மங்கலம் அருள்வாள் மெய்ஞான மங்கலை!அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 27

கடினமாக பெற வேண்டிய அமுதத்தை, உமையை தரிசனம் செய்வதனாலேயே அமுதம் போன்ற பயனை பெறமுடியும் என்கிறார் அபிராமி பட்டர். பாற்க்கடலிலிருந்து தோன்றிய சந்திரனும் அமுதத்தன்மை பொருந்தியவன். அமுதத்திலிருந்து தோன்றிய அவன் அமுதமாகவே வடிவை பெற்றிருக்கிறான் அமிர்தகிரணன் என்பது சந்திரனின் பெயர். உமையம்மை அந்த சந்திரனின் நடுவில் திகழ்பவளே என்பதை ‘சந்திர மண்டல மத்யஸ்தா’ என்ற லலிதா ஸஹஸ்ரநாமம் வர்ணிக்கிறது. சந்திரன், அமுதத்தைத் தனது கிரணங்களாக கொண்டவன்.

பதினைந்து நாட்கள் வளர்ந்தும் (சுக்லபக்ஷம்), பதினைந்து நாட்கள் தேய்ந்தும் (கிருஷ்ணபக்ஷம்) காணப்படுபவன். குறைவதும், கூடுவதுமான நாட்களை நீக்கி கிரணங்கள் நிறைந்து பூரணமாக காணப்படும் பெளர்ணமியை சிறப்பிப்பதற்காகவே ‘நிறைகின்ற வெண் திங்களோ’ என்றார்.‘கஞ்சமோ’ என்ற சொல்லால், உமையம்மையை மூன்று சக்தியாக குறிப்பிடுகிறார். ‘மலர் கமலை’  மகாலஷ்மி; வெண் தாமரை  கலைமகள். வெண்தாமரை, செந்தாமரை என்று பிரித்துச் சொல்லாமல், தாமரையோ என்று பொதுவாக சொல்வதால் இவ்விருவருடன் கூட, மலைமகளையும் அது குறிக்கிறது என்று கொள்ளலாம்.

உமையம்மையே இம்மூவுருவாகவும் இருப்பதால், ‘கஞ்சமோ’ என்றார். இம்மூவருமே தாமரையை ஆசனமாக கொண்டவர்கள் என்பதால் பொதுவில் தாமரை என்றே குறிப்பிட்டனர் ஸ்ரீவித்யா உபாசகர்கள். ஸ்ரீசக்கரத்தை தாமரையாக குறிப்பிடுவது மரபு. ஸ்ரீசக்கரமானது எட்டு இதழ் தாமரை, பதினாறு இதழ் தாமரை, ஓர் இதழ் தாமரை. இந்த மூன்றையும் கொண்டு அமைந்தது. இது வடிவ உவமை. மேலும், ‘எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே’ (பாடல்  72) என்று உமையம்மையை பார்வதியாக மட்டும் குறிக்கிறார். உமையம்மையின் தாமரையை ஒத்த உருவம், வடிவம், நிறம் ஆகிய மூன்றினாலும் குறிப்பிடலாம் என்பதற்காகவே‘கஞ்சமோ’ என்கிறார். இதையே,

அருணாம் புயத்தும், என் சித்தாம் புயத்தும், அமர்ந்திருக்கும்,
தருணாம் புயமுலைத் தையல்நல்லாய், தகைசேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும், கராம் புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே (பாடல் 58)
 
என்று தாமரை மொட்டு, தாமரை இதழ், அதன் மென்மை, அதன் வாசனை, அதன் குளிர்ச்சி, இதழ்களின் எண்ணிக்கை இவை அத்தனையும் உமையம்மையோடு ஒத்த தன்மையுடையதால் ‘கஞ்சமோ’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.‘‘என் தன் நெஞ்சகமோ’’ ‘என் தன்’ என்று, உமையம்மை தன் இதயத்தில் உறைவதை தான் அறிவதற்கு காரணமான இறையன்பாகிற ஞானத்தை அபிராமி பட்டர் குறிப்பிடுகிறார். ‘நெஞ்சு’ என்று நினைக்கின்ற தொழிலைச் செய்யும் மனதைக் குறித்தார். ‘மனதில் நான் எண்ணித் தொழுகின்ற மந்திரமாக நீ இருக்கிறாய்’ என்று மந்திரமாக குறிப்பிடுகிறார்.

