அக இருளை அகற்றும் அண்ணாமலையார் தீபம்



திருவண்ணாமலை தீபம் 23-11-2018

அண்ணாமலையெனும் மந்திரமே அக இருள் நீக்கும் அருமருந்தென, சித்தர்களும் அவர்தம் அடிதொழும் பித்தர்களும் போற்றித் துதிக்கும் ஜோதிப்பிழம்பான அருளாளன். உயிர்கசிந்து அடி தொழுத உமையாளுக்கு இடபாகம் அருளிய கொடையாளன். அடிமுடி தேடவைத்து திருமாலுக்கும் நான்முகனுக்கும் அகந்தை அகற்றிய முக்கண்ணன் அருள்பாலிக்கும் திருத்தலம் திருஅண்ணாமலை.

ஞானநகரம், தலேச்சுரம், சிவலோகம், சுத்தநகரம், கவுரிநகரம், தென்கயிலாயம், சோணாச்சலம், சோணகிரி, அண்ணாத்தூர், அண்ணாநாடு, அருணாத்திரி, அருணாசலம், அருணகிரி, திருவருணை என போற்றப்படும் ஆன்மிக பூமி. ஞானிகளும், யோகிகளும், சித்தர்களும், மகான்களும் தவமிருந்து அருவாக, உருவாக தரிசிக்கும் ஜோதிமலை காட்சி தரும் முக்தித் திருநகரம். இறைவனின் திருமேனியாய் திகழும் அண்ணாமலையில், கார்த்திகை திருநாளில் காட்சி தரும் மகாதீபத்தை தரிசிப்பது பிறவிப் பயன் என்பது அருளாளர்களின் அருள்வாக்கு. சைவத்தின் தலைநகரம் அண்ணாமலையார் அருள்பாலிக்கும் திருஅருணை அருள்நகரம்.

எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன். கண்ணாரமுத கடல். திருவிளையாடல் திருமூர்த்தியான ஈசன், சுயம்பு வடிவான ஜோதிமலையாக அருள்தரும் பேறுபெற்றது திருவண்ணாமலை. இறையே கிரியாக குடிகொண்ட அண்ணாமலையாருக்கு திருவண்ணாமலை ஆண்டார், திருவண்ணாமலை மகாதேவன், திருவண்ணாமலை ஆழ்வார், அண்ணாநாட்டு உடையார் என எண்ணற்ற திருநாமங்கள். கண்ணாரமுதன், கலியுகமெய்யன், வினைதீர்க்க வல்லான், தேவராயன், பரதம் வள்ளபெருமான், பரிமளன், மலைமேல் மருந்தன், வசந்த வினோதன் என அடியார்களால் வர்ணிக்கப்பட்ட அருளாளர் அண்ணாமலையார் மூவுலகையாளும் ஈசன், பூவுலகில் குடிகொண்ட திருநகரம். அர்த்தநாரீஸ்வரராக அருள்பாலித்த திருத்தலம்.

யுகம், யுகமாக அருள்தரும் தீபமலையின் ஜோதிப் பிழம்பை தரிசிப்போர், பிறவியெனும் பெருங்கடலை கடந்தோராவர். முற்பிறவி பயனின்றி, யாவர்க்கும் வாய்க்காது தீபதரிசனம். அருள்வடிவான அண்ணாமலை, உள்ளீடற்ற உன்னத மலை என்பதை மகான்கள் உணர்ந்தனர். எனவேதான், உலகெங்கும் வாழும் மகான்களை எல்லாம் தன்னகத்தே ஈர்க்கும் தென்னகத்து காந்தமாக திருவண்ணாமலை திகழ்கிறது. பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலம். ஜோதி பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதால் இத்திருநாமம். அடி முடி காணாத பரம்பொருளாக, லிங்கோத்பவ மூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியதால் அதிர்ந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் வேண்டியதன் பலனாக,

விண்ணுக்கும், மண்ணுக்கும் ஜோதி வடிவாக உயர்ந்து நின்ற பரம்பொருள் சாந்த வடிவாகிய சுயம்பு லிங்கமே நாம் வலம் வந்து வழிபடும் தீபமலை.
அண்ணாமலைக்கு அருணாச்சலம் எனும் திருப்பெயரும் உண்டு. அருணம் என்ற சொல்லுக்கு சூரியன், வெப்பம், நெருப்பு  எனும் பொருள். அசலம் எனம் சொல்லுக்கு மலை, கிரி எனும் பொருள். அருணாச்சலம் என்பது நெருப்பு மலை என்பதையே குறிக்கும். கயிலாயம் இறைவன் வாழும் இருப்பிடம். ஆனால், திருவண்ணாமலை அருணாச்சலமே சுயம்புவடிவான மலை.

அண்ணாமலையின் உயரம் 2,668 அடியாகும். கடல் மட்டத்தில் இருந்து 167.44 மீட்டர் உயரம். 12.5 டிகிரி அட்சரேகையிலும், 79 டிகிரி தீர்க்க ரேகையிலும் எழுந்து நிற்கும் புனித பூமி. மலைச்சுற்றும் பாதையின் தொலைவு 14 கிலோ மீட்டர் (எட்டே கால் மைல்). கிழக்கு நோக்கியுள்ள மலையின் முகப்பு பகுதி மட்டும் 718 ஏக்கர் பரப்பளவு கொண்டது. எண்கோண அமைப்பில் எழுந்தருளிய சுயம்புவான மலையை சுற்றிலும் எட்டு லிங்கங்கள் (அஷ்ட லிங்கங்கள்) அருள்பாலிக்கின்றன. மலைச்சுற்றும் பாதையில் எட்டு திசைகளிலும் அமைந்துள்ள நந்திகள் அனைத்தும் லிங்கங்களை நோக்காமல் மலையை பார்த்தே அமைந்திருப்பது விந்தையிலும் விந்தை.

மலையே சுயம்புவடிவான லிங்கமாக அமைந்திருப்பதால், தீபத்திருவிழா நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் மலையேறுவதில்லை. மலை உச்சியில் அண்ணாமலையார் திருப்பாதம் தவிர வேறு எந்தச் சிலைகளும் இல்லை. மலையின் அமைப்பை கீழ் திசையில் தரிசித்தால் ஒன்றாக தெரியும். அது ஏகனை உணர்த்தும். மலைச்சுற்றும் வழியில் தரிசித்தால் இரண்டாக தெரியும். அது அர்த்த நாரீஸ்வரரை உணர்த்தும். மலையின் மேற்கு திசையில் தரிசித்தால் மூன்றாக தெரியும். அது மும்மூர்த்திகளை உணர்த்தும். வட திசையில் தரிசித்தால் மலை நான்காக தெரியும். அது நான்கு வேதங்களை உணர்த்தும். மலையைச்சுற்றி முடிக்கும் நிலையில் ஐந்தாக தெரியும். அது பஞ்ச மூர்த்திகளை உணர்த்தும்.

மலையே மகேசனாக காட்சிதரும் தீபமலையின் அடியொற்றி அமைந்திருக்கிறது திருவண்ணாமலை திருக்கோயில். மண்ணுக்கும், விண்ணுக்கும் விஸ்வரூபம் எடுத்த அண்ணாமலையார் அருள்பாலிக்கும் திருக்கோயில் நவகோபுரங்களின் விஸ்வரூபம். கோபுரங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வரலாற்று சிறப்பு மிக்கவை. கோயிலுக்குள் குடியிருக்கும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரின் மகிமைக்கு சாட்சிகளாகவே வானுயர்ந்து நிற்கின்றன, நவ கோபுரங்கள். கோபுர எழில் கொஞ்சும் திருக்கோயில் எனும் சிறப்பும் இத்திருத்தலத்திற்கு உண்டு.

ஏக வண்ணத்தில் நிமிர்ந்து நிற்கும் நவ கோபுரங்கள், காலத்தால் அழியாத கலைப் பெட்டகங்களாக காட்சிதருபவை. திருக்கோயிலுக்குள் நுழைவோர், ராஜகோபுரத்தின் வழியாகச் செல்வதே முழுப் பயனைத் தரும். தரிசனம் முடிந்து திரும்புபோது, பிற கோபுர வாயில்களை பயன்படுத்தலாம். திருக்கோயில் ஆகம விதிகளின்படி, ராஜகோபுரத்து கணபதியை தொழுத பின்னரே பிற சந்நதிகளை தரிசிக்க வேண்டும். கோயிலுக்குள் நுழையும் முன்பு ராஜகோபுரத்து விதானத்தை வணங்குவதும், கோபுர நுழைவு வாயில் படிகளை, இறைவன் திருவடியாக கருதி கைதொட்டு வணங்குவதும் மரபு.

கோயிலின் கிழக்கு திசையில் அமைந்திருப்பது ராஜகோபுரம். இதுவே திருக்கோயிலின் பிரதான வாயில். ஆனாலும், வெளிப் பிராகார வலம் வர கோயிலில் இருந்து புறப்படும் உற்சவ மூர்த்திகள், ராஜகோபுர வாயிலை பயன்படுத்துவது இக்கோயில் மரபு கிடையாது. ராஜகோபுரத்துக்கு அருகேயுள்ள திட்டி வாசல் வழியாகவே உற்சவர் புறப்பாடு நடைபெறும். ராஜகோபுரத்தின் உயரம் 217 அடி. மொத்தம் 11 அங்கணங்களை கொண்டது. கோபுரத்தின் அடி நிலை 135 அடி நீளம், அகலம் 85 அடி. தென்னிந்தியாவில் மிக உயரமான கோபுரங்களில் இரண்டாவது இடம் பெற்றது.

தஞ்சை கோபுரத்தைவிட ஒரு அடி கூடுதல் உயரம். பிற்கால சோழர்கள் கால கட்டிட கலை நுட்பத்துடன் உருவானது. கோயிலின் மேற்கு திசையில் அமைந்திருப்பது பே கோபுரம். மேற்கு கோபுரம் என்பது காலப்போக்கில் மே கோபுரமாகவும், பே கோபுரமாகவும் மருவியதாக சொல்வதும் உண்டு. மகா தீபத்தன்று மட்டுமே இவ்வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கோபுரத்தின் உயரம் 144 அடி. கோயிலின் வடக்கு திசையில் அமைந்திருப்பது வடக்கு கோபுரம் எனப்படும் அம்மணி அம்மன் கோபுரம். செங்கம் தாலுகா, சென்ன சமுத்திரம் கிராமத்தில் தோன்றியவர் அம்மணி அம்மாள் எனும் சிவ தொண்டர். அவரது முயற்சியால் உருவானது இக்கோபுரம். எனவே, அவரது பெயரே கோபுரத்துக்கும் நிலைத்தது. அதன் உயரம் 171  அடி.

தென் திசையில் அமைந்துள்ளது தெற்கு கோபுரம் எனப்படும் திருமஞ்சன கோபுரம். திருக்கோயிலுக்கு திருமஞ்சனம் கொண்டு வரும் நுழைவு வாயில் என்பதால் இப்பெயர். கோபுரத்தின் உயரம் 157 அடி. இன்றளவும், இந்த வாயில் வழியாகவே இறைவனுக்கு திருமஞ்சனம் தினமும் கொண்டு வரப்படுகிறது. அருணகிரி நாதர் வரலாற்றுடன் தொடர்புடையது கிளி கோபுரம். 33 சாசனங்கள் கொண்டது இக்கோபுரம். கி.பி.1063ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. முருகப் பெருமான் கிளி வடிவில் காட்சியளித்த கோபுரம். ராஜகோபுரத்துக்கு அடுத்திருப்பது வல்லாள மகாராஜாவால் உருவான வல்லாள கோபுரம்.

போசள மன்னன் மூன்றாம் வீர வள்ளாளனால், கி.பி 1340ம் ஆண்டு இக்கோபுரம் கட்டப்பட்டது. இக்கோபுரத்தில் வீரவள்ளாளன் திருவுருவம் பதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு, வடக்கு, தெற்கு திசைகளில் உள்ள பிரதான கோபுரங்களுக்கு அடுத்தடுத்துள்ளது மூன்று கட்டை கோபுரங்கள். இவை மூன்றும் ஒரே வடிவுடையது. ஒவ்வொன்றும் 70 அடி உயரம் கொண்டவை. இரண்டாம் பிராகாரத்தில் சுவாமி சந்நதிக்கு மேல் அமைந்திருப்பது ரிஷி கோபுரம் என அழைக்கப்படுகின்றது. ஆனாலும், இந்தக் கோபுரம் நவ கோபுரபட்டியில் இடம்பெறாது.

அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் விழாக்கோலம் என்றாலும், கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவம் தனிச்சிறப்பு மிக்கது. கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெறும் விழாவின் 10 நாட்களும், மாட வீதியில் வலம் வரும் இறைவன் திருவடியை தரிசிப்பது கோடி புண்ணியம். கொடியேற்றம் நடைபெறும் முதல் நாளன்று, பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் பவனி.

2ம் நாளன்று, வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெறும். 3ம் நாளன்று வெள்ளி ரிஷப வாகனத்திலும், 4ம் நாளன்று வெள்ளி கற்பக விருட்சத்திலும், 5ம் நாளன்று வெள்ளி பெரிய ரிஷபத்திலும், 6ம் நாளன்று வெள்ளித் தேரிலும், 7ம் நாளன்று மகா ரதத்தில் அண்ணாமலையார் அருள்பவனி நடைபெறும். எட்டாம் நாளன்று தங்கமேரு வாகனத்தில் பிச்சாண்டவரும், குதிரை வாகனத்திலும், 9ம் நாளன்று கைலாச வாகனத்தில் அண்ணாமலையார் பவனி வந்து அருள்பாலிக்கின்றார்.

தீபத்திருவிழா உற்சவத்தின் முக்கிய நிகழ்வு, 10ம் நாள் உற்சவத்தின் அதிகாலையே தொடங்குகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளான ஜோதியே எல்லாவற்றுக்கும் மூலமாகும். தீப ஜோதியாக அருள்பாலிக்கும் பரஞ்ஜோதியை தரிசிப்பதே பரணி தீப தரிசனம். ஏகன் அனேகனாக அருள்தரும் தத்துவத்தை உலகுக்கு உணர்த்த பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

கார்த்திகை திங்கள் பரணி நட்சத்திரத்தில் நடைபெறும் விழா என்பதால் பரணி தீபம் என அழைக்கப்படுகின்றது. அதிகாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் கருவறையில் கற்பூர தீபமேற்றி, உலக இயக்கத்தை நடப்பிப்பதும், உயிர்களை காப்பதும் இந்த ஜோதிதான் என சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்குவார்கள். பின்னர், அந்தச் சுடரை கொண்டு மண் மடக்கில் உள்ள நெய்தீபம் ஏற்றப்படும். ஒரு தீபம் ஏற்றப்பட்ட மடக்கில் இருந்து, ஏகனாகத் திகழும் இறைவன் அனேகனாக திகழ்வதை உணர்த்துவதற்காக நந்தி தேவர் முன்பு ஐந்து மடக்குகளில் நெய் தீபம் ஏற்றப்படும். இது பஞ்ச மூர்த்திகளை குறிக்கும்.

முதலில் ஏற்றப்பட்ட நெய் தீபத்தை கொண்டு, அம்மன் சந்நதியில் ஐந்து மடக்குகளில் நெய் விளக்கு ஏற்றப்படும். அது பஞ்ச சக்திகளை உணர்த்தும்.  அதைத் தொடர்ந்து, சிவ சக்தியிலிருந்து தான் எல்லா இயக்கமும் நடைபெறுகிறது என்பதை உணர்த்தும் வகையில், எல்லா சந்நதிகளிலும் தீபங்கள் ஏற்றப்படும். திருக்கோயில் சிவாச்சாரியார்கள் 108 நாட்கள் விரதமிருந்து பரணி தீபத்தை ஏற்றுவது காலம் காலமாக பின்பற்றப்படுகிறது. மடக்கில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை, கருவறையையொட்டி அமைந்துள்ள வைகுந்த வாயிலில் நின்றபடி சுயம்பு வடிவான அண்ணாமலையை நோக்கி சிவாச்சாரியார்கள் காண்பிக்கும்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ எனும் சப்தம் விண்ணதிரும்.

கார்த்திகை மாதத்து பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் லட்சோப லட்சம் பக்தர்கள் திரண்டு பரணி தீபத்தை தரிசனம் செய்வது தனிச்சிறப்பு. பரணி தீப தரிசனத்தன்று, அண்ணாமலையார் திருக்கோயிலில் இரவு முழுவதும் நடை திறந்திருக்கும். ஜோதிப்பிழம்பை ஏந்தி நிற்கும். அதிகாலை பரணி தீப தரிசனத்தை கண்ட பக்தர்கள், மாலை 6 மணிக்கு மலைமீது ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்ய காத்திருப்பதே பேரானந்தம். 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரை, முதல் நாளன்றே மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படுவது வழக்கம். மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் தீப கொப்பரை, வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டது.

கடந்த 1668ம் ஆண்டு, நாலரை பாகம் எடையுள்ள வெண்கல தீப கொப்பரையை, வேங்கடபதி எனும் சிவனடியார் திருக்கோயிலுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து பயன்படுத்தப்பட்ட தீப கொப்பரை சேதமானது. எனவே, கடந்த 1991ம் ஆண்டு புதியதாக 92 கிலோ செப்பு, 110 கிலோ இரும்பு சட்டங்களால் உருவான புதிய தீப கொப்பரை உருவானது. கொப்பரையின் அடிப்பாக விட்டம் 27 அங்குலம். மேல் விட்டம் 37 அங்குலம், மொத்த உயரம் 57 அங்குலம். இந்த கொப்பரையும் பழுதானதால், கடந்த 2002ம் ஆண்டு புதிய கொப்பரை உருவானது. அதுவும் நாளடைவில் சேதமானது. எனவே, கடந்த 2016ம் ஆண்டு 200 கிலோ எடையுள்ள தூய செம்பினால் உருவான புதிய தீப கொப்பரை திருக்கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த கொப்பரையில்தான் தற்போது தீபம் ஏற்றப்படுகிறது.

மகா தீபம் ஏற்றுவதற்காக, ஆயிரம் மீட்டர் பருத்தி துணியை (காட்டன்) திரியாக பயன்படுத்துகின்றனர்.  பக்தர்கள் வழங்கும் நெய் காணிக்கையை கொண்டும் தீபம் ஏற்றப்படும். அதற்காக, சுமார் 3,500 கிலோ தூய நெய் பயன்படுத்தப்படுகிறது. மலைமீது ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சிதரும். நாம் ஏற்றும் தீபங்கள் இல்லத்தின் இருள் நீக்கும். அருணை திருநகரில் அருள்பாலிக்கும் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் கிரிமலை உச்சியில் பிரகாசிக்கும் மகா தீபமோ நம் உள்ளத்தின் இருள் நீக்கும்.

தீபத்திருவிழா உருவான ஆன்மிக வரலாறு நாம் அறிந்துகொள்வது அவசியம். ஒரு சமயம், படைத்தல் கடவுள் பிரம்மாவுக்கும், காத்தல் கடவுள் திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்’ என்பதில் பிரச்னை. அதனால், படைத்தல் தொழிலும், காத்தல் தொழிலும் தடைபட்டது. உலக இயக்கம் தடுமாறியது. இறைகளுக்குள் ஏற்பட்ட இடையூறை யார் தீர்ப்பது என புரியாமல் தேவர்கள் பரிதவித்தனர். எம்பெருமான் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

எப்போதும் திருவிளையாடல்கள் மூலம் தீர்ப்பு சொல்வதில் வல்லவராயிற்றே எம்பெருமான். தமது திருவிளையாடலை திருவண்ணாமலையில் அரங்கேற்ற சித்தம் கொண்டார். நான்முகனுக்கும் திருமாலுக்கும் உண்மை விளக்கை உள்ளத்தில் ஏற்ற முயன்றார். யார் பெரியவர் எனும் எண்ணத்தில் இருந்த இருவர் முன்பும் அருள்வடிவானர் சிவபெருமான். அடி, முடி காணாத விஸ்வரூப மூர்த்தியாக ஜோதி வடிவுடன் ஓங்கி நின்றார். இது என்ன விந்தை விளையாட்டு என இருவரும் கலங்கினர்.

காரணம் வேண்டினர். தமது அடியையும், முடியையும் யார் முதலில் கண்டு திரும்புகின்றனரோ அவர்தான் இருவரில் பெரியவர் எனும் புதிருடன் திருவிளையாடலை தொடங்கினார் எம்பெருமான். அன்னப்பறவையாக பிரம்மாவும், வராக வடிவாக திருமாலும் வடிவம் கொண்டு போட்டியில் வெல்ல புறப்பட்டனர். விண்ணுயர பறந்தும் ஈசனின் முடியை காண முடியாமல் திகைத்தார் பிரம்மா. அதளபாதாளம் வரை தோண்டித்துருவியும் அடியை காணாமல் தவித்தார் திருமால்.

வேறு வழியின்றி திருமால் தமது தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பினார். பிரம்மாவுக்கு மட்டும் குறுக்குச் சிந்தனை. சூழ்ச்சியால் வெல்ல திட்டமிட்டார். உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தாழம்பூவை உதவிக்கு அழைத்தார், பிரம்மா. சிவனின் முடியை பார்த்துவிட்டு வந்ததாக ஒரே ஒரு பொய் சொல்லும்படி கேட்டார். அச்சச்சோ, பிரம்மாவுக்காக ஒரே ஒரு பொய்தானே என தாழம்பூவும் ஒப்புக்கொண்டது.

அதன்படியே சிவபெருமானிடம் பொய் சொன்னது தாழம்பூ. எல்லாம் உணர்ந்த முக்கண்ணன் முகம் சிவந்தார். பொய் சாட்சி சொன்ன தாழம்பூ இனி எனது பூஜைக்கு உதவாது என சபித்தார். சூழ்ச்சியால் வெற்றி பெற நினைத்த பிரம்மாவுக்கு, இனிமேல் பூலோகத்தில் தனியாக கோயிலோ, பூஜையோ இருக்காது என்றார். பிரம்மாவும், விஷ்ணுவும் தங்களது தவறை உணர்ந்தனர். ஆணவம் அடங்கினர். உண்மை நிலை உணர்ந்தனர். சினம் கொண்ட சிவபெருமான் சாந்த வடிவாக எழுந்தருள வேண்டும் என வேண்டினர்.

ஜோதி வடிவத்தை சாந்தமாக்கி மலைவடிவாகவும், மலைக்கு கீழ் திசையில் சுயம்புவாகவும் எழுந்தருள வேண்டும் என வேண்டினர். மனமுருகிய மகேசன் அதன்படியே மலை வடிவானார். ஜோதி வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளிய திருநாள்தான் திருக்கார்த்திகை. ஆண்டுதோறும் திருக்கார்த்திகை நாளில் ஜோதி வடிவாக காட்சி தர வேண்டும் என வேண்டினர். அதன்படிதான், மலையாக எழுந்த மகேசனை வணங்கி மகா தீபம் மலை உச்சியில் ஏற்றப்படுகிறது.

நான் எனும் அகந்தை அழித்து, அக இருளை நீக்கும் ஜோதி தரிசனமே அண்ணாமலை மீது தரிசனம் காணும் மகா தீபம். மலைமீது மகா தீபம் ஏற்றும் போது, அண்ணாமலையார் திருக்கோயிலில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளும் காட்சியை தரிசிப்பது பிறவிப் பெரும்பேறு. விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி, திருக்கோயில் 3ம் பிராகாரத்தில் உள்ள காட்சி மண்டபத்தில் அருள்தருவார்கள்.

அதைத்தொடர்ந்து, உமையாளுக்கு இடபாகம் வழங்கி, ஆண்-பெண் சமத்துவத்தை உலகுக்கு உணர்த்திய திருவிளையாடல் நாயகராம் சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரராக ஆனந்த தாண்டவத்துடன் எழுந்தருளி கொடி மரம் முன்பு காட்சி தரும் நேரத்தில் பக்தர்கள் விழியெல்லாம் ஆனந்த கண்ணீர் பெருகும். திருக்கோயில் தேவலோகமாகக் காட்சி தரும். அர்த்தநாரீஸ்வரர் திருக்கோல தரிசனம் நடைபெறும் போது, கொடி மரம் முன்பு வைக்கப்பட்டுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, திருக்கோயிலில் இருந்து தீபம் ஏற்றுவதற்கான சமிக்ஞையாக தீப்பந்தம் மலைநோக்கி காட்டியதும், மா மலையில் மகா தீப தரிசனம் பிரகாசிக்கும், அப்போது, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ எனும் பக்தி முழக்கம் விண்ணதிரும்.

- கி.வினோத் குமார்

படங்கள் : சு. திவாகர்