மிகப் பெரிய திருப்புமுனையைக் காண்பீர்கள்!என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* வெளிநாட்டில் வேலை செய்து வரும் என் மகளுக்கு தற்போது 29 வயதாகிறது. 2014ம் ஆண்டு முதல் பல இடங்களில் பதிவு செய்திருந்தும் இதுவரை வரன் சரியாக அமையவில்லை. இவளுக்கு எப்போது திருமணம் அமையும்? நல்ல பண்பும், படிப்பும் உள்ள வரன் அமைய நாங்கள் என்ன செய்யவேண்டும்?
- பூபதி, பெரம்பூர்.

வசதி வாய்ப்பு, அந்தஸ்து ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தராமல் நல்ல பண்பும், படிப்பும் உள்ள வரனாகத் தேடும் உங்களின் எண்ணத்திற்கு ஏற்றார்போல் வெகுவிரைவில் மணமகன் அமைவார். மிருகசீரிஷம் நக்ஷத்ரம், ரிஷப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளுக்கு தற்போது குரு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. தசாநாதனான குரு மற்றும் புக்திநாதனான புதன் இருவரும் இணைந்து ஜென்ம லக்னத்திலேயே அமர்ந்திருக்கிறார்கள். ஏழாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் குடும்ப ஸ்தானம் ஆகிய இரண்டில் அமர்ந்திருப்பதும், ஏழாம் வீடு சுத்தமாக இருப்பதும், பலமான நிலையே.

சனியின் நேரடிப் பார்வை செவ்வாயின் மீது விழுவதால் செவ்வாய் தோஷம் இல்லை. உங்கள் மகளைப் போலவே வெளிநாட்டில் வேலை செய்யும் மாப்பிள்ளையாகவே நீங்கள் பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை செய்தாலும், மாப்பிள்ளை சென்னையைச் சேர்ந்தவராகவே இருப்பார். வரும் அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ள குருபெயர்ச்சி, திருமணத்திற்கு சாதகமான நேரம், சூழலை உருவாக்கித் தருகிறது. திருமணத்தடை நீங்க பெற்றோராகிய நீங்களே பரிகாரம் செய்யலாம்.

செவ்வாயின்கிழமை தோறும் ராகுகாலத்தில் அருகில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று நான்கு அகல் விளக்குகளை ஏற்றி வைத்து, முருகப்பெருமானுக்கு அரளிப்பூ மாலை சாத்தி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வள்ளிமணாளனின் திருவருளால் 17.06.2019ற்குள் உங்கள் மகளுக்குத் திருமணம் நடந்துவிடும். சாயிநாதனின் பக்தர்களாகிய உங்களுக்கு ஸத்குருவின் ஆசி நிறைந்திருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

* நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். 43 வயது. தந்தையின் வியாபார தோல்வி, உடல்நிலை, இடமாற்றம் ஆகிய காரணங்களால் எனது இளவயது வாழ்க்கை அத்தனை சிறப்பாக அமையவில்லை. பாட்டி வீட்டில் தங்கி படித்த எனக்கு 2004ல் வேலை கிடைத்தது. இடையில் ஆறு வருடங்கள் கம்பெனி மூலமாக வெளிநாட்டிலும் வேலை பார்த்துள்ளேன். 2009ல் சாலை விபத்தில் சிக்கி மீண்டு வந்தேன். 2017ல் வீட்டிலேயே வழுக்கி விழுந்து வலது காலில் அடிபட்டதில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். தனிமையில் வசிக்கும் எனக்கு மணவாழ்வு அமையுமா? என் உடல்நிலை முழுவதும் குணமாகுமா? மீண்டும் வெளிநாட்டு உத்யோகத்திற்குச் செல்ல இயலுமா?
- சம்பந்தன் பழனி, பெங்களூரு.

நாற்பத்தி மூன்றாவது வயதில் தனிமையை உணர்ந்து திருமணம் நடக்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். வாக்கரின் துணையுடன் நடக்கும் இப்போதுதான், வாழ்க்கையில் துணை தேவை என்பது புரியத் துவங்கியுள்ளது. தனிமையின் கொடுமையை உணரத் துவங்கியுள்ளீர்கள். திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கிறீர்கள். உங்கள் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னத்திலேயே சனி அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு ஆயுள் மட்டுமல்ல, தன்னம்பிக்கையும் அதிகமாக உள்ளதால் வெகு விரைவில் உடல்நிலை சீரடையும்.

ஜாதகப்படி திருமணபந்த வாய்ப்பு உள்ளதாலும், தற்போது நேரமும் சாதகமாக உள்ளதாலும், முயற்சித்தால் திருமணம் நடந்துவிடும். தனிமையில் வாழ்வதால், திருமண முயற்சி மேற்கொள்ள உடன் யாருமில்லையே என்று மனவருத்தம் கொள்ளத்தேவையில்லை. நண்பர்கள் வட்டத்தில் சொல்லி வையுங்கள். திருமண பந்தத்தைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சனி என்பதாலும், அவர் தனது சுயசாரத்தில் ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதாலும், உங்களைவிட வசதி, அந்தஸ்தில் குறைவானவராகப் பாருங்கள். ஜாதிமத வித்தியாசத்தைப் பார்க்காதீர்கள்.

அழகில் குறைந்திருந்தாலும் உங்களைத் தன் உயிராக மதிக்கக்கூடிய பெண் மனைவியாக அமைவார். உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய் 12ல் அமர்ந்திருப்பதாலும், 10ம் வீட்டில் கேது இணைந்திருப்பதாலும், தொலைதூர உத்யோகத்தை உங்கள் ஜாதகம் உணர்த்துகிறது. அந்நிய தேசப் பணிக்கு நீங்கள் முயற்சிக்கலாம்; மீண்டும் வெளிநாட்டு உத்யோகத்திற்குச் செல்ல முடியும். உங்கள் வருங்கால வாழ்க்கைத்துணைவியையும் உடன் அழைத்துச் செல்வீர்கள். நேரம் சாதகமாக உள்ளதால் உடல்நிலையும் சீரடைந்துவிடும். வாக்கரின் துணை தேவைப்படாது.

எப்போதும் எளிமையாக வாழ்ந்து வாருங்கள். நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் எளிமையை கடைபிடியுங்கள். யாருக்காகவும், எதற்காகவும் உங்கள் அடிப்படை குணத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். நேரம் கிடைக்கும்போது திருமலைதிருப்பதிக்குச் சென்று ஏழுமலையானை தரிசித்து வாருங்கள். உங்கள் திருமணத்தையும் திருமலையில் நடத்திக் கொள்வதாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து வருவதை வாழ்நாள் வழக்கமாகக் கொள்ளுங்கள். திருவேங்கடமுடையானின் திருவருளால் திருமண பந்தத்திற்குள் நீங்கள் நுழையும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. 27.07.2019ற்குள் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையைக் காண உள்ளீர்கள்.

* எனது மகனுக்கு நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருகிறது. லக்னத்தில் ராகு இருப்பது கடுமையான தோஷத்தினைத் தருமா? இவருக்கு சொந்த வீடு வாங்கும் அமைப்பு உள்ளதா? இவருடைய திருமணம் எப்போது நடைபெறும்?
- சாவித்திரி, சென்னை43.

நாற்பத்தியேழு வயது மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும் என்று கேட்டிருக்கிறீர்கள். உத்திரட்டாதி நக்ஷத்ரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வைச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேதுவும், ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரன் மூன்றில் அமர்ந்திருப்பதும் கடுமையான களத்ர தோஷத்தைத் தந்திருக்கிறது. மேலும் ஜென்ம லக்னத்தில் சந்திரனின் சாரம் பெற்று ராகு அமர்ந்திருப்பது ஸ்திரமற்ற மனநிலையை இவருக்குத் தந்திருக்கிறது. அவருக்குத் தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது.

புதன் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் இந்த நேரத்தின் துணை கொண்டு திருமணத்திற்கு முயற்சி செய்யுங்கள். தானாக மணமகள் வந்து அமைவார் என்று வெறுமனே உட்கார்ந்திருந்தால் மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ள குருபெயர்ச்சி திருமண யோகத்தைத் தரும். இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இளம் வயதில் கணவனை இழந்து ஆதரவற்ற நிலையில் இருக்கும் விதவைப் பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வையுங்கள். அவரது வாழ்வு நல்லபடியாக அமையும். நான்காம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் செவ்வாய், சொந்த வீடு வாங்கும் அம்சத்தினைத் தந்திருக்கிறார். முதலில் திருமணம், அதனைத் தொடர்ந்து சொந்த வீட்டிற்கான முயற்சியில் இறங்கலாம். தாமதிக்காமல் செயல்படுங்கள். விரைவில் நிம்மதி அடைவீர்கள்.

