தொம்பைத் தோரணங்கள் சூழ அசைந்தாடும் பெருந்தேர்!



விண்ணின் தலையை மெல்ல கோதி கொடுத்து, ஆடி அசைந்து, வெள்ளமென நீண்டிருக்கும் மக்களை பிளந்து மெதுவாக வரும் தேர் பார்க்க குழந்தையின் குதூகலம் சட்டென்று நம்மைப்பற்றிக் கொள்ளும். கடலலைபோல் மடிந்து நிமிர்ந்து இழுத்துப்போகும் ஜனத்திரள் காண மரபின் மகத்துவமும், மக்களின் நம்பிக்கையும் பிரமிப்பூட்டும். ஊர் கூடி கொண்டாடி தேரின் கரமெனும் வடம் பிடித்திழுக்க  வெட்கம் கொண்ட சிறுமியாக தேர் குதித்து வரும். எம்பெருமானே.... என்று பக்தர்களின் பிளிறலில் உயிர் சிலிர்த்துப் போடும். மயிர்க் கூச்செறிதலால் உடலெங்கும் ஒரு பொடிப்பு பரவி அடங்கும். ஆணின் கம்பீரமும், பெண்ணின் குழைவும் தேரின் அங்க லட்சணம். அதில் கற்றைக் குழல் போல நாற்புறமும் காற்றில் அலையும் தொம்பைத் தோரணத்தின் அழகு அருகே வரும்போது பரவசப்படுத்தும்.

மரத்தில் சிற்பங்கள் செய்து அடுக்கி வைத்து அழகு பார்த்தாலும், அதன் மேல் அலங்காரச் சீலைகளை போர்த்திப் பார்க்கும் அழகே தனிதான். தேரின் முழு வடிவழகையும் தீர்மானிப்பதே இந்த ஓவியச் சீலைகள்தான். யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதுபோல தேரின் வருகையை தொலைவிலிருந்து தெரிவிப்பதே இந்த தொம்பைத் தோரணங்கள்தான். பல வண்ண நிறத்தில் நீண்ட குழலொன்று சுழன்று கொண்டே வரும். தேர் நகர நகர காற்றின் தொடுதலால் உருளும்.

அது என்ன தொம்பை. எங்கே  செய்கிறார்கள்.  மதுரை மாநகரின் தெற்கு வெளி வீதியில் சுந்தரவடிவேல் பரம்பரை பரம்பரையாக இந்த தேர்ச்சீலைகள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அவரைச் சந்தித்து கேட்டபோது அங்கம் அங்கமாக விவரித்தார். ‘‘எங்க பாட்டன், முப்பாட்டன் காலத்துலேர்ந்து இதை செய்து கிட்டு வரோங்க. தொம்பைன்னு இன்னிக்கு நீங்க தேர்ல பார்க்கறீங்களே அதுக்கு அசைந்தாடி மாலைன்னு பேரு. அது தொங்கிகிட்டே அசைஞ்சு வரதுனால தொம்பைன்னு ஒரே பேரா வச்சிட்டாங்க. தொம்பை தேரோட முகப்புக்கு அழகு.

பார்த்தவுடனே இதென்னதுன்னு கொஞ்ச நேரம் நிக்க வைக்கும். கிட்ட வந்து தேரை பார்க்க வைக்கணும்னு அதை தொங்க விட்டுடுவோம். அதுதான் அதுக்கு இருக்கற ஈர்ப்புன்னு தாத்தா சொல்லுவாரு. சென்னை வள்ளுவர் கோட்டத்துல இருக்கற தொம்பைகூட நாமதாங்கய்யா செய்தது. மிகப்பெரிய தொம்பைன்னா அது திருவாரூர் தேருக்குத்தான். இன்னொன்னு தெரியுங்களா. தொம்பைக்கு கேரளாவுல யானைக்கால்னு பேரு. நாங்களும் அந்த காலை செய்து கொடுத்துடுவோம்’’ வெள்ளையாக சிரித்தார்.

தொண்டையை செருமி கொண்டு மீண்டும் மேலே தொடர்ந்தார். ‘‘இப்போ தொம்பைக்கு மேல தேர்ச் சீலைகள்ல எங்க வித்தையை காட்டுவோம். ஆனா, அது மதரீதியான, சம்பிரதாயமா இருக்குமே தவிர அதை மீறாது. ராஜாங்க காலத்துல கோயில் தேருக்குச் சீலை செய்ய கூப்பிடுவாங்க. அந்தக் காலத்துல குடும்பமா போய் செய்து கொடுத்துட்டு வருவாங்க. நெல்லுதான் அதுக்கு கூலியா கொடுப்பாங்க. ஆனா கௌரவமா நடத்துவாங்க. ஒரு வருஷம் ஆகும்....  திரும்பி வரத்துக்கு. அது திருநெல்வேலியா இருந்தாலும் சரி, திருவாரூரே ஆனாலும் சரிதான்.

செய்து கொடுத்துட்டுதான் மதுரைக்கு திரும்புவோம். இதோ இங்க பாருங்க இருநூறு வருஷங்களுக்கு முன்னாடி எங்க தாத்தாங்க வரைஞ்ச திரைச் சீலைய.’’ எடுத்துக் காட்டியபோது நம்ப முடியவில்லை. ஏதோ மூன்று நாட்களுக்கு முன்பு செய்ததுபோல பளிச்சென்று இருந்தது. புருவம் சுருக்கி பார்த்தபோது, ‘‘இது தையல் மிஷினெல்லாம் கண்டு பிடிக்கறதுக்கு முன்னாடி கையாலேயெ செஞ்ச வேலை. இந்த மாதிரி நிறைய இருந்ததுங்க. பாதுகாக்காம விட்டதுல இதுதாங்க மிஞ்சிச்சு’’ என்றார் ஆதங்கமாக.

அவர் தாத்தா நகாசு வேலைக்காரர் என்று தெரிந்தது. யோக நிஷ்டையில், பத்மாசனமிட்டு அபய, வரத ஹஸ்தங்களோடு அம்மன் அமர்ந்திருக்கிறாள். இருபுறமும் இரு தேவியர் சாமரம் வீசுகிறார்கள். அவர்களின் ஆடையில் தோன்றும் மடிப்பையும், புறங்கைகளில் தொங்கும் முந்தானையையும் லாவகமாக ஓவியமாக வரைந்து அதை அந்தந்த வண்ணத் துணியில் வெட்டியெடுத்து தைத்திருக்கிறார். முகம் முழுதும் பூரிப்பும் ஒரு வெட்கத்தையும் காட்டியிருக்கிறார். இன்னொன்று வாய் பிளந்து ஹா... என கர்ஜிக்கும் யாளியின் உருவச் சீலை. கர்ஜித்து விடுமோ... என பயம் கொடுத்தது.

நூறு வருடங்களுக்கு முன்பு பல குடும்பங்களாக செய்து கொண்டிருந்தவர்கள். இன்று சில குடும்பங்களாக சுருங்கி விட்டிருந்தனர். காரணம் நவீனம் மரபை மறைத்து விஞ்ஞானத்தின் மீது சவாரி செய்து கொண்டிருக்கிறது. அது மரபின் பலவீனமான சரிவல்ல. விஞ்ஞானத்தின் சுலபமாக்கும் தந்திரம். கையில் கொண்டு வந்து உலகத்தை கொடுக்கும் ராட்சசத்தனம். ஏற்றுக் கொள்ளத்தான் வேணும்.

உயிர் மூச்சைக் கூட சிற்பத்தில் கொண்டு வந்து நிறுத்திய உன்னத கலைஞர்களை கொண்டது நம் நாடு. ஓவியமாக உருபெற்றபோது உச்சந்தலையில் வைத்து கொண்டாடியது. இன்று விஞ்ஞான வேகச் சூழலில் அரை அங்குல போட்டோவாக உள்ளதை மாற்றாமல் அப்படியே  காட்டியபோது சிறிது நேரம் வெறித்துவிட்டு தூக்கிப் போட்டது. ‘‘ஜஸ்ட் ஃபார் மெமோரிஸ்’’ என்று உதட்டோரம் புன்னகைத்தது.

