பரிவுடையோரிடம் துன்பம் நெருங்காது



குறளின் குரல் 120

திருவள்ளுவர் அருளைப்பற்றிச் சொல்லவென்றே ஒரு தனி அதிகாரம் படைத்து, பத்துக் குறட்பாக்களில் அருளின் சிறப்புக்களை அறைகூவிச்  சொல்கிறார். (அருளுடைமை - அதிகாரம் 25). அருளோடு வாழ்தலும்,  மற்றவர் மேல் அருள்செலுத்தி வாழ்தலும் மிக மிக இன்றியமையாதது என்பது  வள்ளுவர் கருத்து. பொருட்செல்வத்தை விட முக்கியமானது அருட்செல்வம் என்பது அவர் கோட்பாடு.

‘‘அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள.’’
(குறள் எண் 241)

பொருள்களாகிய செல்வங்கள் இழந்தவர்களிடம் கூட உள்ளன. உயர்ந்தவர்களிடம் உள்ள அருளாகிய செல்வமே சிறந்த செல்வமாகும். எனவே அதை  அடைவதையே முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். செல்வந்தர்கள் எல்லோருமே நல்லவர்கள் என்று சொல்ல முடியாது. தீயவர்களிடமும்  செல்வம் சேரத்தானே செய்கிறது? ஆனால் அத்தகைய செல்வந்தர்களை நாம் மதிப்பதில்லை. அருளுடையவர்கள் செல்வம் இல்லாதவர்களானாலும்  சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவது கண்கூடு.

‘‘நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை.’’
(குறள் எண் 242)

நல்ல வழியால் நன்கு ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும். பலவழிகளில் ஆராய்ந்து பார்த்தாலும் அருளே வாழ்க்கைக்குத் துணையாக  இருக்கும்.

‘‘அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்.’’
(குறள் எண் 243)

அறியாமையாகிய இருள்சூழ்ந்த துன்ப உலகில் வாழும் வாழ்வு, அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.
‘‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்என்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.’’
(குறள் எண் 244)

தன் உயிரின் பொருட்டு அச்சத்தோடு வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிரினங்களைப் போற்றி அருளுடையவனாக  இருப்பவனுக்கு இல்லை.

‘‘அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி.’’
(குறள் எண் 245)

எல்லோரிடமும் கருணை காட்டும் அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது. இதற்குக் காற்று உலவுகின்ற வளமை மிகுந்த இந்தப் பெரிய  உலகமே சான்று.

‘‘பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்.’’
(குறள் எண் 246)

அருள்நீங்கி அதற்கு மாறாகத் தீய செயல்களைச் செய்து வாழ்வோர், அறத்தை விலக்கி வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் ஆவர்.

‘‘அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு.’’
(குறள் எண் 247)

பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலக இன்பங்கள் இல்லை. அதுபோல் அருள் இல்லார்க்கு மேல் உலக இன்பங்கள் இல்லை. நம் நாட்டில்  செல்லுபடியாகும் ரூபாய் நோட்டு அமெரிக்காவிலோ கனடாவிலோ செல்லுபடியாகாது. அங்கு புழங்கும் நோட்டு வேறானது. அந்த நோட்டைக்  கொண்டுதான் அங்கு வாழ்க்கை நடத்த முடியும். எனவே ஒவ்வோர் இடத்திற்கும் அங்கங்கு செல்லுபடியாகக் கூடிய தனி நோட்டு தேவைப்படுகிறது.  'சொர்க்கத்தில் செல்லுபடியாகக் கூடிய நோட்டு எது தெரியுமா? அருளோடு இவ்வுலகில் ஒருவன் செய்யும் தான தர்மங்கள்தான் சொர்க்கத்தின் கரன்சி'  என்கிறார் காஞ்சி மகாசுவாமிகள். வள்ளுவரது இந்தக் குறளின் விளக்கம்தான் அவரது கூற்று.

‘‘பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது.’’
(குறள் எண் 248)

பொருள் இல்லாதவர் ஒருகாலத்தில் வளம்பெற்று விளங்கக் கூடும். ஆனால் அருளை இழந்தவர் பயனற்றவரே. அவர் என்றும் சிறப்பை அடைதல்  இல்லை. லாட்டரியில் கூடப் பொருள் கிடைத்து விடக்கூடும். பணக்கார உறவினர் ஒருவர் பொருட்செல்வத்தை இன்னொருவருக்கு உயில் எழுதி  வைத்துவிடக் கூடும். ஆனால் அருட்செல்வம் அப்படி லாட்டரியில் கிட்டாது! என் அருட்செல்வம் அனைத்தையும் உனக்கு எழுதி வைக்கிறேன் என்று  யாரும் உயிலெழுதி அருட்செல்வத்தைத் தர இயலாது! கடும் பயிற்சியினாலும் மன முதிர்ச்சியினாலும் தான் ஒருவர் அருட்செல்வத்தை அடைய  முடியும்.

'‘தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம்.’’
(குறள் எண் 249)

அருள் இல்லாதவன் செய்யும் அறச் செயலை ஆராய்ந்து பார்த்தால், அது அறிவுத் தெளிவில்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளை ஆராய்ந்து  கண்டதுபோல் ஆகும்.