‘என் தன் நெஞ்சகமோ’ என்றதால், அபிராமி அம்மையின் மந்திரத்தை தன் நெஞ்சில் எப்பொழுதும் உச்சரிப்பதால், அம்மை தன் நெஞ்சத்தில் இருப்பது பட்டருக்கு புரிந்தது. இதனால் தான் சாத்திர பயனை அடைவதற்கு உதவும் சாதனத்தை அறிவித்து அனைவரும் நலம்பெற உரைத்தார். உமையம்மை நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன் இவற்றோடு ஆன்மாவிலும் விளங்கி தோன்றுகிறாள். அந்த ஆன்மா என்பது மனதில் ஒன்றுமில்லாத நிலையில் இறைவியையும் குறிக்கும். ‘எண்ணில் ஒன்றுமில்லா வெளியே’ (பாடல் 16) என்பதிலிருந்து அறியலாம்.

சந்திரனிலிருந்து மனது தோன்றுகிறது என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன ‘சந்திமா மனசோ ஜாதஹ’. மனதோ, ஆன்மாவை போல் அழிவில்லாதது, அடுத்த பிறவிக்கும் பாவ, புண்ணியத்தை கொண்டு ஆன்மாவிடம் சேர்ப்பது, குறிப்பிட்ட காலத்தில் தோற்றுவித்து புண்ணியத்தையோ, பாவத்தையோ ஆன்மாவிற்கு அனுபவமாக ஊட்டவல்லது மனது என்கிறது சாக்த சித்தாந்தம். அதனால்தான் உடல் அழிந்த பின்பு எஞ்சியிருக்கும் பாவ புண்ணிய பயனாய், விதையாய் ஒடுங்கியிருக்கும் நிலைகொண்ட மனதிற்கு உன்மணி என்று பெயர்.

அதையே உமையம்மையின் பெயராய் சாத்திரங்கள் ‘மனோன்மணி’ என்று குறிப்பிடுகின்றன. சித்தர்கள் இந்த சக்தியையே ‘வாலை’ என்று குறிப்பிடுகின்றனர். இவள்தான் ஆன்மாக்களுக்கு பாவ, புண்ணியத்தை உடலின் வழி நுகர்வித்து பக்குவப்படுத்தி, இறையடி சேர்க்க உதவுகிற சக்தியாக திகழ்கிறாள். இவளருளால் கடந்த பிறவியின் ஞாபகத்தையும் நாம் பெற முடியும். அப்படி அறிவதால் மரணத்தையும் வெல்ல முடியும். மரணத்தை வெல்வதற்கான அருள் வடிவாய் திகழும் ஆன்மாவோடு இணைந்திருக்கும் இந்த தன்மையையே ‘என் தன் நெஞ்சகமோ’ என்கிறார்.

குறிப்பாக ‘அகமோ’ என்ற வார்த்தையால் அவரவர் செய்த பாவத்தை குறிப்பிடுகிறார். அதன் வழி மறுபிறப்பு என்பதால் அகம் என்ற வார்த்தைக்கு பாவம் என்பது பொருள்.‘‘மறைகின்ற வாரிதி யோ’’ மறைகின்றதும், தோன்றுகின்றதுமான செயல் சூரியனுடையது. ‘வாரிதி’ என்றால் கடல், பவளம் என்று பொருள். கடலில் உதிக்கின்ற சூரியன், கடலில் மறைகின்ற சூரியன், நடுவில் பவளம் போல் சிவந்த சூரியன், இந்த மூன்றையும் சூரியன் என்ற சொல்லை குறிப்பிடாமல் அதன் செயலையும், குணத்தையும் குறிப்பிட்டு அதனால் வரும் பயனை நமக்கு அறிவுறுத்த முற்படுகிறார்.

இதை இலக்கணத்தில் அவாய் நிலை எனலாம். தான் முழுவதுமாய் ஒரு பொருளை உணர்த்துவதற்கு ஒரு சொல்லானது பிரிதொரு சொல்லை சார வேண்டியது அவசியமாகும்போது செய்யுளில் மட்டும் அழகு கருதி, பொருள் நுட்பம் கருதி, அதை ஏற்கிறது இலக்கணம். இதை ‘அவாய் நிலை’ என்பர். அந்த வகையில் காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி என்ற மூன்று சக்திகள் சூரியனில் காலை, மதியம், மாலை நேரத்தில் தோன்றி தன் உணர்வை (ஆன்ம உணர்வை) தோன்ற செய்தும், சரீர உணர்வை அழித்தும், சிவ உணர்வை காத்தும் அருள்புரிகின்ற சக்தியாகையால் ‘மறைகின்ற வாரிதி’ என்ற வார்த்தையால் அதில் எழுந்தருளி இருக்கின்ற உமையம்மையை,

