வட இந்தியாவின் ஸ்ரீவில்லிப்புத்தூர்



ஸ்ரீவிஜயலட்சுமி சுப்பிரமணியம்

மஹாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் பூர்ண அவதாரங்களாகப் போற்றப்படும் ஸ்ரீராம மற்றும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரங்களுக்கென்று இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீகிருஷ்ண பகவான் மன்னார் என்ற திருநாமத்தோடு ஒரு சில ஆலயங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். துவாரகாபதியின் மன்னராகத் திகழ்ந்த ஸ்ரீகிருஷ்ணரை மன்னார் என்று பெயரிட்டு பக்தர்கள் மகிழ்கின்றனர். இந்த மன்னார் ஆலயங்களில் ஸ்ரீ கிருஷ்ணர் பகவான் பசுக்களை மேய்ப்பவராக ஸ்ரீராஜகோபாலன் என்ற திருநாமத்தில் பசுக்களுடன் காட்சி தருவது மரபு.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தட்சிண துவாரகை என்று போற்றப்படும், ராஜமன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி ஆலயம் மிகப் பிரபலமானது. மேலும், தமிழ்நாட்டில் திருவரங்கத்து எம்பெருமான் ரங்கமன்னார் என்ற திருநாமத்தில் காட்சி தரும் பிரபலமான திருக்கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவிலாகும். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மன்னார்கோவில் ஆகிய தலங்களிலும் மன்னார் என்ற பெயரில் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கொண்டுள்ளார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் ஸ்ரீரங்கமன்னார், தன் இடப்புறத்தில் கருடனின் அம்சமாக அவதரித்த ஸ்ரீபெரியாழ்வார் மற்றும் வலப்புறம் ஸ்ரீஆண்டாள் சகிதமாக திருமணக் கோலத்தில் காட்சி தருகிறார். இதே காட்சியை அம்பாசமுத்திரம் அருகில் உள்ள மன்னார்கோவில் ஸ்ரீ வேதநாராயணப் பெருமாள் ஆலயத்திலும் காணலாம். திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீரங்கநாதர் கண்ணனாக வந்து அவளைக் கரம் பிடித்ததன் நிகழ்ச்சியின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் பங்குனி உத்திர நாளன்று வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூரையே கண்ணன் பிறந்து வளர்ந்து லீலைகள் செய்த விரஜா பூமி என்ற பிருந்தாவனமாக கோதா தேவி பாவித்ததோடு தன் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி, திருப் பாசுரங்களில் தன் வாழ்நாள் முழுதும் பிருந்தாவனத்தில் கண்ணன் காலடியில் கழிக்கவேண்டும்,  கண்ணபிரானையே கணவனாக அடையவேண்டும். கண்ணபிரானுக்கு “நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்” (நாச்சியார் திருமொழி) என்ற மூன்று ஆசைகளை வெளிப்படுத்தியிருக்கிறாள். இவற்றில் பின்னிரு ஆசைகளும் நிறைவேறிவிட்டன.

அரங்கன் ஆண்டாள் இருக்குமிடமான ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து  மணம் புரிந்து கொண்டது, ஸ்ரீராமானுஜர் திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் விரும்பியவாறே நூறு தடா நிறைய அக்கார அடிசில் சமர்ப்பித்தது என இரண்டு ஆசைகளும் நிறைவேறின. ஸ்ரீவில்லிப்புதூர் வந்த ஸ்ரீ ராமானுஜர் ஆண்டாளை சேவித்த போது  அகமகிழ்ந்த ஆண்டாள் அவரை தன் அண்ணனாக பாவித்து வரவேற்றதாக ஐதீகம். எனவே, ஸ்ரீ ராமானுஜருக்குரிய பல பெயர்களில் கோவில் அண்ணன் என்பதும் ஒன்றாயிற்று. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் இன்னொரு ஆசையான பிருந்தாவன வாசத்தை ஸ்ரீபெரும்புதூருக்கு அருகில் அகரம் என்ற ஊரில் அவதரித்த வைணவப் பெரியவர் ஒருவர்,