‘'வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து.’’
(குறள் எண் 250)

ஒருவன் தன்னை விட வலிமை குறைந்தவனைத் தாக்கச் செல்லும்போது, தான் தன்னை விட வலியவனிடத்தில் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணிப்  பார்க்க வேண்டும். எலி பூனையைக் கண்டு பயப்படுகிறது. பூனை நாயைக் கண்டு பயப்படுகிறது. எலியைப் பார்க்கும்போது, தான் நாயைக் கண்டு  அஞ்சியதைப் பூனை எண்ணிப் பார்த்தால் அது எலியை அச்சுறுத்துமா? ஆனால் பூனை அப்படி எண்ணிப் பார்ப்பதில்லை. காரணம் அதற்கு ஆறறிவு  இல்லை. ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள், தம்மிலும் மெலிந்தவர்களைப் பார்க்கும்போது, தம்மினும் வலியவர்களிடம் தாம் பட்ட பாட்டை  எண்ணிப்பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை. மேலதிகாரிகள் தமக்குக் கீழ் உள்ள ஊழியர்களைக் கொடுமையாக  விரட்டுகிறார்கள். ஆனால் அதே மேலதிகாரிகளே முதலாளி முன் அஞ்சி நடுங்கிக் கூழைக் கும்பிடு போடுகிறார்கள். இந்தச் சூழலை மிக அழகாக தம்  ஹைக்கூ ஒன்றில் சித்திரிக்கிறார் கவிஞர் பிருந்தா சாரதி.

'உதட்டுக்குள் சிரிக்கிறான் வேலைக்காரன் மேலதிகாரி முன்
கைகட்டி நிற்கும் அதிகாரி!’

('மீன்கள் உறங்கும் குளம்’ கவிதை நூல்)
எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் போக்கு சமுதாயத்தின் ஒட்டுமொத்த முன்னேற்றத்தைத் தடுக்கிறது. கவிஞர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி,  'தைபிறந்தால் வழிபிறக்கும்' என்ற திரைப்படத்தில் இந்தக் கருத்தை மையமாக வைத்து ஒரு திரைப்பாடல் எழுதியுள்ளார். கே.வி. மகாதேவன்  இசையமைப்பில் டி.எம். செளந்தரராஜனும் ஆர். பாலசரஸ்வதியும் பாடியுள்ள அந்தப் பாடலின் தொடக்க வரிகள் இதோ: 'எளியோரைத் தாழ்த்தி  வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா? பரிதாபம் நெஞ்சில் சிறிதேனும் இல்லா படுபாவியால் வாழ்வு பறிபோவதா?’

அன்பு வேறு. அருள் வேறு. ஆனால் அன்பின் அடிப்படையிலேயே அருள் தோன்றுகிறது. அன்பென்னும் காய் முற்றிக் கனியாகும்போது அருளாகிறது.  அன்பென்பது ஒரு தனி நபர்மேல் செலுத்துவது. அதற்குச் சுயநலம் இருக்கக் கூடும். அருள் அனைவர் மேலும் செலுத்துவது. அதில் சுயநலத்திற்கு  இடமே இல்லை. தமிழக ஞானியர் பலர் அருள் நிறைந்தவர்களாய்த் திகழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் அருளாலேயே நம் தமிழகம் தழைத்தது.  தழைத்து வருகிறது.

சரபோஜி மன்னர் தஞ்சையில் படுத்த படுக்கையாக இருந்தார். சிலமணி நேரங்கள் கூடத் தாங்கமாட்டார் என்பதுபோல் இருந்தது அவரின் ஆபத்தான  நிலைமை. திடீரென்று அவரது உடல்நலம் இவ்வளவு சீர்கெடக் காரணம் என்ன என்று தெரியாது அவர் அருகே கண்ணீரோடு காவலிருந்தார் அவரின்  தாயார். அப்போது அங்கு வந்தார் ராகவய்யா என்ற துறவி. மன்னரை உற்றுப் பார்த்த அவர், மன்னரின் தாயாரிடம் 'இவரைக் காப்பாற்ற  வேண்டுமானால் உடனே நீ நாகூருக்குப் போ, அங்கு கையைத் தலையணைபோல் வைத்து உறங்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் துறவியிடம்  போய்க் கேள், அவர் உன் மகன் பிழைக்க வழிசொல்வார்!’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். தாய் வண்டி கட்டிக்கொண்டு ஓடோடிச் சென்றாள்.  நாகூர்த் துறவி அந்தத் தாயைப் பார்த்து நகைத்தார்.

'மிகத் தாமதமாக வருகிறாய், நல்லவேளை, இப்போதாவது வழி தெரிந்ததே? கடவுள் உன் பக்கமிருக்கிறார். உடனே போ. மன்னரின் தலைக்கு மேல்  உள்ள சுவர்ப் பொந்தில் ஒரு புறா வசிக்கிறது. அது உள்ளே இருப்பது தெரியாமல் உன் சேவகர்கள் சிமென்ட் போட்டு அதைப் பூசி மூடிவிட்டார்கள்.