சிவ உணர்வை காப்பவளாகிய சரஸ்வதியை, சிறப்பாகத் தான் உணரவும், பிறருக்கு உணர்த்தவும் வேண்டி தனித்து இவ்வார்த்தை மூலம் குறிப்பிடுகிறார். மேலும் கிழக்கில் கடலில் தோன்றுவது போலவும், மேற்கில் கடலில் மறைவது போலவும், உச்சியில் செம்மையாய் சுடுவது போலவும் தோன்றுவதால் உலகியல் கருதி ‘மறைகின்ற வாரிதியோ’ என்று குறிப்பிடுகிறார். ‘வாரிதி’ என்ற சொல்லிற்கு கடல் என்று பொருள். பாற்கடலில் தோன்றியது அமுதம். அமிர்தகடேஸ்வரராக சிவபெருமான் விளங்குவதால் உமையம்மை அமிர்தமாக தோன்றுகின்றாள்.

பாற்கடலில் மறைந்திருக்கின்ற அமிர்தத்தை ‘மறைகின்ற’ என்ற வார்த்தையை பொருள் கருதி கால வழுவாகவும், சொல் கருதி இடைக்குறையாகவும் ஏற்கலாம். இந்திரனின் செல்வ வடிவமாக திகழ்பவள் உமையம்மை. அதனை அறியாது இந்திரன் ஒரு சமயம் உமையம்மையின் பிரசாதத்தை அவமதித்தார். அதனால் இந்திரனின் செல்வம் பாற்கடலில் அழிய சாபமிட்டார் துர்வாசர் என்றும், மீண்டும் ஞானம் வந்து உமையம்மையை மதித்து அதை இந்திரன் பெற்றான் என்கிறது தல புராணம். அவ்வாறு செல்வம் பாற்கடலுள் மறைந்ததை ‘மறைகின்ற வாரிதியோ’ என்று அபிராமிபட்டர் குறிப்பிடுகிறார். இதையே
‘விண்ணளிக்கும் செல்வமும்’ (பாடல் 15)

என்றும் உரைக்கிறார்.‘‘பூரணாசல மங்கலையே’’ பூரணாசலம் என்பது மலைகளுக்கு உரிய இலக்கணம் முழுவதும் அமைந்த தன்மையை உடையதால் இது இமயமலையை குறித்தது. தேவர்கள், ரிஷிகள், கணங்கள் யாவரும் துதித்து தன் தேவையை பூரணமாக்கிக் கொள்ள (நிறைவு செய்து கொள்ள) அனைவரும் நாடித், துதித்து பயன் பெறுவதால் பூரணாசலம் என்றார். பூரணம்  நிறைவு, அசலம்  மலை, சதாசர்வ காலமும் அசைந்து கொண்டேயிருக்கின்ற மனது ஓர் இடத்தில் அசையாது நிற்கும்படி தவம் செய்பவர் வணங்குவதால் ‘அசலம்’ என்றார்.   

சிவபக்தனான ராவணன் அசைக்க முயன்று அது அசையாதபடி இறையருள் நிறுத்தியதால் அசலம் என்றார். அப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்ட மலையரசனுக்கு மகளாக தோன்றி அக்குலம் விளங்க மங்களத்தை எப்பொழுதும் நிலைக்க செய்ததால், தாய் வீடான இமயமலையைச் செழிக்க செய்ததால் உமையம்மையை ‘பூரணாசல மங்கலையே’ என்று குறிப்பிட்டார். பார்வதி, பர்வதவர்த்தினி என்று உமையம்மை மலைக்குலம் விளங்கச் செய்தவள் என்ற பொருள் தருவதிலிருந்து இதை மேலும் விளங்கச் செய்கிறாள்.

அபிராமி அந்தாதியில் அடுத்த பாடலை இனி பார்க்கலாம்:
மங்கலை, செங்கலை, செம்முலை யாள் மலையாள் வருணச்
    சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள்
    பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள் பசும்பெண் கொடியே (பாடல் 21)

வடிவமே இல்லாத இறைவியின் வடிவமானது வேண்டுபவர், வேண்டுவன தரத்தக்க வடிவமாகவே, தன் வடிவத்தை தானே படைத்துக் கொள்கிறாள். கல்வியை கேட்பவருக்கு கையில் புத்தகத்துடனும், செல்வத்தை விரும்புபவருக்கு கையில் பொற்காசுகளுடனும், வீரத்தை விரும்புபவருக்கு கையில் வாளுடனும் காட்சி தந்து, அவற்றை வழங்கவும் செய்கிறாள். அதுபோல் மனிதர், தேவர், முனிவர் அனைவருக்கும் தேவையானதை அளிக்க வெவ்வேறு வடிவத்தை, தான் ஏற்றாள். மனிதர்களுக்கு விருப்பங்களும், தேவைகளும், அதிகமாகவும், வெவ்வேறாகவும் இருப்பதைப் பொறுத்து உமையம்மையின் வடிவம் இருப்பதை அறியலாம்.

