ஆதிசங்கரர் அருளிய புண்ணிய நதிகளின் அஷ்டகங்கள்



ஒவ்வொரு கோயிலும் புஷ்கரணி என்று சொல்லப்படும் தீர்த்தத்தைக் கொண்டதாக இருப்பது விசேஷம். சில கோயில்களில் அவற்றைச் சுற்றி ஓடும் நதிகளே தீர்த்தங்களாக விளங்குகின்றன.

இந்தப் புண்ணிய நதிகளின் பெருமைகளும், அவற்றில் பக்தியுடன் நீராடினால் ஏற்படும் பலன்களும் ஏராளம். இந்த மகிமையை ஞானிகள் பலரும் போற்றியிருக்கின்றனர். அந்தவகையில் கங்கை, நர்மதை, மணிகர்ணிகை மற்றும் யமுனை நதிகளின் பெருமைகளை ஆதிசங்கரர் வாழ்த்திப் புகழ்ந்துள்ளார். எட்டெட்டு பதிகங்கள் கொண்ட அந்த அஷ்டகங்களால் அந்நதிகளைத் துதித்துப் பேறு அடைவோம்:

கங்காஷ்டகம்

ஸ்ரீ பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப
கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி
அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி

பொதுப்பொருள்: பகவான் பரமேஸ்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் துலங்கும் கங்கையே, உனது நீர்ஸ்பரிசம் கொள்பவர்கள், சிறிதளவு  பருகுகிறவர்கள் அனைவரும் கலிதோஷ பாதிப்பு ஏதும் இன்றி தேவலோக சுகம் பெறுவர்.

ஸ்ரீப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி
ஜடாவல்லி முல்லாஸயந்தீ ஸ்வர்லோகாதாபதந்தீ
கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ
க்ஷேணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:
நிர்பரம்  பர்த்ஸயந்தீ பாதோதிம்
பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ நஹ் புனாது

பிரமாண்டத்தை உடைத்துக் கொண்டும், பரமேஸ்வரனின் ஜடாவல்லியை கிளுகிளுக்கச் செய்துகொண்டும், சொர்க்கத்திலிருந்து கீழே இறங்கி, மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடிவந்து, பூமியில் பாய்ந்து, மக்களின் அனைத்துப் பாபங்களையும் விரட்டியடித்து, பின் கடலில் கலந்து அதனையும் தூய்மையாக்கிக் கொண்டிருக்கும் புண்ய கங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

ஸ்ரீமஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்ஸ்நாநை:
ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மிஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:
சன்ன தீரஸ்தநீரம் பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம்

நீராடி மகிழும் யானைகளாலும், தம் வசிப்பிடமாகவே கொண்டு மகிழ்வாய் வாழும் முதலைகளாலும், தன் ஓட்டம் சற்றே தடுக்கப்பட்டாலும், கங்கையின் ப்ரவாஹம் நம்மை காப்பதாகவே உள்ளது.  அது, மூழ்கும் யானைகளின் காதோரம் தோன்றும் திரவப்பெருக்கில் வாசனை பொங்க, அதனை வண்டு மொய்க்கிறது. அந்த அளவுக்கு கங்கநீர் பரிசுத்தமானது. நீராடும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நீராய் ஓடுகிறது. காலை, மாலை வேளைகளில் முனிவர்கள் செய்த பூஜையால் தர்ப்பை, மலர்கள் ஆகியவை கரையோரத் தண்ணீரில் ஒதுங்கி சுகந்தம் பரப்புகின்றன.

ஸ்ரீஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:
பாபோதகம் பாவனம்பூய:சம்புஜடா விபூஷணமணி:
ஜஹ்நோர்மஹர் ஷேரியம்கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம்

முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னர், பரமேஸ்வரன் ஜடாமகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னு மஹரிஷியின் மகளான கங்கை, பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

ஸ்ரீசைலேந்த்ரா தவதாரிணீ நிஜ்ஜலே மஜ்ஜத்
ஜனோத்தாரிணீ பாராவாரவிஹாரிணீ
பவபயச்ரேணீ ஸமுத் ஸாரிணீ சேஷாஹேரனு
காரிணீ ஹரசிரோ வல்லீதலா காரிணீ காசீப்ராந்த
விஹாரிணீ விஜயிதே கங்கா மநோ ஹாரிணீமிமி

காசியருகில் ஓடி விளையாடும் அழகிய கங்கை இமயமலையில் உற்பத்தியாகி, தனது ஜலப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, அவர்களுடைய சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது. அது ஆதிசேஷன்போல், பரமேஸ்வரன் தலையில் வில்வதள மாலைபோல் விளங்குகிறது.

