தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்
தைப்பூசம் - 8.2.2020


தைப்பூசம் ஆண்டுதோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். தமிழ்ப் பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் ‘பூசாமாதம்’ என்று குறிக்கப்படும். இது  பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடிவரும் நன்னாள் ஆகும். இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பூச நட்சத்திரம் எட்டாவது நட்சத்திரம்.  தைப்பூசத்திருநாள் முருகனுக்கு உரிய நன்னாள். இந்நன்னாளில் செவ்வேளாகிய முருகப்பெருமான் சக்தியிடம் இருந்து வேல் பெற்றார் என்பது ஐதீகம்.  அத்தகு வேலினைக் கொண்டே சூரபத்மனை வதம் செய்தார். மேலும் தைப்பூசத் தினத்தில்தான் இந்த உலகம் தோற்றம் பெற்றது என்பாரும் உண்டு.  இத்தகைய சிறப்புக்களோடு தேவர்களின் குருவாகிய குருபகவானுக்கு உரிய நட்சத்திரமும் பூசநட்சத்திரம் என்பதால் இந்நாள் குருபகவானுக்கு உரிய  நாளாகவும் அமைகின்றது.

இந்த நன்னாளில் சிதம்பரம் நடராசர் ஆனந்த தாண்டவம் ஆடித் திருமாலுக்கும் பதஞ்சலி முனிவர்க்கும் தரிசனம் தந்தார் என்பது புராணம்.  சிதம்பரத்தில் இருந்து நடராசப் பெருமானுக்குத் தொண்டுகள் பல புரிந்த இரணியவர்மன் என்னும் மன்னன் இறைவனின் திருக்காட்சியைக் கண்டு  ஆனந்தம் பெற்ற நாள் தைப்பூசத் திருநாளே ஆகும். தமிழர் மரபில் தைப்பூச வழிபாடு மிகப் புகழ் பெற்றதாய் இருந்தது என்பதனைத் திருஞானசம்பந்தர்  தேவாரம் விளக்கியுரைக்கும். திருஞானசம்பந்தருக்கு மணம்முடித்துக் கொடுப்பது என்று மயிலை சிவநேசச்செட்டியார் பூம்பாவை எனும் பெண்ணை  வளர்த்து வந்தார். அப்பெண் பாம்பு தீண்டி இறந்துவிட, சிவநேசச் செட்டியார் அந்தப் பெண்ணின் சாம்பலை ஒரு கலயத்தில் பாதுகாத்து வைத்திருந்து  திருமயிலை வந்த திருஞானசம்பந்தரிடம் ஒப்படைத்தார். அச்சாம்பலில் இருந்து பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காகத் திருஞானசம்பந்தர் பாடிய  பதிகமே ‘மட்டிட்ட புன்னையங்கானன் மடமயிலை’ எனத் தொடங்கும் பதிகம் ஆகும். இப்பதிகத்தில் திருமயிலையில் நடைபெறும் திருவிழாக்களை  எடுத்துரைப்பார் திருஞானசம்பந்தர். திருவாதிரை, திருவோணம், பங்குனி உத்திரம், வசந்தவிழா, கார்த்திகை விளக்கீடு போன்ற திருநாள்களைக்  குறிக்கும் பொழுது தைப்பூசத் திருவிழாவினையும் விளக்கிடுவார்.

அப்பாடல்,
மைப்பூசு மொன்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் காபலீச்சரம் அமர்ந்தான்
நெய்ப்பூசும் ஓண்புழுக்கல் நேரிழையார்
கொண்டாடுந்
தைபூசங் காணாதே போதியோ பூம்பாவாய்
( தேவாரம் )
என்பதாகும்.