அவ்வகையில் ‘மங்கலை’ என்று தொடங்கும் இப்பாடலானது. அன்னையின் அருளைப் பெற்று, பிறந்தது முதல் இறப்பதுவரை மனிதனுக்குத் தேவையானவற்றைத் தரத்தக்க அனைத்து நிகழ்வுகளையும், காலம், இடம், தேவை சார்ந்தும் தருவதற்காக எடுத்த முக்கியமான பதினைந்து வடிவங்களாகும். இனி பாடலுக்குள் நுழைவோம்.‘‘மங்கலை’’ அனைத்து சிவன் கோயில்களில் ஆகமப்படி அமைந்த, ‘உடனாய’ என்று கூறப்படும் சிவனோடு இணைந்த சக்தியின் திருவுருவம், மங்கலை எனப்படும். ஆகமம் இவளை மனோன்மணி என்று குறிப்பிடுகிறது.

இந்த வகையில் மீனாம்பிகை, அபிராமி இவர்களுக்கு மங்கலை என்று பெயர். இவள் எப்போதும் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருள்வாள். நான்கு திருக்கரங்களை கொண்டவள். ஆடிப்பூர அம்மன், சுக்கிரவார அம்மன் என்று வெவ்வேறு பெயர்களும் உண்டு. லலிதா ஸஹஸ்ரநாமம் இவளை ‘சிவாயை’ என்று அழைக்கிறது. அதற்கு ‘மங்கலை’ என்று பொருள்.‘‘செங்கல செம்முலையாள்’’ செங்கலை என்றும் வணங்கப்படுபவள் சிவன் கோயில்களில் உள்ள இலக்குமி தேவியை குறிக்கும். சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கிற மகாலஷ்மியை, எல்லா இடங்களிலும் யானை கலச நீர் கொண்டு நீராட்டுவதாக அமைந்திருக்கும்.

இவளை மகாலஷ்மி என்று அழைப்பர். இவளே ‘செங்கலசம் முலையாள்’ எனப்பட்டார்.‘‘மலையாள்’’ சிவன் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறும்போது சோமாஸ்கந்தர் என்ற உலாத் திருமேனியில் சிவன் மற்றும் ஸ்கந்தருடன் எழுந்தருளியிருப்பவள், என்றுமே அமர்ந்த நிலையில் காணப்படும் உமா என்று சொல்லப்படுபவள், எதுவும் வைத்துக் கொள்ளாத இருகைகளைக் கொண்ட, உமையம்மை வடிவத்தையே ‘மலையாள்’ என்கின்றனர்.‘‘வருணச் செங்கலை செங்கை பஞ்சமூர்த்தி என்று அழைக்கப்படும் விநாயகர், வள்ளிதேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், சோமாஸ்கந்தர் இவர்களுடன் இணைந்திருக்கும்,

இருகை கொண்ட, கையில் ஆயுதம் அற்ற, எப்பொழுதும் நின்ற திருக்கோலத்தில் உள்ள இவளை அம்பாள் என்று வழக்கில் அழைப்பர். சிவபெருமான் திருமண விழாவின்போது இந்த உமையம்மைக்கு மாங்கல்யம் அணிவிக்கப்படுகின்றது. அந்த உமையம்மையையே ‘வருணசெங்கலை செங்கை’ ஆவாள். இதற்கு கடலில் தோன்றும் வெண்மையான சங்கை அறுத்து செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவள், அறத்தைச் செய்வதனால் சிவந்த கரத்தை கொண்டவள், ஆன்மாக்களை செம்மையுற செய்வதற்காக சிவபெருமானின் கைத்தலம் பற்றுகிற அறத்தை செய்வதனால் ‘செங்கை’ என்றார்.

