அகத்தே நிகழும் திருக்கூத்து!



அருணகிரி உலா 66

மேற்குக் கோபுரத்தை ஒட்டி தாரகாரி எனும் முருகனின் வடிவமும் இடம் பெற்றுள்ளது. மயில் மீதமர்ந்து போரிடும் கோலத்தில் முருகன் கட்சியளிக்கிறான். எதிரே தாரகனும் சுற்றிலும் போர் வீரர்களும் உள்ளனர். (இது நாம் கோயிலில் காணும் எட்டாவது முருகன் திருவுருவமாகும்.) வடக்கு கோபுரத்தை நோக்கி நடக்கும் போது, சுற்றிலும் ஏராளமான சந்நதிகளைக் கொண்ட சிவகங்கைத் தீர்த்தத்தருகில் வருகிறோம். ‘சந்திரஓலை’ எனத் துவங்கும் சிதம்பரத் திருப்புகழில் இத்தீர்த்தத்தை அருணகிரியார் ‘‘அன்பரோது செந்தமிழ் ஞான தடாகமென் சிவகங்கை’’ என்று குறிப்பிடுவது தனிச் சிறப்பு வாய்ந்தது. ‘‘திருந்தும் ஈசான திக்கில் சிவகங்கை என்னும் தீர்த்தம் இருந்திடும், மூழ்குவார்க்க ஃ தீந்திடும் சித்த சுத்தி’’ சிதம்பர சபாநாத புராணம்,

‘‘தீர்த்தம் என்பது சிவகங்கையே
ஏத்தருந்தலம் எழிற் புலியூரே
மூர்த்தி அம்பலக் கூத்தனதுருவே’’

- சிதம்பரச் செய்யுட் கோவை.

இரணியவர்மன் இத்தீர்த்தத்தில் நீராடித் தன் சிங்க நிறம் நீங்கப்பெற்று பொன் நிறம் பெற்றான் என்பது புராணம். சிவகங்கையின் தென்புறத்தில் மூலட்டானர் கோயில், மேற்புறம் நூற்றுக்கால் மண்டபம், சிவகாமி அம்மை திருக்கோயிலும், வடப்புறம் நவலிங்கக் கோயிலும், கிழக்கே ஆயிரங்கால் மண்டபமும் உள்ளன. குளத்தை நோக்கியவாறு திரு மூல விநாயகர் கோயில் உள்ளது. இது ஒரு விசித்திரமான சந்நதி. ஒரு புறத்தில் ஒரு தனித் தூணையும், ஒரு புறத்தில் சுவரையும் கொண்டிருப்பதால் ஒற்றைக்கால் மண்டபம் என்று அழைக்கப்படுகின்றது! அருகில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலும் உள்ளது. அடுத்ததாக நாம் காண்பது ஞானசக்தியாக விளங்கும் சிவகாம சுந்தரியின் தனிக்கோயில் ஆகும். முகப்பில் விநாயகரையும் தேவி மாருடன் கூடிய முருகப் பெருமானையும் காண்கிறோம். (இது நாம் காணும் ஒன்பதாவது முருகன் சந்நதியாகும். அம்பிகையையும் முருகனையும் போற்றி அருணகிரிநாதர் பலபாடல்களில் பாடியுள்ளார்.)

‘‘சிரித்திட்டு அம் புரமே  மதனாருடல்
எரித்துக் கண்ட கபாலியர் பாலுறை
திகழ்ப் பொற் சுந்தரியாள் சிவகாமி நல்கியசேயே’’

‘‘தன் சிரிப்பின் மூலம் அழகிய முப்புரங்களையும், மன்மதனது உடலையும் எரி செய்த சிவபிரானது அருகில் உள்ள பொலிவு நிறைந்த அழகியாம் சிவகாம சுந்தரி தந்த குழந்தையே!’’ என்பது பொருள்.

