எந்த கோயில்? என்ன பிரசாதம்?



ஸ்ரீ வில்லிபுத்தூர் - அக்கார அடிசல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது. மேலும் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகும். மேலும் 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. பன்னிரு ஆழ்வார்களில் இரண்டு பேர் ஒரே இடத்தில் வாழ்ந்த ஊராக ஸ்ரீவில்லிபுத்தூர் திகழ்கிறது. இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் வடபத்ரசயனர் கோயில் அமைந்துள்ளது. வடபத்ர சயனருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடிக் கொடுத்தாள்.  இங்கே தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இன்றளவும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது.

முன்னொரு காலத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.

வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இத்தலத்தின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாகும்.

திருப்பதி பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை பிரம்மோற்சவத்துக்கு ஆண்டாளுக்கு சூட்டிய மாலை அணிவிக்கப்படுகிறது. இங்கு ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை கள்ளழகர் அணிகிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு
திருமணம் செய்து கொடுத்த போது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம்.

இதன் அடிப்படையில் இத்தலத்தில் சுவாமிக்கு அருகில் கருடாழ்வார்  எழுந்தருளியுள்ளார். ஸ்ரீவில்லி புத்தூரில் ஆண்டாள், தான் அணிந்திருக்கும் மாலையில் 108 திவ்யதேசங்களில் அருளும் பெருமாள்களை மாலையாக அணிந்திருப்பதாக ஐதீகம். ஆண்டாள் கோயில் கருவறையைச் சுற்றி முதல் பிராகார சுவர்களில் 108 திவ்யதேச பெருமாளின் உருவங்கள் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் திருப்பாற்கடல், வைகுண்டம் பெருமாள் உட்பட அனைத்து பெருமாளையும் தரிசிக்கலாம்.

ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பெருமாளை வேண்டி திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களைப் பாடினாள். இதில் திருப்பாவை 30 பாசுரங்களும், நாச்சியார்திருமொழி 143 பாசுரங்களும் கொண்டுள்ளது. இவ்வளவு பெருமைகள் வாய்ந்த இத்தலத்தின் அக்கார அடிசல் பிரசாத செய்முறையை பாலாஜி பட்டர் கூறுகிறார்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கிலோ
பால் - 80 லிட்டர்
கல்கண்டு - 10 கிலோ
சர்க்கரை - 7 கிலோ
பாதாம், பிஸ்தா,முந்திரி - தலா 1 கிலோ
ஜாதிக்காய் - 1.
ஜாதிபத்திரி - 20 கிராம்.
குங்குமப்பூ - 2 கிராம்.
நெய் - 7 கிலோ.

செய்முறை: பச்சரிசியை நெய்யில் நன்கு வறுக்க வேண்டும். பின் அதைப் பாலில் வேகவைக்க வேண்டும். அடுப்பை சிறு தீயில் வைத்து கைவிடாமல் எட்டு மணி நேரம் கிளற வேண்டும். நான்கு மணி நேரத்தில் கல்கண்டையும், சர்க்கரையையும் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். ஏழாவது மணி நேரத்தில் முந்திரி, பாதாம், பிஸ்தா மூன்றையும் மைய அரைத்து சேர்த்து நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவேண்டும். பின் ஜாதிக்காய், ஜாதி பத்திரி, குங்குமப்பூ மூன்றையும் கருங்கல்லில் இழைத்துச் சேர்க்கவும். கமகமக்கும் அக்கார அடிசல் பிரசாதம் தயார்.

ந.பரணிகுமார்