* எனது மகளுக்கு மருத்துவம் படிக்க ஆசை. அவளது விருப்பம் நிறைவேறுமா?
- பாலா, ஆழ்வார்குறிச்சி.

மகளின் ஆசையை நிறைவேற்றி வைக்கக் காத்திருக்கும் உங்களைப் போன்ற பெற்றோர்களால் பெண்கள் நிச்சயமாக எல்லாத் துறைகளிலும் சாதிப்பார்கள். மிருகசீரிஷம் நட்சத்திரம், மிதுன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. அவருடைய ஜாதகத்தில் கல்வியைப் பற்றிச் சொல்லும் நான்காம் வீட்டில், ஜென்ம லக்ன அதிபதி குருவுடன் சந்திரனும், ராகுவும் இணைந்திருக்கிறார்கள். அதோடு வித்யாகாரகன் புதனும் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கிறார். ஜீவன ஸ்தானத்தில் இணைந்திருக்கும் செவ்வாயும், கேதுவும் வித்யா ஸ்தானத்தின் மீது தங்கள் பார்வையை செலுத்தி உங்கள் மகளின் விருப்பம் நிறைவேற துணையிருப்பார்கள்.

17.01.2019 முதல் 11.12.2019 வரை ராகு தசையில் சூரிய புக்தி நடைபெற உள்ளது. சூரிய பகவான் மருத்துவம் படிக்க துணை செய்வார் என்பதால் உங்கள் மகளை முழு முயற்சியுடன் படித்துவரச் சொல்லுங்கள். நீட் தேர்விற்கான பயிற்சியும் மேற்கொள்ளலாம். தேர்வு நேரத்தில் கிரஹ நிலை துணையிருப்பதால் முழு முயற்சியுடன் படித்து தேர்வெழுத அறிவுறுத்துங்கள். பெற்றோராகிய நீங்களும் அவருக்கு பக்கபலமாக துணைநில்லுங்கள்.

மருத்துவத்துறையில் உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்பு உங்கள் மகளின் ஜாதகத்தில் பிரகாசமாக உள்ளது. மருந்தியல் சார்ந்த படிப்பு அவருடைய எதிர்காலத்திற்குத் துணை நிற்கும் என்பதையே அவருடைய ஜாதகம் தெளிவாக உரைக்கிறது. தினமும் காலையில் சூரியஒளி படும் இடத்தில் அமர்ந்து பாடங்களைப் படித்துவர மனப்பாடத் திறன் கூடும். தேர்வின்போது துல்லியமாக விடையளிக்கும் ஆற்றல் பெறுவார்.

* எனக்கு (வயது 29) எப்போது அரசு பணி கிடைக்கும், அல்லது சுயதொழிலா? என்ன தொழில் செய்யலாம்? எனக்கு களத்திர தோஷம் உள்ளதா? திருமணத்திற்கான காலம் எப்போது? என் அக்கா மகளின் ஜாதகத்தோடு என் ஜாதகம் பொருந்தி வருமா?
- ரமேஷ், பண்ருட்டி.

உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் உத்யோகத்தில் ஸ்திரத்தன்மை காண இயலாமல் தடுமாறி வருகிறீர்கள். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகப்படி தற்போது குரு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அரசுத்துறையாக இருந்தாலும், தனியார் உத்யோகமாக இருந்தாலும், சுயதொழிலாக இருந்தாலும், உள்ளூரில் உங்களால் பரிணமிக்க இயலாது என்பதை உங்களது ஜாதகம் உணர்த்துகிறது. தொழில் முறையில் சிறப்பாக ஒளிவீச, பிறந்த ஊரை விட்டு இடம் பெயர வேண்டியிருக்கும்.

வெளிநாட்டுத் தொடர்புடைய உத்யோகம் உங்களுக்கு கைகொடுக்கும். விருப்பம் இருந்தால் சிங்கப்பூர் முதலான கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று பணியாற்றலாம். அல்லது வெளிநாட்டுப் பொருட்களை விற்கும் அமேசான், ஃபிளிப்கார்ட் முதலான நிறுவனங்களின் கிளையைத் துவக்கி (ஃப்ரான்ச்சைஸ்) சுயதொழில் செய்யலாம். அரசுப்பணிக்கான வாய்ப்பு சற்று குறைவாக உள்ளது. ஏழாம் வீட்டில் குருவும் செவ்வாயும் இணைந்திருக்கிறார்கள். மேலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரனும், ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி குருவும் பரிவர்த்தனை யோகத்தில் அமர்ந்திருப்பதால் களத்ர தோஷம் என்று எதுவும் இல்லை.