சத்தி சரசோதி திருமாது வெகுரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை
தற்பர கொண்டாடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா’’

என்கிறார், மற்றொரு பாடலில். (சத்தி, உயிர்களின் மூச்சில் விளங்கும் ஜோதி, பார்வதி, பலவித ரூபங்களை உடையவள். சுகநிலையிலுள்ள நித்யகல்யாணி, எனைப் பெற்றெடுத்த மலைமகள், சிவபத்தினி, இறைவகுடன்  ஆடுகின்ற அழகி அபிராமி, சிவனுக்குப் பிரியமான சிவகாமி ஆகிய உமை அருளிய பாலனே!)
‘நாலுசதுர’ என்று துவங்கும் பாடலில்

‘‘ஆலம் பலருற்ற சம்பவி வேரிலி குலக்கொ
ழந்திலி ஆரணர் தலைக்கலம் கொளி செம்
பொன்வாசி ஆணவ மயக்கமும் கலி காமியம்
அகற்றி என்றனை ஆளுமை பரத்தி சுந்தரி தந்த சேயே’’

என்று அம்மையைப் போற்றுகிறார். (ஆலம் = நீர். நீரை கைவிரல்களினின்றும் கங்கை முதலிய நதிகளாக விரித்த பார்வதி, ஆதிஅந்தமிலாதவள், வேதம் வல்ல பிரமனது தலை ஓட்டைப் பாத்திரமாகக் கையில் ஏந்தியவள். செம்பொன் போன்றவள், எனது ஆணவத்தையும் மயக்கத்தையும் தோண்டி எடுத்து, ஆசைகளை ஒழித்து, என்னை ஆளுகின்ற உமை, பராசக்தி, அழகியாம் பார்வதி பெற்ற பாலா! சிவபெருமான் பிரம்ம கபாலம் ஏந்தினவராதலின் அவரது இடதுபாகத்திலுள்ள தேவியும் அதை ஏந்துவதாகக் கருத்து)

‘‘வாசக் குயிலான் நற்சிவகாமச் செயலாள்
பக்தினி மாணிக்கமினாள் நிஷ்கள உமை’’ என்று ஓரிடத்தில் பாடுகிறார்.

சிவகாம சுந்தரி தன் வரபாலா என்கிறார் பழநியில் அம்பிகைக் கோயிலுக்கெனத் தனிக் கொடிமரம், பலிபீடம் உள்ளன. அம்பிகையை வணங்கி வருகையில் சப்த மாதர், சித்ர குப்தர், நடுக்கம் தீர்த்த விநாயகர், வடக்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோரைத் தரிசிக்கிறோம். அம்மையின் சந்நதி அருகில் ஒரு தனி அறையில் உமாபதி சிவம் வழிபட்ட ஸ்ரீசக்ரம் கல் வடிவிலுள்ளது. சங்கு சக்ரம் ஏந்திய அகிலாண்டேஸ்வரி சந்நதியும் உள்ளது. 1118 முதல் 1136 வரை ஆட்சி செய்த விக்ரமசோழன் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் அன்னை ‘திருக்காம கோட்ட பெரிய நாச்சியார்’ என்று அழைக்கப்பட்டாள்.

இக்கோயில் கோபுரவாயிலில் மகிஷாசுரமர்த்தனியாகிய துர்க்கை சந்நதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது. துர்க்கையைத் தரிசித்து வடக்கு கோபுரத்தை நோக்கிச் செல்கிறோம். அதன் அருகில் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீபாண்டிய நாயக சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு வருகிறோம். எனவே, முருகர் பாண்டிய நாயகர் எனப்படுகிறார். பல ஆண்டுகளாகச் சிதிலமடைந்து கிடைத்த இந்தச் சந்நதி காஞ்சி காமகோடி பீடாதி பதிகளாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் சீரமைக்கப்பட்டு கம்பீரமாக விளங்குகின்றது. முன்பக்க மண்டபத்தின் திருப்பணி இன்னும் முற்றுப் பெறவில்லை. முருகப் பெருமான் சுமார் ஆறரை அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக வீற்றிருக்கிறார்.

