இது முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவு!



மகாபாரதம் - 91

சனத் சுஜாத முனிவர், திருதராஷ்டிரனிடம் தொடர்ந்து பேசினார்: ‘‘நட்பு என்பது மிகச்சிறந்த விஷயம், மன்னனே. நண்பன் கேட்டால் செல்வத்தைக் கொடுத்து விடலாம். நண்பன் கேட்காத பொருளையும் தரலாம். மன சுத்தத்தோடு தன்னுடைய அன்பு மகன், தன் வீட்டு விசேஷம், தன்னுடைய பத்தினியைக்கூட நண்பனுக்காக தியாகம் செய்யலாம். நண்பனுக்கு உதவிசெய்து மறு உபகாரம் பெறாமல் இருத்தல் சிறப்பு. நண்பனின் நன்மைக்காக தன்னுடைய நன்மையை பாராட்டக்கூடாது. ஒரு செல்வந்தன் இந்த தியாக குணமும், சாத்வீகமும் உடையவனாக இருந்தால் மிக உயர்ந்த மனோநிலைக்கு வந்து விடுகிறான்.

இத்தகைய குணங்கள் திவ்யலோகத்தை அடைவதற்கு உதவி செய்கின்றன. அதற்கு மேலும் உள்ள நல்ல நிலையை அடைய யாகங்களின் உதவி தேவையாக இருக்கிறது. யாகம் என்பது சிலரிடம் மனதாலும், சிலரிடம் வாக்காலும், சிலரிடம் செயலாலும் வெளிப்படுகின்றன. இவை யாவும் ஒரே யோக்கியதையைக் கொண்டவை. ‘‘ஆனால் உனக்கு இன்னொரு விஷயமும் தெளிவாக கூறப்பட வேண்டும். இம்மாதிரியான நியமங்களால், குண விசேஷங்களால் பரமாத்மாவை அடைந்துவிட முடியாது. பூஜையும், யக்ஞமும் செய்யப்படுவதால் மட்டுமே உன்னத நிலையை அடைந்துவிட முடியாது.

மரண காலத்தில் மரணம் பற்றிய மருட்சி நீங்காது. இறந்த பிறகு உன்னத லோகங்களுக்குப் போக இவை உதவி செய்யும்.‘‘ஆனால் எந்த முயற்சியும் இல்லாமல் மனதுள் பரப்பிரம்மத்தை உபாசிக்க வேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல் அமைதியாக இருத்தலின் மூலம் இந்த உபாசனை தானாக ஏற்பட வேண்டும். இந்த நிலையில்தான் இங்கேயே பிரம்மத்தை புரிந்து கொண்டு மனிதன் பூரணமாகிறான். இந்த பூமியில் பூரணமானவர் அனேகம் பேர் உண்டு. அவர்களுக்கு வரலாறு இல்லை. அவர்கள் தன்னை இழந்தவர்கள்.

பெயரையும் புறக்கணித்தவர்கள். இருப்பு இல்லாதவர்கள். அதனால் எடுத்துச் சொல்ல முடியாமல் போகிறது.‘‘ஆனால் மன்னா, அகந்தைக்கு வரலாறு உண்டு. எல்லா வரலாறும் சீராட்டப்படும். துவேஷிக்கப்படும். வரலாற்றை ஆழ்ந்து யோசிப்பவன் அந்த யோசனையின் முடிவில் வரலாறு அற்று இருக்க வேண்டிய நிலைமையை உணர்கிறான். அவன் முயற்சிகள் நின்று விடுகின்றன. அவன் வரலாற்றிலிருந்து தன்னை அப்புறப்படுத்திக் கொள்கிறான். வரலாறும் அவனை மறந்து விடும். ஆனால் இருந்தது, இல்லாமல் ஆகாது. இப்போது இருப்பதையும், எப்போதும் இருப்பதையும் இந்த உலகம் நீக்கிவிட முடியாது.

