பரிகார நியாயம்



சமீபத்தில் ஒரு கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயிலே சில வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது. அதைக் கட்டியவர், நிறுவனர், குரு மற்றும் அவரது சித்தாந்தங்கள் என்று ஆங்காங்கு தகவல் பலகைகள் தெரிவித்தன.

கோயில் முழுவதும் உயர்ரக கற்களைப் பதித்து முகம் பார்க்கும் கண்ணாடிபோல தரையை மாற்றியிருந்தார்கள். நேர்த்தியான வரிசைகளில் பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ஒவ்வொரு சந்நதியிலும் உள்ள தெய்வத்தை வணங்கியபடி நகர்ந்து கொண்டேயிருந்தார்கள். அப்போது அங்கு ஓரிரு சந்நதிகளை கடக்கும்போது எரிச்சல் ஏற்பட்டது. ஏன் இந்த மக்கள் இப்படிச் செய்கிறார்கள் என்று கோபம் வந்தது.

ஒரு சந்நதியின் குறிப்பிட்ட கற்சிலைக்கு முன்னால் இங்கு ரூபாய் நோட்டுகள், காசுகளை போடாதீர்கள் என்று எழுதியிருந்தது. இது போதுமே நம் மக்களுக்கு உடனே அங்குதான் காசுகளை மானாவாரியாக குமித்து வைத்திருக்கிறார்கள். மற்றொரு சந்நதியைச் சுற்றிலும் நீரை நிரப்பி அகழிபோலாக்கி மையத்தே சந்நதியை வைத்திருக்கிறார்கள். மக்கள் அந்நீரிலும் சில்லரை காசுகளை கொட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமில்லாது அந்த நீரிலேயே பத்து, ஐம்பது, நூறு, செல்லாத ஐநூறு என்றும் வீசுகிறார்கள்.

மெதுவாக அந்த காகிதம் நனைந்து மெல்ல மூழ்கி அடியில் சென்று கரைந்து கொண்டிருந்தது. ‘‘நான் காசுபோட்டா எனக்கு கிடைக்கும்’’ என்பது உங்களது நம்பிக்கையாக இருக்கலாம். அதற்காக மகாலட்சுமியின் அம்சம் என்று நமது மரபில் சொல்லப்படும் பணத்தை உதாசீனம் செய்வதும் நியாயமாகாது. பலமுறை அருகே அமர்ந்திருக்கும் அர்ச்சகர்கள் சொல்லியும் கேட்காமல் வீசிவிட்டு செல்வதாக கூறுகிறார்கள். இப்போது யாருக்கு அந்தப் பணம் உபயோகம்? வெறுமே நீரில் கரைந்து சிதைந்து போவதற்காகவா இப்படி எறிவது? எந்த விதத்தில் இது நியாயம்? இதுபோன்ற பழக்கங்களை ஓரிரு கோயில்கள் அல்ல? பல நூறு கோயில்களில் பார்க்கலாம். யாரோ ஒருவர் செய்த காரியத்தை பார்த்து இவர்களும் இப்படிச் செய்கிறார்கள்.

 ‘‘அங்க காசு போட்டா நினைச்சதெல்லாம் நடக்கும்’’ என்று எந்த முகாந்திரமும் இல்லாத வார்த்தைகளை அள்ளி வீசுகிறார்கள். அதையே பெரும் நம்பிக்கையாக இவர்களும் கடைபிடிக்கிறார்கள். ஏன், இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டால், கேட்டவரையே தெய்வ குத்தம் என்பதுபோல திரும்பிப் பார்ப்பார்கள். பக்தி என்பது மிக எளிமையானது. அதற்கும் இம்மாதிரி செயல்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நீங்கள் பத்து ரூபாயைக் கூட நன்கொடையாகக் கொடுத்து அதற்குரிய ரசீதைப் பெற்றுக் கொண்டு கோயில்களில் செலுத்தலாம்.

 நீங்கள் கொடுக்கிறீர்கள் என்றால் யாரும், எந்தக் கோயிலிலும் மறுக்கப் போவதில்லை. ஆனால், தரையிலும், நீரிலும், சந்நதிகளில் வீற்றிருக்கும் தெய்வங்களின் மீது வீசப்படும் பணங்கள் கணக்கு வழக்கு இல்லாமல் உள்ளே செல்கின்றன. யார் இந்தப் பணத்தை கையாளுகின்றனர் என்றே தெரியாது. இம்மாதிரி பணத்தை எந்த கணக்குகளில் வைப்பார்கள்? எதற்கும் நெறி என்று ஒன்று இருப்பதை அறிய வேண்டும். எது பக்தி என்று புரியாமல் இப்படி பணத்தோடு சேர்த்து புத்தியையும் சிதறடித்துக் கொண்டிருக்கக் கூடாது.

கிருஷ்ணா (பொறுப்பாசிரியர் )