கயிலைநாதகனுக்கு பிரணவத்தை உபதேசித்த கந்தசுவாமி



* திருப்போரூர்

முருகன் திருத்தலங்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு என்று ஒரு தனி சிறப்பு உண்டு. முருகப்பெருமான் அசுரர்களுடன் போரிட்டதாக கந்த புராணத்தில் மூன்று இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. கடலில் போரிட்ட இடம் திருச்செந்தூர், மண்ணில் போர்புரிந்த தலம் திருப்பரங்குன்றம், விண்ணில் போர் புரிந்த தலம் திருப்போரூர். போர் நடந்த இடம் என்பதாலேயே இந்த ஊருக்கு திரு போர் ஊர் என்ற பெயரும், சமராபுரி என்ற பெயரும் உள்ளது. சமர் என்றால் போர் என்று அர்த்தம்.

ஒவ்வொரு கோயிலுக்கும் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் தனிச்சிறப்பு பெற்ற விஷயங்கள் என்று ஒன்று தனியே இருக்கும். அதன்படி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்று மூலவரையும், சக்கர ஸ்தாபனத்தையும் மட்டும் வணங்கி விட்டு வரும் பக்தர்கள் நிச்சயம் கந்தசுவாமி உபதேச மூர்த்தி கோலத்தில் அருளுவதையும் தரிசிக்க வேண்டும். கோயிலின் கருவறை நோக்கி பனை மரத்தாலான மூலவர் முருகப் பெருமானையும், உடனுறை வள்ளி, தெய்வானையையும் வணங்கி விட்டு உட்பிரகாரத்தில் வலம் வரும்போது உற்சவ மூர்த்திகளில் உபதேச மூர்த்தி எனும் சிலை உள்ளது.

சுமார் ஒன்றே முக்கால் அடி உயரம் மட்டுமே உள்ள இந்த சிலை நமக்கு தெரிவிக்கும் வரலாறு பிரமிக்க வைக்கும் ஒன்றாகும். முருகப் பெருமான் சிறுவன் என்பதால் அவனை மதிக்காமல் சென்ற பிரம்மனை அழைத்த முருகன் நான் சிறுவன் என்பதால் என்னை மதிக்காமல் செல்வது ஏன் என்று கேட்டான். நான்தான் படைப்புத் தொழில் செய்பவன் என்று ஆணவமாக பிரம்மா பேச அவரிடம் பிரணவத்திற்கு விளக்கம் கேட்ட முருகன், பதில் தெரியாத பிரம்மனைப் பார்த்து உனக்கு படைப்புத் தொழில் இருப்பதால்தான் தலைக்கனம் பிடித்துள்ளாய்.

ஆகவே, அது இனி உன்னிடம் இருக்காது என்றுரைத்ததும் படைப்புத் தொழில் நின்று விடுகிறது. இதுகுறித்து பிரம்மா சிவபெருமானிடம் முறையிட ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு சிவபெருமானுக்கும் விடை தெரியாது போக அவர் மீண்டும் பிரம்மனை வினவினார். தனக்கும் இதற்கு பொருள் தெரியாது. வேண்டுமானால் கந்தனிடம் கேட்டுப் பாருங்கள் என்று கூறிவிட்டார். சிவபெருமானும் விடாமல் கந்தனைக் கேட்க உலகத்தை ஆளும் உங்களுக்கே தெரியாதா, அப்படியென்றால் நான் ஆசிரியன், நீங்கள் மாணவன். எனக்கு சரிக்கு சமமாக அமராமல் கீழே உட்கார்ந்தால் பதில் உரைப்பேன் உங்களுக்கு என்று முருகனும் சுட்டித்தனமாக கூறினான்.

இதைக்கேட்ட சிவபெருமானோ உனக்குக் கீழே நான் அமர்ந்தால் அது சரியாக வராது. ஆகவே, உனக்கும் இல்லாமல் எனக்கும் இல்லாமல் என் தொடை மீது அமர்ந்து பதில் சொல். என் மேலே அமர்ந்த மாதிரியும் இருக்கும், என் தலைக்கு கீழே அமர்ந்த மாதிரியும் இருக்கும் என்று கூற முருகன் ஒப்புக்கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை கூற சிவபெருமான் அதைக்கேட்டு புளகாங்கிதமடைந்த வரலாறுதான் இந்த சிலை.

சிவபெருமான் வாய் பொத்தி, கை கட்டி அமர்ந்திருக்கும் அவரின் தொடை மீது உபதேசிக்கும் வடிவில் முருகன் அமர்ந்திருக்க உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அற்புத வடிவிலான சிலையைக் காணக் கண்கோடி வேண்டும். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளன்று இந்த உபதேச மூர்த்தியாகிற உற்சவர் வெளியே கொண்டு வரப்பட்டு 16 கால் மண்டபத்தில் இந்த லீலை அரங்கேற்றப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கூறி மீண்டும் படைப்புத் தொழில் பிரம்மாவிடம் ஒப்படைக்கப்படுகின்றது.

- மதுராந்தகி நாச்சியார்