சிரிப்பிற்குள் சிந்தனையூட்டும் வள்ளுவம்



* குறளின் குரல் 101

வாழ்வியலைப்பேசும் நீதி நூலான திருக்குறளில் நகைச்சுவை இருக்கிறது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அது உண்மை. வஞ்சகப் புகழ்ச்சி அணி என்று தமிழில் ஓர் அணி உண்டு. அதுவும் நகைச்சுவை சார்ந்தது தான். வஞ்சகப் புகழ்ச்சியாக எழுதித் தம் நகைச்சுவை உணர்ச்சியை வெளிப்படுத்துகிறார் வள்ளுவர்.

 ‘தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன
செய்தொழுக லான்.’ (குறள் 1073)

 கயவர்கள் தேவர்களைப் போன்றவர்கள் என வள்ளுவர் சொல்கிறபோது, திடுக்கிடுகிறது நம் உள்ளம். பிறகு வள்ளுவரே விளக்குகிறார். தேவர் கயவர் இருவருமே தாம் விரும்பியதையெல்லாம் செய்யும் இயல்புடையவர்கள் என்கிறார். உயர்த்துவதுபோல் உயர்த்திப் பின்னர் கீழே தள்ளி வள்ளுவர் சிரிக்கும்போது அந்தச் சிரிப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

 'மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.’ (குறள் 1168)

என்கிறாள் குறள் தலைவி. ‘உலகில் எல்லா உயிர்களையும் தூங்கச் செய்யும் இரவே! உனக்கு என்னை விட்டால் வேறு துணை இல்லை. ஏனென்றால் உன்னோடு நான் மட்டும் தான் விழித்திருக்கிறேன்’ என்கிறாள் அவள்.  'கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின்.’ (குறள் 403) படிக்காதவர்கள் கூட மிக நல்லவர்களாகப் போற்றப் படுவார்கள். எப்போது தெரியுமா? கற்றார் முன் அபத்தமாக எதையும் சொல்லாது அவர்கள் மெளனம் காத்தால் அப்போது எனக் கூறி நகைக்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

 ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.’  (குறள் 336)

நேற்றிருந்த ஒருவன் இன்று இல்லை என்பதுதான் இந்த உலகத்தின் பெருமை என்கிறது வள்ளுவம். அது ஒரு பெருமையா? உண்மையில் அது பெருமையல்ல. ஆனால் வள்ளுவரின் நகைச்சுவை உணர்வு அதைப் பெருமை எனப் பதிவு செய்கிறது.

'பெரிதினிது பேதையார் கேண்மை, பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.’ (குறள் 839)

 ‘அறியாமை உடையோரின் நட்பு பெரிதும் இனியது. ஏன் தெரியுமா? பிரிவின் போது அது எந்தத் துயரத்தையும் தராது!` என்கிறார் வள்ளுவர்! இந்தக் குறளைப் படித்த பின்னரும் ஒருவன் முட்டாளோடு நட்புக் கொள்வானானால் அவனை விட முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாதுதானே?! இவ்விதம் வள்ளுவத்தில் பல இடங்களில் நகைச்சுவை, பாயசத்தின் இடையே தட்டுப்படும் முந்திரிப் பருப்பாய் பயில்வாரை மகிழ்விக்கிறது.....

சங்க காலத்தில் மட்டுமல்ல, காப்பிய காலத்திலும் இடைக்காலத்திலும் கூட நிறையப் புலவர்கள் நகைச்சுவையைக் கையாண்டிருக்கிறார்கள். கம்பராமாயணத்தில் சூர்ப்பணகை கூற்றாக வரும் பகுதி கம்பரது கற்பனையை எண்ணி நம்மை நகைக்க வைக்கிறது.மூக்கறுபட்ட சூர்ப்பணகை மீண்டும் ராமனிடம் வருகிறாள். அவன் தம்பி செய்த அநியாயத்திற்கு அறத்தின் அண்ணலான ராமன் தானே நியாயம் செய்ய வேண்டும் எனக்கூறித் தன்னை மணக்குமாறு மறுபடி வற்புறுத்துகிறாள்.

ஒருவேளை அவன் அயோத்தி திரும்பினால், போயும் போயும் மூக்கில்லாத பெண்தானா இவனுக்குக் கிடைத்தாள் என்று யாரேனும் சொல்லக் கூடும் என நினைத்து ராமன் தயங்குகிறானோ? அதுதான் காரணமானால் அப்படித் தயங்கத் தேவையே இல்லை என வாதிடுகிறாள் சூர்ப்பணகை. இடையே இல்லாத சீதை அவனுக்கு மனைவியாக இருக்கவில்லையா, அதுபோல் நாசியில்லாத தான் அவனுக்கு இன்னொரு மனைவியாக இருக்கலாமே என்கிறாள் அவள்! சீதையின் அழகை மறைமுகமாக சூர்ப்பணகை புகழும் இந்த இடம் வேறு எந்த ராமாயணத்திலும் இல்லாத பகுதி.

