அது என்ன சொர்ண கொம்பு காணிக்கை?



கன்னூர் வேளம் : கேரளம்

முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஊரிலும் வேறு எந்த ஆலயங்கள் இல்லாவிட்டாலும், சிறிய அளவிலாவது ஒரு விநாயகர் கோவிலை நாம் காணமுடியும். ஏன், ஒரே கிராமத்தில் தெரு முனைகளிலும், கால்வாய்க் கரை, குளக்கரை, ஆற்றங்கரையிலும் சிறிய மேடையிலும், அரச மரத்தடியிலும் பல விநாயகர்களை நாம் தரிசிக்கிறோம்! தனி ஆலயங்கள் என்று இல்லாவிட்டாலும், சிவபெருமான், அம்மன், முருகன் ஆலயங்களிலும் கூட விநாயகருக்குத் தனிச் சந்நதி உண்டு.

பல வைணவ ஆலயங்களிலும்கூட விநாயகர், தனிச்சந்நதியில்‘தும்பிக்கை ஆழ்வார்’ என்ற திருநாமத்தோடு அருட்பாலிக்கிறார்! கேரள மாநிலம் பிரசித்தி பெற்ற பல விநாயகர் ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டது. திருவனந்தபுரம் பழவங்காடி, கொல்லம் கொட்டாரக்கரா, கோட்டயம் மல்லியூர், திருச்சூர் கக்காடு, காசர்கோடு மதூர் போன்ற இடங்களில் உள்ள விநாயகப் பெருமான் ஆலயங்கள் இம்மாநிலத்தில் உள்ள மிகப் பிரசித்தமான பழமையான ஆலயங்களாகும்.
இந்த வகையில் கேரள மாநிலம்,

கன்னூர் மாவட்டத்தில் வேளம் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஸ்ரீவைத்தியநாதர் என்ற பிரசித்தி பெற்ற இரட்டை சிவனார் ஆலயத்தில், விநாயகப் பெருமானும் தட்சிணாமூர்த்தி போன்று தெற்கு நோக்கி தனிச் சந்நதியில் அருட் பாலிக்கிறார். இரண்டு சிவ சந்நதிகள் இருப்பினும், இந்த விநாயகப் பெருமான் தனிச் சிறப்பு கொண்டவர் என்பதால் இக்கோவிலை வேளம் ஸ்ரீமஹாகணபதி ஆலயம் என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.

பிள்ளையார்பட்டி ஆலயத்திலும் ஸ்ரீஅர்ஜுனபுரீஸ்வரர் என்ற திருநாமத்தில் மூலவர் சிவபெருமான் எழுந்தருளியிருந்தாலும் அனைத்துச் சிறப்பும் விநாயகருக்கே என்பது குறிப்பிடத்தக்கது. (அர்ஜுனம் என்பது மருத மரத்தைக் குறிக்கும். தென்னிந்தியாவில் மருத மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட நான்கு முக்கிய ஆலயங்களில் இதுவும் ஒன்று) வேளம் ஸ்ரீமஹாகணபதி ஆலயத்தில் சொர்ணக் கொம்பு என்ற சிறிய கொம்புகளை பக்தர்கள் காணிக்கையாக்குவது குறிப்பிடத்தக்கது. இங்கு விநாயகருக்கு முக்கியத்துவம் ஏற்பட்டது எப்படி?

தளிப்பரம்பா ராஜராஜேஸ்வரர் ஆலயம், கேரளத்தின் பிரபலமான 108 ஆலயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. திருச்சூர் வடக்குந்நாதர், வைக்கம் மஹாதேவர், எட்டுமானூர் மஹாதேவர் போன்ற ஆலயங்களுக்கு நிகராகக் கருதப்படும் இந்த ஆலயம், பரசுராமரால் நிர்மாணிக்கப்பட்ட பெருமை கொண்டது. மூஷிக வம்சத்து மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு, விரிவாக்கம் பெற்ற இந்த ஆலயத்தில் கொடிமரம் இல்லை, சிவபெருமானால் பார்வதி தேவிக்கு வழங்கப்பட்ட மூன்று லிங்கங்கள் முறையே மாந்தாதா, முசுகுந்தன்,

சதசோமன் ஆகிய மூன்று மன்னர்களுக்கு வழங்கப்பட்டு அவற்றில் மூன்றாவதான லிங்கம் அகஸ்தியர் மூலமாக, இந்த ஆலயத்தில் சதசோமனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தலபுராணம் தெரிவிக்கிறது. ராஜராஜேஸ்வரர் என்ற மிக அரிய திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானை பக்தர்கள் பெருந்திருகோவிலப்பன் (மிகப் பெரிய கோவிலைக் கொண்டவர்), பெருஞ்செல்லூரப்பன் (இப்பகுதியின் பெயரான பெருஞ்செல்லூருக்கு உடையவர்), தம்புரான் (மன்னர், தலைவர்) என்று மரியாதையோடு அழைக்கின்றனர்.