சங்ககாலம் தொடங்கி தமிழர்கள் தைப்பூச விழாவினில் முருகப்பெருமானின் வேலினைப் போற்றிக் கொண்டாடி இருக்கின்றனர். பலதிறப்பட்ட படைக்  கருவிகள் இருந்தாலும் வேற்படைக்கு உள்ள சிறப்புகள், வேறு எந்தப் படைக்கருவிக்கும் இல்லை என்று அறுதியிட்டுக் கூறலாம். வேல் என்பது  ‘வெல்’ என்பதன் முதல்நிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும். இத்தகைய சொல்லாடலைக் கொண்டு, இப்படைக்கருவி ஒன்றே வெல்லும் தன்மை  கொண்டது என்பது பெறப்படும். எனவே தான் ஆண்டாள் கண்ணனைப் பாடும் பொழுதும் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், வில், வாள்,  கதாயுதம் எனப்பெறும்

ஐம்படைகளை விடுத்து,
‘வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’
(திருப்பாவை)
என்று பாடுகின்றாள்.

தமிழரின் சங்ககால வழிபாட்டு மரபில் வேலே தெய்வம் எனப் போற்றப்பட்டது. இத்தகைய வேல் வழிபாடும் மர வழிபாடும் உருவ வழிபாட்டிற்குப்  பல்லாயிரம் ஆண்டுகள் முந்தையது என மானுடவியலாளரை மேற்கோள் காட்டி விளக்கும் தமிழறிஞர் நா. வானமாமலை இவ் வழிபாடு எவ்வாறு  தோற்றம் பெற்றிருக்கும் என்பதனையும் எடுத்துரைக்கின்றார். கல் நாகரிகம் மறைந்து உலோக நாகரிகம் தோன்றி இரண்டும் கலவையாக  நிலைபெற்றிருந்த காலத்தில் உலோகக் கருவிகளுக்கும் அக்கருவியைப் பயன்படுத்துவோருக்கும் ஏற்பட்ட மதிப்பினால் வேலைப் பயன்படுத்தும் ஒரு  தெய்வம் பண்டைத் தமிழர் சிந்தனையில் மதிப்புப் பெற்றது என்பது அவர் தரும் விளக்கம் ஆகும்.

தமிழ்நாட்டில் கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூரில் உள்ள தாழிக்காடு என்னும்  இடத்தில் வெங்கலத்தினால் ஆன வேல் கண்டெடுக்கப் பெற்றது வேல் வழிபாட்டின் பழமையை விளக்கியுரைக்கும். மேலும் மகாபலிபுரத்திற்கு  அருகில் அமைந்துள்ள சாளுவன்குப்பத்தில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சங்க காலத்தினைச் சேர்ந்த கல்லால் ஆகிய வேல், வேல் வழிபாட்டின்  பழமைக்குப் பிறிதோர் சான்றாகும். இத்தகைய பழமையை உடைய வேலின் முக அமைப்பானது சுடர்இலை நெடுவேலாய் நீண்ட அமைப்பினைப்  பெற்றிருந்தது என்பது சங்க இலக்கியம் தரும் செய்தியாகும்.

“சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்
சினம்மிகு முருகன் தண்பரங் குன்றத்து
அந்துவன் பாடிய சந்து கதெழு நெடுவரை”
( அகநானூறு - 59 )
என்பது அகநானூறு. வேல் பல்வேறு பெயர்களால் சிறப்பிக்கப் பெற்றதனை,
“வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேல் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்த வேல் உண்டே துணை”
( திருமுருகாற்றுப்படை )

என்ற திருமுருகாற்றுப்படை அடிகளால் அறியலாம். சங்ககாலத்தில் வேலன் வெறியாட்டு என்பதினுள் வேல் வழிபாட்டுப் பொருளாய் அமைந்தது.  வெறியாட்டுக் களத்தில் வேலினை எவ்வாறு அலங்காரம் செய்து வைத்தனர் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் உணர்த்தும்.வெண்மணல் பரப்பி,  செந்நெல் தூவிப் பந்தல் இட்டு, பசுந்தழை காந்தள் பூக்குழை கட்டி வேலினை அலங்காரம் செய்து வழிபட்டனர். இத்தகைய வெறியாட்டுக் களத்தில் முருகன் வந்து நின்றமையை,

“வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆகுக
 மடவை மன்ற வாழிய முருகே” (நற்றிணை )
என்ற பாடல் விளக்கி உரைக்கும். முருகு, செவ்வேள் வழிபாட்டு முறைகளில் இவ்வேல் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது என்பதனை பரிபாடல்,
தேம்படு மலர் குழை பூந்துகில் வடிமணி
ஏந்திலை சுமந்து சாந்தம் விரைஇ
விடையரை அசைத்த வேலன் கடிமரம்
பரவினர்                   ( பரிபாடல் )

என்ற அடிகளால் எடுத்துரைக்கும். இவ் உலகினைச் சூழ்ந்த பெரிய கடலின் நடுவே முன்னொரு காலத்தில் சூரபத்மன் மாமரமாய் நின்ற பொழுது அந்த  மாமரத்தினை அறுத்த ஒளி பொருந்தும் இலையினையுடைய வெள்ளிய வேலானது, சிறப்புப் பொருந்திய திருச்செந்தூரும் திருச்செங்கோடும்  சுவாமிமலையும் ஏரகமும் ஆகிய இவ்விடங்களில் நீங்காது நிறைந்திருக்கின்ற முருகன் கையிடத்ததாகிய வேலேயாகும். பிணி முகம் எனப்படும்  மயிலின் மீதேறி அசுரர்களுடைய பெருமை அழியுமாறு தேவலோகத்தின் தலைவனாகிய இந்திரன் போற்றப் பகைவர்களை அழித்த வெள்ளிய  வேலானது, அழகிய ஆறுமுகங்களையும் பன்னிருகைகளையும் கொண்டு தனக்கு ஒப்பாக யாரும் இல்லாத பெருமையினை உடையானாகிய முருகன்  கையில் ஏந்திய வேலேயாகும். வளரும் மலையினைச் சூழ வரும் அசுரனுடைய நெஞ்சு பிளக்கக் கிரவுஞ்ச மலையினை அழித்த நெடிய வேலானது,  சரவணப் பொய்கையில் தாமரை மலராகிய பள்ளியறையில் கார்த்திகைப் பெண்டிர் அறுவராகிய தாயாரின் முலைப்பாலினை உண்ட முருகனுடைய  அழகிய கையிலுள்ள வேலேயாகும் எனச் சிலப்பதிகாரம் வேலின் பெருமையினை எடுத்துரைக்கும். சிலம்பின் அத்தகைய சிறப்புடைய வரிகள்,

“சீர் கெழு செந்திலும், செங்கோடும், வெண்குன்றும்,
 ஏரகமும், நீங்கா இறைவன் கை வேல் அன்றே-
 பார் இரும் பௌவத்தினுள் புக்கு, பண்டு ஒரு நாள்,
 சூர் மா தடிந்த சுடர் இலைய வௌ; வேலே.”
 
 “அணி முகங்கள் ஓர் ஆறும், ஈர்-ஆறு கையும்,
இணை இன்றித் தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே-
 பிணிமுகம் மேற்கொண்டு, அவுணர் பீடு அழியும் வண்ணம்
மணி விசும்பின் கோன் ஏத்த, மாறு அட்ட வௌ; வேலே”.
“சரவணப் பூம் பள்ளியறைத் தாய்மார் அறுவர்
திரு முலைப்பால் உண்டான் திருக் கை வேல்-அன்றே
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து,
 குருகு பெயர்க் குன்றம் கொன்ற நெடு வேலே”
( சிலப்பதிகாரம் )
என்பதாகும்.