தேவியரும் அருகில் உள்ளனர். (இவர் சிதம்பரம் கோயிலில் நாம் காணும்  10 ஆவது திருவுருவமாகும்.) கோயிலின் முன் மயில், பலிபீடம், கொடிமரம் ஆகியவை உள்ளன.பாண்டிய நாயகரை வணங்கிப் படி இறங்கிக் கீழே வரும்போது நமது இடப்புறம் ‘ஷண்முகநாதர்’ என எழுதப்பட்ட சந்நதி பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறோம், ‘‘வடக்கு கோபுரத்தின் உட்பக்கத்தே தெற்கு நோக்கிய நிலையில் முருகப் பெருமான் திருவுருவம் கோபுரத்தை ஒட்டிய புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

இந்தச் சந்நதியில் அறக்கடவுளாகிய யமனின் திருவுருவம் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்’’ என்று பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் அவர்கள் குறிப்பிடுகிறார்.  அந்தச் சண்முகநாதர் சந்நதி நடராஜர் கோயிலிலுள்ள 11 ஆவது முருகன் திருச்சந்நதி என்று தெரிந்து கொள்கிறோம். ‘வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிராமன்’ என்று அருணகிரியார் பாடியுள்ளார்,

எலுப்புத் தோல்மயிர் நாடிகு ழாமிடை
இறுக்குச் சீபுழு வோடடை மூளைகள்
இரத்தச் சாகர நீர்மல மேவிய கும்பியோடை
இளைப்புச் சோகைகள் வாதம் விலாவலி
உளைப்புச் சூலையொ டேவலு வாகிய
இரைப்புக் கேவல மூலவி யாதியொடண்டவாதங்
குலைப்புக் காய்கனல் நீரிழி வீளையொ
டளைப்புக் காதடை கூனல்வி சூசிகை
குருட்டுக் கால்முட மூமையு ளூடறு கண்டமாலை குடிப்புக் கூனமி தேசத மாமென
எடுத்துப் பாழ்வினை யாலுழல் நாயெனு
னிடத்துத் தாள்பெற ஞானசதாசிவ அன்புதாராய் கெலிக்கப் போர்பொரு சூரர்கு ழாமுமி
ழிரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா கிளர்ப்பொற் றோளிச ராசர மேவியெ
யசைத்துப் பூசைகொள் ஆயிப ராபரி
கிழப்பொற் காளைமெ லேறுமெ நாயகி பங்கின்மேவும்
வலித்துத் தோள்மலை ராவண னானவன்
எடுத்தப் போதுடல் கீழ்விழ வேசெய்து
மகிழ்ப்பொற் பாதசி வாயந மோஅரசம்புபாலா
மலைக்கொப் பாமுலை யாள்குற மாதினை
அணைத்துச் சீர்புலி யூர்பர மாகிய
வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே

- என்று அருணகிரியார் பாடியுள்ளார். பல்வேறு வியாதிகளெல்லாம் குடிபுகுந்து கேடு செய்கின்ற இந்தச் சரீரத்தை மீண்டும் மீண்டும் எடுத்து பாழாகிய வினைகள் செய்து திரிகின்ற இந்த அடிமை உனது திருவடிகளைப்பெற, ஞானமயமானதும் எப்போதும் மங்களகரமானதுமான அன்பைத் தந்தருளுக. வெற்றிபெற வேண்டி சமர் புரிந்த சூரர்களின் கூட்டம் கக்கிய ரத்தம் சேறு போல் பெருக, தேர், குதிரை, யாளிகள் அழிந்து போக, சமுத்திரமும் சூரபத்மனும், கிரௌஞ்ச கிரியும் தூளாகச் செய்த வேலனே!