 ‘பெருங்குலா உறுநகர்க்கே ஏகும்நாள் வேண்டும் உருப் பிடிப்பேன் நன்றே
அருங்கலாம் உற்று அரிந்தான் என்னினும்
 ஈங்கு இளையவன்தான் அரிந்த நாசிஒருங்கிலா
இவளோடும் உறைவேனோ என்பா
னேல் இறைவ ஒன்றும்
மருங்கிலா தவளோடும் அன்றோநீ நெடுங்காலம்
வாழ்ந்த தென்பாள்!

இடைக்காலப் புலவர்களில் நகைச்சுவையை அதிகம் கையாண்ட பெருமை காளமேகத்திற்கு உரியது. பாம்பிற்கும் எலுமிச்சம் பழத்திற்கும் சொல்லும் சிலேடை தொடங்கி, அவரின் சிலேடை வெண்பாக்கள் அனைத்தும் நகைச்சுவைக் களஞ்சியங்களே. சிலேடையாக மட்டுமல்லாமல், தம் புத்திசாலித்தனத்தைக் காட்டும் வகையில் சமத்காரமாகவும் அவர் சில வெண்பாக்களை எழுதியுள்ளார். அவையும் நம்மைச் சிரிக்க வைக்கின்றன. பிறகு சிந்திக்கவும் வைக்கின்றன.

சிவனுக்கு எத்தனை கண் என்று கேட்டால் உடனே அவன் முக்கண்ணன் அல்லவா, அதனால் மூன்று கண் என்றுதானே நாம் பதில் சொல்வோம்? ஆனால் காளமேகம் உண்மையில் சிவனுக்கு உள்ளது வெறும் அரைக்கண் தான் என்கிறார்! அதை ஒரு வழக்கறிஞர் போல, விவாதபூர்வமாக நிறுவவும் செய்கிறார்!சிவனில் பாதி பார்வதி அல்லவா? எனவே ஒன்றரைக் கண் பார்வதிக்குச் சொந்தமானது. மீதி ஒன்றரைக் கண்ணாவது சிவனுடையதா என்றால் அதுவும் இல்லையாம். அந்த ஒன்றரையில் ஒருகண் கண்ணப்பர் அப்பியது. எனவே அது கண்ணப்பரின் கண். ஆக கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனக்குச் சொந்தமான அரைக்கண்ணை வைத்துக் கொண்டு எத்தனை திருவிளையாடல்களை நிகழ்த்தியிருக்கிறார் இந்தப் பரமசிவன்!

‘முக்கண்ணன் என்றரனை முன்னோர்
மொழிந்திடுவர் அக்கண்ணற்கு உள்ளது
அரைக்கண்ணே - மிக்கஉமையாள்கண் ஒன்றரை
மற்று ஊன்வேடன் கண் ஒன்று
 அமையும் இதனால் என்று அறி.’

இடைக்காலத்தில் மட்டுமா? பாரதியார், பாரதிதாசன் எழுதிய தற்காலக் கவிதைகளில் கூட நகைச்சுவை உண்டு. பாரதியாரின் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு இரண்டிலும் நகைச்சுவை நிறையவே உண்டு. தீராத விளையாட்டுப் பிள்ளையாகக் கண்ணனைக் காணும் பாரதியார் அவன் செய்யும் குறும்புகளைப் பட்டியலிடுகிறார். அதில் ஒரு குறும்பு நம்மைச் சிரிக்க வைக்கிறது. பாரதியார் பாட்டுக்கு உரை தேவையா? நேரே வரிகளைப் படித்தே நாம் புரிந்து கொள்ளலாம்.

 ‘பின்னலைப் பின்னின் றிழுப்பான் -
தலைபின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்
வண்ணப் புதுச்சேலை தனிலே - புழுதி
வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான்!
புல்லாங் குழல் கொண்டு வருவான் -
அமுதுபொங்கித் ததும்புநல் கீதம் படிப்பான்!
 கள்ளால் மயங்கியது போலே -
அதைக்கண்மூடி வாய்திறந்தே கேட்டிருப்போம்!
அங்காந் திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்!
எங்காகிலும் கண்ட துண்டோ -
கண்ணன்எங்களைச் செய்கின்ற வேடிக்கை ஒன்றோ?’