ஸ்ரீ குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்
த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி
த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ரு
தாம்ததா மாதச் சாதக்ரதவபதலாபோப்யதிலகு

கங்கைத் தாயே! உனது தண்ணீர்த் துளிகள் பட்டாலே போதும், யாருக்கும் எந்த வீழ்ச்சியும் கிடையாது. அந்நீரைச் சற்றுப் பருகினாலேயே வைகுண்ட லோக வாசத்தை அருளுகிறாய். உனது பிரவாஹத்தில் நீராடியவருக்கு இந்திரபதவி கிட்டுவதுகூட எளிதுதான்.

ஸ்ரீபகவதி தவ தீரே நீரமாத்ராசனோஹம்
விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி
ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே
தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத

கங்காதேவியே, பகவதி! பொன்னாய் மினுமினுக்கும் அலைகளைக் கொண்டவளே! ஸகல பாபங்களையும் அகற்றுபவளே! சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் படிக்கட்டாக அமைந்தவளே! எனக்கு மனமிரங்கமாட்டாயா? உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்றற்றவனாய், ஸ்ரீ கிருஷ்ணனை ஆராதிக்க என்னை அனுமதிப்பாயா?

ஸ்ரீ மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே
மௌலௌநிதாயாஞ்ஜலிம்த்வத்தீரே வபுக்ஷேவஸானஸமயே
நாராயணாங்கரித்வயம்ஸாநந்தம் ஸ்மரதோ
பவிஷ்யதி மம ப்ராண ப்ரயாணோத்ஸவேபூயாத்
பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ

கங்காமாதாவே, பரமேஸ்வரனுடன் தொடர்புடையவளே! உன்னை பிரார்த்திக்கிறேன். உனது கரையில் தங்கி தலைமேல் கைகூப்பியபடியே வாழும் என் உடல் பட்டுப்போகும் நேரத்தில் மந் நாராயணனின் திருவடிகளை தியானிக்கும் ஆனந்தமான அந்த நேரத்தில் என்னுயிர் பிரிய நேரலாம். அப்பொழுது ஹரியும், ஹரனும் ஒன்று என்ற நிலையான பக்தி எனக்கு உண்டாக அருள்வாயாக. புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம்  நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

நர்மதாஷ்டகம்

ஸ்ரீ ஸபிந்து ஸிந்து ஸுஸ்கலத் தரங்கபங்க
ரஞ்ஜிதம்த்விஷத்ஸு பாப ஜாத
ஜாதகாரிவாரிஸம்யுதம்க்ருதீயபாத
பங்கஜம் நமாமிதேவி நர்மதே

பிரவாஹத்தால் மோதும் அழகிய அலைகளால் பக்தர்களின் பாபமூட்டைகளைக் கரைத்து அழிக்கும் நர்மதைத் தாயே, உனது திருவடியை நான் வணங்குகிறேன். நீ, யமதூதர்கள், காலபூதங்கள் ஆகியவை உண்டாக்கும் அச்சத்தைப் போக்கி கவசமாக பக்தர்களைக் காக்கிறாய்.

ஸ்ரீ மஹாகபீர நீரபூர பாததூத பூதலம்
நமத்ஸமஸ்தபாத காரி தாரிதாபதாசலம்
ஜகல்லயே மஹாபயே ம்ருகண்டுனு
ஹர்ம்யதேத்வதீய பாத பங்கஜம் நமாமி நர்மதே

மிகவும் ஆழமான இடத்தில் உன் பிரவாஹம் விழுவதால் அந்த வேகம் தாங்காமல் சிதறுண்டு போகிறது பூமி, உன்னை வணங்கியவரின் பாபங்களை அகற்றுவதும், மலைபோல் வரும் ஆபத்துகளைப் பிளப்பதுமாய் விளங்கும் நர்மதை தாயே, உனது திருவடியை வணங்குகிறேன். மிகவும் பயங்கரமான பிரளய காலத்தில் ம்ருகண்டு முனிவரின் புதல்வருக்குப் பாதுகாப்பான இடம் அளித்து காத்தவளல்லவா நீ, உன் திருவடி சரணம்.

