தெளிவு பெறுஓம்



கார்த்திகை தீபம் கொண்டாடுவதன் ஐதீகம் என்ன?

கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி  தோன்றும் மாதத்தை கார்த்திகை மாதம் என்றழைக்கிறோம். கார்த்திகை மாதத்தில்  வரும் கிருத்திகை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் இணைகின்ற நாளில்  திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது. மற்ற மாதங்களில்  உண்டாகும் பௌர்ணமி நாட்களைவிட கார்த்திகை மாதப் பௌர்ணமிக்கு ஏன் இத்தனை  மகத்துவம் தெரியுமா?

ஜோதிடத்தில் சந்திரனை மனோகாரகன் என்றழைப்பர். நாம்  பிறக்கும் நாளன்று சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரமே நமது ஜென்ம  நட்சத்திரமாகவும், சந்திரன் அமர்ந்திருக்கும் ராசியே நமது ஜென்ம ராசியாகவும் அமைகிறது. மனிதனின் மனநிலைக்கும், சந்திரனுக்கும் முழுமையான  தொடர்பு உண்டு. எனவேதான் சந்திராஷ்டம நாட்களில் நம் மனம் சஞ்சலப்படுவதை  நாம் கண்கூடாகக் காணலாம். இப்படி நம் மனதோடு முழுமையான தொடர்பினைக் கொண்ட  சந்திரன் ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் முழுமையாக வளர்ந்து நின்றாலும், 100  சதவீத பலத்துடன் இருப்பது கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே.

அதாவது  ரிஷப ராசியில் உச்ச பலத்துடன் முழு நிலவாக பௌர்ணமி சந்திரன் சஞ்சரிப்பது  கார்த்திகை மாதத்தில் மட்டுமே வரக்கூடிய நிகழ்வாகும். மனோகாரகன் சந்திரன்  முழுமையாக பலம் பெற்று ஒளிவீசும் அந்தநாள் நம் மனதிற்கு மட்டற்ற  மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக நம் உள்ளத்தில் இருட்டினைப் போக்கி  ஒளியினைப் பாய்ச்சுகிறது. இதன் அறிகுறியாக நம் இல்லங்களில் வரிசையாக  விளக்கேற்றி நாம் கொண்டாடுகிறோம். ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும்,  சூரியனைத் தந்தை என்றும் உருவகப்படுத்துவார்கள். சந்திரன் ஆகிய தாய்,  சூரியனின் நட்சத்திரம் ஆகிய கிருத்திகையில், உச்ச பலத்தோடு முழுநிலவு ஆக  ஒளி வீசும் காலம் இந்த கார்த்திகை மாதம்.

அதாவது அம்மை-அப்பனின்  இணைவாக, அர்த்தநாரீஸ்வர வடிவாக சிவபெருமான் அருள்புரியும் காலம் இது  என்பதால் உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை மாதம் மிக  விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. பல்வேறு காரணங்களால் கணவரை விட்டுப்  பிரிந்து வாழும் பெண்கள் கார்த்திகை மாதத்தில் அருகில் உள்ள சிவாலயத்தில்  விளக்கேற்றி வழிபட்டு வர விரைவில் கருத்து வேறுபாடு நீங்கி கணவரோடு இணைந்து  வாழ்வர் என்று பரிகாரம் சொல்வார்கள் விவரம் அறிந்த ஜோதிடர்கள். இந்த  காரணங்களால்தான் கார்த்திகை தீபம் நம்மவர்களால் மிகுந்த ஈடுபாட்டுடன்  கொண்டாடப்பட்டு வருகிறது.

* பெண்கள் சபரிமலைக்கு செல்வது சரியா, தவறா? இத்தனை ஆண்டுகளாக இல்லாமல் இப்பொழுது இந்த மாற்றம் வேண்டும் என்று கோருவது எதனால்? - பாரதி சித்தன், குறண்டி.

சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தவறு என்று யாரும் சொல்லவில்லை. பத்து வயதிற்கு மேல் ஐம்பது வயதிற்குட்பட்ட பெண்கள் சபரிமலைக்குச் செல்வது நல்லதல்ல என்று அறிவுறுத்துகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மாதவிலக்கு ஆகும் பெண்கள் சபரிமலைக்குச் செல்ல வேண்டாம் என்று நேரடியாகவே புரிந்து கொள்ளலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பினை விமர்சிப்பதோ அல்லது அதற்கு எதிரான கருத்துக்களைச் சொல்வதோ நமது நோக்கம் அல்ல. இந்த சர்ச்சை குறித்து எந்தவிதமான சந்தேகங்களும் இன்றி தெளிவு பெற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதைப் புரிந்து கொண்டு மேலே தொடருவோம்.

“கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து பார்த்தசாரதியின் மைந்தனே உனைக்காண வேண்டியே தவம் இருந்தோம்” என்ற பாடல் வரிகளை நினைவுபடுத்திப் பார்ப்போம். ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தியெட்டு நாட்கள் விரதம் இருக்க வேண்டும் என்பதால் கார்த்திகை மாதத்தின் துவக்கத்தில் மாலை அணிந்து விரதத்தினை துவக்குகிறார்கள். மகரஜோதி பூஜையினை தரிசிப்பதற்காக தொடர்ந்து முறையான விரதத்தினை கடைபிடித்து ஐயனைக் காண இருமுடி கட்டிச் செல்கிறார்கள். மாதவிலக்கு ஆகும் பெண்களுக்கு இவ்வாறான விரதமுறை சாத்தியப்படுமா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

சராசரியாக முப்பது நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு சுழற்சி வரும்போது தொடர்ச்சியாக நாற்பத்தி எட்டு நாட்கள் விரதம் இருக்க முடியுமா? பெண்ணுரிமை மறுக்கப்படுகிறது என்ற வாதத்திற்கே இங்கு இடமில்லை. பெண்ணுரிமை மறுக்கப்பட்டால் மாளிகைபுரத்து அம்மனுக்கு தனியாக சந்நதி அமைத்திருப்பார்களா? மஞ்சள்மாதாவிற்கு என்று தனியாக ஒரு தேங்காயை இருமுடியில் வைத்துக்கொண்டு வந்து சந்நதியில் உருட்டிவிடுவார்களா? தங்கள் வீட்டுப் பெண்கள் மஞ்சள் குங்குமத்துடன் நீடூடி வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு ரவிக்கைத்துணிகளில் மஞ்சள் பிரசாதத்தை வாங்கிச் செல்வதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதையும் சந்நிதானத்தில் காண இயலும்.

அடியேனுக்குக் கிடைத்த தனிப்பட்ட அனுபவத்தையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஏழு வயதிலும் எட்டு வயதிலும் இருந்த எனது இரு பெண் குழந்தைகளோடும் முறையாக விரதத்தினை கடைபிடித்து ஐயனை பிரதி வருடந்தோறும் தவறாமல் தரிசித்து வந்த மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவரோடும் மகர ஜோதி பூஜை தொடங்கியிருந்த நேரத்தில் சபரிமலைக்குச் சென்றிருந்தோம். லட்சக்கணக்கான பக்தர்களின் கூட்டத்தில் மிதந்து சென்ற நாங்கள் ஐயனின் சந்நிதானத்தை நெருங்கும்போது தலையில் இருமுடியோடு சிறு பெண் பிள்ளைகளையும், முறையாக விரதம் இருந்து சபரிமலைக்கு வந்த அந்த மூத்த பெண் பத்திரிகையாளரையும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்து தனியாகப் பிரித்த அங்கிருந்த அர்ச்சகர் சந்நிதானத்திற்கு மிக நெருக்கத்தில் பக்கவாட்டில் நிற்க வைத்து நிதானமாக தரிசனம் செய்யுங்கள், எந்த அவசரமும் இன்றி ஐயனைக் காணுங்கள் என்று சொன்னபோது மெய்சிலிர்த்துப் போனோம்.