பரப்பிரம்மத்தில் ஆனந்தமாய் லயித்தவர்கள், கர்விகளுக்கும் எங்கேனும் காணக் கிடைப்பார்கள்.‘‘மன்னா, நம் பேச்சிலேயே பரமாத்மா என்று சொல்லப்பட்ட விஷயத்தைப் பற்றி நீ எதுவும் விசாரிக்கவில்லை. அதன் ரூபம் பற்றி கேட்கவில்லை. ஆனாலும் சொல்கிறேன். சுத்த ரூபமானது ஜோதி மயமானது. விசாலமான புகழ் ரூபமானது. அதன் ஒளியாலேயே சூரியன் பிரகாசிக்கிறான். அதனுடைய சக்தியாலேயே உலகத்தின் உயிர்கள் தோன்றின. தேவர்கள் அனைவரும் இந்த ஒளியையே உபாசிக்கிறார்கள். நீரைப்போல ஒரேவிதமான ருசியை உள்ள தன்மையுடையவனாய் பரமாத்மா இருக்கிறான்.

அந்த சக்தியிலிருந்து பஞ்ச பூதங்கள் தோன்றின. பஞ்ச பூதங்களின் வெவ்வேறு கலப்பு விகிதம் காரணமாக உயிர்கள் தோன்றின. அந்த உயிர்களின் உணர்வில் எங்கிருந்து வந்தோம் என்பது பதிந்திருக்கிறது. அந்த பதிவைத்தான் யோகிகள் பிடித்துக் கொள்கிறார்கள். அந்தப் பதிவின் மூலம் பரமாத்ம சொரூபத்தை நெருங்குகிறார்கள். கடலும், நதியும், மலையும், மண்ணும், காற்றும், திசையும் அந்த ஒளிச்சக்தியே. புலன்களின் விழிப்பு அதைச் சேர்த்து பிடித்திருக்கும் மனம் இப்படி பிடிக்கப்பட்டிருப்பதை உணருகின்ற அறிவு இவற்றையெல்லாம் தாங்கியிருக்கின்ற சரீரம். இது அழியக்கூடியது. இப்படி அழியக்கூடியதை புரிந்து கொள்கிறபோதுதான் அழியாதது எது என்று கேள்வி வருகிறது.

இந்த கேள்வி என்ற குதிரைதான் பரமாத்மா என்ற உணர்வை தூண்டிவிட்டு பரமாத்மாவிடம் அழைத்துப் போகிறது. ‘‘மன்னா, நன்றாகப் புரிந்துகொள். பரமாத்மாவின் விளைவால் வந்த நீ, பரமாத்மாவின் பதிவை கொண்டிருக்கிறாய். இந்தப் பதிவு புலன்களாலும், அறிவாலும், மனதாலும் மறைக்கப்பட்டிருக்கிறது. இவையல்ல நான் என்ற புலன்கள், அறிவு, மனம், சரீரத்தை விலக்குகிறபோது எது நான் என்ற பெரும் திகைப்பு வரும். அன்னியத்தை தேடுவதுபோல ஒரு தேடல் துவங்கும். ஆனால் எது தேடுகிறதோ அது தன்னையே தேடிக்கொண்டிருக்கிறது. பரமாத்மாவின் பதிவே எது பரமாத்மா என்று அலைகிறது.

சமுத்திரத்தின் ஒரு துளி மேலெழும்பி எது சமுத்திரம் என்று கேள்வி எழுப்புவது போன்ற விஷயம் இது. விலகியிருந்து அது என்று பரமாத்மா உணரப்பட்டாலும் விலகலின் மூலம் வேறு எங்கோ இருக்கிறது. என்று தேடல் வந்தாலும் சட்டென்று அந்த துளி நீரில் விழ நானே சமுத்திரம், சமுத்திரமே நான் என்ற நிலை புரிந்து போகிறது. ‘‘இந்த விஷயத்தை என்னவிதமாய் வாக்கியமாக்கினாலும் புரிந்து கொள்ள முடியாது. இது உணரப்பட வேண்டியது. சொல்லற்று உணர்தல் என்ற நிலை எல்லோரிடமும் இருக்கிறது. இந்த பரமாத்மாவின் சொரூபத்தை ஊனக் கண்களால் காணமுடியாது.