எழுச்சிமிக்க அழகிய தோள்களை உடையவன் அசையும் பொருள் அசையாப் பொருள் அனைத்தையும் ஆட்டுவித்து அவற்றின் வழிபாடுகளைப் பெறும் தாய், பரம்பொருள் சிவபத்தினி என்பதனால் தனக்கும் உரிமையாகிய ரிஷப வாகனத்தில் ஏறிவரும் என் தலைவியின் பாதத்தில் இருக்கும் சம்பு பாலா! (கிழம்=உரிமை, குறிஞ்சிக் கிழவன்=முருகன்) ராவணன் மிகுந்த பலமுடன் தன் தோள்களினால் கயிலை மலையை அசைத்துத் தூக்கப் பார்த்தபோது, இறைவன் புன்னகை பூத்து தன் கால்விரல் நகத்தைச் சிறிது ஊன்றினார். ராவணன் தன் கை மலையின் கீழ் சிக்குண்டதால் பெருங் குரலெடுத்து அழுதான், அத்தகைய பெருமை வாய்ந்த திருவடிகளை உடையவரும், பஞ்சாட்சரத்தின் உட்பொருளானவருமாகிய சம்புபாலனே!

குன்றை ஒத்த கொங்கைகளை உடைய வள்ளியை அணைத்து சிறப்புமிக்க சிதம்பரத்தில் உன்னதமான வடக்குக் கோபுர வாயிலில் வீற்றிருக்கும் பெருமாளே! என்ற பொருள் படப் பாடியுள்ளார். வடக்குக் கோபுர வாசல் வழியாகத்தான் சுந்தரமூர்த்தி நாயனார் தில்லைக் கூத்தனைத் தரிசிக்க வந்தார் என்பார். இக்கோபுரத்தில் விலைமதிப்பற்ற ஏராளமான சுதைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

பாண்டிய நாயகத்தின் கிழக்கே, சிவகங்ககைத் தீர்த்தத்தின் அருகில் ஒன்பது சிவலிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நவலிங்கக் கோயில் உள்ளது. இதனைச் சைவ நாயன்மார்களுள் ஒன்பது தொகை அடியார்களை ஒன்பது லிங்கங்களாக ஸ்தாபித்து வணங்கும் தலம் என்பர். சுந்தரர் பாடியுள்ள திருத்தொண்டத் தொகையில் இந்த ஒன்பது பேர்கள் பெயரும் குறிப்பிட்டுள்ளபடியால் இக்கோயில் திருத்தொண்டத் தொகையீச்சரம் எனப்படுகின்றது.

சிவகங்கைத் தீர்த்தத்தின் கிழக்கே அமைந்துள்ள மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் எனப்படும். சேக்கிழார் பாடிய திருத்தொண்டர் புராணத்தை அரங்கேற்றுவதற்காக மூன்றாம் குலோத்துங்க சோழன் இந்த மண்டபத்தைக் கட்டினான். மணிவாசகர் இங்கு அமர்ந்துதான் புத்த மன்னர் மகளின் ஊமைத் தன்மையைப் போக்கிய அற்புதத்தை நிகழ்த்தினார். புத்த குருவை வாதில் வென்றார். ஆண்டுதோறும் ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் விழாக்களின்போது, ஒன்பதாம் நாள் இறைவனும் இறைவியும் இரவு மண்டபத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கின்றனர். மறுநாள் விடியற் காலையில் திருமஞ்சனம் முடிந்து, பக்தர்களுக்கு அருட்பாலிக்கின்றனர். நண்பகலில் இருவரும் நடனமாடிய வண்ணம் கீழ்வாயில் வழியே சிற்றம்பலத்திற்குள் புகுகின்றனர்.

இந்தத் திருநடனக் காட்சியே திருக்கூத்து தரிசனம் என்றும் ‘அனுக்கிரஹ தரிசனம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. ‘‘சிவஞானச் செல்வர்களின் அகத்தே நிகழும் இத்திருக்கூத்து தரிசனத்தை உலகோர் புறத்தே கண்டு உய்திபெறும் நிலையில் நிகழ்த்தப் பெறுவதே நடராஜர் தரிசன விழாவாகும்’’ என்று வெள்ளை வாரணனார் அவர்கள் குறிப்பிடுகிறார்.
‘கட்டி முண்டக அரபாலி அங்கிதனை’ எனத் துவங்கும் சிதம்பரத் திருப்புகழில் ‘எட்டு - இரண்டு’ எனும் இரண்டு எண்களை வைத்து அருணகிரியார் ஒரு சொல்லோவியமே புனைந்து விட்டார்.