ஸ்ரீகதம் ததைவ மே பயம் த்வதம்
புவீக்ஷிதம் யதாம்ருகண்டுஸனு
சௌனகாஸுராரிஸேவிதம்ஸதாபுனர்பவாப்தி
ஜன்மஸம்பவாப்திது:கவர்மதேத்வதீய
பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே
நர்மதா தேவி, பக்தர்கள் பிறவித்

துன்பங்களில் உழலாதவாறு கவசமாய் நின்று காப்பவள் நீ. உனது திருவடித் தாமரை ம்ருகண்டு முனிவரின் குமாரன், சௌனகர், தேவர்கள் ஆகியோரால் தினமும் போற்றப்பட்டது. அத்திருவடிகளை நான் வணங்குகிறேன். உனது தண்ணீரைச் சிறிதளவு பருகியதும் எனக்கிருந்த பயம் முற்றிலும் நீங்கிவிட்டது.

ஸ்ரீ அலக்ஷ்யலக்ஷ கின்னராமராஸுராதி பூஜிதம்
ஸுலக்ஷ நீரதீர தீரபக்ஷி லக்ஷ கூஜிதம்வஸிஷ்ட
சிஷ்ட பிப்பலாதி கர்தமாதிசர்மதே
த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே

கண்ணுக்குத் தெரியாத லட்சோபலட்சம் கின்னரர்கள், தேவர்கள், அசுரர்கள் போற்றி மகிழும் உன் மலரடிகளை வணங்குகிறேன். உனது கரைக்குவந்து தங்கும் பல பறவைகள் இனிமையாகவும், சந்தோஷமாகவும் கூவுகின்றன. நர்மதாதேவி நீ வசிஷ்டர், சிஷ்டரான பிப்பலர், கர்தமர் முதலிய முனிவர்களுக்கு அருள் வழங்கியவள் அன்றோ!

ஸ்ரீ ஸந்த்குமார நாசிகேத கச்யபாத்ரிஷட்பதை
த்ருதம் ஸ்வகீயமானஸேஷ நாரதாதிஷட்பதைமிநவீந்து
ரந்திதேவ தேவராஜ கர்ம சர்மதே
த்வதீயபாதபங்கஜம் நமாமி தேவிநர்மதோ.
ஸநத்குமாரர், நாசிகேதர், கச்யபர், நாரதர் முதலியோரால் உள்ளம் நெகிழ வணங்கப்படுபவளே, நர்மதாதேவி, உனது திருவடித்தாமரையை நமஸ்கரிக்கிறேன்.

சூரியன், சந்திரன், நந்திதேவன்,
இந்திரன் முதலியோருக்கு அருள்பாலித்த நாயகியன்றோ நீ!
ஸ்ரீ அலக்ஷலக்ஷ லக்ஷ பாபலக்ஷ ஸாரஸா யுதம்
ததஸ்து ஜீவ ஜந்து தந்து புக்திமுக்திதாயகம்
விரிஞ்சி விஷ்ணு சங்கரஸ்வகீயதாம் வர்மதே
த்வதீய பாதபங்கஜம் நமாமி தேவி நர்மதே

கண்களுக்குப் புலப்படாத, லட்சோபலட்சம் பாபங்களை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றவளே, அனைத்து ஜீவஜந்துக்களுக்கும் நற்பலன் அருளும் உனது திருவடிகளைப் பணிகிறேன். நீ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் ஆகியோரது இருப்பிடங்களைப் பாதுகாத்து வருபவளே, நர்மதாதேவி, உனக்கு நமஸ்காரம்.

ஸ்ரீஅஹோத்ருதம் ஸ்வநம் ச்ருதம்
மஹேசகேசஜாதடேகிராதஸத
பாடவே பண்டிதே சடே நடேதுரந்த
பாப தாபஹாரி ஸர்வ ஜந்து சர்மதேத்வதீபபாதபங்கஜம்
நமாமி தேவி நர்மதே

கிராதகர்களாக இருந்தாலும், அவர்களுடைய பாபங்களைப் போக்குபவள் நீ. பண்டிதருக்கும், பாமரருக்கும் அவர்களுடைய துயரையெல்லாம் நீக்கி க்ஷேமத்தை நல்குபவள் நீ. உன் திருவடிகளை வணங்குகிறேன்.

