தர்ம சாஸ்திரத்தையும் கற்றறிந்த வேத விற்பன்னர்கள் மட்டுமே   சாந்தி பரிகாரங்களைச் சொல்லவும் செய்யவும் இயலும். உங்களுக்குத் தெளிவாகப்  புரியும்படியாகச் சொல்ல வேண்டும் என்றால் ஜோதிட நிலையம்  என்பது லேபரட்டரி  என்று அழைக்கப்படும் பரிசோதனைக் கூடங்கள் போல என்று வைத்துக் கொள்ளலாம்.  

ஜோதிடர் என்பவர் பரிசோதனை செய்து ரிசல்ட்டைச் சொல்லும் லேப்  டெக்னீஷியன்கள். அவ்வளவுதான். இந்த நோயினுடைய கிருமியின் தாக்கம்  அதிகமாக  உள்ளது என்று டெக்னீஷியன்கள் சொல்வதைப்போல ஜோதிடர்கள் இந்த கிரகத்தால் இன்ன  தோஷம் உண்டாகியிருக்கிறது என்பதைச்  சொல்ல வேண்டும். நோய்க்கான தீர்வினை  மருத்துவர்தான் சொல்ல முடியும், அதற்குரிய மருந்தினை கற்றறிந்த மருத்துவர்  மட்டுமே பரிந்துரைக்க  வேண்டும். அதுபோலத்தான் தோஷத்திற்கான தீர்வினை அதாவது  பரிகாரத்தினை சாஸ்திரத்தை கற்றறிந்த பெரியோர்கள் மட்டுமே சொல்ல இயலும்.   

அதனை விடுத்து ஜோதிடர் சொல்லும் பரிகாரத்தைச் செய்தல் என்பது  லேப்டெக்னீஷியன் பரிந்துரைக்கும் மருந்தினைச் சாப்பிடுவதற்கு  ஒப்பானதாகவே  அமையும். பரிகாரத்தைச் சொல்லும் தகுதியை அந்த ஜோதிடர் பெற்றிருக்கிறாரா,  அதாவது வேதம், தர்மசாஸ்திரம், மற்றும் சாந்தி  பரிகாரங்களைச் சொல்லும்  நூல்களைப் படித்திருக்கிறாரா என்பதைத் தெரிந்துகொண்டு அவரிடம் பரிகாரத்தைக்  கேளுங்கள். இல்லாவிட்டால்  உங்களுக்கு உண்டாகியிருக்கும் தோஷத்தினை மட்டும்  அவரிடம் தெரிந்துகொண்டு அதற்குரிய பரிகாரத்தை சாஸ்திரம் அறிந்தவர்களிடம்  கேட்டுத்  தெரிந்துகொண்டு செய்யுங்கள். ஜோதிடம் வேறு பரிகாரம் வேறு என்று  பிரித்துப் பார்த்து செயல்பட்டால் நீங்கள் செய்யும் பரிகாரம், ஹோமம் அல்லது  அன்னதானம் முதலியவை நிச்சயமாக முழுமையான பலனைத் தரும்.

?கோயில் பிரசாதத்தை வீணாக்கினால் பாவம் வந்து சேருமா?
- மு. மதிவாணன், அரூர்.


நிச்சயமாக. பிரசாதம் மட்டுமல்ல, வெறும் சாதத்தை வீணாக்கினாலே பாவம் என்பது வந்து சேரும். ‘அன்னம் ந நிந்த்யாத்’ என்கிறது வேதம்.  அன்னத்தை நிந்திக்காதே. அன்னத்தை பழித்தல் கூடாது, உணவினை உண்ணும்போது கீழே இறைத்தல் கூடாது என்று பலவிதமாக வேதத்தினை  ஆதாரமாகக் கொண்டு தர்மசாஸ்திரம் அடித்துச் சொல்கிறது. வெறும் சாதத்திற்கே இப்படியென்றால் சாதத்திலேயே உயர்ந்ததாகக் கருதப்படும் பிரசாதம்  என்பது கிடைத்தற்கரிய ஒன்று. வெறுமனே சமைத்த சாதம் ஆனது இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்படும்போது அது உயர்ந்த பொருளாக அதாவது  பிரசாதமாக மாறிவிடுகிறது. அத்தனை உயர்வான ஒரு பொருளை வீணாக்குவது என்பது மடமையான செயல் அல்லவா. கையில் கிடைத்த  மஹாலக்ஷ்மியை யாராவது தூக்கி எறிவார்களா. சாதத்தைஅன்னலட்சுமி என்றுதானே அழைக்கிறோம். அப்படியிருக்க சாதத்தை வீணாக்குவது  என்பதும் செல்வத்தை தூக்கி எறிவதற்குச் சமமே. அதிலும் அத்தனை ஐஸ்வரியமும் நிறைந்த, இறைவனுக்கு நைவேத்யம் செய்யப்பட்ட,  கிடைத்தற்கரிய கோயில் பிரசாதத்தை வீணாக்குவது என்பது நிச்சயமாக பாவச் செயல்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

?மனக்கோயில் கொண்டெழும் பரந்தாமனை உணர்ந்தோர் ‘இருக்கும் இடம் விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலையவும்’ நேரி                                                                                    டுகிறதே, ஏன்?
- ஆர்.ஆர்.உமா, திசையன்விளை.


