ஆன்றோர் வழிசென்று உயர்வு பெறுவோம்!



மன இருள் அகற்றும் ஞானஒளி 37

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ் வாய்ச்சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்தெழுந்து அணவிமணிவண்ண உருவின்
மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிகொன்றை மலரும்
நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழிபுனலால் புகர்படு கங்கைக்
கண்டமென்னும் கடி நகரே!

- பெரியாழ்வார்

பெரியாழ்வாரின் அற்புதமான பாசுரங்களில் இந்தப் பாசுரமும் ஒன்று.  புனித நதியான கங்கை நதியின் அழகை மிக அற்புதமாக வர்ணித்திருக்கிறார் ஆழ்வார்.இந்தப் பாசுரத்தில் அமைந்துள்ள திவ்ய க்ஷேத்திரம் திருக்கண்டமென்னும் கடிநகர், தேவப்பிரயாகை என்று அழைக்கப்படுகிறது!

ரிஷிகேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்தத் தலம். இயற்கையின் மடியில் எழில் பொங்கும் மிகவும் ரம்மியமான இந்த இடத்தில்தான் கங்கை நதியும் யமுனை நதியும் ஒன்று கூடுகின்றன. தேவலோகத்திற்கு இணையான சக்தி இங்கு காணப்படுவதால் தேவப்பிரயாகை என்றும் மந்நாராயணனையே தேவனாகக் கருதி பிரம்மன் சிறந்த யாகம் நடத்தியதால் தேவப்பிரயாகை என்றும் அழைக்கப்பட்டதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இந்த இடத்தில் நீலமேகப் பெருமாளான புருஷோத்தமனும், புண்டரீகவல்லித் தாயாரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்கள்! பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றவுடன் எதிரிகளைக் கொன்ற பாவத்தைத் தீர்ப்பதற்காக தூய்மையான இந்தப் புனித கங்கை நதியில் நீராடி தானதர்மங்களை செய்து சகல பாவத்தையும் போக்கிக்கொண்டார்களாம். பரத்வாஜ முனிவர் இந்த இடத்தில் யாகம் செய்ததன் பலனாக சப்தரிஷிகளுள் ஒருவராக உயர்வு பெற்றார்.

இத்தகைய சிறப்புமிக்கத் தலத்தைப் பற்றி பெரியாழ்வார் பாசுரம் பெருமை பேசுகிறது. இதில் என்ன விசேஷம்? பிராவகமெடுத்துப் பொங்கி வரும் கங்கை நதியில் ‘நலம் திகழ் சடையான் முடிகொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்’ அடித்துச் செல்லப்படுகின்றன என்று நயம்பட உரைக்கிறார் பெரியாழ்வார்.
சிவபெருமான் தன் ஜடாமுடியில் சூடியுள்ள கொன்றை மலர்களும், நாராயணன் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படுகிற பாதத்துழாயும் அதாவது துளசி மாலையும் கலந்து கங்கை நதியில்
ஓடி வருகின்றனவாம். இதில் சில நுணுக்கமான விஷயங்கள் அடங்கி இருக்கின்றன.

சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யும்போது வில்வ தளத்தால் அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது. ஆனால், சிவபெருமான், தான் விரும்பித் தலையில் சூடிக்கொள்வது கொன்றை மலர்களைத்தான். அதேபோல் புனிதத்தன்மை நிறைந்த துளசியால் நாராயணனுக்கு அர்ச்சனை செய்கிறார்கள். ஆனால், மகாவிஷ்ணு விரும்பி அணிவது மாமலர் என்று போற்றப்படுகிற தாமரை மலர்மாலையைத்தான்.

‘நின்ற வினையும் துயரும் கெட மாமலர் ஏந்தி’ என்று திருமங்கையாழ்வார் இதை அழகாகத் தெரிவிக்கிறார். இதேபோல் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தன்னுடைய அருமையான தேவாரப் பதிகத்தில்

சொல்ல வருகிற செய்தி என்ன தெரியுமா?

‘பொன்னார் மேனியனே! புலித்தோலை    
அரைக்கசைத்து மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை  அணிந்தவனே!
மன்னே! மாமணியே! மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே; உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!’

உயிரை உருக்குகிற அற்புதமான தேவாரம். இந்த இனிய தேவாரத்தில் இடம் பெற்ற திருமழபாடி, திருவையாறிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அரியலூருக்குப் போகும் வழியில் இருக்கிறது. இங்கே கோலோச்சும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதர் பார்க்கப் பார்க்க திகட்டாத திவ்ய தரிசனம் அருள்கிறார். இந்திரன் வழிபட்ட தலம்.