ஆனால், ஆன்மிகமும், கலையும் அழியா வரம் பெற்ற சிரஞ்சீவிகளாக பிரிக்க முடியாத ஒரு வடிவழகை ஒன்றையொன்று பின்னி வளர்ந்தது. இன்று வரை அதை ஆலயத்தில் புடைப்புச் சிற்பமாக பொறித்து வைத்தார்கள். புராணம் சொல்வதை வெறும் கதை என்பார்களும் சிற்ப நுணுக்கத்தை பார்த்து கண்ணீர் வடித்தார்கள். என்ன ராட்சச வேலை அண்ணாந்து வியந்தார்கள்.

சிற்பம் சொல்லும் தத்துவம் பார்த்து பக்தர்கள் கைகூப்பி வணங்கி நீயே என்னை உய்விக்க வந்த தெய்வமென கண்மூடி நின்றார்கள். இதுவரை ஆயிரம் தேர்களுக்கு அலங்காரச் சீலைகளை செய்ததாக சொன்னபோது வியப்பில் விழி விரிந்தது. கண்முன்னால் வெவ்வேறு விதமான இறை வடிவங்களை துணிகளில் உயிரோடு உலவ விட்டதை எடுத்துக் காட்டினார். இதை எப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டபோது அருகே அழைத்து செய்து காட்டினார்.

‘‘என்னென்ன சாமி படம் வேணுமோ. அதையெல்லாம் பேப்பர்ல வெட்டி எடுத்துப்போம். அதை கார்பன் காப்பி மாதிரி வெச்சு கைக்கு என்ன நெறத்துல துணி வேணும், நெத்தி எந்த கலர்ல இருக்கணும், கையில் இருக்கற ஆயுதத்துக்கு என்ன கலர் கொடுக்கணும்னு யோசிச்சு தேவையான கலர் துணிகளை சேர்த்து வச்சுப்போம். எல்லாமும் காட்டன் துணியிலதான் செய்யணும். சிலர் வண்ண காகிதத்தை ஒட்டி சில நிமிஷத்துல பிச்சிகிட்டு வர மாதிரி பண்ணிடறாங்க. காளியோட தீச்சுடர் மாதிரியான முடிக்கு மஞ்சள் கலர்ல சுடர் ஒன்னு தகதகன்னு எரியறமாதிரி வெட்டி எடுத்துப்போம். கையில் இருக்கற கத்தி வெள்ளையா, இன்னொரு கையில இருக்கற சூலம் மஞ்சளா தனித்தனியா வெட்டி எடுத்துப்போம்.

ஒவ்வொரு அங்கமா எடுத்ததுக்கு அப்புறம் வெட்டியதை சரியா சேர்ப்போம். முழு உருவக்காளி இப்போ ரெடியாகிடும். இதுக்கு அப்லிகபில் ஒர்க்குன்னு பேரு. வெவ்வேறு இடங்கள்ள வெள்ளைத் துணியில கலர் பெயின்டிங் அடிச்சுடுவாங்க. அது ஒரு வருஷம் தாங்கும். ஆனா, இந்த தேருக்காக நாங்க செய்யறது ரொம்ப சாதாரணமா பத்து வருஷம் வரைக்கும் தாக்கு பிடிக்கும்.’’ இதுவரையிலும் ஆயிரம் தேரை செய்திருக்கிறீர்களே? என்று அவர் சொன்னதையே மீண்டும் கேள்வியாக்கினோம்.

‘‘இதுல திருவாரூர் ஆழித்தேர். ரொம்ப பெரிசு. நெட்டி உருட்டி வாங்கற வேலை. பதினேழாயிரம் சதுர அடி துணியை செலவு பண்ணியிருக்கோம். அதுக்கு வர தொம்பையினுடைய உயரமே இருபதடி. எட்டடி சுற்றளவு. கிட்டத்தட்ட முப்பத்தியிரண்டு தொம்பை தேவைப்படும். அதுக்கு கீழ குறைஞ்சதுண்ணா எங்கயோ ஒன்னு, ரெண்டு இருக்கற மாதிரி இருக்கும். காரணம் அவ்வளவு உசரம். மீனாட்சி அம்மனுக்கு தேர் செஞ்சு அதுல அவங்க ரெண்டு பேரும் போற அழகு பார்த்து வீட்டுக்கு வந்து முகம் புதைச்சு அழுதிருக்கேங்க. காரணம் என்ன தெரியுமா இப்படி சென்மத்தை எனக்கு கொடுத்தியேன்ற நன்றிதாங்கய்யா அது.

பெரிய தேர்சீலை செய்யறது சவால்னு சொல்றதைவிட ஆத்மார்த்தமா பயபக்தியோட கலா ரசனையும் சேர்த்து செய்யறது கிடைக்கற சுகம் வேற எதுல கிடைக்கும் சொல்லுங்க’’ என்றார். மேலும், தொண்டை அடைக்க வேறொரு விஷயத்தையும் சொன்னார். மனம் கனத்துப் போனது. ‘‘நாங்க கலைஞர்கள்னு ஒரு சான்றிதழ் தரச் சொல்லி கலை பண்பாட்டுத்துறையை அணுகியிருக்கோம். ஆனா, நீங்க வெறும் துணி தைக்கறவங்கதானேன்னு சொல்லியிருக்காங்க. ஆயிரம் தேர்ல என் ஓவியம் இருக்குங்கய்யான்னு சொன்னது அவங்க காதுல விழவேயில்ல.

அப்போ சிற்பிங்க எல்லாரும்  வெறும் கல்லு உடைக்கறவங்கன்னு சொல்லிடுவாங்களோன்னு பயமா இருந்தது. வீட்டுக்கு வந்திட்டேன்’’. சுந்தர வடிவேல் குரலில் தழதழப்பு அதிகரித்தது. அதனாலேயே தன் மகனை இந்தத் தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றார். மகன் யாருடனோ தொலைபேசியில் ஆங்கிலத்தில் உரையாடுவதை பார்த்து மகிழ்ந்தார்.‘‘ஆனா, கவலைப்பட வேணாம். கலைத்தாய் தன்னை அப்பப்போ மாத்திப்பா’’ என்று உறுதியோடு ஆறுதல் பட்டுக் கொண்டார். மகன் எங்கள் பக்கம் திரும்பி அப்பா என்ன செய்கிறார் என்று எனக்குத் தெரியும் என்றார். அப்பா கேட்டபோது ஓவிய தேர் திரைச்சீலைகளை வரிசையாக்கி காட்டினார். நம்பிக்கை மீதமிருந்தது. இப்போது தேரின் ஒவ்வொரு பகுதியாக விவரிக்கத் தொடங்கினார்.

‘‘மொதல்ல எந்த கோயில் தேருக்கு அலங்காரம் பண்ணணுமோ அதுக்கான அளவை கொடுப்பாங்க தேர் கொத்தனாருங்க. ஆமாங்க, அவங்களுக்கு தேர் கொத்தனாருங்கன்னுதான் பேரு. சிவாலயமா இருந்தா துவார பாலகர் செய்வோம். தேரின் உச்சியான மகுடத்துல நந்திக் கொடியும், விஷ்ணுவானா ஜய, விஜயர்களை துவார பாலகர்களா நாமம் போட்டும், சிகரத்துல கருடக் கொடியை பறக்க விடுவோம்.

மகுடம் ஊருக்கு தகுந்தா மாதிரி பெருசாயும், சிறுசாயும் செய்யச் சொல்வாங்க. வாசல் மாலை தொங்க விட்டு, சம்பிரதாயரீதியா சங்கு, சக்கரமோ அம்மன் தேரா இருந்தா சிங்க வாகனமோ செஞ்சு ஒட்டுவோம். வாசல் மாலைக்கு நடுவுல ஆர்ச் மாதிரி இருக்கும். அதுக்கு ரெண்டு புறத்துலயும் ரெண்டோ அல்லது நாலு தொம்பையை தொங்க விட்டுடுவோம். அதுக்கும் உள்ள சுவாமிய புஷ்பாலங்காரத்தோட புறப்பாடு பண்ணுவாங்க.

அஞ்சு அலங்கமா, சிலதுல எட்டு, பத்து பிரிச்சுடுவோங்கய்யா. அலங்கம்னா படி மாதிரியான அமைப்பு. படிக்கட்டு மாதிரி உச்சி வரைக்கும் ஓவியச் சீலையை அழகா அடுக்கறது. ஒவ்வொரு அலங்கத்துலயும் என்னென்ன ஓவியம் வரணும்னு எழுதி வச்சு மேல சொன்னது மாதிரி அந்தந்த உறுப்புகள், ஆயுதங்களுக்கு வண்ணத் துணியை வெட்டி எடுத்து ஒட்ட வச்சுடுவோம். இந்த மாதிரி....’’ என காண்பித்தார்.

