அழகு சுந்தரருக்கு அமுதளித்த அடைவார்க்கமுதன்



* சுந்தரருக்கு அமுதூட்டல் - 24.02.2019
* திருக்கச்சூர் செங்கல்பட்டு


சிவனை அனுதினமும் நினைத்து உருகும் சிவனடியார்கள், தினமும் சிவனடியார்களுக்கோ அல்லது அவர் பால் அன்பு கொண்ட அடியார்களுக்கோ, சிவபக்தர் எவரேனும் ஒருவருக்கோ உணவளித்து விட்டு தான், தானும் தமது குடும்பமும் உணவு உட்கொள்வதை தலையாய கடமையாக கொண்டிருந்தனர். அத்தகைய சிவனடியார்களை சோதித்து அருள் வழங்கினார் இறைவன். சிவனின் சோதனைக்கு நாயன்மார்களும் தப்பவில்லை. பக்தர்களை சோதனைக்கு உள்ளாக்கி அருள் வழங்குவதில் அந்த அம்மை அப்பனுக்கு இணை யாருமில்லை. ஒப்பில்லா உயர்வு கொண்ட அந்த ஏகாம்பரேஸ்வரரே, தன்னை போற்றி புகழ்ந்துரைந்த சுந்தரருக்கு இரங்கி வந்து விருந்து அளித்தார்.

சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான சுந்தரர். சுந்தரமூர்த்தி நாயனார் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூர் எனும் ஊரில் சடையனார் - இசைஞானியார் தம்பதியினருக்கு ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் மகனாகப் பிறந்தார். இவர் ஆதி சைவர் எனும் குலத்தினை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் நம்பியாரூரன் என்பதாகும். நம்பியாரூரன் என்பதை ஆரூரன் என்று சுருக்கி அழைப்பர். இவருடைய அழகினைக் கண்டு சிவபெருமானே சுந்தரர் என்று அழைத்தமையால், அப்பெயரிலேயே அறியப்படுகிறார்.

சுந்தரர் சிறுவயதில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, திருமுனைப்பாடி அரசர் நரசிங்கமுனைய ரைக் கண்டார். சிறுவன் சுந்தரனை அரண்மனைக்கு அழைத்துச் சென்று இளவரசனைப் போல அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார். மணப்பருவம் அடைந்தபோது சுந்தரருக்கு புத்தூரில் உள்ள சடங்கவி சிவாச்சாரியாரின் மகளை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவில் அங்கு வந்த இறைவன், சுந்தரருடைய பாட்டனார் எழுதிக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட ஒரு ஓலையைக் காட்டிச் சுந்தரரும், அவர் வழித்தோன்றல்களும் தனக்கு அடிமை என்றார். திருமணம் தடைப்பட, சுந்தரரை அழைத்துக்கொண்டு கோயிலுள் நுழைந்த வயோதிகர் திடீரென மறைந்தார். இறைவனே வந்து தன்னைத் தடுத்தாட் கொண்டதை உணர்ந்த சுந்தரர், “பித்தா பிறை சூடி” என்ற தமது முதல் தேவாரப் பதிகத்தைப் பாடித் துதித்தார்.

பாடல்களின் மூலமாக இறைவனை தம்முடைய நண்பராக்கிக் கொண்டார். சிவத்தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார். இறைவன் பால் இவர் கொண்டிருந்த பக்தி “சக மார்க்கம்” என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தமது தோழனாகக் கருதித் தமக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டார். “நீள நினைந்தடியேன்” என்று தொடங்கும் அவர் பாடிய தேவாரப் பதிகம் மூலம், குண்டலூரில் தான் பெற்ற நெல்லை தனது ஊர் கொண்டு சேர்க்க இறைவனிடம் உதவி கேட்பதைக் காணலாம்.

திருவாரூரில் பரவையார் என்றொரு அழகிய பெண் இருந்தார். அவர் பதியிலார் குலத்தினைச் சேர்ந்தவர். சுந்தரர் அப்பெண்ணைக் கண்டு காதல் கொண்டு திருமணம் செய்து கொண்டார். சில காலத்திற்குப் பின்பு திருவொற்றியூருக்கு வந்தவர், அங்கு ‘ஞாயிறு’ என்ற ஊரில் வேளாளர் ஒருவரின் மகளான ‘சங்கிலியார்’ எனும் அழகிய பெண்ணைக் கண்டு காதல் கொண்டார். சுந்தரரின் நண்பனான சிவபெருமான் அவருக்காகத் தூது சென்று, திருமணத்தினை நடத்திவைத்தார்.

அரசரான சேரமான் பெருமாள் இவருக்கு நண்பராயிருந்தார். இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை. சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும்போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார். திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் ’கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்....’ எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோயிலில் பைரவர் சந்நதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

சுந்தரர் சிவ தலங்களுக்கு மேற்கொண்ட யாத்திரையில் திருக்கழுக்குன்றத்திற்கும் வருகை புரிந்தார். மலை மீது வீற்றிருக்கும் சிவனை மனமுருக வேண்டினார். பின்னர் அங்கிருந்து பயணத்தை தொடங்கியவர் திருக்கச்சூர் கோயிலுக்கு வழிபட சென்றார். நடை சாத்தப்பட்டு விடுமே என்றெண்ணி தனது நடையை வேகப்படுத்தினார். நண்பகல் பொழுதிற்குள் கோயிலை அடைந்து அய்யனை தரிசித்துவிட்டு, நடந்து வந்த களைப்பாலும், வெயிலின் தாக்கத்தாலும், பசியாலும் நிற்க கூட முடியாமல் கோயிலின் ஒரு பகுதியில் சுவர் அருகே சாய்ந்து அமர்ந்தார். அந்த நேரம் சிவபெருமான் திருவோடு ஏந்தி அந்தண வடிவுடன் அவர் முன் தோன்றினார். சுந்தரரிடம் ‘‘ பசியால் வாடி ஓய்ந்திருக்கும் அன்பரே, உமது பசியை மாற்ற இங்குள்ள இல்லங்களில் சோறு பெற்று வந்து அளிக்கிறேன். இந்த இடத்தை விட்டு அகலாமல் இங்கே இருங்கள்’’ என்றார்.

அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குச் சென்று வாசலில் நின்று குரலெழுப்பி, இரந்து பெற்ற சோற்றையும், காய்கறிகளையும் கொண்டு வந்தார். கோயிலில் பசியால் வாடி இருந்த சுந்தரரிடம் ‘‘ம்... அன்பரே பல வீட்டு உணவு, வகை, வகையாய் இருக்கு உண்ணுங்கள். உண்டு களியுங்கள்’’ என்று கூறினார். உணவைப் பெற்ற சுந்தரர், தன்னுடன் வந்த அன்பர்களுடன் உண்டு மகிழ்ந்தார். உணவு பாதி உண்ட பின் உபசரித்தவரை உற்று நோக்கினார். பார்வை உலாவ விட்டார். அந்த பெரியவர்,சுந்தரர் மற்றும் அவருடன் வந்த எவர் கண்ணுக்கும் தென்படவில்லை. மாயமானார் மாதேஸ்வரன். வந்து உதவி, உபசரித்தவர் சாட்சாத் சிவனே என்று கருதிய சுந்தரர், அடியார் மேல் சிவபெருமான் காட்டும் கருணையை நினைத்து ‘‘முதுவாய் ஒரி’’ எனத் தொடங்கும் பதிகத்தை பாடினார்.

திருக்கச்சூர் காஞ்சிபுரம் மாவட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோயில் பஸ் நிறுத்தத்திற்கு மேற்கே 3 கி.மீ தொலைவில் உள்ளது.  திருக்கச்சூரில் உள்ள இறைவன் கச்சபேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பிகை அஞ்சனாட்சி.  இக்கோயில் இறைவன், சுந்தரருக்கு உணவு அளித்தமையால் அவருக்கு விருந்திட்டீசுவரர் என்ற பெயரும் உண்டு. இறைவன் சந்நதி முற்றத்தில் விருந்து உண்ட பின் இறைவன் பெருமைகளை நினைத்து பாடும் நிலையில் சுந்தரர் தனிச்சந்நதியில் வடக்கு நோக்கியவாறு உள்ளார்.

இங்கு இறைவன் சுந்தரருக்கு தியாகராஜராகக் காட்சியளித்தார். ஆகவே இந்த கோயில் தியாகராஜசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது.
 கோயிலுக்கு மேற்கே உள்ள சிறிய மலையில் இருக்கும் கோயிலின் மூலவர் மருந்தீஸ்வரர் என்ற பெயரில் வீற்றிருக்கின்றார். இவரைச் சுந்தரர் மலைமேல் மருந்து என்று போற்றியுள்ளார். இறைவன் சுந்தரருக்கு விருந்து அளித்ததை மெய்ப்பிக்கும் வகையில் இன்றும் திருக்கச்சூர் கோயிலில் இறைவன் சுந்தரருக்கு விருந்து அளித்ததை வைபவமாக நடத்துகின்றனர்.

இந்த வைபவம் மாசி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு தியாகராஜகோயிலில் இருந்து சுந்தரர், இடுப்பில் வேட்டியும், தோளில் அங்க வஸ்திரமும் அணிந்து, யானை வாகனத்தில் எழுந்தருளி மலைமேலிருக்கும் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் செல்வார். சென்றவுடன் அங்கே சுவாமிக்கு நடைபெறுகின்ற அபிஷேகத்தை கண்டு களிக்கிறார். அதனைத்தொடர்ந்து நடைபெறும் பூஜையில் சுந்தரர், இறைவனை தரிசிக்கிறார். தொடர்ந்து ஆன்மிக பெரியோர்கள் சுந்தரர் வாழ்க்கை வரலாற்றினையும், இறைவனின் லீலைகளையும் குறித்து உரையாற்றுவர்.

பகல் 1 மணிக்கு சுந்தரருக்கு தலை வாழை இலைவிரித்து அறுசுவை உணவு, வடை பாயாசத்தோடு படைக்கப்படுகிறது. அந்த அமுதூட்டு வைபவத்தையொட்டி அன்னதானம் நடைபெறுகிறது. மாலையில் இறைவன் அருளிய பட்டு வஸ்திரம் அணிந்து சுந்தரர் பல்லக்கில் மலையிலிருந்து கீழே இறங்குகிறார். இந்த வைபவம் இந்த ஆண்டு மாசி 12 ம் தேதி (24.02.2019) ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இந்த வைபவத்தை கண்ணுற்று அன்னதானத்தை உண்டு சுவாமியை தரிசித்து வரும் அன்பர்கள் செல்வ வளம் பெற்று திகழ்வது திண்ணம் என்கின்றனர் ஆன்மிக அன்பர்கள்.

சு.இளம் கலைமாறன்