சிறப்பான வாழ்வு காத்திருக்கிறது!



என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* மகள் எம்.சி.ஏ. முடித்துவிட்டு தற்போது வங்கிப்பணிக்காக தேர்வு எழுதி வருகிறாள். வெகுநாட்களாக வரன் பார்த்து வருகிறோம். இதுவரை அமையவில்லை. வேலையும் கிடைக்கப் பெறவில்லை. எனது மகளின் ஜாதகத்தை ஆராய்ந்து அவளுக்கு வேலை கிடைக்கவும், வரன் அமையவும் நல்லதொரு தீர்வை சொல்லுங்கள்.
 - தாட்சாயினி, பாப்பாரப்பட்டி.

வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்யலாம் என்று ஆரம்பத்தில் திருமணத்தை தள்ளி வைத்ததன் விளைவு தற்போது 31 வயதாகியும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அஸ்வினி நட்சத்திரம், மேஷராசி, மேஷலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்னாதிபதி செவ்வாய் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் போராட்டம் என்பது வாழ்வினில் தொடர்ந்து கொண்டிருக்கும். எந்த ஒரு நிகழ்வும் சிறிய போராட்டத்தின் அடிப்படையிலேயே நடக்கும். அத்தனை எளிதாக எதையும் இவர் பெற்றுவிட முடியாது. உத்யோகத்தைக் குறிக்கும் 10ம் வீட்டிற்கு அதிபதி சனிபகவான் எட்டில் அமர்ந்து உத்யோகத் தடையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

தற்போது 20.07.2018 முதல் 20.07.2019 வரைநடக்கும் சூரியதசையில் சுக்கிர புக்தியின் காலம் திருமணத்திற்கு துணை நிற்கும். அதிக எதிர்பார்ப்பின்றி உங்களைத் தேடி வரும் மாப்பிள்ளைக்கு உங்கள் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள். திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரனும் எட்டில் சனியுடன் இணைந்துள்ளார். இந்த நேரத்தை விட்டுவிட்டால் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்துவிடும். கால நேரத்தை மனதில்கொண்டு வரன் தேடுவதில் முழுமுயற்சியுடன் இறங்குங்கள். உங்கள் மகள் பிறந்த ஊரில் இருந்து கிழக்கு திசையில் இருந்து மாப்பிள்ளை வருவார்.

உறவினர் வழியில் வரன் தேடுவதில் பலன் இல்லை. உங்கள் மகளின் ஜாதகத்தில் உத்யோகஸ்தானம் என்பது பலவீனமாக உள்ளதால் வேலையைப்பற்றிக் கவலைப்படாமல் திருமணத்திற்கான முயற்சியில் முழுமூச்சாக செயல்படுங்கள். மகள் எம்.சி.ஏ., படித்திருக்கிறாள் என்பதற்காக அவரைவிட அதிகமாகப் படித்தவராகத்தான் மாப்பிள்ளை அமைய வேண்டும் என்பது போன்ற எண்ணத்தை விடுத்து நல்ல குணமுடையவராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் கணக்கில் கொள்ளுங்கள்.

உங்கள்மகளின் ஜாதகஅமைப்பினைப் புரிந்துகொண்டு வரன் தேடுங்கள். வெள்ளிக்கிழமை தோறும் குத்துவிளக்கில் ஐந்து முகங்களையும் ஏற்றிவைத்து மகாலக்ஷ்மிஅஷ்டகம் படித்து உங்கள்மகளை பூஜை செய்து வரச் சொல்லுங்கள். 16 வாரங்களுக்குத் தொடர்ந்து பூஜை செய்து வர வெகுவிரைவில் அவருக்கான மாப்பிள்ளை வந்து சேர்வார். உத்யோகத்தைவிட திருமண வாழ்வு என்பது அவருக்கு நல்லபடியாக அமைந்துவிடும். கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

* இந்த ஜாதகிக்கு பி.எச்.டியில் அட்மிஷன் கிடைக்குமா? மூன்று வயதாகும் பெண் குழந்தையின் படிப்பு எப்படி அமையும்? விவாகரத்து இழுபறியாக உள்ளது. எப்பொழுது கிடைக்கும்? மறுமணத்திற்கு வாய்ப்பு உள்ளதா? நன்றாக அமையுமா?
 - சந்திரா, சாலிகிராமம்.

நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தினை உடைய பெண்ணிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை நீங்கள் உங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை. ஆணித்தரமாகவும், வெகு அழுத்தமாகவும் கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள். நீங்கள் வினாக்களை எழுப்பியிருக்கும் விதத்தினைக் கொண்டு இந்த ஜாதகி உங்கள் மகளாக இருக்கலாம் என்ற எண்ணத்தோடு பதில் அளிக்கிறேன். நீங்கள் எழுதியனுப்பியுள்ள ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தையும், கிரஹ அமைப்புகளையும் தவறாகக் குறித்திருக்கிறீர்கள். அவருடைய பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றைக் கொண்டு ஜாதகம் கணித்ததில் உங்கள் மகள் பூரம் நட்சத்திரம், சிம்ம ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது.

