நாக வாகனத்தில் யோக சித்தராக முருகன்



முருகன் ஆலயங்களில் நடைபெறும் பெருந்திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப் பெருமானை எழுந்தருள வைத்து உலாக் காண்கின்றனர். அதற்கென ஆலயங்களில்  மரத்தால் செய்து வண்ணங்கள் தீட்டப்பட்டுப் பொலிவுடன் விளங்கும் பெரிய நாகவாகனங்கள் பொலிவுடன் உள்ளன.சில ஆலயங்களில் புஷ்பங்களைக்  கொண்டு நாக வாகனம் அமைப்பர். இதற்கு புஷ்ப நாகவாகன சேவை என்பது பெயராகும். பெரிய ஆலயங்களில் மரத்தால் செய்து வெள்ளி அல்லது  தங்கத் தகடுகள் பொதிந்த நாக வானங்களையும் காண்கிறோம்.

இவ்வாகனத்தின் தத்துவம் பெருமானே. யோக வித்தைகளின் குறியீடாக மகாநாகமாகவும் அதனுள் இருந்து அந்தச் சக்தியை இயக்குவோனாகவும்  இருப்பதை உணர்த்துகிறது. சித்தர்கள் குண்டலினி எனும் யோக சக்தியைப் பாம்பு வடிவமாகக் கொள்வர். அது மனிதனின் உடலில் இடுப்பின் கீழ்ப்  பகுதியில் சுருண்டு தூங்கும் நிலையில் உள்ளதென்பர். அதனை விழிப்புறச் செய்து ஆறாதாரங்களைக் கடப்பதே யோகநெறி எனப்படும். மூச்சுக்காற்றை  கட்டுப்படுத்தி குண்டலினியைக் கனல்மூட்டி அதனை எழுப்புவதே யோகக் கலையின் முதற்படியாகும். இவ்வகையில் முருகன் இறைவனின்  கண்ணில் இருந்து ஞானமயாக வெளிப்பட்டு, தீக் கடவுளால் ஏந்தப்பெற்றுக் காற்றுக் கடவுளால் சரவணப் பொய்கையில் விடப்பட்டு ஆறு வடிவம்  கொண்டு எழுந்து நின்றான்.

அதன் தத்துவம் குருவின் ஞானத்தால் காற்றுப் பயிற்சியாகச் சொல்லப்பட்டு முருகன் எனும் ஞானத்தீயாய்க் குண்டலினி எழும்புவதாகும். இதை  உணர்த்துவதே நாக வாகனமாகும். இக்காட்சியில் நாகம் சுருண்டு படத்தை மட்டும் விரித்துள்ளது. அதன் நடுவில் முருகன் விளங்குகின்றான். தூங்கும்  யோக சக்தியான குண்டலினி படம் விரித்து எழும்பத் தொடங்குவதையும், அதனை எழுப்பும் சக்தியாக முருகனும் காட்டப்படுகின்றனர்.  குண்டலினியை எழுப்பும் ஆதாரசக்தியாக விளங்குவதால், முருகன் யோகசாமி எனவும், சித்தன் எனவும் அழைக்கப்படுகின்றான்.

பூசை. ச.அருணவசந்தன்