விருந்தாவனத்தில் ஒரு பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்பி, அதில் ஸ்ரீஆண்டாள், ரங்கமன்னார், பெரியாழ்வார் ஆகியோரைப் பிரதிஷ்டை செய்து, நிறைவேற்றி வைத்துள்ளார். அவர் எழுப்பிய ஆலயமே ஸ்ரீரங்கஜி மந்திர் என்று அனைவராலும் போற்றப்படுகிறது. வடநாட்டில் நம் தமிழ்நாட்டுப் பாணியில் அமைந்த மிகப் பெரிய ஆலயம் என்ற பெருமைக்குரியது இது. தெலங்கானா மாநிலம், யேதுலாபாத்திலுள்ள ஸ்ரீ கோதா ரங்கநாயக ஸ்வாமி ஆலயமும், சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீகோதாதேவி ரங்கமன்னாருக்கென்று அப்பளாச்சார்யா அப்பண்ண ஐயங்கார் என்பவரால் எழுப்பப்பட்ட ஆலயமாகும். இந்த ஆலயமும் பக்தர்களால் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இணையாகக் கருதப்படுகிறது).

ஸ்ரீபெரும்புதூருக்கு அருகிலுள்ள அகரம் என்ற சிறிய கிராமத்தில் 1809 ஆம் ஆண்டு ஸ்ரீநிவாஸாச்சார்யார்-ரங்கநாயகி தம்பதிக்கு புதல்வராக அவதரித்தவர் ஸ்ரீரங்கதேசிக ஸ்வாமிஜி அவர்கள். இளம் வயதிலேயே வேத, வேதாங்கங்கள், சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்த அவர் காஞ்சிபுரம் சென்று அனந்தாச்சார்யார் என்பவரிடம் வாதம் செய்து வெற்றி கண்டவர். அனந்தாச்சார்யார் அவர்களுடன் வட நாட்டு யாத்திரை சென்றபோது, பிருந்தாவன் கோவர்த்தன் பீடத்தில்  மடாதிபதியாக வீற்றிருந்த ஸ்ரீநிவாஸாசார்யாரைச் சந்தித்து, பின்னர் காசி சென்று மேலும் வேதங்களை நன்கு கற்றுத் தேர்ந்து திரும்பிய பின்னர் கோவர்த்தன் பீட தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார்.

அக்காலத்தில் வைணவத்தையும் ஸ்ரீராமானுஜ சம்பிரதாயத்தையும், வட மாநிலங்களில் பரப்புவதில் முன்னணியில்நின்றஸ்ரீரங்க தேசிக ஸ்வாமிஜியை பாமர மக்களும் பிரபுக்களும் போற்றி வணங்கினர். ஜைன மதத்தைச் சேர்ந்த பலர் அவர் உரைகளில் ஈடுபட்டு வைணவத்தைத் தழுவினர் என்பது ஒரு சிறப்பாகும்.  ஜைன மதத்தைச் சார்ந்த செல்வந்தர்களான ஸ்ரீ ராதாகிருஷ்ணாஜியும் அவரது சகோதரர் கோவிந்த தாஸ்ஜியும் அவருடையசீடர்களாக மாறினர். அவர்களிடம், தென்னிந்திய ஆலய அமைப்பு, சம்பிரதாயங்கள், உற்சவங்கள் பற்றி விரிவாக எடுத்துக் கூறிய ஸ்ரீ ரங்க தேசிக ஸ்வாமிஜி ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த ஆண்டாள்,  

தான் தன் வாழ்நாளை விருந்தாவனில் கண்ணன் காலடியில் கழிக்கவேண்டும் என்று விரும்பியதைச் சுட்டிக் காட்டியபோது, அவர்கள் இருவரும்  விருந்தாவனத்தில் கோதா தேவிக்கு அழகிய கோவில் ஒன்று அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்ததோடு, அதற்கான செலவினையும் ஏற்க முன் வந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு அவர் திருவரங்கம் வந்து திருவரங்க ஆலயத்தைச் சுற்றிக் காட்டி, அது போன்று விருந்தாவனத்தில் அழகிய ஆலயம் அமைப்பதற்கான அனுமதியையும் திருவரங்கப் பெருமாளிடத்தில் கேட்டுப் பெற்றார். திருவரங்கத்திலிருந்து தலைசிறந்த ஸ்தபதிகளையும், சிற்பிகளையும்,

ஆலயக் கட்டுமானப் பணியாளர்களையும் விருந்தாவனுக்கு அழைத்து வந்து ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் ஆலயத் திருப்பணியை அவர் துவக்கினார். 1843ல் துவங்கி, 1850 வரை ஏழு ஆண்டுகள் நடைபெற்ற இந்த பெரிய ஆலயக் கட்டுமானப் பணிக்கு அக்காலத்தில் செலவழிக்கப்பட்ட தொகை வெறும் 45 லட்சம் ரூபாய் மட்டுமே என்று கூறப்படுகிறது. ஐந்து பிராகாரங்களையும், சிறிதும் பெரிதுமான எட்டு கோபுரங்களையும் கொண்ட இந்தப் பிரம்மாண்டமான ஆலயத்தின் வெளி மதில் சுவர் 770 அடி நீளமும், 440 அடி அகலமும் கொண்டது.

பெரும்பாலும் தமிழ்நாட்டு ஆலயக் கட்டுமானப் பாணியையும், ஒரு சில இடங்களில் வட இந்திய கட்டுமானப் பாணியையும் கலந்து உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்தில் தமிழ்நாட்டு வைணவக் கோவில்கள் போன்றே பூஜைகளும், உற்சவங்களும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதோடு திருவரங்கம் போன்றே வழிபாட்டு, உற்சவ சம்பிரதாயங்களையும் ஸ்ரீரங்கதேசிக ஸ்வாமிஜி அறிமுகம் செய்தார். ஸ்ரீவேணுகோபாலனை தன் இஷ்ட தெய்வமாக வழிபட்டுக் கொண்டு வந்த ஸ்ரீரங்கதேசிக ஸ்வாமிஜி  வயது முதிர்ந்த காலத்தில் அனைத்தையும் துறந்து பழங்களை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்தார்.

விருந்தாவனில் குடியேறவேண்டும் என்ற ஸ்ரீகோதா தேவியின் ஆசையை நிறைவேற்றி வைத்த மன நிறைவோடு அவர் 1873ல் மறைந்தார். நாலாயிர திவ்யப் பிரபந்தகளுக்கான மணிப் பிரவாள உரைகளை அழகிய வடமொழியில் மொழி பெயர்த்துள்ள ஸ்ரீதேசிகன் ஸ்ரீராமானுஜ சம்பிரதாயத்தை வட மாநிலத்தவர் நன்கு அறிந்து கொள்கின்ற வகையில் பல நூல்களை வடமொழி மற்றும் இந்தியில் மொழி பெயர்த்தும், புதிய நூல்களை உருவாக்கியவர் என்ற பெருமைகளை உடையவர். உத்திரப் பிரதேச மாநிலம், மதுரா மாவட்டமும், அதில் உள்ள விருந்தாவன் என்ற பிருந்தாவனமும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் எண்ணற்ற லீலைகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை.,

ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரீதியான துளசி பிருந்தா தேவி என்றே போற்றப்படுகிறாள். ஒரு காலத்தில் துளசிச் செடிகள் (பிருந்தா அல்லது விருந்தா துளசியைக் குறிக்கும்) நிறைந்த துளசி வனமே பிருந்தாவனம் (விருந்தாவன்) என்று அழைக்கப்படுகிறது. மதுரா மற்றும் விருந்தாவன் தலங்களில் ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்குரிய சிறிதும் பெரிதுமான பல ஆலயங்கள் உள்ளன. இவற்றில் ஸ்ரீ பங்கேபிஹாரி, ஸ்ரீராதா ரமணர், ஸ்ரீராதா வல்லபர், ஸ்ரீராதா தாமோதரர், ஸ்ரீகோவிந்த்ஜி, ஸ்ரீமதன் மோகன், ஸ்ரீகோபிநாத்ஜி போன்ற ஆலயங்கள் குறிப்பிடத் தக்கவை.