 ‘கண்ணன் என் சேவகன்` பாடலிலும் பாரதியாரின் நகைச்சுவை கொடிகட்டிப் பறக்கிறது. பொதுவாக சேவகர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதை விவரிக்கிறார் மகாகவி. `ஏனடா நீ நேற்றைக்கு இங்கு வரவில்லை என்றால்பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்! வீட்டிலே பெண்டாட்டி மேல்பூதம் வந்ததென்பார்! பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்! ஓயாமல் பொய்யுரைப்பார்! ஒன்றுரைக்க வேறுசெய்வார்! தாயாதியோடு தனியிடத்தே
பேசிடுவார்!

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத் துரைப்பார் எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்...` குயில் பாட்டில் வரும் குரங்கு பற்றிய வர்ணனையில் தம் நகைச்சுவை ஆற்றலின் உச்சத்தைத் தொடுகிறார் பாரதி.

 ‘வானரர்தம் சாதிக்கு மாந்தர் நிகராவரோ?
ஆனவரையும் அவர் முயன்று பார்த்தாலும்
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்
மீசையையும் தாடியையும் விந்தை செய்து
வானரர்தம் ஆசை முகத்தினைப் போல் ஆக்க
முயன்றிடினும் ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடியே சேர்ந்து குதித்தாலும் கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணி வைத்துச் சென்றாலும்
வேறெத்தைச் செய்தாலும் வேகமுறப் பாய்வதிலே
வானரர் போல் ஆவாரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு கந்தைபோல்!
வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?
சைவ சுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்
வானரர் போல் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?’

இவ்விதமே மாடு பற்றிய வர்ணனையிலும் தம் நகைச்சுவை ஆற்றலைக் காட்டுகிறார் பாரதி. மகாகவி பாரதியின் சீடரான பாரதிதாசனிடமும் தம் குருநாதரைப் போன்ற இயல்பான நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. பாரதிதாசனின் கவிதை ஒன்று குரங்கு தேவையில்லாமல் அச்சப்பட்டதைப் பற்றிப் பேசுகிறது.

ஆல மரத்தில் இருக்கிறது அந்தக் குரங்கு. அது எந்தக் கிளையில் வீற்றிருக்கிறதோ அந்தக் கிளையில் ஒரு பாம்பு தொங்குகிறது. அதை ஆலம் விழுது என்று நினைத்த குரங்கு, அதைத் தொடுகிறது. தொட்டால் பாம்பு சும்மா இருக்குமா? பாம்பு சீறுகிறது. பயந்துபோன குரங்கு ஒவ்வொரு கிளையாக மேலே மேலே தாவிச் செல்கிறது. பாம்பை விழுதென்று தவறாக நினைத்த அந்தக் குரங்கு, இப்போது தான் தாவிப் பிடிக்கும் கிளைகளில் தொங்கும் விழுதையெல்லாம் பாம்பென்று நினைத்து அஞ்சுகிறது. இப்படி மேலே மேலே தாவிய குரங்கு, இப்போது விழுதே இல்லாத உச்சிக் கிளைக்குப் போய்விட்டது.

அங்காவது அது அச்சமில்லாமல் இருந்ததா? இல்லை, அப்போதும் அது அச்சப்படுகிறதாம். எதைப் பார்த்துத் தெரியுமா? தன் வாலைப் பார்த்தே அது பாம்போ என அஞ்சுகிறதாம் குரங்கு! இந்தக் காட்சியை ஓர் ஓவியம் போல் அழகாகக் கவிதையில் தீட்டுகிறார் பாரதிதாசன்:

 ‘கிளையினில் பாம்பு தொங்க
விழுதென்று குரங்கு தொட்டு விளக்கினைத்
தொட்ட பிள்ளை வெடுக்கெனத் துடித்ததைப்
போல் கிளைதொறும் குதித்துத் தாவி
கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய்
எண்ணியெண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும்!’

தற்கால உரைநடை இலக்கியத்தில் நகைச்சுவை எழுத்து என்று ஒரு தனி வகையே உண்டு. முன்னோடி எழுத்தாளர் தேவன் முதல், அண்மையில் காலமான பிரபல எழுத்தாளர் சாருகேசி வரை எத்தனையோ பேர் நகைச்சுவை எழுத்தை வளர்த்திருக்கிறார்கள். சாவி, நாடோடி, கோமதி சுவாமிநாதன், பாக்கியம் ராமசாமி, சோ, கடுகு, ஜே.எஸ். ராகவன் போன்ற இன்னும் பலர் தம் நகைச்சுவை சார்ந்த எழுத்துக்களால் நம்மை முறுவல் பூக்கச் செய்கிறார்கள். தேவன் படைத்த துப்பறியும் சாம்பு, பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி, சீதாப்பாட்டி போன்ற காலத்தை வென்ற பாத்திரங்கள் எல்லாம் நகைச்சுவைப் பாத்திரங்களே. சாவி எழுதிய `வாஷிங்டனில் திருமணம்’ என்ற நாவல் ஒரு முழுமையான நகைச்சுவை நாவல்.

