ஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா?தெளிவு பெறுஓம்

சாத்தியமில்லைதான். ஆனால் இந்த சொல் வழக்கின் உண்மையான பொருள் ஆயிரம் பொய்யைச் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்பது அல்ல. ஆயிரம் பேருக்கு போய்ச் சொல்லி கல்யாணத்தை நடத்த வேண்டும், அதாவது கல்யாணத்திற்கு ஆயிரம் நபர்களையாவது நேரில் சென்று அழைக்கவேண்டும் என்று சொன்னார்கள். ஆயிரம் பேருக்கு போய்ச் சொல்லி கல்யாணம் நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்ட சொற்றொடர் மருவி ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் நடத்தலாம் என்று உருமாறிவிட்டது. சொல்வழக்குகளின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டால் குழப்பம்
ஏதுமில்லை.

* இறைவனை சச்சிதானந்தம் என்று கூறுவதன் தாத்பரியம் என்ன?
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துகின்ற வார்த்தை இது. இதன் பொருளை அத்தனை எளிதாகப் புரிந்துகொள்ள இயலாது. சாதுக்கள், சந்யாசிகள் பலரும் சச்சிதானந்தம் என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இந்த வார்த்தையை பிரித்துப் பார்த்து மேலோட்டமான பொருளை அறிந்துகொள்ள முயற்சிப்போம். சத் + சித் + ஆனந்தம் என்பதே சச்சிதானந்தம். சித்தத்தில் சத்வ குணங்களைக் கொண்டிருப்பவனுக்கு ஆனந்தம் என்றும் நிரந்தரமாக இருக்கும் என்றும், சதா சிந்தனையில் இறைவனை நினைத்துக் கொண்டிருப்பவனுக்கு ஆனந்தம் என்றும் சாஸ்வதம் என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம். ‘சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே, உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே’ என்ற கவிஞரின் வரிகள் இதனை மெய்ப்பிக்கிறது. சித்தத்தில் சிவனைக் கொண்டிருப்பவர்கள் ஸதா ஆனந்தமாக இருப்பார்கள் என்பதையே சச்சிதானந்தம் என்ற வார்த்தை குறிக்கிறது.

* பாலாலயம் என்றால் என்ன? இதன் ஐதீகம் என்ன?
 - அயன்புரம் த.சத்தியநாராயணன்.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். இவற்றை முறையே ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம், புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைப்பார்கள். இந்த வகையிலான கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள்.

அதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப்பலகையின் மீது மாற்றி அந்தப்பலகையை ஆலய வளாகத்திற்குள் குடில் அமைத்து அங்கே வைத்து நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்து வருவார்கள். அதன்பிறகு மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளைச் செய்வதற்கு பணியாட்கள் உள்ளே செல்வார்கள். இவ்வாறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையின் மீதோ,

உற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகின்ற நிகழ்வினை பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று சொல்வார்கள். பாலாலயம் செய்யப்பட்டுள்ள ஆலயத்தில் மூலவர் சந்நதியில் பூஜை எதுவும் நடைபெறாது. தனியாக ஒரு குடிலில் சாந்நித்யம் பெற்ற அத்திப்பலகையையோ அல்லது உற்சவர் விக்ரகத்தையோ வைத்து நித்யப்படி பூஜைகளையும், தீபாராதனைகளையும் செய்வார்கள். கும்பாபிஷேகம் செய்யும்போது இந்த அத்திப்பலகையில் உள்ள சாந்நித்யத்தை யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்ப கலசங்களில் மாற்றுவார்கள்.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்ப கலசங்களில் உள்ள நீரை மூலவர் மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலைகள் மீண்டும் சாந்நித்யம் பெறும். பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறும். ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளின் மீதான சாந்நித்யத்தை வேறு வடிவிற்கு மாற்றும்
நிகழ்வுதான் பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம்.

* திருப்பதி பெருமாளை வியாழன் அன்று அலங்காரமில்லாமல் பார்த்தோம். ஒரு சிலர் அலங்காரமின்றி பெருமாளை தரிசித்தால் பலன் கிடையாது என்கிறார்கள். இது உண்மையா? ஒரே குழப்பமாக உள்ளது.
- வைரமுத்து பார்வதி, ராயபுரம்.