ஸ்ரீகிருஷ்ண ஜன்ம பூமியான மதுராவில் உள்ள ஸ்ரீதுவாரகாதீஷ், ஸ்ரீகேசவ தேவ் மற்றும் பர்சார் ஸ்ரீராதா ராணி (ராதை அவதரித்த தலம்) ஆலயங்கள் மிகப் பிரபலமானவை. இந்த ஆலயங்களுக்கு நடுவே, விருந்தாவனில் அமைந்துள்ள ஸ்ரீரங்க்ஜி மந்திர் இங்குள்ள மிகப் பெரிய ஆலயம் என்பதோடு, வட மாநிலங்களில் பெரிய கோபுரத்துடன் அமைந்துள்ள தென்னிந்தியப் பாணி ஆலயங்களில் மிகப் பெரியது என்ற பெருமையைக் கொண்டது. கோதா விஹார் என்றே பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கஜி மந்திர் ஆலயத்தின் கிழக்கு மேற்கு வாயில்களை கோபுரங்கள் அலங்கரிக்க பிரதான நுழைவாயிலான மேற்கே ராஜஸ்தான் பாணியில் அரண்மனை முகப்பு போன்று வளைவுகளைக் கொண்ட பெரிய மாடம் அமைப்பு உள்ளது.

இதையடுத்து சிறிய கோபுரம் உள்ளது. கிழக்கு வாயிலை ஏழு கலசங்களைக் கொண்டு ஏழு நிலை கோபுரம் அலங்கரிக்கிறது. ஆலய வளாகத்தில் சுற்றிலும் கற்படிகளுடன் கூடிய அழகிய புஷ்கரணி உள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட நெடிதுயர்ந்த கொடிமரம், கருடன் சந்நதியை அடுத்து அமைந்துள்ள சபா மண்டபத்தின் தூண்களில் ராமாயணம், பாகவதம், மஹாபாரத நிகழ்ச்சிகளை சித்தரிக்கின்ற நுணுக்கமான புடைப்புச் சிற்பங்களைக் காணலாம். அடுத்தடுத்து அமைந்துள்ள பிராகாரங்களில் ஸ்ரீ ரகுநாத்ஜி, ஸ்ரீ ராமர், ஸ்ரீசுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வேணுகோபாலர், ஆழ்வார்கள்,

ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீநாத முனிகள்,ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீரங்கதேசிக ஸ்வாமிஜி ஆகியோர் சந்நதிகள் உள்ளன. மேலும், வைகுண்ட த்வாரம், வாகன அறைகள், ஸ்ரீகோதா ரங்கமன்னார் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் சீஷ் மஹால் (கண்ணாடி மண்டபம்) ஆகியவற்றோடு இந்த ஸ்ரீரங்கஜி மந்திர் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த சீஷ் மஹால் மற்றும் வாகன அறைகளில் உள்ள வாகனங்களை நுழைவுச் சீட்டு பெற்று பக்தர்கள் கண்டு களிக்கும் வசதியை நிர்வாகத்தினர் ஏற்படுத்தியுள்ளனர்.

கருவறையின் இருபுறங்களிலும் ஜய விஜயர்கள் காட்சி தர கருவறையின் நடுநாயகமாக ஸ்ரீரங்கமன்னாரும், (ஸ்ரீரங்கஜி) அவரது இடப்புறம் ஸ்ரீகோதா தேவியின் வளர்ப்புத் தந்தையான பெரியாழ்வார் கருடாம்சமாகவும், இடப்புறம் ஸ்ரீகோதா தேவியும் எழுந்தருளி அருட் பாலிக்கின்றனர். உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கும் மண்டபத்திலும், ரங்கமன்னார், கோதா தேவி, கருடன் ஆகியோரோடு சுதர்ஸனர், நித்யகோபால் (லட்டு கோபால்) மற்றும் போக, சயன மூர்த்திகள் காட்சி தருகின்றனர். ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும்ஸ்ரீ ரங்கமன்னாருக்கு பால் திருமஞ்சனம் செய்யப்படுவதோடு, மாலை ஸ்ரீஆண்டாள் பல்லக்கு உற்சவமும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வைணவ அர்ச்சகர்கள் பூஜை செய்கின்ற ஸ்ரீரங்கஜி ஆலயத்தில் தமிழ்நாட்டு வைணவ ஆலயங்களில் நடைபெறும் அனைத்து சிறப்பு உற்சவங்களுடன் வடநாட்டுப் பண்டிகைகள், உற்சவங்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. ஸ்ரீராமநவமி, ஜன்மாஷ்டமி, சுதர்ஸன ஜயந்தி, அன்னகூட், வசந்த் பஞ்சமி, ஹோலி ரங்க பஞ்சமி, கஜேந்திர மோட்சம், ஊஞ்சல் உற்சவம் போன்றவை இங்கு நடைபெறும் உற்சவங்களில் குறிப்பிடத் தக்கவை. பிரம்மோற்சவத்தின் போது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை மற்றும் ஐந்து நாட்கள் கழித்து கொண்டாடப்படும் ஸ்ரீரங்க பஞ்சமி ஆகிய நாட்களில் பக்தர்கள் ஸ்ரீ ரங்கநாதரோடு ஹோலி விளையாடிக் களிக்கின்றனர்.