சிலப்பதிகாரத்தில் வேலுக்கெனத் தனித்த கோட்டமாகிய கோயில் இருந்ததும் குறிக்கப்படுகிறது. வேல் என்ற படைக்கலன் அதனைச் சிறப்பிக்க வேறு  எந்த அடைமொழியினைக் கூறாதய்விடத்தும் தனித்த சிறப்பினை உடையதாகும். அருணகிரிநாதர் தமது கந்தர் அனுபூதியில்,

“ஆடும் பரிவேல் அணிசேவலெனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனியா னைச் சகோதரனே”
( கந்தர் அனுபூதி )

என்று போற்றுகின்றார். மேற்கண்ட பாடலில் மயிலினைக் குறிக்குமிடத்து ‘ஆடும் பரி’ எனவும் சேவலினைக் குறிக்குமிடத்து ‘அணிசேவல்’ எனவும்  அடைமொழி கொடுத்துப் பாடிய அருணகிரிநாதர் வேலினைச் சொல்லும் போது மட்டும் அடைமொழி கூறாது ‘வேல்’ என்று கூறியுள்ளமையை அறிக.  இதன்வழி ‘வேல்’ வேறு எந்த ஓர் அடைமொழியால் கூறாப்படாதவிடத்தும் தனிச் சிறப்பினை உடையதாகும் என்பது தெளியவரும். வேல் எஃகம்,  ஞாங்கர், உடம்பிடித் தெய்வம், சத்தி என்னும் பலபெயர்களைக் கொண்டு அமையும்.

“விடம்பிடித்து அமலன் செங்கண் வெங்கனல் உறுத்திப்பாணி
 இடம் பிடித்திட்ட தீயில் தோய்த்து முன் இயற்றி அன்ன
உடம் பிடித் தெய்வம் இவ்வாறு உரு கெழு செலவின் ஏகி
 மடம் பிடித்திட்ட வெஞ்சூர் மா முதல் தடிந்தது அன்றே”
(கந்தபுராணம் )

என்ற கந்தபுராணப் பாடலில் வேல் ‘உடம்பிடித்தெய்வம்’ என குறிக்கப்படுவதனை அறியமுடிகிறது. வேல் எல்லாவற்றிலும் சிறந்த சக்தியுடைமையின்  ‘சக்திவேல்’ எனப் பெயர் பெறுகின்றது. இத்தகைய வேலாயுதமே எல்லா ஆயுதங்களுக்கும் தலைமைத்தன்மை உடையதாய் இருப்பதனை  வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், ‘வேலாயுதத்திற்கு மேல் ஒரு ஆயுதம் இல்லையே’ என்று பாடுகின்றார். மேலும் ‘சக்திபடைத் தெய்வமே’  என்றும் புகழ்ந்துரைப்பார். சிவஞான சித்தியார் என்னும் சாத்திரம் ‘சக்திதான் தடையில்லா ஞானம் ஆகும்’ என்று குறிப்பிடுகிறது, இதனால்  ஞானத்தினையே முருகப்பெருமான் தன் கையில் வேலாயுதமாய் ஏந்தியிருக்கிறார் என்பது தெரியவரும். எனவே ஞானத்தின் வடிவமாகிய  வேலாயுதம், நம் மனத்துள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள அஞ்ஞானம் என்னும் தடையினை விலக்கி ஆன்ம ஈடேற்றத்தினைத் தந்திடும் என்பது  தெரியவரும். இதனாலே இது ‘தெய்வப்படைக்கலம்’ என்று சிறப்பிக்கப்படுகிறது. கச்சியப்பர் இதனை,

“தேயுவின் எடுத்த அண்டத் திறங்களும் பிறங்கு ஞாலத்து
ஆயிர கோடி அண்டத்து அங்கியும் ஒன்றிற்று என்ன
 மீஉயர்ந்துஒழுகிஆன்றோர்வெருவரும் தோற்றம் கொண்டு
நாயகன் தனது தெய்வப் படைக்கலம் நடந்தது அன்றே”
(கந்தபுராணம்)
என்ற பாடலின் வழி விளக்குவார். அஞ்ஞானத்தின் வடிவமாய் இருந்த சூரபத்மனை வேல் ஞானம் காட்டி ஆட்கொண்டு அருளியமையாலும் இதனை  உணரலாம்.