‘‘எட்டிரண்டும் அறியாத என் செவியில்
எட்டிரண்டும் இதுவாம் இலிங்கமென
எட்டிரண்டும் வெளியா மொழிந்த குரு
முருகோனே
எட்டிரண்டு திசையோட செங்குருதி
எட்டிரண்டும் உருவாகி வஞ்சகர்மெல்
எட்டிரண்டு திசையோர்கள் பொன்ற அயில் விடுவோனே’’

உலக இயலில் அறிவு முதிர்ச்சி இல்லாததனால் எட்டும் இரண்டும் இன்னும் பத்து என்று கூட அறியாத என் செவியில், ‘அகர’ ‘உகர’ ‘மகர’ சேர்க்கையின் பரிணாமமே பஞ்சாட்சரமாகிய சிவச் சின்னம் என்று உபதேசித்து, பத்து லட்சணங்கள் கொண்ட பக்தி மார்க்கத்தை எனக்கு உபதேசித்த குருநாதனே! முருகோனே!
(தமிழ்க் கணிதத்தில் எட்டு = அ என்றும், இரண்டு = உ என்றும் குறிக்கப்படுகிறது. அத்துடன் மகரம் சேரும் போது பிரணவம் பிறக்கிறது. அதுவே சிவச் சின்னம் (இலிங்கம்) ஆகும்.
பக்தி மார்க்கத்தின் பத்து லட்சணங்களென பார்ப்போமா!

1. சொற்கள் சரிவராமல் நாத்தழுதழுத்தல்
2. நா அசைதல்
3. இதழ்கள் துடித்தல்
4. உடல் நடுக்கம்
5. புளகாங்கிதம்
6. வியர்த்தல்
7. தள்ளாடுதல்
8. கண்ணீர் பெருகுதல்
9. தளர்தல்
10. தன்வசமிழத்தல்

பேரரசனுக்குரிய சிறப்புகளை வரிசைப்படுத்துவதில் ஒன்றாகத் தசாங்கம் விளங்குகிறது. மன்னர்களுக்கெல்லாம் மன்னனாக விளங்கும் சிவபெருமானுக்குரிய தசாங்கங்களை மாணிக்கவாசகர் கூறுகிறார். இதையே அருணகிரிநாதர் ‘எட்டிரண்டும் இதுவாம் இலங்கமென’க் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். அவை  பின்வருமாறு.

1. இறைவனுக்குரிய பெயர் = தேவர்பிரான். 2. நாடு = தென் பாண்டி, 3. ஊர் = உத்தரகோசமங்கை, 4. ஆறு = பேரானந்த வெள்ளம் சுழித்தோடும் அனந்த நதி, 5. மலை = கயிலை மலை. 6. குதிரை = வேதப்பரி. 7. படை = திரிசூலம். 8. முரசு = பரநாத முரசு. 9. மாலை = தானிய குரு. 10. கொடி = ரிஷபக் கொடி. சிவந்த ரத்தம் பத்துத் திக்குகளிலும் புரண்டோட, எட்டிரண்டு (16) உருவங்களை உடையவனாகி போரில் வஞ்சகர்களான சூரர்களும் பத்துத் திக்குகளிலிருந்து பகைவா்களும் அழியும்படி வேலைச் செலுத்தியவனே.

குமார தந்திரத்தில் வரும் மந்திராத்தோர படலம் முருகப் பெருமானின் 16 உருவங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது. 1. ஞானசக்திதரன். 2. ஸ்கந்தன். 3. தேவசேனாபதி. 4. சுப்ரமண்யன். 5. கஜவாஹனன். 6. சரவணபவன். 7. கார்த்திகேயன். 8. குமரன். 9. ஷண்முகன். 10. தாரஹாரி. 11. சேனானி. 12. பிரம்ம சாஸ்தா. 13. வள்ளி கல்யாண சுந்தரர். 14. பாலசுவாமி. 15. கிரௌஞ்ச பேதனன். 16. மயில் வாகனன்.

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி