முருகா என்றதும் உருகாதா மனம்..!



அன்னை பராசக்தியால் பழம் நீ என்று அழைக்கப்பட்டதால் பழநியாயிற்று என்பது தலபுராணக்கதை. பழநி என்பது, குன்றின் மேலிருக்கும் தண்டபாணிக்குப் பெயர். அடிவாரப் பகுதியை ஆவினன் குடி என்பார்கள்.
அதுவே திருவாவினன் குடி என்றாயிற்று.  ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதை தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காக கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.

 ‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்து தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர்.

பழநி என்பது மலையின் பெயராகும். பழநி மலையையும், மலையடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி தலத்தையும் உள்ளிட்ட நகரமே பழநி என்று அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலத்தை திரு-என்ற இலக்குமி தேவியும், ஆ-என்ற காமதேனுவும், இனன்-என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் “திரு ஆ இனன் குடி” என்று பெயர் பெற்றது.

திரு  லட்சுமி
ஆ  காமதேனு
இனன்  சூரியன்
கு  பூமாதேவி
டி  அக்கினிதேவன்

 இந்த ஐவரும் முருகனை பூஜித்தமையால் இந்த ஸ்தலத்திற்கு “திருவாவினன் குடி” என்று ஆயிற்று என்றும் கூறப்படுகிறது.  ஆண்டிக்கோலத்தில் நின்றாலும் அலங்கார மூர்த்தியாக விளங்கும் தண்டபாணியின் திருத்தலத்தின் பிராகாரத்தில் பதினெண் சித்தர்களின் ஒருவரான போகருக்கும் சந்நதி உண்டு. ஐயனின் திருவுருவம் நவபாஷாணத்தால் செய்யப்பட்டதால் (அபிஷேகநீர் மற்றும் பஞ்சாமிர்தத்தை) உண்போரின் நோய்கள் தீரும் என்பது மரபு. ஐயப்பனையும் குருவாயூரப்பனையும் வழிபடச் செல்வோர் பழநிக்குச் சென்று வழிபட்டாலன்றி வழிபாடு நிறைவுறாதென்பார்கள். எனவே, ஐயப்ப பக்தர்களும் அங்கே வருவர்.

திருவாவினன்குடி என்னும் பதியில் எழுந்தருளியிருக்கின்ற பழனியப்பனை தரிசிக்க எல்லோரும் வருகின்றனர். யார்? யார்? பாம்புகள் அழியும்படி அவற்றை அழிக்கும் ஆற்றலைக்கொண்ட கருடன் அழகாக எழுதப்பெற்ற நீண்ட கொடியினை உடைய திருமாலும், ரிஷபக் கொடியினை உடையவனும், புகழப்படுகின்ற தோள்களை உடையவனும், முக்கண்களை உடையவனும் முப்புரங்களை அழித்தவனுமாகிய சிவபெருமானும், ஐராவதம் என்னும் யானையை உடையவனும், ஆயிரம் கண்களை உடையவனுமாகிய இந்திரனும், நான்கு முகங்களைக் கொண்ட பிரம்ம தேவனும், தேவ கணங்களும், மற்றும் பலரும் கந்தவேளை வந்து தரிசிக்கின்றனர் என்கிறார் நக்கீரர்.

இது மூன்றாம் படை வீடு ஆகும். இந்த தலத்தை அருணகிரி நாதர் மற்றும் நக்கீரர் பாடி உள்ளனர். திருப்புகழில் அருணகிரியார் இந்த பழநி மலை முருகனைத்தான் அதிக பாடல்களில் பாடி உள்ளார். மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும். பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள்.

இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதீகம். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவராக காட்சி தருகிறார். முருகனின் கையில் உள்ள தண்டத்தில் ஒரு கிளி உள்ளது. அந்த கிளி அருணகிரியாரின் வடிவமாகப் போற்றப்படுகிறது.

மூலவர் ஆண்டிக் கோலத்தில் அருள்கிறார். தினமும் இரவு இவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. அதைக் காணவே பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் நவபாஷாண சிலையால் ஆனவர். பழனி செல்பவர்கள் இங்கு உள்ள பெரியாவுடயரையும், பெரியநாயகியையும் தரிசித்து செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருள்வார். பழநியில் மூன்று கோலங்களில் முருகனைத் தரிசனம் செய்யலாம். பெரியநாயகி கோயிலில் வள்ளி, தேவசேனா சமேதராகவும், மலையடிவாரத்தில் திரு ஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலை மீது தண்டபாணி தெய்வமாகவும் அருள்கிறார்.

முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இந்த ஆலயம் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இங்கு மட்டுமே சித்தராகிய போகருக்கு சமாதி உள்ளது.

சூரசம்ஹாரத்துக்கு முருகன் மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். முருகனுக்கு காவடி எடுத்து வழிபடுதல் சிறப்பு. பக்தியை அடிப்படையாக வைத்து செய்யப்படுகின்ற வழிபாடே சிறப்புடையதாகும். நம் ஆன்மாவை நாம் நேசித்து உய்வுபெறச் செய்கின்ற வழிபாடே சிறந்த காணிக்கையாகும். அத்தகைய காணிக்கைகளை இப்படி காவடி எடுத்து வெளிப்படுத்தும்போது பக்தரும் உய்வர். அதைக் காண்பாரும் நலம் பெறுவர்.

மலைக் கோயில் செல்லும் வழியில் உள்ள இடும்பன் தோளில் மலையை தாங்கிய நிலையில் உள்ளார். இடும்பனுக்கு பூஜை செய்த பிறகே தண்டபாணிக்கு பூஜை நடைபெறும். இங்கு மலைப் பாதை துவங்கும் இடத்தில் பாத விநாயகர் உள்ளார். இவரை வணங்கிய பின்பே தங்கள் யாத்திரையை துவங்குகின்றனர். பழனி பஞ்சாமிர்தம் உலகப் புகழ் பெற்றது. இங்கு தினமும் தங்க ரத பவனி நடைபெறுகிறது. உற்சவர் முத்துக்குமார சுவாமி. அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.
வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு.

பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம்மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன.  தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது.

இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சாத்தபடுகிறது.

 விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தனக்காப்பை முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்தத்துடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள். தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கப்பட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும். இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள்  ஒன்பது வருடங்கள்.

இப்பதியை  ‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் அருணகிரியார். இவர், பழநித் திருத்தலம் பற்றி திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில் பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.

மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே. அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.

அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.  கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.

தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள். கால சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம். ராக்காலத்தில் முதிய வடிவம்.
மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை. இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நதிக்கு வருகிறது.

ஓதுவார்களும், கட்டியக் காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமியின் பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.

தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாக பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருட் பாலிக்கிறார்.  தைப்பூச விழாவின்போது நடைபெறும் முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், ஷண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
அரோகரா என உரக்கச் சொல்வோம்..! தண்டாயுதபாணியின் அருள் பெறுவோம்.

ந.பரணிகுமார்