மன்றம் புகுந்தாடும் நடராசர்



சிதம்பரம் நடராசர் விழா என்றதும் எல்லோருக்கும் திருவாதிரை விழாவே நினைவுக்கு வரும். ஆனால், நடராசப் பெருமான் சிதம்பரத்தில் திருநடனம் புரியத் தொடங்கிய நாள் தைப்பூச நன்னாளாகும். கயிலை மலைச்சாரலில் வெவ்வேறு இடங்களிலிருந்து ஜைமினி, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகிய ரிஷிகள் தவம் செய்து வந்தனர். பல இடங்களில் இருந்தாலும், அவர்களுக்குப் பெருமானின் (உலகத்தைத் தோன்றுவித்து நடத்தி தம்முள் ஒடுக்கிக்கொள்ளும்) ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசிப்பது ஒன்றே குறிக்கோளாக இருந்தது.

அவர்களுடைய தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் அன்பர்களே உங்களுக்குத் தென்னாடு தில்லைவனத்தில் நமது நடனக் கோலத்தைக் காட்டுவோம். நீங்கள் அங்கே சென்று தவம் புரியுங்கள் என்றார். அவர்கள் மூவரும் தில்லைவனத்தை அடைந்து அங்கிருந்த ஆலமரத்தடியில் புற்றிடங்கொண்ட நாதராக விளங்கிய மூலட்ட நாதரைக்கண்டு வணங்கி வந்தனர். பெருமான் அவர்கள் மகிழ, ஆலமர நிழலில் இருந்த சிற்றம்பலத்து மன்றத்துள் புகுந்து புவனியெல்லாம் மகிழத் திருநடனம் புரிந்தார். அதை மேற்குறித்த மூன்று அன்பர்களும் கூடி நின்று களித்தனர். அந்த நாள் தை மாதம் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் வியாழக்கிழமையும் கூடிய நன்னாளாகும்.

தைப்பூசத்தை ஒட்டி, பத்து நாட்கள் ஜைமினி, வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு விழாக்கள் நடைபெறுகிறது. தினமும் இவர்களை திருமூலட்டநாதருக்கு முன்பாக எழுந்தரருளச் செய்து தீபாராதனை நடத்துகின்றனர். பத்தாம் நாளான பூச நாளில் மூவரும் சிவகங்கைக்கு எழுந்தருளுவர். அப்போது பெருமான் தீர்த்தம் அளிப்பார். அவர்கள் மூவரும் வலம் வந்து நடராசப் பெருமான் திருமுன்பு வருகின்றனர். தைப்பூசத்தில் காலையில் நடராசர் சந்நதியைத் திறப்பதில்லை. உச்சி காலத்தில் இம்மூவருக்கும் தரிசனம் தரும்போது தான் திறக்கின்றனர்.

 - ஆட்சிலிங்கம்