கீதை உரைத்த கிரிதரன்!



கள்ளமில் மனதில் பொங்கும்
வெள்ளமாய் இன்பம்தரும் கண்ணன்!
உள்ளத்தை சுத்தமாக்கி பக்தி
துளசிவைத்து கீதை பாடு!

கடலளவு பொருளும் புகழும்
கார்வண்ணன் கருணை மழை!
கையளவு மனதின் தியானம்
மைவிழியான் கீதை! கீதை!

மணல்துகளில் உலகம் படைப்பான்
மணல்துகளாய் உலகை நினைப்பான்
மனதை முற்றுமடக்கிய ஆத்மயோகி
மனதில் சுடர்விடும் பரஞ்சோதி!

உலகின் உயிராய் விரிந்து
உயிர்கள் உயிராய் நிலைத்து
உருமாறி, சுவைமாறி, நிறம்மாறி
உயிரோடு ஒடுங்கும் ஓம்காரம்!

முன்னேறி செல்பவர்க்கு
வழியை விடுஉன்
முயற்சிக்கு உரிய காலம்
வரும் கண்ணனை நம்பு!
அதுவரை அவன் நினைவில்
நீ உறங்கு அவன் குழலிசையில்
பொழுது விடியும் கடமை தொடங்கு!

வாலிபம் என்பது சுகத்தின்
ஒரு வழிப்பாதை!
வயோதிகம் என்பது
கடந்து வந்த பாதையை
கணக்கிடும் மேதை!
ஞானம் என்பது
இருக்கும் போதே
இறந்தவர் போல
வாழப்பழகுதல் என
பாமரர் அறியும் படி
கனிவாய் முத்துதிர்த்தான்
கீதை மொழி கிரிதரன்!

எத்திக்கும் தித்திக்கும்
புத்திதரும் கணபதியிடம்
சுதர்சன சக்கரம் பெறவேண்டி
தோர்பி கர்ணம் போட்டாய்!
தமிழ்மகன் முருகனை
மருமகனாய் ஏற்றாய்!
மூலப்பொருள் கணநாதன்
மடியில் குழந்தையாய் தவழ்ந்தாய்!
விநாயகன், முருகன், உமையை
வழிபட்டு வாணாசுரனை வென்றாய்!

காரண, காரியமாய் தோன்றி
கண்ணில் கலந்திட்ட கண்ணா!
இதயம், இமைகள் துடிக்கும்வரை
மனதிலுன் கருத்தழியாது மன்னா!

- விஷ்ணுதாசன்