கருடனின் கருணைப் பார்வை



‘பக்தியா? பயமா?’ என்ற தலையங்கம் பக்குவத்தின் உச்சாணி. பால்ய கால பயமும், பக்தியும், பரிகாரமும், வயதுகூடக்கூட அனுபவமும் பக்குவமும் கூடி எல்லாம் கடவுள் செயல் என்று கூறும் நிலை வரை கூறிய விதம் படிப்போரை ஞானியாக்க வல்லது. - ஆர்.இ.மணிமாறன், இடையன்குடி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் புளியோதரை பிரசாதத்தின் பெருமையை கூறி புளியோதரை செய்யத் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும் முறையை கூறியிருந்தது மகளிர் மற்றும் சமையல் செய்பவர்களுக்கு உபயோகமான கையேடாக இருந்தது. ஆன்மிகம் பலன் இதழிற்கு வாசகர்கள் சார்பில் நன்றி.  - கே.சிவக்குமார், சீர்காழி.

கருட சேவை ஆன்மிக ஸ்பெஷல் கருட சேவை, ராகு-கேது பரிகாரத்தலங்கள் படித்து இன்புற்றோம். குறளின் குரல், இலக்கியத்தேன், படித்து, படித்து ஆன்மிக ஆற்றல் பெற்றோம். கல்வெட்டு சொல்லும் கதைகள், தெளிவு பெறு ஓம், படித்து திருக்கோயில் உலா வந்தோம் சப்பரத்தில் ஊர்வலம் வந்த ஆன்மிக பலனின் தெய்வீகப் படைப்புகளை படித்து
தெய்வீகமானோம். - வைரமுத்து பார்வதி, ராயபுரம், சென்னை-13.

மாலவனை சுமப்பது யார்? என்ற தொகுப்பு தத்துவ ஜொலிப்பு. உலகைக் காப்பவரை உன்னதமாகச் சுமக்கும் உயர்ந்த தெய்வீகம் கருடனுடையது என்றறிய மனம் களிப்பில் ஊஞ்சலாடியது.  - ஆர்.ஜி.பாலன், திசையன்விளை.

பக்தி என்பது பக்தர்கள் இறைவனிடம் சரணடைவது என்பதை பொறுப்பாசிரியர் முதல் பக்கத்திலே காரண காரியங்களோடு விளக்கியிருப்பது சிந்திக்க வைத்தது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

கருட சேவை பக்தி ஸ்பெஷல் வாசக அன்பர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதத்தில் இருந்தது. ‘‘பயத்தை பக்தி உண்டுவிட்டு பேரன்பாக ஓங்கி நிற்கும்’’ எவ்வளவு ஆழமான சிந்தனை. பொறுப்பாசிரியரை பாராட்டாமல் இருக்க முடியுமா? - எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி.

கருட சேவை பக்தி ஸ்பெஷல் முழுக்க கருட தரிசனமாக அமைந்ததில் விஷ்ணு பிராப்தம் கூடியது. கருடாழ்வார் குறித்த தொகுப்புகள் கச்சிதமான ஆன்மிக வகுப்புகளானது.
- ஆர்.விநாயக ராமன், செல்வமருதூர்.

திருப்பம் தரும் திருநாங்கூர் கருட சேவை என்ற தொகுப்பும், படமும் மனதின் ஈர்ப்பானதால் பக்தியில் சிலிர்ப்பாகி சிந்தனை ஒருமித்து வந்தனை புரிந்தது. - கலாவதி மணிமாறன்,
இடையன்குடி, நெல்லை.

திருக்கண்ணபுரம் பிரியாவிடை காணும் பெருமாள் தரிசனமும் தகவல்களும் விஷ்ணு அகவலாக அகத்தில் ஒலிக்க+ ஒளி+கண்கள் குளிர+ கருத்துக்கள் மிளிர வைத்தன.
- ஆர்.ஜே.கல்யாணி, மணலிவிளை, நெல்லை.

ராகு-கேது பெயர்ச்சி பொதுப்பலன்கள் வெகு துல்லியம். எனது கடகத்திற்கு கச்சிதம்.  - ஆர்.ஆர்.உமா, திசையன்விளை, நெல்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சரியாகத்தான் சொன்னார்கள். தை வெள்ளியன்று வெளியான இதழில் காமாட்சி விளக்கு பரிசு கொடுத்து போட்டிக் கொண்டாட்டத்தை தொடங்கி விட்டீர்களே! கூடவே, தனியாக வாங்கும் செலவை மிச்சப்படுத்தி, இலவச இணைப்பாக ராகு-கேது பெயர்ச்சிப் பலன்களை கொடுத்தது, வாசகர்களுக்கோர் வரப்பிரசாதம்.  - அ.யாழினி பர்வதம், சென்னை-78.

கருட சேவை ஸ்பெஷல் இதழுக்கு தத்ரூபமாக அமைந்த கருடாழ்வார் (அட்டைப்) படம். உள்ளத்தை கொள்ளை கொண்டது. கூடவே, கருடாழ்வாரோடு எம்பெருமான் குறித்த
கட்டுரைகளையும் கலந்து கொடுத்தது... பக்தி பரவசமாக்கியது. - அம்சவேணி, கடலூர்.

அட்டையில் பெரிய திருவடியின் (கருடாழ்வார்) கம்பீரத் தோற்றம் இதுவரை எங்கும் காணாதது. அறிவுத்திறன் போட்டி... எங்களுக்கு மாபெரும் சவால்... திருநாங்கூர் கருட சேவை விளக்கம், ‘கரு’(வு)‘டன்’ சொல்லப்பட்டிருந்தது தனி பக்தி ரசம். பன்னிரெண்டு வண்ணப்படங்களையும் இன்னமும் பெரிது (என் லார்ஜ்) படுத்திருக்கலாம். ராகு-கேது பற்றிய விவரங்கள் பலன்கள் சற்றும் எதிர்பாராதது. கருடன் புகழ் மாலை எளிய நடை, மாலவனை சுமப்பது யார்? பல ஐயங்களைப் போக்கியது. - சுகந்தி நாராயணன், வியாசர் காலனி.