ஸ்ரீ இதம் து நர்மதாஷ்டகம் த்ரிகாலமேவ யே
ஸதாபடந்தி தே நிரந்தரம் நயந்தி துர்கதிம் கதா
ஸுலப்ய தேஹ துர்லபம் மஹேசதாம கௌரவம்
புனர்பவா நரா நவை விலோகயந்திரௌரவம்

இந்த நர்மதாஷ்டகத்தை மூன்று வேளையும் விடாமல் படிப்பவர் ஒருபோதும் எக்காரணம் கொண்டும் துன்புறமாட்டார்கள். அதுமட்டுமன்றி, இந்த உடலிலேயே கிடைத்தற்கரிய கடவுள் தன்மையைப் பெறுவார்கள். இன்னும் ஒரு பிறவி எடுத்து ரௌரவம் முதலான நரகத்தை அனுபவிக்கமாட்டார்கள்.

மணிகர்ணிகாஷ்டகம்
ஸ்ரீத்வத்தீரே மணிகார்ணிகே ஹரிஹரௌ
ஸாயுஜ்ய முக்திப்ரதௌவாதம் தௌ குருத:
பரஸ்பரமுபௌ ஜந்தோ :ப்ரயாணோத்ஸவே
மத்ரூபோ மனுஜோயமஸ்து ஹரிணா ப்ரோக்த:
சிவஸ்தத்க்ஷணாத்தன்மத்யாத் ப்ருகுலாஞ்சனோ கருடக:
பீதாம்பரோநிர்கத:!!

மணிகர்ணிகைத் தாயே, உனது கரையில் மனிதர்களுக்கு ஸாயுஜ்ய முக்தி வழங்குகிறார்கள். அந்த வகையில், சிவனின் அருளுடன், இறப்பெய்தும் ஒரு மனிதன் தன் சரீரத்திலிருந்து, பிருகு மஹர்ஷியின் அடையாளத்துடனும், கருட வாஹனத்துடனும், பீதாம்பரம் அணிந்தவனாக வெளியேறுகிறான்.

ஸ்ரீஇந்த்ராத்யாஸ்த்ரிதசாபதந்தி நியதம்
போகக்ஷயே யே புனஜாயந்தே மனுஜாஸ்ததோsபி
பவசகீடாபதங்காதயயே மாதமணிகர்ணிகே
தவ ஜலே மஜ்ஜந்தி நிஷ்கல்மஷாஸாயுஜ்யேபி
கிரீடகௌஸ்து பதரா நாராயணா:ஸ்யுரநரா
தேவரானவர்கூட தம் புண்ணிய கர்மங்களுக்கேற்ப அவர்களுடைய போககாலம் முடிந்தவுடன் மனிதராகவோ, பசுக்களாகவோ, பறவை, பூச்சிகளாகவோ பிறக்கிறார்கள். ஆனால் மணிகர்ணிகைத் தாயே, உன்னில் நீராடியவர்கள், பாபம் நீங்கி ஸாயுஜ்ய நிலையிலும் கிரீடம், கௌஸ்துபம் தாங்கிய நாராயணர்களாக ஆகிவிடுகிறார்களே!

ஸ்ரீகாசீ தன்யதமா விமுக்திநகரீ ஸாலங்க்ருதாகங்கயாதத்ரேயம்
மணிகர்ணிகா ஸுககரீ முக்திர்ஹி தத்கிங்கரீஸ்வர்லோக ஸ்துலித:
ஸஹைவ விபுதை:காச்யா ஸமம் ப்ரஹ்மணாகாசீ க்ஷேணிதலே
ஸ்திதா குருதரா ஸ்வர்கோலகுத்வம் கத
புண்ணியமான காசி க்ஷேத்ரம் அனைவருக்கும் மோக்ஷத்தைக் கொடுக்கவல்லது. அங்கே கங்கையும் ஓடுகிறது. அதுமட்டுமா, மோக்ஷத்தைக் கொடுக்கும் மணிகர்ணிகையும் பிரவகிக்கிறது. ஆகவே, இந்தப் பெருமையின் அடிப்படையில் பிரம்மதேவனின் கணிப்புப்படி காசி க்ஷேத்திரம் மிகவும் கனம் கொண்டு பூமியில் இறங்கியது! சொர்க்கமோ எடை குறைவால் லேசானதாயிற்று!

ஸ்ரீகங்காதீரமெனுத்தமம் ஸகலம்;
தத்ராபி காச யுத்தமாதஸ்யாம் ஸா
மணிகர்ணிகோத்தமதமா யத்ரேச்வரோ
முக்தித தேவானாமபி துர்லபம்
பாபௌகநாசக்ஷமம்பூர்வோபார்ஜிதபுண்ய
புஞ்ஜகமகம் புண்ணயைர் ஜனை:ப்ராப்யதே

கங்கைக்கரைப் பிரதேசம் முழுதுமே புண்ணியமானது. அதிலும் காசி மிகவும் உத்தமமான ஒரு க்ஷேத்ரம். அதிலும், ஈஸ்வரன் முக்தி வழக்குமிடமான மணிகர்ணிகை மிகமிக உத்தமமானது. பாபத்தைப் போக்கும் இந்த மணிகர்ணிகை ஸ்தலம் தேவருக்கும் கிடைத்தற்கரியது. முன்பிறவியில் செய்த புண்ணியக் குவியலால்
ஆன்றோர்க்கு மட்டுமே கிடைக்கக் கூடியது.

ஸ்ரீ துகாம்போதி கதோ  ஜந்து நிவஹஸ்தேஷாம்கதம்
நிஷ்க்ருதிஜ்ஞாத்வா தத்ஹி விரிஞ்சிநா விரசிதா
வாராணஸீசர்மதாலோகாஸ்வர்க முகாஸ்ததோபி
லகவோ போகாந்தபாதப்ரதாகாசீமுக்தி
புரீ ஸதாசிவகரீ தர்மார்த்த     மோக்ஷப்ரதா

துன்பக்கடலில் உழன்றாடும் உலகத்தில் பிறந்த உயிரினங்கள் எல்லாவற்றிற்கும் விடிவு அளிப்பதாகத்தான் பிரம்மன் மங்கலம் பயக்கும் காசியை தோற்றுவித்துள்ளார். உலக மக்கள் அற்ப சுகங்களில் நாட்டம் கொண்டிருக்கிறார்கள். சுகானுபவத்தின் பின்விளைவோ துன்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், காசியோ தர்மம், அர்த்தம், மோக்ஷம் இவற்றை அளிக்கும் முக்திபுரியாகும்.

ஸ்ரீஏகோ வோணுதரோ தராததரதர:
ஸ்ரீ வத்ஸ பூஷாதாரயோப்யோக:
கில சங்கரோ விஷதரோ கங்கா   
தரோ மாதவயே மாதர்மணிகர்ணிகே தவ ஜலே
மானவாருத்ரா வா ஹரயோ பவந்தி
பஹவஸ்தேஷாம்  பஹத்வம் கதம்

புல்லாங்குழல், கோவர்தனமாலை, ஸ்ரீவத்ஸம் என்ற அலங்காரங்களைத் தரிப்பவர் கிருஷ்ணர். ஆனால் பரமேஸ்வரனோ, விஷம் உண்டவர், கங்கையை தலையில் கொண்டவர், உமையின் பர்த்தாவாக விளங்குபவர். ஆனால் தாயே, மணிகர்ணிகே, உனது பிரவாஹத்தில் மூழ்கி எழும் பலரும் ருத்ரர்களாகவும், விஷ்ணுவாகவும் மாறிவிடுகிறார்களே, இது என்ன விந்தை!

ஸ்ரீத்வத்தீரே மரணம்து மங்கல கரம் தேவ
ரபி ச்லாக்யதேசக்ரஸ்தம் மனுஜம் ஸஹஸ்ரநயநை:
த்ரஷ்டும் ஸதா தத்பரஆயாந்தம் ஸவிதா ஸஹஸ்ரகிரணை
ப்ரத்யுத்கதோபூத் ஸதாபுண்யோஸெள
வ்ருஷகோsதவா கருடக:கிம் மந்திரம் யாஸ்யதி
ஹே, மணிகர்ணிகே, உனது தீரத்தில் மரணமெய்துவது தேவர்களே போற்றும்படி மங்கலகரமானது. அப்படி மரித்த ஒருவனை, இந்திரன் ஆயிரம் கண்களாலும் காண விழைகிறான். சூரியன்  அவனை எதிர்கொண்டு அழைக்கிறார். ஆகவே, அவன் வ்ருஷபத்தின் மீதோ, கருடன் மீதோ ஏறி ஏதோ ஒரு கோயிலை அடையப் போகிறான்!

ஸ்ரீமத்யாஹ்னே மணிகர்ணிகாஸ்நபனஜம் புண்யம்
வ வக்தும் க்ஷமஸ்வீயை ரப்தசதை:
சதுர்முகதரோ வேதார்த்ததீக்ஷ£ குரு யோகாப்யாஸ பலேந
சந்த்ர சிகரஸ்தத் புண்யபாரங்கதத்வத்தீரே
ப்ரகரோதி ஸுப்தபுருஷம் நாராயணம் வா சிவம்

மத்யான வேளையில் மணிகர்ணிகையில் நீராடுவதன் பயனாக உண்டாகும் புண்ணியம்
அளவிடற்கரியது. வேதார்த்தத்தை விளக்கிய சதுர்முக பிரம்மா அல்லது சந்த்ரசேகரர் தம் யோகாப்யாஸ பலத்தால் அந்த புண்யத்தின் எல்லைக்கே போய் உனது தீரத்தில் மரித்தவரை நாராயணனாகவோ சிவனாகவோ செய்து விடுகிறார்.

யமுனாஷ்டகம் ஸ்ரீ முராரிகாய காலிமாலலாம
வாரி தாரிணீ த்ருணீக்ருதத்ரி விஷ்டபா
த்ரிலோக சோகஹாரிணீ மனோனுகூல
குஞ்ஜபுஞ்ஜ தூததுர்மதாதனோது நோ மனோமலம்
கலிந்த நந்தினீ ஸதா

விஷ்ணுவின் உடல் நிறத்தைப் போன்ற தண்ணீர் வண்ணம் கொண்டதும், புல்லெனச் செய்த மூவுலகையுடையதும், அனைவரது பாபங்களைப் போக்குவதும், மனதிற்கிசைந்த கரையோர
நந்தவனங்கள் மூலம் தீயவரைக் களைவதுமாகிய கலிந்த மலைத்தோன்றலான யமுனைத்தாய் எங்கள் மனதை தூய்மையாக்கட்டும்.

ஸ்ரீ மலாபஹாரி வாரிபூர பூரி மண்டி தாம்ருதா
ப்ருசம் ப்ரபாதக ப்ரபஞ்ஜனாதி பண்டிதாநிசம்
ஸுனந்த நந்தனாங்கங்க ராகரஞ்ஜிதா ஹிதா
துனோது நோ மனோமலம் கலிந்த நந்தினீஸதா

அமிர்தம் போன்ற தண்ணீர் ப்ரவாஹத்தால் பாபங்களைப் போக்குவதும், அருவியாக வீழ்ந்து அந்த வேகத்தால் சுற்றுக் காற்றைத் தூய்மையாக்குவதும், ஸுநந்தன் மகனின் உடற்பூச்சு கலந்த வண்ணமாய் மிளிர்வதும், இதமானதுமான யமுனை நம் மனோமலத்தை நீக்கட்டும்.

ஸ்ரீ லஸத்தரங்கஸங்க தூதபூத ஜாதபாதகா
நவீன மாதுரீ துரீணபக்தஜாத சாதகாதடாந்த
வாஸதாஸஹம்ஸ ஸம்வ்ருதாஹ்நி   
காமதா துநோது நோ மானோமலம் கலிந்த நந்தினீ ஸதா

யமுனைத்தாயே மிளிரும் உன் அலைகள் பட்டு பிராணிகளின் பாபங்கள் அகலுகின்றன. பக்தர்களாகிய சாதகப் பறவைகள் புதுப்புனல் இனிமையில் திளைக்கின்றன. தாஸர்களாகிய ஹம்ஸங்கள் சூழப்பெற்ற தடாகங்களில் நிறைந்து, அனைவரது விருப்பங்களையும் நீ நிறைவேற்றுகிறாய். அப்படிப்பட்ட யமுனைத்தாயே, எங்களது பாபங்களையும் விரட்டுவாயாக.

ஸ்ரீ விஹார ராஸகேத பேத தீர தீரமாருதாகதா
கிராமகோசரே யதீய நீரசாருதாப்ரவாஹஸாஹசர்ய
பூதமேதினீ நதீநதாதுநோது நோ மனோமலம் கலிந்த நந்தினீஸதா

ராஸக்ரீடை போன்ற நீண்ட நேர நீர் விளையாட்டால் ஏற்பட்ட களைப்பைப் போக்கும் திறன் கொண்டது யமுனையின் கரைக்காற்று. அதன் தண்ணீரின் இனிமை மிகச் சுவையானது. யமுனையின் ப்ரவாஹச் சேர்க்கையால் அருகிலுள்ள இடங்கள், நதிகள், நகரங்கள் எல்லாமே தூய்மை பெறுகின்றன. அப்படிப்பட்ட யமுனை நமது மன அழுக்கை களையட்டும்.

ஸ்ரீ தரங்க ஸங்கஸைகதாந்தாஞ்சிதா ஸதாஸிதா
சரந்நிசாகராம்சுமஞ்ஜுமஞ்ஜரீஸபாஸிதாபவார்சன
ப்ரசாரணாம் புனாதுநா விசாரதாதுநோது
நோ மனோமலம் கலிந்த நந்தினீ ஸதா

அலைமோதும் மணல் திட்டுகள் ஒரு புறம் திகழ, கருநீல நிறம் கொண்டு விளங்குகிறது யமுனை. சரத்கால சந்திர கிரணங்கள் பட்டு மொக்கவிழ்ந்த பூங்கொத்துகளாலும், பரமேஸ்வரன் பூஜைக்குகந்த தண்ணீராலும் மேன்மை கொண்ட யமுனை நமது மன அழுக்கை போக்கட்டும்.

ஸ்ரீ ஜலாந்தகேலி காரிசாரு ராதிகாங்க ராகிணீ
ஸ்வபர்து ரன்ய துர்லபாங்கதாம் கதாம்சபாகினீ
ஸ்வதத்தஸுப்த ஸப்தஸிந்து பேதனாதி கோவிதாதுநோது
நோமனோமலம் கலிந்த நந்தினீ ஸதா

ஜலக்ரீடை செய்யும் ராதிகாதேவியின் உடற்பூச்சுக் கரைசலைக் கொண்டு யமுனை விளங்குகிறது. தனது கணவனான ஸமுத்ர ராஜனின் மடியையடைதல் மற்றவருக்கு எளிதல்லவெனினும் யமுனை அடைந்துள்ளது. தன் கிளை நதிகளாகிய ஸப்த ஸிந்துக்ளினின்றும் தனித்துமிருக்கிற யமுனை நமது மன அழுக்கை களையட்டும்.

ஸ்ரீ ஜலச்யுதாச்யுதாங்கராக லம்படாலி சாலினீ
விலோல ராதிகா கசாந்த சம்பகாலி மாலினீமி
ஸதாவகாஹனா வதீர்ண பர்த்ரு ப்ருத்ய நாரதா
துநோது நோ மனோமலம் கலிந்த நநிதினீ ஸதா

கண்ணனுக்கு அலங்கரிப்பதற்காகக் கரைத்து வைக்கப்பட்டிருக்கும் உடற்பூச்சுகளின் மேல், அதன் வாசனையால் ஈர்க்கப்பட்டு சுற்றி வட்டமிடும் வண்டுகள் ஒரு பக்கம், ராதையின் தலை முடியுனுள் அவிழ்ந்து வீழ்ந்த சம்பகத்தை நாடிவரும் வண்டுகள் கூட்டம், நாரதர் போன்றோர் ஸ்நானம் செய்ய, பூவுலகிற்கு இறங்கிவரும் இடம் - இப்படி மிளிரும் யமுனை நமது மனஅழுக்கை நீக்கட்டும்.

ஸ்ரீ ஸதைவ நந்த கேலி சாலி குஞ்ஜ மஞ்ஜுலா
தடோத்த புல்ல மல்லிகா கதம்பரேணு ஸஜ்வலா
ஜலாவகாஹினாம் ந்ருணாம் பவாப்திஸிந்து
பாரதாதுநோது நோ மனோமலம் கலிந்த நந்தினீஸதா!!

நந்தகுமாரன் விளையாடி மகிழும் அழகிய பூந்தோட்டங்கள் நறுமணம் கமழ, கரையோரங்களில் பூத்துக் குலுங்கும் மல்லிகை, கதம்பம் இவற்றின் மகரந்தத்தூள்கள் சுகந்தம் பரப்ப, யமுனையில் நீராடிய மக்களின் ஸம்ஸார வாழ்க்கையை சீர்படுத்தும் பாங்கு இவற்றுடன் மிளிரும் யமுனா நமது மன அழுக்கை நீக்கட்டும்.

தொகுப்பு: ந.பரணிகுமார்