பார்த்ததும் அசரடிக்கிற நேர்த்தி. தேரில் தொங்க விடப்பட்டிருக்கும் அளவுக்கு சரிசமமான அலங்கங்களாக செய்திருக்கிறார். தேர் எத்தனை அடி உயரமாக இருந்தாலும் இணையான அளவுகளில் அலங்கங்கள் செய்திருக்கிறார். அங்குல அளவு பூவாக இருந்தாலும் அழகாக சிரிக்க வைத்திருக்கிறார். காமதேனுவையும், யானையையும் ஜோடியாக அமர வைத்திருப்பது அற்புதம்.

அன்னம் இரண்டு ஒட்டியிருக்கும் ஓவியம் கண்ணை நிறைக்கும். இப்படி விதம் விதமாக வரைகிறீர்களே எங்கு பார்த்தீர்கள் என கேட்டபோது... ‘‘நம்ம தமிழகச் சிற்பிகள் கோயில்ல செதுக்கி வச்சுருக்காங்களே அதுல இது ஒரு சதவீதம் கூட நான் செய்யலேன்னு நினைக்கறேன். மூக்கு சரியில்லைன்னு ஒரு டன் கல்லை தூக்கிப் போடற நேர்மை அவங்ககிட்ட இருந்ததுங்கறேன்’’ தரையில் அடித்து பேசினார்.

‘‘இதுக்கெல்லாம் மேல வைணவ கோயில் தேர்னா தசாவதாரத்துலேர்ந்து சிலது வரைவோம். சிவன் ரிஷபாரூடரா காமதேனு மேல அம்மையோட காட்சி தர மூர்த்தி தனியா நிக்கற நந்தி வரைவோம். அம்மன்னா சூலம், ஆயுதங்கள் செய்து வைப்போம். ஒவ்வொரு ஊருக்கும் இருக்கற தேருக்கு எட்டுப் பட்டை, பதினாரு, இருவதுன்னு அலங்காரம் மாறும். அவர் சொல்லிக் கொண்டே இருக்கும்போது பட்டையாக தட்டு மாதிரி ஒரு கோல் சொருகிய சீலையை பார்த்து இது என்ன என்று கேட்டோம்.

‘‘இதுங்களா அந்த காலத்து ராஜா வரும்போது முன்னாடி மரியாதை நிமித்தமா கொண்டு வர சுருட்டி. இன்னொன்னு பல்லாக்கு பண்ணாங்கு. பல்லக்குக்கு மேல போடற வண்ணத் துணி. இது மேக்கட்டின்னு சொல்லுவோம். வேற பேர் அஸ்மான கிரி. சுவாமி பல்லக்கு உள் மேல் துணி. சாதாரணமா இதை பார்க்க முடியாது’’ என்றார். நாமும் நூற்றாண்டுகளாக இந்த தேர்ச்சீலை எனும் அற்புதக் கலையில் இவ்வளவு இருக்கிறதா என அயர்ந்து வியந்தோம். அது கடலளவு கலை என தெளிந்து விடைபெற்றோம். ஆனால், கடற் காற்றின் சுகம், இக்கலையை சுந்தர வடிவேல் விளக்கும் விதத்தில் வெளிப்பட்டது.

கடல் நீர் காலை நனைத்தாலும் அதன் சிலிர்ப்பு தனியே. தேர் விண்ணை முட்டி நின்றாலும் அவர் வசிக்கும் வீடும், தொழில் செய்யும் இடம் என்னவோ பத்துக்கு எட்டடிதான். ஆனாலும், இந்த வானத்தையே அலங்காரத் துணியாக மாற்றுமளவு வித்தை அவரிடம் இருந்தது. வீட்டின் வெளி முகப்பில் தொங்க விடப்பட்டிருந்த தொம்பையும் அதை ஆமோதிப்பதுபோல் காற்றில் அலைந்தது. தொலை தூரத்தில் மீனாட்சி அம்மன் கோயில் மணி இடையறாது ஒலித்தது.

- கிருஷ்ணா
படங்கள்: ஜி.டி. மணி