அருணையின் அற்புதம்



*சேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி - 26 - 01 - 2019

திருவண்ணாமலை சாதுக்கள் மற்றும் சந்நியாசிகளுக்குப் பெயர் பெற்ற திருத்தலம். அருணகிரிநாதர், ரமண மகரிஷி முதலிய எத்தனையோ ஆன்மீகப் பெரியார்களின் பாததுளிகள் பட்ட புனித ஊர். அங்கு சேஷாத்ரி சுவாமிகள் (1870-1929) என்ற மகான் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. அதில் ஒன்று பறவை அதிசயம். வெங்கடாசல முதலியாரும் அவருடைய மனைவி சுப்புலெட்சுமி அம்மாளும் சுவாமிகளின் பரம பக்தர்கள்.

ஒரு அமாவாசை நாளன்று மாலை சுமார்  4 மணிக்கு முதலியார் வீட்டுக்கு சுவாமிகள் வந்தார். “சுப்புலட்சுமி இங்கு வா. ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன்” என்று சுவாமிகள் சொன்னவுடன் அவர் என்ன வேடிக்கை என்று கேட்டுக்கொண்டே வந்தார். அவர்கள் வீட்டில் மூன்று மரங்கள் இருந்தன. சுவாமிகள் “பார் உனக்குப் பறவைகளைக் காட்டுகிறேன்” என்று சொல்லிக் கொண்டே வானத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். ஒரு காகம் வந்தது. தொடர்ந்து அவர் கூப்பிடக் கூப்பிட பறவைகளின்  எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் பெருகிவிட்டன.

காக்கை, குருவி,கிளி, புறா, மஞ்சள் குருவி, நாகணவாய் என்று வித விதமான பறவைகள் வந்துவிட்டன. பக்கத்து வீடுகளில் எல்லாம் பறவைகள் உட்கார்ந்து குரல் எழுப்பின. சுப்புலட்சுமி அம்மாள்,, அடடா, மாலை வேளையில் இப்படிப் பறவைகளைக் கூப்பிடுகிறீர்களே. அவையெல்லாம் குஞ்சுகளைப் பார்க்க கூட்டுக்குப் போக வேண்டாமா என்று கேட்கவே, அப்படியா இதே போகச் சொல்கிறேன் என்று சுவாமிகள் சொன்னார். துண்டின் ஒரு நூலை எடுத்து வாயால் ஊதி போ என்றவுடன் அவ்வளவு பறவைகளும் பறந்தோடிப் போய்விட்டன. விக்ரமாத்தித்தன் கதையில் படிப்பது போல சுவாமிகளுக்கும் பறவைகளின் மொழி தெரியும் போலும்...

 - குருசரண்.