உங்கள் மனதிற்கு பிடித்தமான வகையில் பெண் அமைவார். தற்போது நடந்து வரும் நேரமே திருமண யோகத்தினைத் தரும் என்பதால் அதற்கான வேலைகளைத் துவக்கலாம். அரசு உத்யோகத்திற்காகக் காத்திருக்காமல் ஏதேனும் ஒரு தொழிலை முதலில் துவக்குங்கள். திருமணத்திற்குப் பின் உங்களுக்கான தொழில் நிரந்தரமாக அமைந்துவிடும். உங்கள் தமக்கையின் மகளும் திருவோண நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை. அவருடைய ஜாதகப்படி தற்போது திருமண யோகமும் கூடி வரவில்லை.

அக்கா மகளுக்காகக் காத்திருக்காமல், உங்கள் மனதிற்கு பிடித்த வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம். ஞாயிற்றுக்கிழமை தோறும் திருவதிகை ரங்கநாதப் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாள் சந்நதியை நான்கு முறை வலம் வந்து வணங்குங்கள். தொழில் நல்லபடியாக அமைந்ததும் ஞாயிற்றுக்கிழமையில் ரங்கநாதப் பெருமாள் ஆலயத்தில் அன்னதானம் செய்வதாக பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள். பெருமாளின் திருவருளும், உங்களின் முயற்சியும் ஒன்றிணைய வெகுவிரைவில் வெற்றிப்பயணத்தைத் துவக்குவீர்கள்.

* நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடுமையான ஆஸ்துமாவினால் அவதிப்படுகிறேன். என் வயது 63. இது எப்போது குணமாகும்? எனது ஆயுளை பாதிக்குமா? எந்த கிரகத்தினுடைய பாதிப்பினால் ஆஸ்துமா உண்டாகிறது? இதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா?
- சிவக்குமார், சென்னை.

ஜென்ம லக்னமும், லக்னாதிபதியும் உறுதியாக இருந்துவிட்டால் எந்த நோயையும் எதிர்கொள்ள இயலும். உங்களுடைய ஜாதகமும் இந்த விதியை மெய்ப்பிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. பாம்பு பஞ்சாங்கத்தின் துணை கொண்டு உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில் மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்துள்ளீர்கள் என்பது தெளிவாகிறது. ஜென்ம லக்னத்தில் உச்ச பலம் பெற்ற ராகுவும், லக்னாதிபதியான செவ்வாய், பத்தாம் வீட்டில், சூரியன் மற்றும் சந்திரனுடன் இணைந்திருப்பதும் பலமான நிலையே. ராகுவினால் எந்த அளவிற்கு உங்கள் லக்னம் பலம் பெறுகிறதோ அதே அளவிற்கு எதிர்மறையான பலனையும் அனுபவிக்க நேரிடும்.

நுரையீரல் முதலான உறுப்புகளைப் பற்றிச் சொல்லும் மூன்றாம் வீட்டிற்கு அதிபதி சனி, உச்ச பலம் பெற்றிருந்தாலும் 12ம் வீட்டில் ராகுவின் சாரம் பெற்று அமர்ந்திருப்பதால் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள். அதுவும் ராகு தசையில், சனி புக்தியின் காலம் நடந்த நேரத்தில் உங்களை ஆஸ்துமா நோய் கடுமையாக தாக்கியுள்ளது என்பது தெளிவாகப் புரிகிறது. எனினும் பலம் வாய்ந்த லக்னமும், லக்னத்தின் மீது உச்சம் பெற்ற குருவின் பார்வையும் விழுவதால் தீர்க்காயுள் உண்டு.

முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இந்த நோய் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிடும். உங்களுடைய உடல்நிலையும் அதற்கு முழுமையாக ஒத்துழைக்கும். தற்போது நடந்து வரும் ராகு தசையில் சுக்ர புக்தி காலம் உங்கள் உடல்நிலை சீரடைய ஒத்துழைக்கிறது. தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். சிம்ம ராசிக்கே உரிய கம்பீரத்துடனும், மன உறுதியுடனும் செயல்பட்டு வாருங்கள். சனிக்கிழமை தோறும் நரசிம்மரை வழிபடுங்கள். மனதில் நம்பிக்கை கூடுவதோடு உடல்நலத்திலும் முன்னேற்றம் காண்பீர்கள்.

- சுபஸ்ரீ சங்கரன்