சரணாகதியடைந்து சகலமும் பெறுபவனே உத்தம சீடன்!



பகவத் கீதை  62

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரச்னேன ஸேவயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்சின (4:34)

‘‘அந்த ஞானத்தை நீ எப்படி அறிந்துகொள்வாய்? ஏற்கெனவே பூரண ஞானமுடையவரை நீ குருவாக அடைந்து அவர் மூலம் அதனைத் தெரிந்துகொள்ளலாம். அவ்வாறு அடையும் குருவைத் தாள் பணிந்து, அவருடைய கர்மாக்கள் நிறைவேற உறுதுணையாக இருந்து, கேள். கபடமில்லாத, நேர்மை மனத்தினனாக, சேவை மனப்பான்மையுடன் நீ அவரைச் சரணடைந்தாயானால் தான் அறிந்த அந்தத் தத்துவ ரகசியத்தை அவர் உனக்கு போதிப்பார்.’’

பெரியவர்களுக்கு வணக்கம் செலுத்துவது மரியாதை நிமித்தமானதுதான். அவ்வாறு வணங்கும் நம்மை அவர்கள் கனிவாகப் பார்த்தார்களென்றாலேயே அவர்களுடைய ஆசிர்வாதம் நம் உடலில் இறங்குகிறது என்று அர்த்தம். அவர்களை தண்டனிட்டு அவர்களுடைய பாதங்கள் தொட்டு வணங்குகிறோம் என்றால், நம் அகங்காரத்தை நாம் அவர்களிடம் சமர்ப்பித்து, மனத்தூய்மை பெறுகிறோம் என்று பொருள்.

அடிபணிவது என்பது பெரியவர்களை நாம் உயர்வாக மதிக்கிறோம் என்பதற்காக மட்டுமல்ல, அவர்களுடைய பாத ஸ்பரிசம் நம்மைப் பரிசுத்தவான்களாக ஆக்குவதற்காகவும்தான். ஆமாம், எந்த மனதிலிருந்து ஆணவம் அகல்கிறதோ அந்த மனம் பரிசுத்தமடைகிறது. உயர்ந்தோரைச் அடி தொழுவது நம் பாரம்பரிய வழக்கமாக இருந்துவருகிறது.

நாம் பல கடவுளர்களை வழிபடுகிறோம். ஒன்று முதல் பல தலைகள் கொண்ட தெய்வங்கள், ஒன்று முதல் பல கரங்கள் கொண்டத் திருவுருவங்கள், பலவகை மனித ரூப அவதாரங்கள், பெண் தெய்வங்கள்… ஆனால், இந்த இறை உருவங்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒன்று - பாதங்கள். எந்த தெய்வத்துக்கும்
பிற உறுப்புகள் மாறுபட்டு இருந்தாலும், பாதங்கள் மட்டும் ஒரேமாதிரியானதாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

எந்த மதத்தவர், எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர் என்று அறுதியிட முடியாத திருவள்ளுவர், தம் திருக்குறளில், ‘கற்றதனால் ஆயபயன் என்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனில்’; ‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வார்’; ‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல’; ‘தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது’; ‘அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கல்லால் பிறவாழி நீந்தல் அரிது’; ‘கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’; ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்’; ‘மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான் தா அயது எல்லாம் ஒருங்கு….’ என்றெல்லாம் இறையடியைப் போற்றுகிறார்.

நம் முதியோர்களைப் பணிவது இறைவனைப் பணிவதற்கு ஒப்பாகும். குடும்பத்தில் நிலவும் இந்த பண்பு, குடும்பத்துக்கு வெளியேயும் பரவி, வயதுக்கும், அனுபவத்துக்கும் கொடுக்கும் மரியாதையாக விரிவடைகிறது. அதேபோல சிறு வயதிலிருந்தே கல்வி பயிற்றுவிக்கும் ஆசானுக்கு பக்தி பூர்வமான மரியாதை செலுத்துவதாகவும் அமைகிறது. ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற சொற்றொடர், வணங்கத் தகுந்தவர்களை வரிசைப்படுத்துகிறது. இதில் அவரவருக்கான பொறுப்புகளும் மறைமுகமாக வரையறுக்கப்பட்டுள்ளன.