திருமணமானது பத்து வகைப்படும். அவற்றில் ஒன்று, அறத்தின் மணம். அறத்தைக் காப்பாற்ற, குலத்தின் வழி புதல்வனை தோற்றுவிக்க செய்யப்படும் திருமணமாகையால் இவளை புத்திர சம்வர்த்தினி என்றும் அழைப்பர். வயிற்றில் கரு உண்டான பின்பே, ஒரு பெண்ணுக்கு வளைக்காப்பு சடங்கு நிகழ்த்துவர். அந்த வளையலானது தாலியை போன்ற, உருட்டை போன்ற, தத்துவ அணியாகும். அதனால் ‘வருண சங்கலை’ என்பது வளையலை குறிக்கும். கடலில் தோன்றியதால்  வருண, சங்கு, அலை. அதனை அணிந்த சிறப்பை உடையதனால் ‘செங்கை’ என்று குறிப்பிடுகிறார்.

‘சகலகலா’ கலை என்ற வார்த்தைக்கு உறுப்பு என்றும், உணர்வுகளை வெளிப்படுத்தும் ஓவியம், சிற்பம் என்றும் பொருள் உரைக்கலாம். உலகியல் சார்ந்து வாழ்வியலை நடத்துவதற்கு நாம் அறிய வேண்டிய பண்பும், தொழிலும், நாடு சார்ந்த அறமும் (சட்டம்) அறிவிக்கும் செயலாகும், அல்லது அறியும் செயலாகும். இதனைச் செய்பவள், கல்விக் கடவுள் கலைவாணி. இது சரஸ்வதியை குறித்தது. இவள் எழுத்துகளை உணர்த்துவதற்கு அஷ்ட மாலையையும், இசை முதலிய களைகளை உணர்த்துவதற்கு வீணைக் கருவிகளையும், சாத்திரங்களை உணர்த்துவதற்கு ஓலை சுவடியையும், தாங்கியவளாக, தெளிவை உணர்த்தும் வெள்ளை நிறத் தாமரையில் வெண்ணிற உடையில் எழுந்தருளியிருப்பாள்.

இவளையே ‘சகலகலா’ என்று குறிப்பிடுகின்றார்.‘‘மயில்’’ மாயூரம், திருமயிலை என்ற இரு திருத்தலங்களிலும் உமையம்மை சிவபெருமானை மயில் வடிவம் கொண்டு பூஜித்ததாக தல வரலாறுகள் குறிப்பிடுகின்றன. சிவபெருமான் செம்பொருளை உபதேசித்த நேரத்தில் உமையம்மையானவள் இறைவன் உபதேசிப்பதை கூர்ந்து கவனிக்காமல் அங்கு நடமாடிய அழகான மயில் ஒன்றைப் பார்த்து மகிழ்ந்திருந்தார். கவனிக்காததனால் சிவபெருமான் கோபம் கொண்டு உமையம்மையை மயிலாக போகும்படி சபித்தார். அதன்வழி மயிலாக பிறந்து சிவனை வழிபட்ட அந்த திருக்கோலத்தை ‘மயில்’ என்று குறிப்பிட்டார்.

செம்பொருள் என்பது பிரம்ம வித்தையாகும். பிரம்ம வித்தையை அறிபவர்கள் அதுவாக ஆவார்கள். அதனால் அதை அறியாது விலக்குபவர்கள் மிகச் சிறந்த ஆன்ம நலமாகிய நன்மையை இழப்பர். இதை அறிவுறுத்தவே ‘மயில்’ என்றார். ‘தாவு கங்கை பொங்கு அலை தங்கும் புரிசடையோன்’ சொர்க்கத்தில் இருந்த கங்கையை பாதாள உலகிற்கு பகீரதன் தவம் புரிந்து அழைத்ததால், கோபமுற்ற கங்கை விண்ணிலிருந்து இறங்கினாள். அச்சினத்தால் உலகம் அழியாதிருக்க சிவபெருமான் தன் சடையில் தாங்கினான்.

அதை மீண்டும் பகீரதன் வேண்டுகோளுக்கு இணங்க சிறு துளிகளாகத் தன் சடையில் இருந்து விடுவித்தார். அவள் மேலும் சினம் கொண்டு சடையிலிருந்து பொங்கி மேல் நோக்கி எழுந்தாளாம். அப்படி எழுந்ததையே ‘தாவு கங்கை’ என்கிறார் பட்டர். நீரானது எப்பொழுதும் கீழ்நோக்கியே செல்லும். தீ, மேல் நோக்கிச் செல்லும், ஆனால் நீரின் குணம் கொண்டவள், தீயின் குணமாக பொங்கி எழுந்தது கங்கையின் தனி சிறப்பாகும். இந்த விரைவே ஆன்மாக்களிடம் உள்ள துன்பத்தைப் போக்கவல்லது. அதனால் ‘பொங்கு அலை’ என்பது ஆன்மாக்களை தூய்மை செய்யும் ஆற்றலை குறித்தது.

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்