ஆடி மாதம் அம்மன் தரிசனம் தேடினாலும் கிடைக்காது!



* சமயபுரம் மாரியம்மன் கோயிலினை அறிந்த தமிழக பக்தர்கள் அத்தலத்திலேயே உள்ள கண்ணனூர் போசலீச்சரம் என்கிற பழமை வாய்ந்த சிவன் கோயிலைப்பற்றி அறிந்திருக்கும் வாய்ப்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். சமயபுரம் செல்லும் பக்தர்கள் இத்தலத்தினை தரிசிக்கவும், பயன் பெறவும் செய்து விட்டீர்கள். இதன் மூலம் வாசகர் நலன் நாடும் இதழ் என்பதோடு மட்டுமல்லாமல் வாசகர் பலனடைய புதிய செய்திகளை வெளியிடும் ஆன்மிக பொக்கிஷம், ஆன்மிகம் பலன் இதழ் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.
- K.சிவக்குமார், சீர்காழி.

* மனதிற்கு பலம் ஊட்ட வல்லது  இறை நம்பிக்கை, இறையருள் என்பதை பொறுப்பாசிரியர் காரண காரியங்களோடு நினைவூட்டியிருப்பது எங்களுக்கு புதிய
உத்வேகத்தைக் கொடுத்தது.
- பிரபா லிங்கேஷ், மேலகிருஷ்ணன் புதூர்.

* ஆடி மாதம் அம்மன் தரிசனம் தேடினாலும் கிடைக்காது. அப்படியிருக்கையில் வீடு தேடி வந்து, வானமாய் நின்று இன்ப மழையாய் இறங்கி எங்களை அருள் கடலில் சங்கமிக்க வைத்தீர்கள். மங்கள வாழ்வருளும் மங்களாம்பிகையான மந்திரபீடேஸ்வரி குறித்த கட்டுரை மங்காது ஒளிவிடும் தூண்டாமணி விளக்குபோல இருந்தது. நன்றி.
- அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி, பெங்களூரு-76.

* கரும்பார் குழலி கட்டுரை அடிக் கரும்பாய் இனித்தது. கல்யாண வரமருளும் காமாட்சி கட்டுரையும் சிறப்பாக இருந்தது.
- ராஜிராதா, பெங்களூரு-102.

* தமிழ் இலக்கியங்களை இனிய தேனாக சுவைத்திடும் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் மேலும் இறைச்சுவைத் தேனாக பாரெங்கும் ஒளிபரப்பும் பராசக்தி கட்டுரை மூலம் படித்தேன், சுவைத்தேன், மகிழ்ந்தேன். தொடரட்டும் தேனினும் இனிய இனிக்கும் இறைச்சுவை.
- ப.மூர்த்தி, பெங்களூரு.

* வடாலி ஜகந்நாதர் ஆலயம் குறித்த அற்புத, அபூர்வ தகவல்களும் அழகிய வண்ணப்படங்களும் பூரி ஜகந்நாதர் ரதயாத்திரை சமயத்தில் கண்டு பூரிப்படைந்தோம். ஆலமரக்கட்டையில் ஆவிர்பவித்த அற்புதமான தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை இக்கட்டுரை ஏற்படுத்தி விட்டது. பாரெங்கும் ஒளிபரப்பும் பராசக்தி எனும் அற்புதத் தொடரை ஆடித்திங்களில் படித்ததில் மனதெங்கும் மகிழ்ச்சி ஒளிபரவியது. பரவசம் ஏற்பட்டது.
- த.சத்திய நாராயணன், சென்னை-72.

* கரும்பாய் இனிக்கும் வாழ்வருளும் கரும்பார்குழலி தகவல்கள் உண்மையில் உள்ளத்தில் இனித்தது; உடலை விட்டு உயிர் இன்பமாக நீங்க வேண்டும் எனும் தத்துவத்தை அழகாகச் சொன்ன அபிராமி அந்தாதி, சக்தி தத்துவம் தொடர் படித்து நெகிழ்ந்தே போனேன். சந்திரலேகா ராமமூர்த்தி எழுதிய பிரசாதங்களில் மில்லட் ஸ்வீட் களி செய்து, ருசித்து உண்டோம்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.

* சூலத்துடன் தாய்... வேலுடன் சேய்... தாய்சேய் இணைந்த தெய்வீக அட்டைப்படக் காட்சி கண்களில் நிற்கின்றது. ஆலய தரிசனம், திருச்செந்தூர் முருகன் கோயில் ரவுண்ட் அப் அங்குள்ள கடலில் நீராடியது போல் மனநிறைவைத் தந்தது. தருமபுரி கோட்டை காமாட்சி, கும்பேஸ்வரர் மங்களாம்பிகை, விஷ்ணுதாசனின் அம்பிகை துதி போன்றவை ஆடியில் கிடைத்த அம்மனின் ‘கூழ்’ பிரசாதங்களுக்கு ஒப்பானது. வடாலி. ஜகந்நாதர் ஆலயம் பற்றிய முழு விவரம் இதுவரை எங்கும் அறியாதது. திடீரென சற்றும் எதிர்பாராத வகையில் நரசிம்மரின் தலங்களைத் தந்து வியக்க வைத்தீர்கள். படித்து ‘ஆடி’ப் போனேன்.
- சுகந்தி நாராயண், வியாசர்பாடி.