உண்மையாக விரதம் இருந்து குடும்ப வாழ்வியல் சிந்தனை ஏதுமின்றி ஐயனைக் காண வேண்டும் என்ற லட்சியம் ஒன்றினை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு விரதம் இருந்து இருமுடி கட்டி பதினெட்டு படியேறி வந்ததற்கான முழுமையான பலனை அவர்கள் மூவரும் அன்று அடைந்தார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை. பெண்களை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக இந்த சம்பவத்தை இங்கே குறிப்பிட்டுள்ளேனே தவிர வீண் பெருமைக்காக அல்ல. பாரத தேசத்தில் பெண்களுக்கான உரிமை என்றுமே மறுக்கப்பட்டதில்லை. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் ஆண்மகன் தனது மனைவியைக் கூட பெயரிட்டு ஒருமையில் அழைப்பதில்லை.

இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் எனும்போது சபரிமலைக்குச் செல்லும் கூட்டம் வருடந்தோறும் கூடிக்கொண்டே செல்கிறதே, அதன் காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. ஐயப்பனை நெஞ்சில் நிறுத்தியவர்கள் சதா ஐயனின் நாமத்தினை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் வடிவிலும் நாம் ஐயனைக் காண இயலும். என்றாலும் ஸ்தான பலம் என்பது சபரிமலைக்கு உண்டு. திருமலை திருப்பதியிலும் ஸ்தான பலம் நிறைந்திருக்கிறதே, அங்கு இளம் பெண்கள் வருவதற்கு தடையேதும் இல்லையே என்ற கேள்வியையும் சிலர் எழுப்புகிறார்கள். திருமலைக்குச் செல்வதற்கு ஆண்கள் கூட விரதம் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

புவியியல் ரீதியாக திருப்பதி மலையின் அமைப்பு வேறு, சபரிமலையின் அமைப்பு வேறு. புவியியல் அறிஞர்கள் இதனைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம்  இருக்கும் ஆண்கள் காலை-மாலை இருவேளையும் பச்சைத் தண்ணீரில் தலைக்கு ஸ்நானம் செய்கிறார்கள். தங்களுடைய துணிகளை இரு வேளையும் தாங்களே துவைத்துக் கொள்கிறார்கள். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில்லை. வாசனை திரவியங்களை பூசிக் கொள்வதில்லை.

தங்களை அலங்கரித்துக் கொள்வதில்லை. காலைப்பொழுதில் ஒருவேளை உணவு உண்பதில்லை. காட்டின் வழியே பயணிக்கும்போது அந்த தட்பவெப்பநிலைக்கு ஏற்றவாறு தங்கள் உடல்நிலையையும், மனநிலையையும் தயார்படுத்திக்கொள்ளும் விதமாக இவ்வாறான கடுமையான விரதத்தினை மேற்கொள்கிறார்கள். தற்காலத்தில் பம்பை ஆற்றங்கரை வரையிலும் சாலைப்போக்குவரத்தின் மூலமாக எளிதாக சென்றடைந்துவிட இயலுகிறது என்பதால் இந்த விரதமுறையில் இருந்த கடுமையான கட்டுப்பாடுகளை சில ஆண்கள் தவிர்த்து வந்ததனைக் கண்ட பெண்கள் எளிதாக விரதத்தினை இருந்தால் போதுமானது என்று எண்ணத் தொடங்கியிருப்பதன் விளைவே, இந்த மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் மனதில் உருவாக்கியுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகளுடன் இருந்த விரத முறை மாறி தற்போது காலத்திற்குத் தகுந்தாற்போல் எளிமையாக்கப்பட்டு விட்டது. சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் ஆண்கள் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்களுடைய கடுமையான விரத விதிகளை எளிதாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாரம் விரதம் இருந்தால் போதும் என்ற எண்ணம் முற்றி, தற்போது காலையில் மாலை அணிந்து மாலையில் இருமுடி கட்டிக் கொள்ளும் பக்தர்களும் பெருகி விட்டார்கள். இவர்களைக் காணும் இளம் பெண்கள் நாமும் இதுபோல் சென்று வரலாமே என்று எளிதாக எண்ணத் துவங்கியதன் விளைவு தற்போது பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்து நிற்கிறது.