புறா உள்ளே அன்ன ஆகாரமில்லாமல் குற்றுயிரும் குலை உயிருமாகத் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் உன் மகனும் படாதபாடு  படுகிறான். அந்தப் புறாவைக் காப்பாற்றினால் உன் மகன் பிழைத்துவிடுவான். இல்லாவிட்டால் புறாவுக்கு மட்டுமல்ல, உன் மகனுக்கும் ஆபத்து!’

தாய் அவரை இருகரம் கூப்பி வணங்கினாள். மறுபடியும் வண்டியில் தஞ்சை அரண்மனைக்கு மிக விரைந்து வந்துசேர்ந்தாள். உடனடியாக மன்னர்  தலைக்குமேல் இருந்த புதிதாகப் பூசப்பட்ட சிமென்ட்டை உடைக்கச் செய்தாள். என்ன ஆச்சரியம்! அதற்குள்ளிருந்து ஒரு புறா மயங்கிக் கீழே  விழுந்தது. அதை அடிபடாமல் எடுத்த மன்னரின் தாய், தானே கவனமெடுத்து அதன் அலகில் சொட்டுச் சொட்டாய் நீர் ஊற்றினாள். ஆகாரம் கொடுத்து  ஓரிரு தினங்கள் அதை மிகப் பக்குவமாய்ப் பராமரித்தாள். அதன் உயிரைக் காப்பாற்றி விட்டாள்.

மன்னர் மெல்ல மெல்ல உடல்நலம் பெற்றார். என்றைக்குப் புறா சாளரத்தின் வழியே வெளியே பறந்ததோ அன்று மன்னர் எழுந்து இயல்பாக நடமாடத்  தொடங்கிவிட்டார். புறா மேல் கொண்ட அருள் ஒரு மனித உயிரைக் காப்பாற்றியது. எல்லா உயிர்களும் ஒன்றுடன் ஒன்று அருளோடு  இயங்கவேண்டும், ஏனென்றால் எல்லா உயிர்களும் ஒன்றுக்கொன்று இணைப்புக் கொண்டவை என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.

'அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை’ என்பது வள்ளலார் மனித சமுதாயம் உய்ய வகுத்துத் தந்த மந்திரம். இறைச்சக்தி அருள் நிரம்பியதாய்த்  திகழ்கிறது. அனைத்து உயிர்களையும் நேசிப்பதும் அனைத்து உயிர்கள் மீதும் அருளைச் சுரப்பதும் இறைச் சக்தியின் இயல்பு. மகான்களும் அத்தகைய  இறைத்தன்மை உடையவர்களே.

ராமானுஜர் அனைத்து உயிர்கள் மேலும் அருள் கொண்டார். அதனால்தான் தம் குருநாதர் தமக்களித்த ரகசிய மந்திரத்தை கோயில் கோபுரத்தின் மேல்  ஏறிநின்று அனைவரையும் அறைகூவி அழைத்து அனைவருக்கும் உபதேசித்தார். பிறர்க்கு உபதேசம் செய்யாதே என்ற குருவின் கட்டளையை  மீறியதால் அவருக்கு நரகம் சம்பவிக்குமே என எச்சரித்தபோது, நான் ஒருவன் நரகம் போனாலும் கோயிலின் கீழ் நின்று உபதேசம் பெற்றுக் கொண்ட  அனைவரும் மந்திர உச்சாடனத்தால் சொர்க்கம் போவார்களே, அத்தனை பேரும் சொர்க்கம் புகுதல் அல்லவோ தனியொருவர் சொர்க்கம் புகுதலினும்  சிறப்பு என வினாத் தொடுத்தார் ராமானுஜர். அவரது அருட்கருணை அத்தகையது.

அருள் நிறைந்த பெரியோர்களை அருட்செல்வர் எனப் போற்றி மகிழ்வது தமிழர்களின் மரபு. காலஞ்சென்ற பொள்ளாச்சி நா. மகாலிங்கம் வள்ளலாரின்  அன்பர். காந்தியடிகளைப் போற்றியவர். வள்ளலார் காந்தி இருவருக்கும் இணைந்து விழா நடத்தி ஏராளமான பேருக்கு அன்னதானம் வழங்கியவர்.

பற்பல கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடைகளை வாரிக் கொடுத்தவர். ஒரு காந்தி ஜயந்தியன்று, காந்தியைப் பற்றிய உரையைக் கேட்டுக்  கொண்டிருக்கும்போதே அவர் காலமானார். அவரிடம் பொருட்செல்வம் மட்டுமல்லாது அருட்செல்வமும் இருந்தது. அவரை 'அருட்செல்வர் நா.  மகாலிங்கம்’ என்றே தமிழர்கள் பட்டப்பெயர் கொடுத்துப் போற்றினார்கள்.

திருவள்ளுவரே ஓர் அருளாளர் தான். உலகிற்கு அவர் அளித்த ஒப்பரிய அருட்கொடை தானே திருக்குறள்? அந்த அருட்கொடையினால் தானே  உலகம் தழைக்கிறது?

(குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்