இந்த ரங்க பஞ்சமி கொண்டாட்டம் ஸ்ரீபங்கே பிஹாரி ஆலயத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பிரம்மோற்சவத்தின் மூன்றாவது நாள் கருட சேவை, எட்டாவது நாள் திருத்தேர், பத்தாவது நாள் ஜல் உத்சவ் எனப்படும் யமுனையில் தீர்த்தவாரி ஆகியவை நடைபெறுகின்றன. திருவாடிப்பூரத்தன்று ஸ்ரீகோதா ரங்க மன்னார் திருக்கல்யாண உற்சவமும், மார்ச் ஏப்ரல் மாதங்களில் பிரம்மோற்சவமும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதத்தில் அன்றாடம் ஆண்டாள் திருப்பாவையை அனைவரும் பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்வதைக் காணலாம்.

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தின் போது ஸ்ரீரங்கமன்னார் வைகுண்டத்வாரம் எனப்படும் வைகுண்ட வாயில் வழியாக வெளியே வரும் போது, அவரைத் தொடர்ந்து ஆயிரக் கணக்கான  பக்தர்கள் திருப்பாவையை இசைத்தபடி வருகின்றனர். ஸ்ரீ சடகோப ஸூரி மஹராஜ் (சடகோபர் என்ற நம்மாழ்வார்) 4000 ஆண்டுகளுக்கு முன்பாக, தான் வைகுண்டம் செல்வதற்கு முன்னர் ஸ்ரீராம மற்றும் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளைக் காதாரக் கேட்கவேண்டும் என்று பெருமாளிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ஆழ்வாரின் ஆயுட்காலத்தை பத்து நாட்கள் நீட்டித்தார் என்றும்,

நம்மாழ்வார் பத்து நாட்கள் கழித்து பரமபதம் செல்லும், அந்தப் பத்து நாட்களே வைகுண்ட ஏகாதசி விழாவாகக் கொண்டாடப்படுகிறது என்றும் வட இந்திய பக்தர்கள் இந்த உற்சவத்தின் மகத்துவம் பற்றித் தெரிவிக்கின்றனர். கோடைகாலத்தில் அதிகாலை 5.30 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மீண்டும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் ஸ்ரீரங்கஜி மந்திர் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்படுகிறது. குளிர் காலத்தில் இந்த நேரங்கள் மாறுபடுகின்றன.

ஸ்ரீரங்கஜி மந்திர் 1867 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஸ்ரீ ரங்க்ஜி டிரஸ்ட் என்ற அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது. தற்போது கோவர்த்தன் பீடத்திற்கு, ஸ்ரீரங்க தேசிகாச்சார்ய ஸ்வாமிஜியின் காலத்திலிருந்து ஐந்தாவது பீடாதிபதியாக ஸ்ரீகோவர்த்தன் ரங்காச்சார்யா நிர்வகித்து வருகிறார். மதுராவிலிருந்து பதினைந்து கி.மீ. தொலைவிலும், இந்தியத் தலைநகரான டெல்லியிலிருந்து 150 கி.மீ. மற்றும் ஆக்ராவிலிருந்து 60 கி.மீ. தொலைவிலும் விருந்தாவன் உள்ளது. விருந்தாவன் ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் ஸ்ரீரங்க்ஜி ஆலயம் அமைந்துள்ளது.