 “ஏன் இந்த தீர்ப்பினை மாற்றி எழுத ஐயப்பனால் முடியாதா” என்று சில பகுத்தறிவுவாதிகள் கேட்பதும் நம் காதில் விழத்தான் செய்கிறது. பெண் பக்தர்கள் மட்டுமல்ல, ஆண் பக்தர்கள் கூட ஐயனின் அருள் இருந்தால்தான் சபரிமலைக்குச் சென்று தரிசனம் செய்ய முடியும். இது சபரிமலைக்குச் சென்று வரும் பக்தர்கள் அனுபவ பூர்வமாக கண்டறிந்த உண்மை. இருமுடி கட்டிச் சென்றவர்களில் பலரும் ஏதோ ஒரு காரணத்தினால் பயணம் தடைபட்டு பாதியில் திரும்ப வந்த கதைகள் ஏராளம். ஐயப்பனின் அருள் இல்லை என்றால் சபரிமலைக்குச் செல்ல இயலாது என்பது  சத்தியமான உண்மை.

    சரி, மீண்டும் விஷயத்திற்கு வருவோம். சபரிமலையின் புவியியல் தன்மைக்கு ஏற்பவும், தட்ப வெப்பநிலை, காட்டுப்பகுதி, கடும் குளிர், மழை முதலான இயற்கை அம்சங்களையும், குரங்கு, கரடி, புலி முதலான விலங்குகளையும், பாம்பு, பூரான் முதலான விஷப்பூச்சிகளை சமாளிக்கும் வகையிலும் கடுமையான விரதக் கட்டுப்பாட்டு முறைகளை வகுத்து வைத்துள்ளார்கள். இளம்பெண்கள் இந்த விரதமுறைகளை கடைபிடிப்பது என்பது அத்தனை எளிதான அம்சம் இல்லை.

கர்ப்பம் தரித்தலும், கர்ப்பப்பையில் எந்தவிதமான பிரச்னையும் உண்டாகாமல் இறுதிவரை ஆரோக்யமாக வாழ்தலும் ஒரு பெண்ணைப் பொறுத்த வரை அத்தனை எளிதான விஷயம் இல்லை. பூப்படைந்த நாள் முதல் மாதவிலக்கு முற்றிலுமாக நிற்கும் வரை ஒவ்வொரு பெண்ணும் மாதந்தோறும் அடைந்து வரும் சிரமம் அந்தப் பெண்களுக்குத்தான் புரியும். ஏற்கெனவே நாட்டில் செயற்கைமுறை கருத்தரிப்பு மையங்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. அதோடு கர்ப்பப்பையை அறுவைசிகிச்சை மூலம் அகற்றியிருக்கும் பெண்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது.

 இந்த உண்மை புரிந்திருந்தும் யாரோ ஒரு சிலரின் தூண்டுதலின் பெயரிலும், பெண்ணுரிமை என்ற பெயரிலும், புரட்சி செய்கிறோம், சரித்திரம் படைக்கிறோம் என்ற உணர்ச்சி வேகத்திலும் செயல்படுவது உசிதமான செயல் அல்ல. இன்னமும் சொல்லப்போனால் மனைவி கர்ப்பம் தரித்திருக்கும் பட்சத்தில், அவளது கணவன்கூட சபரிமலைக்குச் செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்திருப்பார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்திருப்பவர்கள் இறப்பு வீட்டிற்குச் செல்லக் கூடாது, இறந்தவர்களின் வீட்டிலிருந்து ஒரு வருடத்திற்கு யாரும் சபரிமலைக்குச் செல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளும் உண்டு. இவையனைத்தும் இறைவனின் மீது தீட்டுப்பட்டு விடும் என்பதற்காக சொல்லப்படவில்லை.

இறந்த மனிதன் ஏதேனும் நோயினால் இறந்திருந்தாலும் சரி, அல்லது பிணத்தின் மீது இருக்கும் ஏதேனும் நோய் தொற்றுக் கிருமிகள் நம் மீது ஒட்டிக்கொண்டு வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் இடத்தில் வந்து பரவி விடக்கூடாது என்ற எண்ணத்தினாலும்தான் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதித்தார்களே தவிர, இறைவன் மீது தீட்டுப்பட்டுவிடும் என்ற எண்ணத்தினால் அல்ல. இதே விளக்கத்தினைதான் இளம்பெண்களின் விஷயத்திலும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே பெண்களுக்கான உரிமை மறுக்கப்படவும் இல்லை, பெண்களைத் தாழ்த்திப் பேசுவதும் இல்லை.