தான் ஏற்கும் கருவுக்கு உடல் கொடுத்து வளர்த்து, முழுமையாகப் பெற்றெடுத்து வளர்க்க வேண்டிய பொறுப்பு மாதாவுக்கு. தான் கொடுத்த உயிருக்கு வடிவம் கொடுத்து ஈன்ற தன் மனைவிக்கு நன்றி செலுத்தும் வகையாக அந்தக் குழந்தைக்கு சமுதாயத்தில் உலவவிடும் பொறுப்பு பிதாவுக்கு. அந்தக் குழந்தையை சான்றோனாக்கி, அவனுடைய குடும்பத்துக்கும், அவன் சார்ந்துள்ள சமுதாயத்துக்கும், ஏன் இந்த முழு உலகத்துக்குமே அவனைப் பயனுள்ளவனாக்கும் பொறுப்பு குருவுக்கு. இத்தகைய மாதா, பிதா, குரு ஆகிய மூவரையும் அந்தக் குழந்தையுடன் தொடர்பு கொள்ள வைக்கும் பொறுப்பு இறைவனுக்கு.

மாதா, பிதா மற்றும் இறைவன் மூவருக்கும் அந்தக் குழந்தையைப் பொறுத்தவரையில், தாம் படைத்ததால் அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் உண்டு. ஆனால், குருவுக்கு அவனை நல்ல மாணாக்கனாக, நல்லக் குடிமகனாக உருவாக்குவதால் அவருக்குத் தனிப்பட்ட முறையில் எந்த லாபமோ, ஆதாயமோ இல்லை. அவரால் சரியான அடித்தளமிடப்பட்டு, மிக உயர்ந்த நிலைக்கு வந்த எத்தனை பேர் அவரை நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள், அவருடன் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள், தன்னுடைய இந்த உயர்நிலைக்கு அடிப்படைக் காரணமான அவருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்?
ஆனால், குரு இதையெல்லாம் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் உண்மை.

ஏனென்றால் அத்தகைய குரு ஒரு ஞானியாகவும் விளங்குகிறாரே, அதனால்தான்! அப்படிப்பட்ட குருவைச் சரணடைந்தால் தத்துவ ரகசியங்களைத் தானாகத் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். அதேபோல இறைவனை சரணடைவது  என்றால் அவனுடைய பாதத்தில் சிரம் பதித்து, ‘நான்’, ‘எனது’ போன்ற அகங்காரங்களை சமர்ப்பித்து, விடுதலையும், மனத்தெளிவும் பெறுவதுதான்.
 
உடல் மடித்து, சிரம் தாழ்த்தி வணங்கும்போது நம் அசுர குணங்கள் எல்லாமும் கீழிறங்கி காணாமல் போய்விடுகின்றன. தான் வணங்குபவர் தன்னைவிட மிக உயர்ந்தவர் என்ற எண்ணம் நம் ஈகோவை அழுத்தி நசுக்கி விடுகிறது.

பெரியவர்களின் பாதங்களை நம் கை விரல்களால் தொட்டு நாம் வணங்கும்போது, அவர்
களுடைய ஞானத்திற்கு மரியாதை அளிக்கிறோம், அவர்களுடைய போதனைகளை நாம் அடுத்தத் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல உறுதி கொள்கிறோம் என்று அதர்வண வேதம் விளக்குகிறது. அவ்வாறு பாதங்களைத் தொடும்போது இருவரையும் இணைத்து ஒரு சக்தி வட்டம் உருவாகிறது. தொடுபவர், தொடப்படுபவர் இருவரின் உள் ஆற்றலும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இதனால் இரு மனங்கள், இதயங்கள், மூளைகளுக்கும் இடையேயான அண்ட சக்தி அதிகரிக்கிறது. பெரியவர்களிடமிருந்து ஆக்கபூர்வ அதிர்வுகள் நம்முள் இறங்குகின்றன. அதோடு பெரியவர்களின் பாதங்களைத் தொடும் இயக்கமானது யோகா பயிற்சி போன்றது. நம் முதுகெலும்புக்கான பயிற்சி.

