மருதமலையான் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்முன்னாளில் கொங்கு மண்டலத்தில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாம்புகளால் ஏற்பட்ட தொல்லைகளும் இழப்பும் ஏராளமாகும். எனவே,  பாம்புகளை அடக்கி அவற்றின் தொல்லைகளில் இருந்து காக்கும் மகான்கள் இம்மண்டலத்தில் தோன்றினர். இவ்வகையில் தோன்றியவர்களில் தலை  சிறந்தவர்கள் தம்பக்கலை ஐயன், வாழைத் தோட்டத்து ஐயன் போன்றவர்களாவர்.

இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கொங்கு மண்டலத்தில் தோன்றி அன்பர்களுக்குத் துணை நின்றவர் பாம்பாட்டி சித்தராவார். இவர் பாம்புகளை  அடக்கி ஆண்டாலும், பாம்புகளை ஆடச் சொல்லி ஆடு பாம்பே என்று முடியும் வகையில் கருத்துகள் பொதிந்த பாடலைப் பாடியதாலும் பாம்பாட்டிச்  சித்தர் என்று பெயர் பெற்றார், இவரைப் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகப் போற்றுகின்றனர். இவர் பூத உடலுடன் வாழ்ந்து இப்போது சூட்சும  உடலில் வசிக்குமிடம் கோவைக்கு வடக்கேயுள்ள மருதமலையாகும்.

மருதமலை, கோயம்புத்தூருக்கு வடக்கே நகரையொட்டி அமைந்துள்ளது. இங்குள்ள மலையின் மடியில் தண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ளது.  இந்த முருகன் ஆலயத்தையொட்டி அமைந்துள்ள மலைச் சரிவில் இவருடைய குகை உள்ளது. இதனைப் பாம்பாட்டிச் சித்தர் குகை  என்று  அழைக்கின்றனர். இங்கு சில முனிவர் உருவங்களும் பாம்புச் சிலைகளும் வைத்து வழிபடப்படுகின்றன. இந்தக் குகையில் இருந்து செல்லும்  சுரங்கப்பாதை முருகப்பெருமானின் கருவறையின் கீழ் சென்று முடிகிறது என்பர். பாம்பாட்டிச் சித்தர் அதன் வழியே உட்சென்று யோக நிலையில்  நிலைபெற்றுள்ளார் என்கின்றனர்.

- கலைச்செல்வன்