மாறாக சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் தாங்கள் நல்லபடியாக வீட்டிற்குத் திரும்பி வரும் வரை அணையாவிளக்கு ஏற்றி வைத்து வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் தாய், தாரம், அக்காள், தங்கை, மகள் எல்லோரையும் தங்கள் நெஞ்சில் சுமந்துதான் செல்கிறார்கள். பாவை நோன்பு என்ற ஒரு நோன்பு நம் தமிழகத்தில் உண்டு. இது பெண்களுக்கான பிரத்யேக நோன்பு. இதனை நாங்களும் மேற்கொள்வோம் என்று எந்த ஒரு ஆணும் மல்லுக்கு நிற்பதில்லை. ஒரு சில விரத முறைகள் பெண்களுக்கு என்றும், ஒரு சில விரத முறைகள் ஆண்களுக்கு என்றும் தனித் தனியாக நம் முன்னோர்களால் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் வகுத்துச் சென்றிருக்கும் விதிமுறைகளை கடைபிடிப்பதே இளம் தலைமுறையினருக்கு நல்லது. மாதவிலக்கு ஆகும் வயதில் உள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்வது சரி அல்ல என்பதே அடியேனின் தாழ்மையான கருத்து.

* கடந்த அக்டோபர் 1-15 ஆன்மிகம் இதழில் திதி கொடுக்கும்போது மூன்று தலைமுறையினரின் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்கு தர்மசாஸ்திர ரீதியாக காரணத்தை விளக்கியிருந்தீர்கள். இதற்கு அறிவியல் ரீதியான காரணம் ஏதும் உண்டா? அறிவியல் ரீதியாக விளக்கினால் நன்றாக இருக்கும்.  - ஜி.டி.சுப்ரமணியம், கொளத்தூர்.
   
சிராத்தம் அல்லது தர்ப்பணம் செய்யும்போது மூன்று தலைமுறையினரின் பெயரைச் சொல்வதற்கும் அறிவியலுக்கும் ஆழ்ந்த தொடர்பு உண்டு. ஜெனிட்டிக்ஸ் என்று அழைக்கப்படும் மரபணுவியல் படித்தவர்கள் இந்த கருத்தினை முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் 46 குரோமோசோம்கள் அதாவது 23 ஜோடி குரோமோசோம்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு ஜோடியில் இருக்கும் இரண்டு குரோமோசோம்களில் ஒன்று தந்தை வழியிலிருந்தும், மற்றொன்று தாயின் வழியிலிருந்தும் வந்து இணைந்திருக்கும்.

இந்த அறிவியல் உண்மையை சாஸ்திரம் இவ்வாறு விளக்குகிறது.  அதாவது தாய்-தந்தை ஆகிய முதல் தலைமுறையில் இருந்து 21 அம்சங்களையும், பாட்டி-தாத்தா ஆகிய இரண்டாம் தலைமுறையில் இருந்து 15 அம்சங்களையும், கொள்ளுப் பாட்டி - கொள்ளு தாத்தா ஆகிய மூன்றாம் தலைமுறையினரிடமிருந்து 10 அம்சங்களையும் ஆக மொத்தம் 46 அம்சங்களை மனிதன் பெற்றிருக்கிறான். இந்த 46 அம்சங்களையும் நமக்குத் தந்த முன்னோர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்யும்போது அவர்களின் பெயர்களைச் சொல்கிறோம்.

தற்கால மரபணு அறிவியல் கண்டறிந்த இந்த உண்மையை நமது ரிஷிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துகொண்டு தர்மசாஸ்திரம் என்ற பெயரில் சொல்லி வைத்துச் சென்றிருக்கிறார்கள். சுபநிகழ்வுகளிலும் சரி, அசுப காரியங்களிலும் சரி, நமது இந்துமத சடங்குகள் அனைத்தும் அறிவியலோடு ஆழ்ந்த தொடர்பு கொண்டவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.