இவ்வளவு அரிய சிறப்புகளைக் கொண்ட தளிப்பரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆலயத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள நெல்வயல்கள் சூழ்ந்த, இயற்கை எழில் மிக்க சிறிய கிராமம் வேளம். மஹாபாரத காலத்தில் பகாசுரனை பஞ்சபாண்டவர்களின் ஒருவரான பீமன் இத்தலத்தில் வைத்துதான் வதம் செய்தாராம். ‘பகனைக் கொன்ன பஹுளம்’ என்ற பெயரே வேளம் என்ற உருமாறியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். வேழம் என்ற யானையின் பெயரே வேளம் என்று மருவிவிட்டதாகவும் கூறுவர். பரசுராமர், கேரளத்தில் 108 சிவாலயங்கள், மற்றும் வைணவ, தேவி ஆலயங்களைப் பிரதிஷ்டை செய்ததோடு, வேவிற்பன்னர்களாகத் திகழ்ந்த எண்ணற்ற அந்தணர் குடும்பங்களையும் குடியேற்றினார்.

அவ்வாறு குடியேறியவர்கள் கன்னூர் மாவட்டத்தில் பல இடங்களில் வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தளிப்பரம்பா சிவபெருமானான ஸ்ரீராஜராஜேஸ்வரரையே தங்கள் முழுமுதற் கடவுளாக வணங்கி வந்ததோடு அவர் அருளால். தங்களுக்குள் வேதங்கள், சடங்குகள் பற்றிய ஐயங்கள் எழும்போது தர்க்கம் செய்து தீர்த்துக் கொள்வதும் மரபாக இருந்தது. இருப்பினும் தளிப்பரம்பா அந்தணர்கள் மட்டும் அந்த ஆலயத்தின் மீது அதிக உரிமை கொண்டாடினர். அந்தவகையில்  ஆலய மணியை அவர்களில் ஒருவரே அடிக்கலாம் என்ற நியதியும் இருந்தது.

இவ்வாறிருக்கையில் ஒருமுறை வேளம் கிராமத்திலிருந்து ஒரு சில அந்தணர்கள் தங்கள் இஷ்ட தெய்வமான ராஜராஜேஸ்வரரைத் தரிசிக்க தளிப்பரம்பா ஆலயத்திற்கு வந்தனர். அவர்களில் ஒருவர் சந்நிதி நுழைவாயிலில் தொங்கவிடப்பட்டிருந்த மணியை பயபக்தியுடன் அடித்து வழிபட, தளிப்பரம்பா அந்தணர்கள் வெகுண்டு அவரை வலுக் கட்டாயமாக வெளியேற்றினர். அவமானத்தால் வருந்திய அந்த அந்தணர் வேளம் கிராமத்திற்குத் திரும்பியவுடன் அங்கு தளிப்பரம்பா போன்றே ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க உறுதி பூண்டார். வேளம் திருத்தலத்தில் மிகப் பழமையான ஸ்ரீவைத்தியநாதர் ஆலயம் இருந்தது.

அந்த அந்தணர் சிவபெருமானிடம் ஆணைபெற்று சிவபெருமான் சந்நதிக்கு  வடபுறம் தளிப்பரம்பா போன்றே ஓர் அழகிய ஆலயம் எழுப்பி, ஸ்ரீராஜராஜேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கப்  பிரதிஷ்டை செய்தார். ஆனால் இச்செய்தி அறிந்த தளிப்பரம்பா அந்தணர்கள் இன்னொரு ராஜராஜேஸ்வரர் ஆலயம் நிர்மாணிப்பதைத் தடுக்கும் எண்ணத்துடன் பிரதிஷ்டையின்போது பல இடையூறுகள் செய்தனர். இடையூறுகள் கண்டு மனந்தளராது, அவர் புதிய கலசம் வைத்து மந்திரங்கள் ஜபித்து, தெற்குப்புறம் உள்ள சந்நதியில் எழுந்தருளியிருக்கும் விநாயகப் பெருமானைப் வணங்கி, அவருக்கு கலசாபிஷேகம் செய்து, சிவாலயப் பிரதிஷ்டையையும் வெற்றிகரமாக செய்துமுடித்தார்.