பாம்புகள் கரையான் கட்டிய புற்றுகளில் தங்களை மறைத்துக் கொள்வதுபோல மனிதர்கள் கல்வியிலும், வித்தைகளிலும், தங்களை மறைத்துக் கொள்கிறார்கள்.  தாங்கள் அறிந்து வைத்திருப்பதையே ஞானம் என்கிறார்கள். பரமாத்மாவை தேடுபவர்களை ஏமாற்றுக்கார குருக்கள் தவறான பாதையில் அழைத்துப் போவார்கள். கட்டுக் கதைகள் சொல்வார்கள். பரமாத்மா சொரூபத்தை எந்தக் கதையில் அடக்க முடியும், எந்த வார்த்தையில் விளக்க முடியும்? பரமாத்மவிலிருந்து தெறித்த ஒரு விஷயத்தைத்தான் கொண்டாடலாம். இங்கே நீயும் தெறித்தது. நானும் தெறித்தது. அவரும் தெறித்தது. எல்லா உயிரினங்களும் தெறித்தவையே.

பரமாத்மாவை தேடுபவருக்கு இவையெல்லாம் ஒன்றே. ஒரே தகுதியான விஷயமே. ஒரேவிதமான தகுதியை உடையவர்களை வைத்து என்ன கதை சொல்ல முடியும்? ‘‘மேலும் கீழுமாக இருப்பவர்களைப் பற்றி, இடதும் வலதுமாக இருக்கிறவர்களைப் பற்றி, நல்லவன் கெட்டவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பிரிவினை போலும் நடக்கும். இந்தக் கதைகள் பரமாத்ம தத்துவத்தைக் காட்டாது. மாறாக எதிரானது. பரமாத்மாவை தேடி அலைந்தவனை சமய நெறிகளிளோ, சடங்குகளிளோ வேறு ஏதேனும் உயர்வு தாழ்வு சொல்லியோ அறிய முடியாது.

‘‘நானே எல்லாம் என்று இருக்கிறவனை என்னவென்று அழைப்பாய்? அவனை பாம்பு என்று அழைக்கலாம். பருந்து என்று சொல்லலாம். புலியும், கழுதையும் அவனே. யானையும் முதலையும் அவனே. புல்லும் மரமும் அவனே. ஆணும் பெண்ணும் அவனே. அப்படிப்பட்டவனுக்கு பெயரே இல்லை. இந்த உலகின் விதிமுறைகள் இல்லை.‘‘திருதராஷ்டிரா, நானே உனக்குத் தாய். நானே உனக்குத் தந்தை. நானே உன் புதல்வன். நானே உன் சேவகன். நானே பிதாமகன். நானே உன் எதிரி. நீங்கள் அனைவரும் என் ஆத்மாவில் இருக்கிறீர்கள். ஆனாலும் நீ என்னுடையவன் அல்ல.

நான் உன்னுடையவன் அல்ல. நான், நீ என்ற பேதமே இல்லாத ஒரு நிலையை புலன்களால், அவை மூலம் மேலெழும்பிய மனதால், அந்த மனதை அறிந்த அறிவால் புரிந்துகொள்வது கடினம். ஞானியினுடைய இருதய கமலத்திலே அந்த பரப்பிரம்மம் மிளிர்கிறது. அது பரமானந்தமாக இருக்கிறது. ‘‘இந்த நிலையே மனிதன் அடைய வேண்டிய நிலை. இதற்கே பிறப்பு, இறப்பு என்கிற அவஸ்தை. மனிதன் நிலைமை இவ்வாறு இருக்க, என் சொத்து உன் சொத்து, என் தேசம் உன் தேசம் என்கிற கூச்சலில் அர்த்தம் என்ன? இந்த உபதேசத்தை காதுகொடுத்து கேட்பதற்கு ஒரு தாபம் வேண்டும்.

வெறும் வாக்கியங்களால் இது பரிமாறப்பட மாட்டாது. இதுவரை நான் பேசியது போதும். நான் விடைபெறுகிறேன்.’’எழுந்து மன்னனை தடவிக் கொடுத்துவிட்டு அரச சபையை விட்டு விலகினார். திருதராஷ்டிரன் புரிந்தும் புரியாததுமாய் திகைத்துப்போய் உட்கார்ந்திருந்தார். மறுநாள் விடியலில் தூது போய் வந்த சஞ்சயனைக் காணும் ஆவலில் திருதராஷ்டிரன் தலைமையில் கௌரவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். வெள்ளை நிற சுண்ணம் அடிக்கப்பட்ட அகலமான சபையில் அவரவருக்குண்டான ஆசனங்களில் அமர்ந்தார்கள். தேர்களின் மணி ஒலிக்க, சஞ்சயன் சபையின் வாசலுக்கு வந்து சேர்ந்தான்.

கீழ் இறங்கி உள்ளே வந்து சபையை நமஸ்கரித்தான். ‘‘கௌரவர்களே நான் பாண்டவர்களிடம் சென்று திரும்பியுள்ளேன். பாண்டவர்கள் வயதுக்கேற்ப கௌரவர்கள் அனைவரையும் வணங்கினார்கள். பாராட்டினார்கள். பெரியவர்கள் அனைவருக்கும் தங்கள் வணக்கத்தை கூறச் சொன்னார்கள். சமவயது உடையவர்களுக்கு நட்பை தெரிவிக்கச் சொன்னார்கள். திருதராஷ்டிரன் கூறச் சொன்ன விஷயத்தை பாண்டவர்களிடம் சொல்லி விட்டேன். இப்பொழுது ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் கூறியுள்ள தர்மத்திற்கு அனுகூலமான பதிலை உங்களிடம் தெரிவிக்கிறேன். கவனத்தோடு கேளுங்கள்.’’

அந்த கௌரவ சபையில், யுத்த கள காட்சி பெரிதாய் விரிந்தது. ‘‘ஒரு யுத்தம் எவ்விதம் நடக்கும் என்ற குரூரத்தை அர்ஜுனன் ஒவ்வொரு சொல்லாலும் விவரித்தான். தன்னுடைய தீர பராக்கிரமத்தை மட்டும் விவரிக்காது, தன்னுடைய வெஞ்சினத்தை மட்டும் சொல்லாது, தன் கூட்டத்தாரின் தீர பராக்கிரமத்தை எடுத்துச் சொன்னான். குறிப்பாக தன்னைப் பின்னிறுத்தி பீமனை முன்னிறுத்தி பீமனுடைய கோபாவேசம் எப்படி தண்டிக்கும் என்று கூறினான். இது அவையடக்கம் மட்டும் அல்ல, ஒரு உண்மையும் கூட. ஏனெனில் அர்ஜுனனைக் காட்டிலும் திரௌபதி வஸ்திராபரணத்தில் அதிகம் மனம் நொந்தது பீமசேனனே.

அவன் ஆத்திரம், ரௌத்திரம், சொல்லுக்கு அடங்காததாய் இருந்தது. அதை சொல்லாக்க அர்ஜுனன் முயற்சி செய்தான். பயமுறுத்தினான். எச்சரித்தான். ‘‘சபையினரே, ஸ்ரீகிருஷ்ணனின் பெயரை முன்மொழிந்து அவனை அருகிலே இருக்க வைத்து, அவன் அறியும் வண்ணமே இந்த சுடுசொற்களை குந்தியின் மைந்தன் அர்ஜுனன் இறைத்தான். அவனது சபை அவன் பேச்சை மௌனமாய் தலையசைத்து ஆமோதித்தது. ‘‘சிறிதும் அறிவில்லாத, மூடனான, என்னை போரில் ஜெயிக்க முடியும் என்று கனவு கொண்டிருக்கிற கர்ணனின் தூண்டுதலால், என் சகோதரன் துரியோதனன் அடாது பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருக்கிறான்.

எது நியாயம் என்று தெரிந்தும், தெரிந்ததை மறைத்துக்கொண்டு ஒரு அதர்மத்தை தன்னுடைய நியாயமாகக் கொண்டிருக்கிறான். இது அவன் முற்பிறவியில் செய்த பாவத்தின் விளைவு. அதன் பலன், அவன் முன்பு யுத்தமாக வந்து நின்று பயமுறுத்துகிறது. அவனுக்கு எதிர் பக்கத்தில் பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அஸ்திரங்கள் தரித்த சாத்யகி, த்ருஷ்டத்யும்னன், சிகண்டி இவர்களோடு தேஜஸ்வியான யுதிஷ்டிரர் இருக்க, இவர்களை எதிர்த்து நிற்பது எவ்வளவு பெரிய மூடத்தனம்! ஆனால் சஞ்சயரே, துரியோதனன் யுத்தத்தில் இறங்கட்டும்.

தர்மாத்வான யுதிஷ்டர் காட்டில் வாசம்செய்து சரளைக் கல்லும், தூசும் நிரம்பிய படுக்கையில் எப்படி படுத்தாரோ அதைவிட மோசமான படுக்கையில் துரியோதனன் படுத்து தன் உயிரை விடவேண்டும். அவனிடம் சொல்லுங்கள். பாண்டவர்களை ஜெயிப்பது எளிது. வெட்கம், நாணம், தவம், புலனடக்கம், தர்மரட்சை, மேலும் செல்வத்தாலும் பாண்டவர்கள் மீது துரியோதனன் அதிகாரம் செலுத்த முடியும். அதாவது நல்ல குணங்களால் எங்கள் இதயத்தை வெல்ல முடியும். மற்ற சூளுரைகள் அவனுக்கு அழிவையே ஏற்படுத்தும். பன்னிரண்டு வருட வனவாசமும், ஒரு வருட அஞ்ஞாத வாசமும் எங்களை ஒரு நிலைக்கு கொண்டு வந்திருக்கின்றன.

பல ஆண்டுகளாக நாங்கள் அடக்கி வைத்த கோபம், யுத்தத்தில் வெளிப்படும். துரியோதனா, உன்னால் அல்லவோ உன்னால் அல்லவோ என்கிற ரௌத்ரம் எங்களிடமிருந்து பீறிடும். எங்களைக் காட்டிலும் எங்கள் ரௌத்ரம் பெரிது. அப்போது ஏற்படும் பயங்கர யுத்தத்தை கண்டு நீ கழிவிரக்கம் கொள்வாய். தெரியாமல் தொட்டு விட்டேனே என்று அக்னியை அணைத்தவன் போல் பதறி மனம் விலகுவாய். கோடைகாலத்தில் கொழுந்து விட்டு எரியும் நெருப்பு எல்லா பக்கங்களையும் தகித்து துரும்பு, புல், மரம், காடு அனைத்தையும் எரித்து சாம்பலாக்குவதுபோல துரியோதனன் பக்கத்து அத்தனை வீரர்களும் யுதிஷ்டருடைய கோபத்தால் நாசமடையப் போகிறார்கள்.

‘‘தன் கதையை எடுத்துக் கொண்டு பீமசேனன் கௌரவ படைகளுக்கு நடுவே புகும்போது இவ்வளவு மோசமானதா யுத்தம் என்று துரியோதனன் கலங்க நேரிடும். கையுறையும், கவசமும் தரித்து தன் பக்கத்து படை வீரர்களும் தன்னை காணாத விதமாய் வெகு வேகத்தோடு பீமசேனன் கௌரவப் படைகளுக்குள் புக, அவன் செய்வதறியாது திகைக்கப் போகிறான். செய்ததை நினைத்து வருந்தப் போகிறான். கௌரவப் படையிலுள்ள பெரிய யானைகளை, பீமசேனன் கதையால் அடித்துக் கொன்று பொங்குகின்ற ரத்தம் தரையை நனைக்கும் கோரக் காட்சியைக் கண்டு துரியோதனன் நடுங்கப் போகிறான்.

விவரம் தெரியாமல் நான் போரைத் துவங்கி பெரிய தவறு செய்தேன் என்று பேதலிக்கப்போகிறான். வைக்கோல் குடிசைகள் உள்ள கிராமம் தீயினால் நாசமடைவது போல, பழுத்த வயல் ஒற்றை மின்னலினால் எரிந்து சாம்பலாவதைப் போல, மிக விரைவில் துரியோதனன் படை நஷ்டம் அடைய தன் கூட்டம் எங்கே தன்னை அண்டியவர்கள் எங்கே என்று தேடித் தேடி துரியோதனன் தவிக்கப் போகிறான். ‘‘விசித்திர முறையில் போர் செய்யும் நகுலன், கௌரவப்படை வீரர்கள் தலையை வெட்டி குவியல் குவியலாகப் போடுவான். விஷ அம்புகளை தேர்ந்தெடுப்பதில் வல்லவனான சகாதேவன் அவன் வித்தையை செய்து காட்டும் போது தெரியாமல் போர் ஆரம்பித்தோமே என்று துரியோதனன் தவிப்பான்.

