எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்



அரிவாட்டாய நாயனார் குருபூஜை 19.01.2019

சைவச் சீலர்களுள் குறிப்பிடத்தக்கவரே அரிவாட்டாய நாயனார் என்பவர் ஆவார். இவரைச் சுந்தர மூர்த்தி சுவாமிகள் ‘எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்’ என்று போற்றுவார். திருத்தொண்டத் தொகையினை அடியொற்றித் திருத்தொண்டத் திருவந்தாதியினைப் பாடியருளிய நம்பியாண்டார் நம்பி அரிவாட்டாய நாயனாரின் வரலாற்றினைச் சற்று விரித்துக் கூறுவார்.

வள்ளற் பிரானுக்கு அமுதேந்தி வருவோனும் உகலுமிங்கே
வெள்ளச் சடையா அமுது செய்யா விடின் என்தலையைத்
தள்ளத் தகுமென்று வாட் பூட்டிய தடங் கையினன் காண்
அள்ளற் பழனக் கணமங்கலத்து அரிவாட்டாயனே
(திருத்தொண்டர் திருவந்தாதி - 14)

என்பது அப்பாடல் ஆகும். இத்தகைய சிறப்பிற்குரிய அரிவாட்டாய நாயனார் அவதரித்த திருத்தலமாகிய கணமங்கலம் வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி பாயும் பொன்னி வளநாட்டின் பழம் பதிகளுள் ஒன்று ஆகும். இது மணமங்கலம், கணமங்கலம் என்றும் அழைக்கப்பட்டது. இப்பெரும்பதி திருத்துறைப்பூண்டிக்கும் திரு ஆருருக்கும் இடையே அமைந்திருந்தது. தற்காலத்து அப்பதி இங்கில்லை. இத் திருத்தலம் அமைந்திருந்த பகுதியினை இப்பகுதி மக்கள் கணமங்கலத் திடல் என்று அழைக்கின்றனர்.
அரிவாட்டாய நாயனாரின் வரலாற்றினை பன்னிரெண்டாம் திருமுறையினுள் விரித்துரைக்கும் சேக்கிழார் பெருமான் முதலில் கணமங்கலத்தின் சிறப்பினை எடுத்துரைப்பார். அப்பதி நீர்வளமும் நிலவளமும் மக்கள் நலமும் நிறைந்த பதியாகும்.

அத்தகைய வளம் நிறைந்த ஊரில் அறநெறியினின்று தவறாதவரும் உயர்ந்து மேம்பட்ட இல்லற வாழ்வினை உடையவருமான தாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அருட்பெருஞ்சோதி வடிவமாய் அகிலத்தினை ஆண்டுவரும் சிவபெருமானுக்கு தினந்தோறும் செந்நெல்லால் ஆகிய உணவும் செங்கீரையையும் மாவடுவினையும் படைத்து வழிபட்டு வருவதனை தன் பிறவியின் பெரும் பயன் எனக்கருதி செய்து வந்தார், அவரது அன்பினைச் சோதிக்க எண்ணிய இறைவன் அவரின் செல்வத்தினைச்
சிறிது சிறிதாக வற்றச் செய்தார்.

அவரிடத்து பொருந்தி இருந்த செல்வம் யானை உண்ட விளாங்கனி போன்று அழிந்தது என்பார் சேக்கிழார், யானை உண்ட விளாங்கனி என்பது விளாங்கனிக்கு வருகின்ற ஒரு நோய் ஆகும். அந்நோயினால் தாக்கப்பெற்ற விளாங்கனியின் உள்ளிருக்கும் தசைப்பகுதி அழிந்து மேல் ஓடு அப்படியே இருக்கும். அதுபோல அரிவாட்டாய நாயனாரிடம் இருந்த பொருட் செல்வம் அழியினும் அன்பு அழியாமல் இருந்தது என்பது இதன் பொருள் ஆகும். தனக்கு வறுமை வந்த காலத்தும் அதனைப் பெரிது என எண்ணாத நாயனார் நெல்லறுக்கும் பணிக்குச் சென்று அதனால் பெற்ற கூலியில் செந்நெல்லை இறைவனுக்குப் படைத்து வரலானார்.

நாளடைவில் எங்கும் செந்நெல்லே விளைய நாயனார் குடும்பத்திற்கு உணவில்லாமல் போயிற்று. ஆனால் அதனை நினைத்து வருந்தாத நாயனார் இறைவனுக்குரிய செந்நெல் எங்கும் கிடைக்கிறதே என்று மகிழ்ந்தார். தான் செய்த புண்ணியம் என்று களித்தார். தன்னிடம் கிடைத்த உயர்ந்த பொருளெல்லாம் இறைவனுக் குரியது என்னும் நாயனார் கொள்கை இன்றைய மக்களாகிய நாம் மறந்த ஒன்றாகும். நாம் வீட்டு உபயோகத்திற்கு என்றால் உயர்ந்த தேங்காய் போன்றன வாங்குவதும் கோயிலுக்கு என்றால் அருச்சனைக்காய் என்ற சிறிய குறைந்த விலை தேங்காய் வாங்குவதும் வழக்கமாகப் போய்விட்டது. ஆனால் நாயனார் உயர்ந்த பொருள் இறைவனுக்கு என நினைத்தார். இவ்வாறு பலநாள் இறைவனுக்குத் தொண்டு செய்து வரும்போது ஒருநாள் கூடையில் செந்நெல் உணவு, கீரை, மாவடு போன்றவற்றை ஏந்திக் கொண்டு திருக்கோயிலுக்குச் சென்றார்.

அருகில் அவர்தம் மனைவியார் பஞ்சகாவ்யம் எனப்பெறும் பசுவிடம் இருந்து பெறப்பட்ட கோமயம், சாணம், பால், தயிர், நெய் போன்றவற்றை கையில் சுமந்து கொண்டு நடந்து வந்தார். நாயனார் உடல் தளர்வின் காரணமாகத் தள்ளாடி கீழே விழப் போனார். அதனைக் கண்ட அவருடைய மனைவியார் தம் கையில் இருந்த ஆனைந்து எனப்பெறும் பஞ்சகவ்யம் கீழே விழாவண்ணம் ஒரு கையால் அவரைத் தாங்கிப் பிடித்தார். ஆனால் அவர் கையில் இருந்த கூடை தவறி விழ அதில் இருந்த செந்நெல் உணவு, கீரை மாவடு போன்றவை தவறி விழுந்தன.

அதனைக் கண்டு வருந்திய நாயனார் இனி ஏன் அங்கு போவது என வருந்தினார். இனி ஏன் அங்கு போவது என்றால் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் இங்கு வந்து ஏற்றருள் புரிய வேண்டும் என்பது செய்தியாகும். இறைவன் வானாகி மண்ணாகி வழியாகி ஒளியாகி நிற்பவன் அன்றோ! பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி! எனவும் போற்றப்பட்டவர் அன்றோ! இறைவன் இங்கு வந்து அருள் செய்யலாமே! செய்யவில்லையே! என வருந்தி தன்கழுத்தினைக் கத்தியினால் அறுத்துக் கொள்ளத் துணிந்தார். அந்த நேரத்தில் இறைவனின் இடது கையானது களர் நிலத்தில் இருந்து தோன்றி நாயனாரின் கையைப் பிடித்துக் கொண்டது. மேலும் நிலத்தின் உள்ளிருந்து மாவடுவினை விடேல், விடேல் என்று கடிக்கும் சத்தமும் கேட்டது.

மாசறு சிந்தையவர் கழுத்து அரிவாள் பற்றும்
ஆசில்வண் கையை மாற்ற அம்பாலத்தாடும் ஐயர்
வீசிய செய்ய கையும் மாவடு விடேல் விடேல் என்று
ஓசையும் கமரினின்றும் ஒக்கவே எழுந்ததன்றே
இறைவன் அமுதுண்டார் என எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் கருணையை எண்ணி வியந்தார். இறைவனின் அருட்பேற்றினை,
அடியனேன் அறிவிலாமை கண்டும் என்னடிமை வேண்டிப்
படிமிசைக் கமரில் வந்திங்கு அமுது செய்பரனே போற்றி
துடியிடை பாகமான தூயநற் சோதி போற்றி
பொடியணி பவளமேனிப் புரிசடைப் புராண போற்றி

எனத் துதித்து நின்றார். இறைவனும் அவர்தம் தொண்டினை வாழ்த்தி நம்முடன் நம் உலகத்தில் இருப்பாயாக என்று அருட்பாலித்தார். நாயனார் தாயார் என்னும் பெயர் கொண்டதற்கு ஏற்ப இறைவனுக்கு உணவு படைத்ததுடன் இயலாத போது தன்னையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு அன்பு பாராட்டினார். அத்தகைய சிறப்புடைய நாயனாரின் குருபூஜை நாள் அன்று வருகிறது, இத்தகைய நன்னாளில் அரிவாட்டாய நாயனாரைத் தொழுது அவரின் அருள் பெற்று உய்வோமாக!

முனைவர் மா.சிதம்பரம்