“ஏயென முருகன் தொட்ட இருதலை படைத்த ஞாங்கர்
ஆயிரம் கோடி என்னும் அருக்கரில் திகழ்ந்து தோன்றித்
தீ அழல் சிகழி கான்று சென்றிட அவுணன் கொண்ட
மாயிருள் உருவ முற்றும் வல்விரைந்து அகன்றது அன்றே”
(கந்தபுராணம்)

என்ற கந்தபுராணப்பாடல் மேற்கண்ட கூற்றிற்குச் சான்றாகும். அதற்காக வேல் அரக்கர் போன்ற கொடியவர்களை அழித்தல் மட்டும் செய்யும் என  நினைத்தல் கூடாது. அது அடியவர்களுக்கு அருளும்போது அருட்கருணையின் வடிவாய் அமையும் என்பதனைக் கச்சியப்பர் கந்தபுராணத்தில்  விளக்கியுரைப்பார். சூரபத்மனை மயிலும் வேலுமாய் ஆட்கொண்ட முருகப்பெருமானின் கையில் இருந்த வேலானது, தேவர்கள் பொழிந்த மலரின்  இடையில் பயணம் செய்து கங்கையில் தோய்ந்து தன் அக்னி உருவம் நீங்கி அருள் உருவம் கொண்டு அடியார்களுக்கு அருளும் பொருட்டு  முருகப்பெருமானின் கையில் வீற்றிருந்து அருளியது. இதனைக் கச்சியப்பர்,

“புங்கவர் வழுத்திச் சிந்தும் பூ மழை இடையின் ஏகி
அங்கியின் வடிவம் நீங்கி அருள் உருக்கொடு வான்தோய்
கங்கையில் படிந்து மீண்டு கடவுளர் இடுக்கண் தீர்த்த
எங்கள் தம் பெருமான் செங்கை எய்தி வீற்று இருந்தது அவ்வேல்”
( கந்தபுராணம் )
எனக் குறிப்பார். எனவே வேலினைப் போற்றி வழிபடும் தைப்பூச நன்னாளில் அதிகாலை துயில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி முருகப்பெருமானின்  ‘ஓம் சரவணபவ’ ‘ஓம் குமாராய’ என்னும் நாமங்களைச் சொல்லி நெற்றியில் திருநீறு அணிந்து இவ்விரதத்தினைத் தொடங்கல் வேண்டும்.  இவ்விரதத்தினை மார்கழி மாதத்தில் தொடங்கி துளசி மாலை அணிந்து தைப்பூசம் வரைக்கும் 48 நாட்கள் மேற்கொள்வது சிறப்புடையதாகும்.  இவ்விரதக் காலத்தில் கந்தர் அனுபூதி, திருப்புகழ், திருமுருகாற்றுப்படை கந்த சஷ்டிக்கவசம், அருணகிரிநாதரின் வேல் விருத்தம் போன்றவற்றைப்  பாராயணம் செய்வது கூடுதல் பயனைத் தரும். ஒரு நாளின் மூன்றுவேளையும் உணவு உண்ணாமல் இருந்து பால், பழங்கள் மட்டும் பருகி  இவ்விரதத்தினை மேற்கொள்ளலாம். தைப்பூசத்தன்று முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பதனை பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.

காவடி எடுத்தல் என்னும் மரபின் பின் ஓர் அழகான காரணம் உண்டு. தமிழ் சிறந்த பொதிகை மலையில் இருந்தவர் அகத்திய மாமுனி. அவர் தமது  சீடர்களுள் ஒருவராகிய இடும்பனை கயிலாய மலைக்கு அனுப்பினார். அவ்வாறு அனுப்பும் பொழுது அவரிடம் முருகப்பெருமானுக்கு உரிய இரட்டை  மலைகளான சிவகிரி, சக்திகிரி என்பனவற்றைக் கொண்ட வருமாறு கூறி அனுப்பினார். அகத்தியரின் வாக்கினைத் தன் சிரமேற் கொண்டு கயிலாயம்  சென்ற இடும்பன் அங்குள்ள மலைகள் இரண்டினையும் தன் தோளின்மேல் பக்கத்திற்கு ஒன்றாகக் கட்டி காவடியாய்ச் சுமந்து வந்தார். இடும்பனின்  பக்தியைச் சோதிக்கவும் அதன் மூலம் அவரின் பக்தியின் சிறப்பினை உலகிற்கு உணர்த்தவும் இறைவன் விரும்பினார். எனவே இடும்பனுக்குச் சிறிது  மயக்கத்தினை உருவாக்கினார். அதனால் இரண்டு மலைகளையும் தன் தோள்களில் சுமந்து வந்து கொண்டிருந்த இடும்பன் தனது வழியினை  இறைவனின் திருவருளால் மறந்து போனார்.

இடும்பனின் நிலையறிந்து அவ்விடத்தில் ஓர் அரசன் வடிவாய்த் தோன்றிய முருகப்பெருமான் தான் வழிகாட்டுவதாய்ச் சொல்லி இடும்பனை  திருவாவினன்குடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற இடும்பன் தான் தோளில் சுமந்து வந்த இரு மலைகளையும் இறக்கி வைத்தார். சிறிது  நேரம் இளைப்பாறியதும் அந்த மலைகளை மீண்டும் தூக்க முயற்சி செய்தார். அவரால் இயலவில்லை. நிமிர்ந்து பார்த்தவர் மலையின் உச்சியில்  குழந்தை ஒன்று நிற்பதனைக் கண்டார். அவனிடம் மலையினை விட்டு இறங்கி வருமாறு வற்புறுத்தினார். ஆனால் அச்சிறுவனோ மலை  தன்னுடையது என்று விவாதம் செய்தான். இடும்பன் அவனிடம் போராடித் தோற்றார்.

இறுதியில் மலைமீது நிற்கும் சிறுவனே சிவபெருமானின் மைந்தனாய முருகப்பெருமான் என உணர்ந்து வணங்கி நின்றார். பின்னர் முருகனிடம்  தன்னைப்போல் பின்னாளில் பக்தர்கள் காவடி சுமந்து வருவார்கள் எனில் அவர்களுக்கு அருள் செய்தல் வேண்டும் என்ற வரத்தினையும்  வேண்டிப்பெற்றார். இக்காவடி எடுப்பதனால் பக்தர்களுக்கு அவர்களைப் பிடித்திருந்த நோய் நீங்கி முருகனின் அருள் கிடைக்கிறது.தைப்பூச விரதம்  வீட்டில் வளங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். குழந்தைப்பேற்றினை அருளும். இந்நாளில் அன்னதானம் செய்வது சிறப்புடையதாகும். இத்திருநாளில்  திருநெல்வேலியின் தாமிரபரணிக் கரையில் அம்பாள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவரையே கணவனாகப் பெற்றாள். எனவே இந்நாளில்  விரதம் இருப்பது கணவன் - மனைவி உறவு மேம்பட வழிவகுக்கும். மறுமை உலகின் வீடுபேற்றினையும் இவ்விரதம் தந்து நிற்கும். எனவே  இம்மைக்கும் மறுமைக்கும் இனியனவே செய்யும் தண்டாயுதபாணிக் கடவுளின் தைப்பூச விரதத்தினை மேற்கொண்டு மேன்மைகள் பெற்று  உயர்வோமாக!!

முனைவர்
மா. சிதம்பரம்