அதைவிட சிவபெருமானின் இதயங் கவர்ந்தவரான நந்தியம்பெருமானுக்கு திருமணம் நடந்த இடம். கொள்ளிட ஆறு இங்கே வடக்கு முகமாகப் பாய்கிறது! ஒரு காலத்தில் இது மழவர் பகுதியாக இருந்தது கொல்லிமழவன் என்கிற அரசனின் சேனைப்படைகள் தங்கிய இடம். இப்படி பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டது, திருமழபாடி, சிவபெருமானை தனது நண்பனாகப் பாவிப்பவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சிவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? பொன்னார் மேனியன். தகதக என்று ஜொலிக்கிறவன். அவன் ஏதோ காட்டில் அரை ஆடை அணிந்தவன் இல்லை.

அவனுக்கு என்ன ஆடைகளுக்காக பஞ்சம்? அவன் திகம்பரன். திசைகளையே ஆடைகளாக அணிந்தவன்! அழகிய மஞ்சள் வண்ணம் கொண்ட கொன்றை மலர்களை தலையில் சூடுகிறவன். திருமழபாடியுள் மாணிக்கமாக ஜொலிப்பவன். ‘உன்னை எப்படி என்னால் மறக்க முடியும்?’ என்று நெகிழ்ந்து கதறுகிறார், ஏங்கித் தவிக்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.

வடக்கே இமயத்தில் பெரு நிலப்பரப்பில்  ஓடிவரும் கங்கை நதியிலே மிக அழகான கொன்றை மலரும் அற்புத மணம் ெபாருந்திய துளசியும் ஒன்றாக கலந்து வருகின்றன என்கிறார் பெரியாழ்வார்; இங்கே ‘திருமழபாடியுள் மிளிர் கொன்றை’ என்கிறார் சுந்தரர்.

சுந்தரத் தமிழில் பெரியாழ்வார் மகா விஷ்ணுவையும், சுந்தரர் சிவபெருமானையும் மணம், குணம், பக்தி எனும் மலர்களால் உள்ளம் உருகி வணங்கி இருப்பதை பிரமிப்போடு நம்மால் உணர முடிகிறது.
இரண்டு பெரிய சமயக் கடவுளர்களை இரண்டு பெரிய ஆன்மிக ஆசான்களும் உளம் கனிந்து நெக்குருகிப் பாடிப் பரவசப்பட்ட தலத்தை நாமும் நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்று, எத்துணை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்திருக்கிறார்கள்!

நீயா, நானா, யார் பெரியவன் என்ற சர்ச்சையை சைவ, வைணவ, வைணவ சமயங்களில், புரியாமல் இன்னமும் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். எல்லா நதிகளும் கடலைத் நோக்கித்தான் செல்கிறது என்று அவர்களுக்கு ஏன் தெரியவில்லை? ஆழ்வார்களும், நாயன்மார்களும், வள்ளலாரும் மற்ற பெரியவர்களும் பரம்பொருளின் மேன்மையைத்தான் சிந்தித்தார்களே தவிர எந்த துவேஷத்தையும் சிந்திக்கவில்லை.

மேன்மையான எந்த ஒன்றும் உயர்ந்த தத்துவத்தை நோக்கித்தான் பயணிக்குமே தவிர, சிறிய விஷயங்களுக்குள் இறங்காது. இந்த எண்ணத்தின் அடிப்படையில் தான் பெரியாழ்வாரின் பாசுரத்தை நாம் பார்க்க வேண்டும். பொன் போன்ற மேனியும் பின்னி விட்ட சடையும் கொண்ட சிவபெருமானும், நின்றுகொண்டே உலகை அளந்த நெடிய திருமாலும், இரண்டு உடல்களில் திரிவார்கள் என்றாலும் ஒருவரில் ஒருவர் என்றும் உள்ளனர் என்று உருகுகிறார் பொய்கையாழ்வார்!

மன இருள் அகன்று நம் உள்ளத்தில் வெளிச்சம் பரவ, திருகண்டம் என்னும் கடிநகருக்கும், திருமழபாடிக்கும் சென்று அந்த இரண்டு மாபெரும் சக்கரவர்த்திகளை தரிசித்து வாழ்வில் பேரானந்தம் அடைவோம்.