தற்போது அவருக்கு ராகு தசையில் குரு புக்தியின் காலம் நடந்து கொண்டிருக்கிறது. அவர் விரும்பும் பட்சத்தில் நிச்சயமாக இந்த நேரத்தில் பி.எச்.டி., படிப்பினில் இடம் கிடைத்து விடும். ஆராய்ச்சி சார்ந்த படிப்பு நல்ல பலனைத் தரும். அவருடைய பெண் குழந்தையின் கல்வி நிலையை அந்தக் குழந்தையின் ஜாதகத்தைக் கொண்டுதான் நிர்ணயிக்க முடியும். பெற்ற தாயின் ஜாதகத்தினைக் கொண்டு அவருக்கு பிறந்துள்ள குழந்தைக்கான பலனைச் சொல்ல இயலாது. உங்கள் மகளின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகிய குரு பகவான் மூன்றில் கேதுவுடன் இணைந்திருப்பதால் களத்ர தோஷம் உண்டாகியுள்ளது.

நடந்து கொண்டிருக்கும் விவாகரத்து வழக்கு 08.06.2019க்குள் முடிவிற்கு வந்து விடும். மறுமணம் என்பது இவரது ஜாதக அமைப்பின்படி நன்றாக இல்லை. மறுமணத்திற்கு முயற்சி செய்வதைவிட மகளின் நல்வாழ்வில் கவனத்தைச் செலுத்தச் சொல்லுங்கள். தற்போது நடந்துவரும் ராகுதசை என்பது உத்யோகரீதியாக இவருக்கு சிறப்பான பலனைத் தரும் என்பதால் தனது மேற்படிப்பிலும், உத்யோகத்திலும் கவனம் செலுத்தி மகளை உயர்வாக வளர்ப்பார் என்பதில் ஐயமில்லை. திங்கட்கிழமை தோறும் ராகுகாலவேளையில் வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து மஹிஷாசுரமர்த்தினி ஸ்லோகத்தை படித்து வருவதை வழக்கத்தில் கொண்டு வரச் சொல்லுங்கள். வாழ்வு வளம் பெறும்.

* எனக்கு நல்ல நிரந்தரமான வேலை எப்போது கிடைக்கும்? எந்த துறையில் எனக்கு வேலை நல்ல படியாக அமையும்? எனக்கு திருமண யோகம் உண்டா? ஆயுள் அமைப்பு எப்படி  இருக்கிறது? தயவுசெய்து நல்ல வழி காட்டுங்கள்.
 - பா. கணேசன், வேளச்சேரி.

பதினெட்டாவது வயதில் கேட்க வேண்டிய கேள்விகளை நாற்பத்தியெட்டாவது வயதில் கேட்டிருக்கிறீர்கள். உங்களுடைய ஜாதக அமைப்பு என்பது மிகவும் நன்றாகவே உள்ளது. மிருகசீரிஷம் நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் வெற்றியைத் தரும் ஜெயஸ்தானாதிபதி செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும், ஜீவன ஸ்தானாதிபதி குரு பகவான் ஐந்தில் அமர்ந்திருப்பதாலும் உங்களுக்கு இளம் வயதிலேயே வேலை கிடைத்திருக்க வேண்டும். 22வது வயதில் வந்த உத்யோகத்தை நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கியதால் தற்போது நிரந்தர உத்யோகமின்றி சிரமப்படுவதாகத் தோன்றுகிறது.

ஜென்ம லக்னாதிபதி புதன் எட்டில் அமர்ந்து ஒரு சில நேரத்தில் தடைகளை உருவாக்கினாலும், தடைகளைத் தாண்டி வெற்றி பெறுகின்ற யோகமும் உங்கள் ஜாதகத்தில் பலமாக உள்ளது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு என்பது சுத்தமாக உள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் ஐந்தில் அமர்ந்திருப்பதால் உங்கள் மனதிற்குப் பிடித்தமான வகையில் மனைவி அமைந்திருக்க வேண்டும். ஆனால், திருமண யோகம் உண்டா என்று கடிதத்தில் கேட்டிருக்கிறீர்கள். அதேபோல உத்யோகம் என்று வரும்போது சட்டம், பாதுகாப்பு போன்ற துறைகள் உங்களுக்குப் பொருத்தமானவை.

உத்யோகமும், திருமணமும் உங்கள் ஜாதக பலத்தின்படி 22வது வயது முதல் 27வது வயதிற்குள் நல்லபடியாக அமைந்திருக்க வேண்டும். ஒன்று நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகம் தவறாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் ஜோதிடரை சோதிப்பதற்காக கேள்விகளை கேட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் உங்களுடைய ஜாதக பலத்தின்படி உத்யோகம், திருமண வாழ்வு ஆகியவை பலம் பொருந்தியதாகவே உள்ளது. அதையே நீங்கள்
அனுப்பியிருக்கும் ஜாதகமும் உறுதி செய்கிறது.

?என் உறவினர் மகன் மிகமிக நல்லவன்.பக்தி உள்ளவன்.படித்தவன், நல்ல உத்யோகம், நல்லசம்பளம், பெற்றோரைக் கண்களாய் பார்த்து வருபவன். ஆச்சாரியர்களுக்கு,ஆலயங்களுக்கு என்று நிறைய கைங்கர்யம் செய்பவன்.அப்படி இருந்தும் திருமண முயற்சியில் பலிதமேஏற்படவில்லை. கூடி வருகிற மாதிரி வந்து நின்றுவிடுகிறது.ஏன் இந்தநிலை? ஜாதகத்தை பரிசீலித்து நல்லதொரு பதிலைச் சொல்லுங்கள்.
 - நாமகிரிலக்ஷ்மி, ஸ்ரீரங்கம்.

உங்கள் உறவினர் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் உச்ச பலத்துடன் அமர்ந்திருக்கும் கேது பகவான் ஆன்மிக ரீதியான ஈடுபாட்டினைத் தந்திருக்கிறார். தர்ம நெறிக்கு மாறாமல் நடக்கும் பிள்ளையாக அவரை வழி நடத்த குரு பகவானும் துணை நிற்கிறார். விசாக நட்சத்திரம், துலாம் ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் இவரது ஜாதகத்தினை கணித்ததில் தற்போது புதன் தசையில் புதன் புக்தி துவங்கி நடந்து வருகிறது. புதன் 11ம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் தற்போது நல்ல நேரமே நடக்கிறது.

என்றாலும் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் நீசம் பெற்ற ராகுவும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைவதும் திருமணத் தடையை உண்டாக்கி வருகிறது. ‘காரகோ பாவநாசாய’ என்ற கூற்றுக்கு ஏற்ப அதாவது காரகாதிபத்யமும், பாவாதிபத்யமும் ஒருவனுக்கே ஏற்பட்டால் அதன் பலன் குறைவு என்று ஜோதிடநூல்கள் உரைப்பதன் படி இவருடைய ஜாதகத்தில் களத்ர காரகன் ஆகிய சுக்கிரன், களத்ர ஸ்தானாதிபதியும் 12ல் மறைவதால் மணவாழ்வு தடைபட்டுக் கொண்டிருக்கிறது.

என்றாலும் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் ராகுவின் சாரம் பெற்றிருப்பதாலும், ராகு ஏழில் அமர்ந்திருப்பதாலும் திருமணம் என்பது நடந்து விடும். வெள்ளிக்கிழமை தோறும் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்து வரச் சொல்லுங்கள். தரிசிக்கும் நேரத்தில் ‘சாந்தாகாரம் புஜகசயனம்’ என்ற ஸ்லோகத்தினை முழுமையாகச் சொல்லி வணங்குவது நல்லது. குடும்ப சாஸ்திரிகளின் துணைகொண்டு சுக்கிரன், ராகுவிற்கு உரிய ப்ரீதியைச் செய்து முடிக்க உடனடியாக திருமணம் கூடி வரும். அவரது ஜாதகத்தில் சூரியனும், புதனும் இணைந்து 11ல் இருப்பதால் எதிர்காலத்தில் சிறப்பான வாழ்வு அவருக்காகக் காத்திருக்கிறது.

* எனது இளைய மகனுக்கு எப்போது திருமணம் கூடிவரும்? அஷ்டமசனி நடைபெறுவதால் திருமணம் நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போகுமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? மூத்த மகனின் திருமண வாழ்க்கை விவாகரத்து வழக்கில் நிலுவையாக உள்ளது. இளைய மகனுக்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும்.
 - சாமி, சென்னை.

எப்பொழுதும் யாருக்கும் அஷ்டமத்துச் சனி, ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டமச் சனி போன்ற சற்றுசிரமத்தினைத் தரக் கூடிய சனியினுடைய காலங்கள் திருமணத்தடையை உண்டாக்காது. ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகக் கணிதப்படி தற்போது ராகு தசையில் செவ்வாய் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சூரியன் எட்டில் செவ்வாய் மற்றும் கேதுவுடன் இணைந்த நிலையில் அமர்ந்திருப்பது கடுமையான களத்ர தோஷத்தினை உண்டாக்குகிறது.

