என் குரு யார்?



நமது தேசத்தின் ஆன்மிக விஷயங்கள் அனைத்துமே குரு சிஷ்ய பரம்பரையாகவே வந்து கொண்டிருக்கின்றது. உலகமே நம்மைப் பார்த்து வியக்கும் விஷயமெனில் அது குரு எனும் உயர்ந்த தத்துவம்தான். குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை என்று உரத்துச் சொன்ன ஞானிகளே இங்கு அதிகம். ஊசி துளையினுள் நூல் கோற்க கற்றுத் தருவது முதல் உள்ளுக்குள் ஒளிரும் ஆத்ம ஜோதியை தரிசிக்க வைக்கும் வரை கற்றுத் தருபவர் அனைவரையுமே குரு என்று சொல்லித்தான் இந்நாட்டவர் வியக்கின்றனர்.

குரு எனும் பதத்திற்கு இருட்டைப் போக்குபவர் என்று பொருள். எந்த இருட்டை? அஞ்ஞானம் எனும் அறியாமை இருளை போக்குபவரையே குரு எனும் பதம் சுட்டுகின்றது. வாழ்க்கை என்பது என்ன? ஏன் வாழ்கிறோம்? எதைத் தேடுகின்றோம்? ஓயாது இப்படி அலைகழிக்கப்படுகின்றோமே உண்மையில் இதற்குப் பின்னால் என்னதான் இருக்கின்றது? இன்பத்தை தேடுகின்ற எனக்கு நிரந்தர இன்பம் எதிலுள்ளது என்று ஆயிரம் கேள்விகள் நம்மை துளைத்தெடுக்கும்போதெல்லாம் நம்முள் தேடல் தீவிரமடைகின்றது. தத்துவங்களின் அறிமுகமும் அதன் ஆழத்தையும் உணர்ந்து ஞானிகளை நோக்கி நகரத் தொடங்குவோம்.

இந்த இடமே மிக முக்கியமானது. ஏனெனில், குரு என்பவர் வேண்டும். ஆனால், இவரே என் குரு என்று ஒரு சீடர் குருவை தேர்ந்தெடுக்கும்போது பலசமயம் பாதை தடம் மாறும். ஏனெனில், சீடனுக்கு குருவின் அகம் தெரியாது. அவரின் அனுபூதி நிலை புரியாது. இன்னும் சொல்லப் போனால் நம்மால் இவர் ஞானி என்று ஒருவரை சொல்ல முடியாது. ஞானியால் மட்டுமே இன்னொரு ஞானியை அறிய இயலும். அதனால் ஆத்ம சொரூபத்தை உணர்ந்து அதிலேயே நிலைத்து நிற்கும் குருவை அடையாது போலி குருமார்களிடம் சென்று சிக்கிக் கொள்ள நேரிடும். தீவிர தேடலும், தாபமும், பக்தியும் இருப்பவரைத் தேடி சத்குரு தாமாக வருவார். எனவே, குரு வேண்டும் என்கிற வேட்கையே முதலில் வேண்டும்.

அதுசரி, எனக்கு ஒருவர் மந்திர தீட்சை அளித்திருக்கின்றார். எனக்கு ஒருவர் வாழ்வின் பொருளை எடுத்துரைத்திருக்கின்றார். நான் சோர்ந்த போதெல்லாம் என்னை குளிர் வார்த்தைகள் பேசி இதமூட்டினார். அவரும் எனக்கு குருதானே என்று கேள்வி எழலாம். உண்மைதான். அவரும் குருதான். ஆனால், உபகுருமார்கள் என்றும் ஆசிரியர் என்றும்தான் அவர்கள் அழைக்கப்படுவர். மிக நிச்சயமாக அவரை வணங்குவதும் முறையே.

ஆனால், உங்களையே உங்களுக்குக் காட்டும், நீங்கள் யாரென உங்களுக்கு உணர்த்தும், உங்களுக்குள் உறையும் தெய்வீகத்தை தொடலாலோ, தீட்சையாலோ, பார்வையாலோ, அருள் நோக்காலோ தரிசிக்கச் செய்கிறவரே உண்மையான குரு. உண்மையில் அவரே உங்களை பல நல்ல ஆசிரியர்களிடம் கொண்டு விட்டு பக்குவமடைய வைத்திருக்கின்றார். இறுதியில் நீதானப்பா அந்த ஆத்மா. உள்ளே சுகக் கடலொன்று பொங்கியபடி உள்ளது.

அதுதான் நீ என்றும், அதுதான் நான் என்றும் பேதமறியா நிலையினில் எவர் நிறுத்துகின்றாரோ, அந்தப் பாதையில் மட்டும் நம்மை எவர் செலுத்துகிறாரோ அவரே சத்குரு. அப்பேற்பட்ட சத்குருவை நம்மால் அடையாளம் காண முடியுமா? மிக நிச்சயமாக முடியாது. ஏனெனில், அவரே தன்னைக் காட்டினாலொழிய நம்மால் அவரை ஞானி என்று கூற முடியாது. அவரருளாலே அவரே குருவென காட்டுவார். இறுதியில் உள்ளுக்குள் இருந்த சத்திய வஸ்துவே வெளியே குருவென வந்திருப்பதையும் புரிய வைப்பார்.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)