வயதில் சிறியவராக இருந்தாலும் திரௌபதியின் ஐந்து புதல்வர்களும் தங்கள் உயிரின் மீதுள்ள ஆசையை விட்டுவிட்டு மிக வேகமாக கௌரவப் படையை நாசம் செய்வார்கள். சத்தமே வராத தேர் சக்கரத்தை கொண்ட சகாதேவன், போர் நடக்கின்ற இடத்தில் எல்லா பக்கங்களிலும் காணப்படுவான். கௌரவப் படையை மிரளச் செய்வான். இப்பேர்பட்ட வீரனா சகாதேவன் இவர்களையா பகைத்துக் கொண்டோம் என்று துரியோதனனுக்கு துக்கம் எழும். ‘‘அபிமன்யு சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணனைப் போன்ற பராக்கிரமம் கொண்டவன். போர்க்கலையில் வல்லவன்.

அவனது அம்புகள் மேகத்தைப் போல அடர்த்தியாக வானத்தில் பறந்து தரையில் மிக வேகமாக இறங்கும். அதை தடுக்க எந்த கவசத்தாலும் இயலாது. சுபத்ராவின் குமாரன் அவனும் வயதில் சிறியவன். ஆனால் ஒரு காலனைப்போல பகைவரை தாக்குவான். இந்த சிறுவர்களிடமெல்லாம் நான் அடிபட வேண்டுமா, ஏனடா இந்தப் போரை துவங்கினேன் என்று துரியோதனன் வருத்தப்படப் போகிறான்.‘‘விராட மன்னனான துருபதன் அஸ்திர வித்தையில் நிபுணன். அவன் மனம், படுகாயப்பட்டிருக்கிறது. கௌரவர்களின் செயலால் அவன் கோபமுற்று இருக்கிறான். அந்த கோபத்தோடு அவன் பகைவர்களை சுழட்டி அடிக்க துரியோதனனுக்கு உண்மையில் பயம் உண்டாகும்.

‘‘கௌரவரின் பக்கம் மிகச்சிறந்த வில்லாளி யார்? மகாரதி யார்? பீஷ்மர். இவர் சிகண்டியால் கொல்லப்படப் போகிறார். இது கிட்டத்தட்ட நடந்து முடிந்த கதை. இந்த சாபத்தை பீஷ்மரும் அறிவார். அந்த சிகண்டி எங்கள் பக்கம் இருக்கும்போது வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று ஒருவருக்கு தெளிவாகத் தெரியும். இந்த யுத்தத்தில் பீஷ்மர் மரணமடைவார் என்றால் யார் ஜெயித்ததாக அர்த்தம்? வேறு எவருக்கும் சொல்லித் தரப்படாத அஸ்திர ரகசியங்களை துரோணாச்சாரியார் த்ருஷ்டத்யும்னனுக்குச் சொல்லிக் கொடுத்தார். அவன் துரோணரைப் பழிவாங்க காத்திருக்கிறான். பாண்டவர்களுக்கான போரில் அவன் கலந்துகொண்டு தன் பழைய வெஞ்சினத்தை, எடுத்த சபதத்தை தீர்த்துக் கொள்ளப் போகிறான்.

இதனால் துரியோதனனுக்கு நஷ்டம். துரோணர் கடுமையாக தாக்கப்பட்டு சோர்ந்து விழுவதை துரியோதனன் காணும்போது அவனுக்கு பச்சாதாபம் உண்டாகும். போரில் வெற்றிபெற தேவையான கோபம், மனவேதனை, அதனால் எழுந்த மும்முரம் யார் பக்கம் இருக்கிறது என்பதை துரியோதனன் யோசிக்க வேண்டும். ‘‘எங்கள் அணியின் பக்கம் சாத்விகி இருக்கிறார். அவர் யுத்தத்தில் நிபுணர். இடையறாது யுத்தத்தை வேண்டுபவர். இந்தப் போர் குறித்து அவர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். துரியோதனனின் படைத் தளபதிகளை கடுமையாக துன்புறுத்தப் போகிறார்.

எல்லாவிதமான அஸ்திரங்களும் யதுகுல திலகரான சாத்விகியிடம் நிரம்பியிருக்கிறது. விசித்திரமான அவரது அஸ்திரப் பிரயோகம் காணும்பொழுது துரியோதனன் துயரப்படப் போகிறான். ‘‘தங்க மணிகள் சூட்டப்பட்டதும், வெண்ணிற குதிரைகளில் பூட்டப்பட்டதும், ஹனுமன் கொடி பறப்பதுமான என் தேரை பார்க்கும் பொழுதே மந்த புத்திக்காரனான துரியோதனன் கவலையடைவான். சோர்வு கொள்வான். நான் காண்டீப வில்லை அதிரச் செய்வேன். அந்த அதிர்ச்சி துரியோதனன் வயிற்றைப்பிசையும். அவன் படை வீரர்கள் தன்னை மறந்து பயந்து கலைந்து ஓடுவார்கள்.

அப்படி ஓடுகின்ற வீரர்களை தலையைக் கொய்வதும், மர்ம ஸ்தானத்தை பிளப்பதும், எலும்புகளை உடைத்து ஊனமாக்குவதுமான என் அஸ்திர பிரயோகங்களை துரியோதனன் இதுவரை பார்த்ததேயில்லை. போரில் அவன் பக்கமிருந்து வரும் அம்புகளை என் அம்புகள் இடித்துத் திருப்பும். மேற்கொண்டு இலக்கைத் தாக்கும். இது என்ன, எப்படி என்று இனிதான் துரியோதனன் யோசனை செய்வான். இதைவிட கீழ்த்தரமான நிலை ஒரு போதும் வீரனுக்கு ஏற்படாது. மற்ற நேரமெல்லாம் சூளுரை பேசிவிட்டு போர் நிகழ்கின்ற காலத்தில் திகைத்துப் போய் நிற்கிறவனை க்ஷத்திரயினாக கருத முடியாது.

‘‘எப்போதும் கோபத்தின் உச்சியில் இருக்கின்ற துரியோதனன் அதற்கு நேர்மாறான குணத்தோடு அதாவது காயம்பட்டு அலறுகின்ற மனத்தோடு இருக்கிற பொழுது எதற்கு இந்த வலி, ஏன் இதில் சிக்கிக் கொண்டோம் என்று வருத்தப்படுவான். சபையோர்களே, அர்ஜுனன் சொன்ன சிறிய நிகழ்ச்சி ஒன்றை கேளுங்கள். ‘‘மாலை நேரம். சந்தியாவந்தனம் செய்துவிட்டு அமரும்போது தெய்வீகமான தோற்றமுடைய ஒரு பிராமணன் அர்ஜுனனுக்கு அருகே வந்து, ‘ஏ சன்யாஸி, நீ போருக்குத் துடிப்பது தெரியும். உனக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும்.

உச்சைச்ரவஸ் என்கிற என் குதிரையோடு உனக்கு முன்னே உனக்கு வழி ஏற்படுத்தி நான் போர்களத்தில் புகட்டுமா? அல்லது ஸ்ரீகிருஷ்ணர் தேர் ஓட்ட அதில் நீ காண்டீபத்தோடு போக, உனக்குப் பின்னே துணையாக வரட்டுமா?’ என்று கேட்டான். வந்தவன் இந்திரன் என்று அர்ஜுனன் அறிந்து கொண்டான். வணங்கினான். சபையோர்களே, இதன் மூலம் அவன் பக்க போருக்கு தேவர்களின் ஆசி உண்டு என்று அர்ஜுனன் சொல்கிறான். சரி, எங்கள் பக்கம் இருக்கின்ற ஸ்ரீகிருஷ்ணரை இந்த உலகில் யாரால் ஜெயிக்க முடியும்? கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பை கைகளால் அணைக்கும் மூடனும் உலகில் இருக்கிறானா?

போஜ வம்சத்து மன்னர்களை தோற்கடித்து ருக்மிணியை தன் மனைவியாக அடைந்தான். பிருத்யும்னன் என்ற பெரும் வீரனை வீழ்த்தினார். காந்தார தேசத்து போர் வீரர்களை தன் பலத்தால் அழித்தார். பாண்டிய மன்னரை தராசு தட்டால் கொன்றார். கலிங்க நாட்டு வீரர்களை நசுக்கினார். உலகமே போற்றும் காசியை பல ஆண்டுகள் அனாதியாக இருக்கும்படி செய்தார். உக்ரசேனனுடைய புதல்வன் கம்சன் அவன் சபையில் வலியப் போய் யுத்தம் செய்து கம்சனைக் கொன்றார். கம்சனிரிங் தகப்பன் உக்ரசேனனுக்கு ராஜ்ஜியத்தை திரும்ப கொடுத்தார்.

பூமியின் புதல்வனான நரகாசுரனை கடினமான முறையில் ஜெயித்தார். முரன் என்கிற தைத்யனையும், ராட்சஸ சமூகத்தையும் அழித்து நிர்மோசன் என்ற நகரத்திற்குள் புகுந்தார். கிருஷ்ணரின் போரிடுகின்ற வல்லமையையும், அந்த தர்மத்தையும் அறிந்த தேவர்கள், பகைவர்களுடைய ஆயுதங்களால் அவருக்கு காயம் ஏற்படாத உடம்பையும், கலக்கமற்ற மனதையும் கொடுத்தார்கள். அந்த ஸ்ரீகிருஷ்ணர் எங்கள் பக்கம். ஆயுதம் எடுக்காது போனாலும் அழிக்க முடியாத அவரை வென்றுவிட்டு அல்லவா துரியோதனன் எங்களை நோக்கி வரமுடியும்? ஸ்ரீகிருஷ்ணர் இருக்கிறவரை எங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. ஆகவே எங்கள் கையால் துரியோதனன் மரணமடைவது திண்ணம்.

‘‘மனிதனுடைய பாவ கர்மங்கள் பலனின்றிப் போகாது. புண்ணிய கர்மங்கள் நல்லதுப் செய்யாது போகாது. துரியோதனனுடைய பாவ கர்மங்கள் பழுத்து விட்டன. தன் சகோதர கூட்டத்துடன் அவன் கொல்லப்படப் போகிறான். போர் என்று ஒன்று வந்தால் கௌரவர்கள் ஒருவர் கூட உயிருடன் இருக்க மாட்டார். துரியோதனன் தன்னுடைய அன்பான மனைவியர்களுடன் கூடி சுகம் பெறட்டும். நல்ல உணவுகளை உண்டும், பஞ்சணையில் படுத்தும், சுனைகளில் நீராடியும் உலக போகத்தை விரைவில் அனுபவிக்கட்டும். ஏனெனில் அவனுக்கு முடிவு நெருங்கி விட்டது.‘‘தெய்வ சம்பந்தமுடைய நல்ல ஜோதிடர்கள் அஸ்தினாபுரத்து அரண்மனையில் இருக்கிறார்கள்.

அதைச் சுற்றியுள்ள நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்கள் காலக்கணக்கை மிகத்துல்லியமாக அறியக்கூடியவர்கள். அதை விவரித்துப்பேசி வியப்பில் ஆழ்த்துகிறவர்கள். அப்பேர்பட்ட கெட்டிக்காரர்களை அணுகி தன்னுடைய நிலை என்ன ஆகும் எப்போது, எங்கே, எவ்விதம் முடிவு என்று தெரிந்து கொள்ளட்டும். அந்த ஜோதிடர்கள் எந்த பயமும் இன்றி அவனுக்கு உண்மையைக் கூறுவார்கள். அதைப் புரிந்துகொண்டு இந்தப் போரிலிருந்து அவன் விலகியிருக்கட்டும். போர் என்று ஒன்று வந்தால் அதன் பாதிப்பு சகல இடங்களிலும் இருக்கும். துரியோதனனைச் சார்ந்த பொது மக்களுக்காக நான் துயர் கொள்கிறேன். ஒரு காட்டில் தீ பற்றும்போது அதில் சிறிய, பெரிய, நடுத்தர மரம் எதுவும் விடுவதில்லை.

(தொடரும்)

- பாலகுாரன்