 ஆங்கில எழுத்தாளர்களில் பெர்னாட்ஷா நகைச்சுவையைக் கையாண்ட வகையில் பெரிதும் புகழ்பெற்றவர்.`மெளனமாய் இருப்பது மிகவும் நல்லது. மெளனத்தின் சிறப்பைப் பற்றி என்னால் பல மணிநேரம் பேச முடியும்!’  `புத்தகங்களைக் கடன் கொடுக்காதீர்கள். கடன் கொடுத்தால் அவை திரும்ப வருவதில்லை. உதாரணமாக என் வீட்டு நூல் நிலையத்தில் உள்ள புத்தகங்கள் எல்லாம் பிறர் எனக்குக் கடனாகக் கொடுத்தவையே!’ இவையெல்லாம் பெர்னாட்ஷாவின் புகழ்பெற்ற வரிகள்.

இதுபோன்ற வரிகளை நம் கவியரசர் கண்ணதாசனும் நிறைய எழுதியிருக்கிறார். அவருடைய `ஞான மாலிகா, புஷ்ப மாலிகா’ போன்ற உரைநடை நூல்களில் படிக்கப் படிக்கத் திகட்டாத நகைச்சுவைப் பொன்மொழிகள் நிறைய உண்டு.  `ஞாபக சக்தியை வளர்க்க ஒரு மாத்திரை இருக்கிறது. அந்த மாத்திரையை நானே சாப்பிட்டிருக்கிறேன். அதை உங்களுக்கும் பரிந்துரைக்க விரும்புகிறேன். அதன் பெயர்...அடடா. அதுதானே மறந்து விட்டது!’ ‘மகனே! மீன் தண்ணீரிலேயே உயிர் வாழ்கிறதே, ஆச்சரியமாக இல்லையா என்று கேட்டார் தந்தை. அதே தண்ணீரிலேயே அது கொதித்துக் குழம்பாகிறதே, அதுதான் ஆச்சரியம் என்றான் மகன்!’

 இப்படியான கண்ணதாசன் வரிகள் நம்மைச் சிரிக்கவும், கூடவே சிந்திக்கவும் வைக்கின்றன. *வாழ்க்கையை ஆழமாகத் தம் நாவல்களில் விசாரணை செய்யும் கி. ராஜநாராயணன், சுந்தரராமசாமி போன்றோர் எழுத்துக்களிலும் நகைச்சுவை ஆங்காங்கே உண்டு. கி.ரா.வின் கிராமத்துப் பாத்திரம் ஒன்று சென்னைக்கு வந்து முதல்முறையாகக் கடலைப் பார்த்ததும், `அடேடே! நேற்று இங்கே மழை சக்கைபோடு போட்டிருக்கும் போலிருக்கிறதே!’ என்று சொல்லும்போது நமக்குச் சிரிப்பு வராதா என்ன? சுந்தரராமசாமியின் `ஜே ஜே சில குறிப்புக்கள்’ நாவலில், எழுத்தாளர் ஜே ஜே காலமானபோது ஒரு தனித்தமிழ்ப் பத்திரிகையாளர் அவருக்கு அஞ்சலிக் குறிப்பு வெளியிட ஒப்புக் கொள்கிறார். ஆனால் `சே சே காலமானார்!’ என்றுதான் தலைப்புப் போட முடியும் என்கிறார் அவர்!

இந்திரா பார்த்தசாரதியின் கதாநாயகன் ஒருவன் தில்லியில் பேருந்திற்காக வரிசையில் நிற்கிறான். எங்கும் இந்தியே கேட்க இடையே கேட்கிறது ஒரு தமிழ்க் குரல். ‘ஐயா சாமி பிச்சை போடுங்க என்பதுதான் அந்தக் குரல். `மகாகவி பாரதியின் எங்கும் தமிழ் முழக்கம் பரவ வேண்டும் என்ற கனவு இதோ இங்கே நிறைவேறிவிட்டது’ என எழுதிச் செல்கிறார் இ.பா.! காந்தியின் எளிமையை எடுத்துக் காட்ட இரண்டுகோடி ரூபாய் செலவில் கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள் என்றெல்லாம் இ.பா. எழுதும்போது வாசகர்கள் முகத்தில் முறுவல் பூக்கத்தானே செய்யும்? இத்தகைய இனிய நகைச்சுவைக்கெல்லாம் முன்னோடியாக இருந்தவர் நம் வள்ளுவப் பெருந்தகைதான் என்பதை எண்ணி நாம் பெருமிதம்
கொள்ளலாம்.  (குறள் உரைக்கும்)

திருப்பூர் கிருஷ்ணன்