இன்று நாம் அவ்வாறு வணங்குவதற்கு  கௌரவம் பார்க்கிறோம், அல்லது நாமாக அவர்களைக் குறைவாக மதிப்பிட்டுவிடுகிறோம். கல்வி, பதவி, மூத்த உறவு என்ற தகுதிகளையெல்லாம் ஒதுக்கிவைத்தாலும், அவர்களுடைய வயது, அவர்களுடைய அனுபவங்கள், அது அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கக்கூடிய பாடங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தந்தாவது அவர்களை வணங்குதல்தான் சரி. பக்தியைப் பொறுத்தவரை, கோயிலில் வலம் வருகிறோம். நிறைவாகக் கொடிமரத்தடியில் நிலத்தில் மேனி படர சர்வாங்க நமஸ்காரம் செய்கிறோம். இது  பக்தியின் ‘சரணாகதி’ தத்துவத்தின் ஒரு  வெளிப்பாடு.

நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன்.
மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்.
தன் செயலெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன்.
துன்பமினியில்லை சோர்வில்லை
சோர்வில்லை தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம் நாமறியோம்
நாமறியோம்
அன்பு நெறிகள் அறங்கள் வளர்ந்திட
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்.

- மகாகவி பாரதியார் தன் சரணாகதி பக்தியை, பொதுநல நோக்கில் வெளிப்படுத்துகிறார்.
வைணவக் கோயில்களில் பக்தர்களின் தலைமீது சடாரி சாத்துவார்கள். கிரீடம் போன்ற இந்த அமைப்பு ராஜ அலங்காரமோ, சம்பிரதாயமோ இல்லை. ஆனால், இறைவனின் திருவடிகள் பதிக்கப்பெற்ற அந்த சடாரியைத் தன் சிரசின்மீது தாங்குபவர், தான் அந்த இறைவனுக்கு அடிமை, அவரிடம் தான் சரணாகதியடைகிறோம் என்ற உணர்வைப் பெறுகிறார்.

இதேபோல சில சிவத்தலங்களிலும் சடாரி சாத்தும் வழக்கம் இருக்கிறது - காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில் மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகியவற்றை உதாரணங்களாகச் சொல்லலாம். இன்றும்கூட நீலகிரி மலையில் தோடர் இனத்தவர்கள் பெரியவர்களின் பாத துளியைத் தம் தலையில் ஏற்பது வழக்கமாக இருக்கிறது. வயதில் சிறியவர் மண்டியிட்டு, தலைகுனிந்து அமர்ந்திருக்க, எதிரே நிற்கும் பெரியவர் தன் வலது காலைத் தூக்கி, கட்டை விரலால் வணங்குபவரின் தலையைத் தொடுகிறார்.

ஆன்மிக, சமுதாய சம்பிரதாயத்தைப் போலவே குருவின் பாதங்களைப் பற்றிக்கொண்டால் நாம் நம் வாழ்க்கையில் உயர்வடைய அவர் நல்லதொரு வழிகாட்டுவார் என்பது கிருஷ்ணனின் அறிவுரை.
பல சமயங்களில் குருவானவர் மௌனமாகவே ‘பேசி’ நம் குழப்பங்களுக்குத் தெளிவு அருள்வார்; நம் சந்தேகங்களுக்கு விளக்கமும் அளிப்பார். இறைவன் தட்சிணாமூர்த்தி அத்தகையதொரு மௌனகுரு. அவர் காலடியில் சனகாதி முனிவர்கள் அமர்ந்து கண்கள் மூடி, அவருடைய ‘உபதேசத்தை’க் ‘கேட்டு’க்
கொண்டிருக்கிறார்கள்.

மௌனத்தால் எந்த பதிலை நாம் புரிந்துகொண்டு விடமுடியும்? நம் நடைமுறை வாழ்க்கையில், நம் அனுபவங்களைக் கொண்டே இந்தத் தத்துவத்தை நாம் புரிந்துகொள்ளலாம். மிகப் பெரிய பிரச்னையாக நாம் கருதியிருக்கும் ஓர் அசம்பாவிதம் நம் முன் பூதாகரமாக நின்றிருப்பதாக வைத்துக்கொள்வோம். உடனே பதட்டத்துடன் எதையாவது பேசியோ அல்லது எதையாவது செய்தோ சூழ்நிலையைக் கடினமாக்கிக்கொள்வது பலருடைய வழக்கம்.

ஆனால், அதேசமயம், மௌனமாகி, எந்த உணர்வுக்கும் அடிமையாகாமல், அந்தச் சூழலிலிருந்து மனதை விலக்கினோமானால் நாமே எதிர்பார்க்காத வகையில் நல்லதொரு தீர்வு நமக்குக் கிட்டும். தட்சிணாமூர்த்தி-சனகாதி முனிவர்கள் சொல்லும் தத்துவம் இதுதான்.

பகவான் ரமண மகரிஷியும் இந்த மௌன பரிபாஷையில் லயித்திருப்பதைப் பலர் பார்த்திருக்கிறார்கள், அனுபவித்திருக்கிறார்கள், தெளிவடைந்திருக்கிறார்கள். கேள்வி கேட்பவன் சீடன், பதிலளிப்பவர் குரு என்ற மாணவ-ஆசிரியர் இலக்கணத்தை மீறிய பக்குவம் இது.

மகான் விவேகானந்தர், பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரைத் தன் குருவாக ஏற்று, அவருடைய வழிகாட்டலில், காளிமாதாவையே தரிசித்திருக்கிறார்! பரமஹம்ஸர் இவ்வாறு கூறுகிறார்: ‘‘தனது குருவை கேவலம் மனுஷ்யராகக் கருதுபவனுக்குப் பிரார்த்தனையாலும், பக்தியாலும் என்ன பலன் உண்டாகக்கூடும்? குருவை கேவலம் மனுஷ்யர் என்று அவன் கருதக்கூடாது.

ஈஸ்வரனைக் காண்பதற்கு முன்னால் அந்த திவ்ய தரிசனத்தின் முதல் அங்கமாகக் குருவைத்தான் சிஷ்யன் காண்கிறான். பிறகு அந்த குருவே ஈஸ்வரனாக மாறி ஈஸ்வர ஸ்வரூபத்தைக் காட்டுகிறார். அப்பால் ஈஸ்வரரும், குருவும் ஒருவரேயென்று சிஷ்யன் தெரிந்துகொள்கிறான். அவன் விரும்பிய வரங்களையெல்லாம் திவ்ய குரு அருள்வார். இது மட்டுமா, அவனை பிரம்ம நிர்வாணமாகிய பரமானந்த சுகத்துக்கும் அழைத்துச் செல்வார். அன்றி, பக்தன் - ஈஸ்வரன் என்ற சம்பந்தமுள்ள துவைத நிலைமையில் அவன் இருக்கவேண்டினும் அங்ஙனமே இருக்கலாம். சிஷ்யன் எதைக் கேட்டாலும் குரு அதை நிச்சயமாகத் தருகிறார்.

‘‘மனுஷ்ய குருவானவர் மஹாமந்திரத்தை உனது காதில் மட்டும் உபதேசிக்கிறார். தெய்வ குருவோ உன் ஆன்மாவுக்குள் சைதன்யத்தையே செலுத்துகிறார். ஈஸ்வரனுடைய ரகசியங்களை அறிய வேண்டுமென்ற தீவிர புத்தி உனக்கு இருக்குமானால், அவ்வீஸ்வரனே சத்குரு ஒருவரை உன்னிடம் அனுப்புவார். பக்தனே, குருவைத் தேடவேண்டிய விஷயத்தில் உனக்குக் கவலையே வேண்டாம்.’’

இது இவ்வாறிருக்க, இன்றைய இயல்பு வாழ்க்கையில், குரு-சிஷ்யன் இருவரில் எச்சரிக்கையாக செயல்படவேண்டியவர் குருதான். ஆமாம், அவர் தன்னை ‘குரு’ என்று தன் மனதுக்குள் உயர்த்திக்கொண்டாரானால், அந்த கணத்திலேயே அவர் அந்தத் தகுதியை இழந்துவிடுகிறார். ஏனென்றால், அப்போது அவருக்குள் தனக்கு ‘எல்லாம் தெரியும்’ என்ற அகங்காரம் துளிர்விட ஆரம்பித்துவிடும். தன் மாணவனைத் தெளிவு மிக்கவனாக ஆக்கவேண்டியதே அவருடைய ஒரே, தலையாய கடமை என்பதை அவர் உணர்ந்துகொண்டாரானால் இந்த உயர்வு நவிற்சிக்கு வாய்ப்பு இருக்காது.

(தொடரும்)
பிரபுசங்கர்