எட்டில் சூரியன்/செவ்வாயின் இணைவு மட்டுமே மணவாழ்வினில் அதிக சிரமத்தினைத் தரக் கூடும். அதிலும் கேதுவின் இணைவும் இருப்பதால் இவரது திருமணத்தை ஏதேனும் ஒரு ஈஸ்வரன் கோயிலில் நடத்துவதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது. 13.02.2019 முதல் துவங்க உள்ள குரு தசையில் குரு புக்தியின் காலத்திலும் மணமகள் தேடி வருவார் என்று இருக்க முடியாது. நாம்தான் அதிக முயற்சி எடுத்து அலைந்து திரிந்து இவரது திருமணத்தை நடத்த வேண்டும். மறுமணத்திற்கானஅதிகாரம் இவரது ஜாதகத்தில் இருப்பதால் அவசரப்படாமல் சற்று நிதானித்து பெண் தேடுங்கள்.

விவாகரத்து ஆனவர், அல்லது இளம் வயதில் கணவரை இழந்த பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தால் இவரது ஜாதக தோஷத்திற்கு பரிகாரம் கிடைத்துவிடும். யோசித்துச் செயல்படுங்கள். லக்னாதிபதி சனிபத்தாம் வீடாகிய ஜீவன ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் எதிர்காலம் என்பது நன்றாக உள்ளது. செவ்வாய்கிழமை தோறும் அருகில் உள்ள ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். பிரதோஷ நாட்களில் உங்களால்இயன்ற திருப்பணியைச் செய்யுங்கள். நந்தியம்பெருமானின் துணையாலும், பரமேஸ்வரனின் திருவருளாலும் திருமணத் தடைஎன்பது விலகி உங்கள் மகனுக்கு மணவாழ்வு என்பது சாத்தியமாகிவிடும்.

* நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் முதல் உடல்நிலை சரியில்லாமல்போய் கடைசியில் எனது மகள் இறந்து விட்டாள். அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை மிகவும் நல்லவர். உத்தமமான குணம் கொண்டவர். கடவுள் பக்தி என்பது மிக அதிகம். எனது மகள் இறந்தவுடன் துடிதுடித்துப் போனார். நற்குணங்கள் பொருந்திய அவருக்கு நல்லபடியாகத் திருமணம் நடக்க வழி சொல்லுங்கள்.
 - பிரேமா, சென்னை.

நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மகள் நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையிலும், நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு நல்லபடியாக திருமணம் நடைபெற வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தை எத்தனை பாராட்டினாலும் தகும். ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் தற்போது குரு தசையில் கேது புக்தி நடந்து வருகிறது. மனைவி மற்றும் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் எட்டில் நீசம் பெற்றிருக்கிறார். மேலும், அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி புதன், ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு, எட்டாம் வீட்டிற்கு அதிபதிசனிஆகியோர் வக்ரகதியில் சஞ்சரிக்கிறார்கள்.

உங்கள் மகளின் ஜாதகம் பலவீனமாக இருந்ததால் அவர் உயிர் நீத்திருக்கிறார். இவரது ஜாதகத்தில் இருந்த திருமணத்தடைக்கான அம்சமும் இணைந்து நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளது. என்றாலும் தற்போது 01.09.2018 முதல் துவங்க உள்ள குரு தசையில் சுக்கிர புக்தியின் காலம் இவருக்கு கல்யாண யோகத்தினைத் தரும். சுக்கிரன் சயன சுக ஸ்தானத்தில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் தாம்பத்ய வாழ்விற்கான காலம் நெருங்கி வருகிறது. உறவினர் வழியில் இல்லாமல் அவர் பிறந்த இடத்திலிருந்து வடக்கு அல்லது வடமேற்கு திசையிலிருந்து பெண் அமைவார்.

அந்தப் பையனோடு உங்களுடைய நல்லுறவு தொடரும் பட்சத்தில் நீங்கள் அவருக்கு பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். நடந்ததை மறந்துவிட்டு புதுவாழ்விற்கு தயாராகச் சொல்லுங்கள். பிரதி வியாழக்கிழமை தோறும் நவகிரகங்களில் உள்ள குருபகவானுக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி வழிபட்டு வரச் சொல்லுங்கள். சென்னையில் பாடி பகுதியில் அமைந்துள்ள குரு ஸ்தலமான திருவலிதாயம் ஆலயத்திற்குச் சென்று அவரது பெயரில் அர்ச்சனை செய்து வழிபடச் சொல்லுங்கள். அதே ஆலயத்திலேயே அவரது திருமணத்தை நடத்திக் கொள்வதான பிரார்த்தனையும் நல்வாழ்வினை அமைத்துத் தரும். குருவின் திருவருளால் வெகுவிரைவில் அவருடைய மணவாழ்வு நல்லபடியாக அமையும்.

- சுபஸ்ரீ சங்கரன்