அலங்காரமின்றி பெருமாளை தரிசித்தால் பலன் கிடையாது என்பது உண்மை இல்லை. திருப்பதி பெருமாள் மட்டுமல்ல, பழனிமலை முருகனையும் ராஜ அலங்காரத்தில் தரிசித்தால் தான் நற்பலன் கிட்டும், ஆண்டிக்கோலத்தில் தரிசித்தால் தரிசிப்பவர்கள் ஆண்டியாகி விடுவார்கள் என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. திருப்பதி பெருமாளோ, பழனி மலை முருகனோ, உண்மையில் இருவரும் எல்லாவற்றையும் துறந்து தனித்துச் சென்று மலையில் அமர்ந்ததாக புராணங்கள் உரைக்கின்றன.

ஸ்தான பலமும், இறைசக்தியும் நிறைந்த அந்தப் பகுதிகளுக்குச் சென்றால் துன்பத்தில் உழலும் மனிதனின் மனம் அமைதி பெறும் என்ற நோக்கத்துடன் அந்தப் பகுதிகளில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. தெய்வங்களை முழுமையான அலங்காரத்துடன் தரிசித்தாலும், அலங்காரமின்றி தரிசித்தாலும் பக்தி சிரத்தை இருந்தால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைத்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. பெருமாளை தரிசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததே பெரும் பாக்கியம். அத்தகைய பாக்கியத்தைப் பெற்ற உங்களுக்கு இறைவனின் ஆசி நிச்சயமாகக் கிடைக்கும். குழப்பம் தேவையில்லை.

* ஒருவர் இறந்தால், அவர் இறந்ததிலிருந்து ஒன்பதாம் நாள் துக்கம் விசாரிக்கப் போகக்கூடாது என்கிறார்கள். வீட்டிலிருந்து வெளியூருக்கு பிரயாணம் போனால் புறப்பட்ட தினத்திலிருந்து ஒன்பதாம் நாள் வீட்டிற்குத் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?
- எல்.என்.சுப்ரமணியன், பெங்களூரு.

தர்மசாஸ்திரத்தில் இந்தக் கருத்துக்கு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. இது நடைமுறையில் ஒருசில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. இறந்ததிலிருந்து பத்தாம்நாள் கருமகாரியம் செய்யும் வழக்கம் இந்தச் சமூகத்தினரிடையே உண்டு. பத்தாம் நாள் காரியத்திற்கு தயார் செய்துவைக்க வேண்டிய பணிகள் அதிகமாக இருக்கும்போது, அந்தப் பணிச்சுமைக்கு இடையே துக்கம் விசாரிக்கச் சென்றால் அவர்களால் தங்கள் பணிகளிலும், துக்கம் விசாரிக்க வந்தவர் தெரிவிக்கும் அனுதாபங்களின் மீதும் முழுமையாக கவனம் கொள்ள இயலாமல் போய்விடும் என்பதால் ஒன்பதாம் நாள் துக்கம் விசாரிக்கப் போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம்.

இதுவும் ஒரு அனுமானத்தினால் சொல்லப்படுகின்ற கருத்தே தவிர இந்தக் கருத்திற்கும் சாஸ்திர ரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. அதே போல, பிரயாணம் புறப்பட்ட நாளிலிருந்து ஒன்பதாம் நாள் வீட்டிற்குத் திரும்ப வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லப்படுகின்ற கருத்திற்கும் தர்மசாஸ்திரத்தில் ஆதாரம் ஏதும் இல்லை. ஆதாரம் இன்றிச் சொல்லப்பட்டாலும் குடும்ப சம்பிரதாயம் என்ற வகையில் பெரியவர்கள் காரணமின்றி சொல்லிச் சென்றிருக்கமாட்டார்கள். எனவே குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் இதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முற்படுங்கள். சாஸ்திரத்தில் இந்தக் கருத்திற்கு எந்தவிதமான ப்ரமாணமும் இல்லை.

* மனிதன் செய்ய வேண்டிய 41 வகை சடங்குகள் இருப்பதாக இந்து மத தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளதாமே? அவை யாவை?
 - தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

‘ஸம்ஸ்காரங்கள்’ என்று இவற்றைச் சொல்வார்கள். அந்த சம்ஸ்காரங்கள் யாவை என்பது கௌதமரால் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பாதானம், பும்ஸவனம், ஸீமந்தோந்நயனம், ஜாதகர்மா, நாமகரணம், அன்னப்ராசனம், சௌளம், உபநயனம், நான்கு வேதவ்ரதங்கள், ஸமாவர்த்தனம், விவாஹம், ஐந்து மஹாயக்ஞங்கள், அஷ்டகை, பார்வணம், ஸ்ராத்தம், ஸ்ராவணீ, ஆக்ரஹாயணீ, சைத்ரீ, ஆஸ்வயுஜீ என்ற ஏழு பாகயக்ஞ ஸம்ஸ்த்தைகள், ஆதானம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாஸங்கள், ஆக்ரயணம், சாதுர்மாஸ்யங்கள், நிரூடபசுபந்தம், ஸௌத்ராமணீ என்ற ஏழு ஹவிர்யக்ஞ ஸம்ஸ்தைகள்,

 அக்னிஷ்டோமம், அத்யக்னிஷ்டோமம், உக்த்யம், ஷோடஸீ, வாஜபேயம், அதிராத்ரம், அப்தோர்யாமம் என்ற ஏழு ஸோமஸம்ஸ்தைகள் ஆகிய நாற்பது ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உபநிஷ்க்ரமணம் என்ற கர்மா சிசுவுக்கு நான்காவது மாதத்தில் செய்யப்பட வேண்டும் என்று ‘மனு’ என்பவரால் சொல்லப்பட்டுள்ளது. எனினும் இந்த சம்ஸ்காரம் பெரும்பாலானோரால் ஆதரிக்கப்படவில்லை. ஆக ‘சத்வாரிம்ஷத் ஸம்ஸ்காரா:’ அதாவது ஸம்ஸ்காரங்கள் நாற்பது என்றே தர்மசாஸ்திரம் உரைக்கிறது.

* நான் எப்பொழுதும் ஓம் சர்வசக்தி விநாயகா, ஓம் முருகா, ஓம்சக்தி, ஓம்நமசிவாய, ஓம் நமோ நாராயணாயா என்று சொல்லிக் கொண்டிருப்பேன். ஒரு நண்பர் ஏதேனும் ஒரு கடவுளை துதி செய்யுங்கள், அப்போதுதான் பலன் கிடைக்கும், எல்லோரையும் துதி செய்வதால் எந்த பலனும் கிடைக்காது என்கிறார். அவர் சொல்வது சரியா?
 - மு.வேம்புநாதன், பட்டாபிராம்.

இல்லை. தெய்வத்தின் பெயர்களைச் சொல்லிக் கொண்டிருப்பதால் நிச்சயமாக பலன் உண்டு. இறைசக்தி என்பது ஒன்றுதான். அந்த இறைசக்தியை ஒவ்வொருவர் ஒவ்வொரு உருவத்தில் காண்கிறார்கள். ஒருவர் விநாயகராகவும், மற்றொருவர் முருகனாகவும் காண்கிறார். நமசிவாய என்றாலும் நமோநாராயணா என்றாலும் இரண்டுமே பரம்பொருளைத்தான் குறிக்கிறது.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பெயர்கள் அனைத்தும் இறைவனின் திருநாமங்களே. நீங்கள் வெவ்வேறு தெய்வத்தை அழைக்கவில்லை. இறைவன் என்பது ஒன்றுதான். இந்த எண்ணத்தோடு எந்தப் பெயரைச் சொல்லி துதித்தாலும் அதற்கு நிச்சயமாகப் பலன் கிடைக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்துவரும் அஜாமிலன் என்பவர் யார் என்ற கேள்விக்கான விடையையும் படித்தால் உங்கள் சந்தேகத்திலிருந்து முற்றிலுமாக வெளிவர இயலும்.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா