பிரசாதங்கள்



* ஆடி பால்

என்னென்ன தேவை?

பால் - 1 லிட்டர்,
சர்க்கரை - 1 கப்,
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்,
பாதாம் - 50 கிராம்,
வெள்ளரி விதை - 1/2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - தலா 1/4 டீஸ்பூன்,
அலங்கரிக்க பாதாம், பிஸ்தா சீவல் - தேவைக்கு ஏற்ப.

எப்படிச் செய்வது?

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து மிக்சியில் நைசாக அரைக்கவும். பாலை சுண்டக்காய்ச்சி ஆறவைத்து அதில் பாதாம் விழுது, சோம்பு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள் கலந்து, மிதமான தீயில் வைத்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி பாதாம், பிஸ்தா சீவல், வெள்ளரி விதை, குங்குமப்பூ தூவி பரிமாறவும். விரும்பினால் சிறிது பாலில் குங்குமப்பூவை கலந்து ஊற்றி கொதிக்க விடலாம்.

* தேங்காய்ப்பால் அப்பள சாதம்

என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
அப்பளம் அல்லது மசாலா அப்பளம் - 4,
திக்கான தேங்காய்ப்பால் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
உடைத்த முந்திரி - 10,
பொடித்த காய்ந்தமிளகாய் - 4,
கீறிய பச்சைமிளகாய் - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

அரிசியை சுத்தம் செய்து கழுவி, உப்பு சேர்த்து உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். சூடாக இருக்கும்போதே அதில் தேங்காய்ப்பால் ஊற்றி கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை ஒவ்வொன்றாக பொன்னிறமாக தாளித்து சாதத்தில் கொட்டி கலந்து பரிமாறும்போது அப்பளத்தை பொடித்து சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

குறிப்பு: பரிமாறும்போதுதான் அப்பளத்தை உடைத்து சாதத்தில் கலக்க வேண்டும்.

* மக்கன் பேடா

என்னென்ன தேவை?

மாவிற்கு:

ரெடிமேட் குலோப்ஜாமூன் மிக்ஸ் - 1 கப்,
பனீர் துருவல் - 1/4 கப்,
மைதா - 1 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை.

பூரணத்திற்கு:

கலந்த நட்ஸ் கலவை - 1/2 கப்,
பொடித்த காய்ந்த திராட்சை - 10.

பாகிற்கு:

சர்க்கரை - 1-1½ கப்,
தண்ணீர் - 1½ கப்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
பொரிக்க நெய் அல்லது எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து தேன் போன்ற பாகு பதத்திற்கு வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை கலந்து வைக்கவும். மாவிற்கு கொடுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 10 நிமிடம் மூடி போட்டு வைக்கவும். பின்பு சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து உள்ளே 1 டீஸ்பூன் பூரணத்தை வைத்து மூடி, உருண்டையாகவோ அல்லது விருப்பமான வடிவிலோ செய்து மிதமான தீயில் வைத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து சர்க்கரைப்பாகில் போட்டு 2 மணி நேரம் ஊறவிட்டு எடுத்து பரிமாறவும்.

* பொரித்த கூட்டு

என்னென்ன தேவை?

புடலங்காய் - 1/2 கிலோ,
பாசிப்பருப்பு - 1/2 கப்,
கீறிய பச்சைமிளகாய் - 3,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்,
உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி - 6, சீரகம்,
மஞ்சள் தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பால் அல்லது தேங்காய்ப்பால் - 1/2 கப்.
தாளிக்க கடுகு, உளுந்து - தலா 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து குழையாமல் வேகவைத்து எடுக்கவும். கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சிறு தீயில் வைத்து சீரகம், உளுத்தம்பருப்பு, முந்திரியை வறுத்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் கலந்து ஆறியதும் மிக்சியில் நைசாக அரைக்கவும். புடலங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேகவிடவும். காய் முக்கால் பதம் வெந்ததும் பாசிப்பருப்பு, அரைத்த விழுதை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். பிறகு பால் சேர்த்து கலந்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கூட்டில் கொட்டி கலந்து இறக்கவும்.

* தினை அரிசி வடை

என்னென்ன தேவை?

தினை அரிசி, துவரம்பருப்பு - தலா 200 கிராம்,
உப்பு - தேவைக்கு,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது,
பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

தினை அரிசி, துவரம்பருப்பை சுத்தம் செய்து 1/2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து காய்ந்த மிளகாய், உப்பு போட்டு கொரகொரப்பாக அரைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு கலந்து வடையாக தட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி மிதமான தீயில் வைத்து வடைகளை போட்டு பொரித்தெடுத்து  எண்ணெயை வடித்து பரிமாறவும்.

தினை அரிசி வடை - இரண்டாம் வகை


என்னென்ன தேவை?

தினை அரிசி - 200 கிராம்,
துவரம்பருப்பு - 150 கிராம்,
கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு - தலா 50 கிராம்,
சீரகம், பொடித்த இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
உளுந்து - 1/2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய சின்னவெங்காயம் - 1 கப்,
பச்சைமிளகாய் - 4,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
தேங்காய் - 1 துண்டு,
உப்பு தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பருப்பு வகைகளை ஊறவைத்து தண்ணீரை வடித்து தேங்காய்த்துண்டுடன் சேர்த்து அரைத்து வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, பெருங்காயத்தூள் போட்டு ஊற்றும் பதத்திற்கு கலந்து சூடான எண்ணெயில் ஒரு குழிக்கரண்டியில் ஊற்றி பொன்னிறமாக பொரித்தெடுத்து பரிமாறவும்.

* டிரைஃப்ரூட் அல்வா


என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 3/4 கப்,
வெல்லத் துருவல் - 1/4 கப்,
தேங்காய்ப்பால் - 1 கப்,
குங்குமப்பூ - சிறிது,
பொடியாக நறுக்கிய நட்ஸ், ட்ரைஃப்ரூட்ஸ் - தேவைக்கு ஏற்ப.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் தேங்காய்ப்பால், அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து, அடுப்பில் சிறு தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும். சிறிது கெட்டியானதும் வெல்லத் துருவல் சேர்த்து 2 நிமிடம் கிளறி திக்கான பதத்திற்கு வந்ததும் பாதி அளவு நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ் கலந்து சிறு சிறு கிண்ணத்தில் ஊற்றி, மேலே மீதியுள்ள நட்ஸ், டிரைஃப்ரூட்ஸ், குங்குமப்பூவால் அலங்கரித்து அல்வா மாதிரி செட்டானதும் பரிமாறவும்.

- சந்திரலேகா ராமமூர்த்தி