உணர்ந்தோர் அலைவதில்லை. உணராதவர் மட்டுமே நீங்கள் சொல்வதுபோல் அலைகிறார்கள். ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்கிறது ஆதிசங்கரரரின்  அத்வைத சித்தாந்தம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைவன் குடியிருக்கிறான் என்பதே இதன் பொருள். இதைத்தான் நீங்கள் மனக்கோயில்கொண்டெழும் பரந்தாமன் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தனக்குள்ளேயே இறைவன் குடியிருப்பதை உணர்ந்தவர்கள் இறைவனைத் தேடித் தனியாக  எங்கும் அலைவதில்லை. அவ்வாறு அலைபவர்கள் இறைவனைத் தனியாக தேடுவதில்லை. தான் உணர்ந்த இறைசக்தியை மற்றவர்களுக்கும்  உணர்த்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இடமாக அலைந்து திரிந்து மற்றவர்களுக்கும் புரிய வைக்கிறார்கள். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத  இடம் தேடி எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பவர்கள் தன்னுள் உறையும் இறைவனை உணர்ந்வர்களாக இருக்கமாட்டார்கள் என்பதே உண்மை.

?சிலர் ஒற்றைக்காலில் கருப்புக்கயிறு கட்டிக்கொள்வது ஏன்?
- அண்ணாஅன்பழகன்,அந்தணப்பேட்டை.


திருஷ்டி தோஷம் தாக்காமல் இருப்பதற்காக இவ்வாறு கட்டிக் கொள்கிறார்கள். கையில் கட்டிக் கொள்ளும் கருப்புக்கயிறு போலத்தான் இதுவும்.  நேரடியாகத் தாக்கும் திருஷ்டி தோஷத்திற்காக கையிலும், மறைமுகமாகத் தாக்கும் பில்லி, சூனியம், மாந்த்ரீகம் முதலான விஷயங்களில் இருந்து  தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக காலிலும் கட்டிக் கொள்வது வழக்கம். இதுபோக, சமுதாயத்தில் பெரிய மனிதர்களாக இருப்பவர்கள்,  ஆன்மிகவாதிகள் போன்றவர்கள் கால்களில் பலரும் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறுவார்கள். அவ்வாறு ஆசிர்வதிப்பவர்களுக்கும் கூட  தோஷங்கள் தாக்கக்கூடும். அதாவது காலில் வந்து விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களிடம் இருக்கின்ற குறைகள் ஆசிர்வதிப்பவரைச் சென்றடையும்.  இதுபோன்ற தோஷங்கள் ஆசிர்வதிப்பவரைச் சென்றடைந்து அவர்களது உடல்நிலையை பலவீனமாக்கக் கூடும். அவ்வாறு நேராதிருக்க  ஆசிர்வதிப்பவர்களில் ஆண்களாக இருப்பவர்கள் வலது காலிலும், பெண்களாக இருப்பவர்கள் இடது காலிலும் கருப்புக் கயிறினை கட்டிக்கொள்வது  வழக்கம். காலில் கருப்புக்கயிறு கட்டிக்கொள்வது என்பது எந்தவிதமான தோஷமும் தன்னை வந்து தாக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான்  என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.

?ஜோதிடம் மூலம் ஒருவருடைய மரணத் தேதியை துல்லியமாக கணிக்க முடியுமா?
-    ப.த.தங்கவேலு, பண்ருட்டி.


முடியாது. ஜனனத்தையும், மரணத்தையும் தீர்மானிக்கும் சக்தி இறைவன் ஒருவருக்கு மட்டுமே உண்டு. ஒரு ஜோதிடரால் இவற்றை தீர்மானிக்க  முடியும் என்றால் அவரே கடவுளாக ஆகிவிடுவார். ஜோதிடத்தின் மூலம் ஒரு மனிதனுக்கு இந்த நேரத்தில் கண்டம் உண்டாகும் என்று சொல்ல  முடியும். ஆனால் மரணத்தை நிர்ணயம் செய்ய முடியாது. மாரக தசை என்பது நடக்கும் போது கண்டாதி கண்டங்கள் தோன்றி மறையும் என்றுதான்  ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த கண்டத்திலிருந்து தப்பித்துக் கொள்வதும், அல்லது அதில் மாட்டிக்கொண்டு மரணமடைவதும் பூர்வ ஜென்ம  வினையைப் பொறுத்தே அமையும். பிறப்பையும் இறப்பையும் தீர்மானிக்கும் சக்தி இறைவன் மட்டுமே. ஜோதிடத்தின் மூலம் ஒருவரின் மரணத்  தேதியை துல்லியமாக கணிக்க நிச்சயமாக முடியாது. அவ்வாறு தீர்மானிப்பதாகச் சொன்னால் அது மிகைப்படுத்திச் சொல்வதே அன்றி அதில்  உண்மை என்பது இருக்காது.

?தினமும் காலையில் பழைய சாதத்தை காக்கைக்கு வைக்கலாமா?
- வண்ணை கணேசன்,பொன்னியம்மன்மேடு.


கூடாது. காக்கைக்கு பழைய சாதத்தை வைப்பது என்பது தவறு. புதிதாக சமைத்த உணவை, அதிலும் வீட்டில் உள்ள யாரும் சாப்பிடாத உணவை  மட்டுமே வைக்க வேண்டும். நாம் ருசி பார்த்த உணவுப் பண்டம் எதுவாக இருந்தாலும் அதனை காக்கைக்கு வைத்தல் கூடாது. அதனால் பலன்  என்பது கிடையாது. அதே நேரத்தில் பழைய சாதத்தை நாய் முதலான பிராணிகளுக்கு வைக்கலாம். அதில் எந்தவிதமான தவறும் இல்லை.

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் ஷர்மா!!