வேளத்தில் ராஜராஜேஸ்வரரை பிரதிஷ்டை செய்யும்போது ஏற்பட்ட விக்னங்களைக் களைந்து பக்தருக்கு அருளியதால் இந்த ஆலயத்தில் ஸ்ரீமஹாகணபதியே பிரதான மூர்த்தியாக வழிபடப்படுவதோடு, அவர் பெயராலேயே இந்த சிவாலயம் அழைக்கப்படலாயிற்று. அங்கு ஏற்கெனவே இருந்த ஸ்ரீவைத்தியநாதர் ஆலயம் 2000 ஆண்டுகளும் அடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆலயம் 1000 ஆண்டுகளும் தொன்மையானவையாகக் கருதப்படுகிறது. ஆலயத்திற்கு வெளியே உள்ள க்ஷேத்ர குளம் எனப்படும் மிகப் பழமையான புஷ்கரணி, திருப்பணி செய்யப்பட்டு 2016ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெளிந்த தூய்மையான தண்ணீர் நிறைந்த இந்த அழகிய குளம் நீச்சல் பழகுவதற்கு உரிய குளமாக அமைக்கப்பட்டுள்ளது, வித்தியாசமான தகவலாகும்.  கேரள ஆலயங்களுக்குரிய மிக விசாலமான திருச்சுற்று, பெலிக்கல்புரா என்ற பலிபீடம், உட் பிராகாரம், நமஸ்கார மண்டபம், கருவறைகள் என்று அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஸ்ரீவைத்தியநாதரும், அவருக்கு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீராஜராஜேஸ்வர ஸ்வாமியும் கிழக்கு நோக்கி அருட்பாலிக்கின்றனர். உட் திருச்சுற்றில் தெற்கு நோக்கி வேளம் ஸ்ரீஹாகணபதிக்குத் தனி ஆலயம் பலிபீடத்துடன் அமைந்துள்ளது.

தெற்குநோக்கி அருட்பாலிக்கும் இந்த விநாயகப் பெருமானை இங்குள்ள பக்தர்கள் தட்சிணாமூர்த்தியின் அம்சமாக வழிபடுகின்றனர். ஸ்ரீவைத்தியநாதர் சந்நதியின் மேற்குபுறம், மேற்குதிசை நோக்கி ஸ்ரீபார்வதி தேவி, அன்னபூர்ணா தேவியின் அம்சமாக எழுந்தருளியிருக்கிறாள். ஸ்ரீகிருஷ்ணருக்கும் தனிச் சந்நதி உள்ளது.  வேளம் ஸ்ரீமஹாகணபதிக்கு ‘சொர்ணக் கொம்பு’ (தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளியில் செய்த யானை தந்தங்கள் போன்ற சிறிய கொம்புகள்) சமர்ப்பித்து வழிபடுவது இந்த ஆலயத்திற்கே உரிய ஒரு பிரத்தியேக அம்சமாகும்.

பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி இந்த தங்கக் கொம்புகளை, 5, 7, 11 என்ற எண்ணிக்கைகளில் கருவறை வாயிற்படியில் வைக்க  மேல்சாந்தி (அர்ச்சகர்) அவற்றை எடுத்து விநாயகரின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறார். இவ்வாறு காணிக்கை செலுத்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். விநாயகர் அருளால் கோரிக்கை நிறைவேறியவுடன் பாயசம் நைவேத்தியம் செய்கின்றனர். திருமணத்திற்கு வேண்டிக் கொண்ட பக்தர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் முன்பாக முதலில் இந்த ஆலயத்திற்கு வந்து விநாயகருக்கு 21 கதலிப் பழங்கள் கோக்கப்பட்ட மாலையை காணிக்கையாக்குகின்றனர்.

வட்டலப் பாயசம் என்றழைக்கப்படும், பெரிய உருளியில் தயாரிக்கப்படும் வெல்ல ப் பாயசம் இத்தலத்தின் பிரத்தியேக பிரசாதமாகும். பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகின்ற வேளையில் அனைவரும் அமைதி காக்கவேண்டி முதலில் சங்க நாதம் முழக்குகின்றனர். கணபதி ஹோமம், சொர்ணக் கொம்பு, பாயச நைவேத்தியம், புஷ்பாஞ்சலி, நெய்விளக்கு போன்றவை இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளாகும். வேளம் மற்றும் தளிப்பரம்பா அருகில் செக்கியாட்டு ஸ்ரீதர்மசாஸ்தா, மஹாவிஷ்ணு, அரிம்ப்ரா சுப்பிரமண்யா, முச்சிலோட்டு பகவதி, காடூர் விநாயகர் போன்ற ஆலயங்கள் உள்ளன.

மாவட்டத் தலைநகரான கன்னூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் தளிப்பரம்பாவும், அங்கிருந்து 13 கி.மீ. தொலைவில் மய்யில் (வேளம்) கிராமமும் உள்ளன. கன்னூரிலிருந்து பேருந்து வசதிகள் உண்டு. தளிப்பரம்பா ஸ்ரீராஜராஜேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிப்பவர்கள் கட்டாயம் இந்த வேளம் ஆலயத்திற்கும் வந்து ஸ்ரீமஹாகணபதியைத்  தரிசிப்பது வழக்கமாக உள்ளது. வேளம் ஸ்ரீமஹாகணபதி ஆலயம் காலை 5 முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகிறது.

-  விஜயலட்சுமி சுப்பிரமணியம்