தீர்த்த நீராடி தீவினை களைவோம்!



‘மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றையும் தொழுவார்க்கு வார்த்தை சொல்ல சற்குரு வாய்க்குமே’ என்பது தாயுமானவ சுவாமிகள் திருமொழி. தீர்த்தங்கள் யாவும் சிவபெருமானாகவே எண்ணத்தக்கவை ஆகும்.

சிவபெருமான் தீர்த்த வடிவில் இருக்கின்றான் என்பதை மணிவாசகப் பெருமான், ‘தீர்த்தன் நல்தில்லை சிற்றம்பலத்தே தீயாடும் கூத்தன்’ என்றும் அப்பர் சுவாமிகள், ‘சென்றாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே’ என்றும் அருளிச் செய்துள்ளதைக் காண்கிறோம். சிவபெருமான் தீர்த்தத்தின் வடிவாக விளங்குவதால் தீர்த்தேஸ்வரர் என்றும் பெயர் பெறுகின்றார்.

மண்ணின் வளத்திற்குத் தண்ணீர் ஆதாரமாகும். வான்மழை எப்போதும் பொழிவதில்லை. அதனால் பொழிந்த மழைநீரைத் தேக்கி வைத்திருந்து உயிர்களுக்குத் தாகத்தைத் தணிப்பவை நீர்நிலைகளாகிய தீர்த்தங்களேயாகும். இவை நம்மில் நீராடுவார்க்கு உடல் தூய்மையை அளிப்பதுடன் மனத்தூய்மையையும் அளிக்கவல்லன.

அனைத்து சிவாலயங்களிலும் அமைந்துள்ள தீர்த்தக் குளங்கள் தனிச்சிறப்பைப் பெறுகின்றன. திருத்தலங்களில் தேவர்களாலும், முனிவர்களாலும் அரசர்களாலும் அமைக்கப்பட்ட அநேக தீர்த்தங்கள் உள்ளன. தலபுராணங்களில் தீர்த்தங்களின் மகிமையும் அவற்றில் மூழ்குவதால் கிடைக்கும் பலனும் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் இறுதியில் இறைவனே எழுந்தருளி முதன்மைத் தீர்த்தத்தில் நீராடித் தீர்த்தம் அளிப்பதைக் காண்கிறோம். இதனைத் தீர்த்தவாரி உற்சவம் என்றழைக்கின்றனர். தீர்த்தக்குளங்களைச் செப்பனிடுதல், படிகட்டுதல், தூர்வாருதல், சுற்றிலும் மலர்ச்செடி கொடிகளை வளர்த்தல் முதலிய யாவுமே சிவபுண்ணியச் செயல்களாகப் போற்றப்படுகின்றன.

குளத்தைப் பேணிக்காப்பதை சிவபெருமானைப் போற்றுவதாகவே எண்ணுகின்றனர். அறுபத்து மூவரில் ஒருவரான தண்டியடிகள் திருக்குளப்பணி செய்து மேன்மை பெற்றதைப் பெரிய புராணத்தால் அறிகிறோம். சில தலங்களில் அடியவர்களின் நன்மைக்காக சிவபெருமானே தீர்த்தங்களை உண்டாக்கியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

ஆதிநாளில் திருத்தலங்களுக்கு மேற்கொள்ளும் யாத்திரையைத் தீர்த்த யாத்திரை என்றே அழைத்தனர். அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செய்து பாரத நாட்டிலுள்ள அநேக சிவத்தலங்களிலும் வழிபட்டானென்றும், பாரத யுத்தத்தில் கலந்துகொள்ள விரும்பாத பலராமர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார் என்றும், மகாபாரதம் கூறுகிறது. சிலப்பதிகாரத்தில், கீரந்தை எனும் அந்தணன், மாடல மறையவன் முதலியோர் தீர்த்த யாத்திரை மேற்கொண்டு இமயம் முதல் குமரிவரை சென்று திரும்பியதைக் காண்கிறோம்.

பொதுவாகத் தீர்த்தங்கள் என்றதும் நமக்கு திருக்குளங்களே  நினைவுக்கு வருகின்றன. ஆனால் நதிகள், சுனைகள், தலத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகள் யாவுமே தெய்வத்தன்மை பெற்றுத் தீர்த்தங்களாக விளங்குகின்றன. இறைவனின்  எண் பெருவடிவங்களில் ஒன்று தண்ணீராகும். நீர் மயமான இறைவனை ஜலகண்டேசுவரர், ஜலநாதேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் எனப் பலவாறு அழைக்கின்றனர்.

இறைவன் ஆலயத்தில் சிவலிங்கமாகவும் வேள்விக் குண்டங்களில் தீயாகவும், தீபச்சுடர்களில் ஒளியாகவும் திருக்குளங்களில் தீர்த்தமாகவும் விளங்குகின்றான். தண்ணீராக இருக்கின்ற சிவபெருமான் உயிர்களின் தாகத்தைத் தணிப்பவனாகவும் விளங்குகின்றான். பெண்ணாடகத்தின் மேற்கில் அமைந்துள்ள இறையூரில் இறைவன் தாகந்தீர்த்தேஸ்வரர் எனும் சுயம்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள அம்பிகை அன்னபூரணி என்றழைக்கப்படுகிறாள்.

தீர்த்தங்களில் மூழ்குவதால் கொலை, களவு, பொய் பேசுதல் முதலியவற்றால் உண்டாகும் பாவங்கள் தீரும். புண்ணியம் பெருகும்.
புனித தீர்த்தத்தில் அறியாமலேயே மூழ்கினாலும், அது தனது பலனைத் தருகிறது. தீர்த்தத்தின் துளிகள் பட்டு மேன்மை பெற்றவர்களின் வரலாறுகளைப் புராணங்களில் காண்கிறோம். தீர்த்தங்களின் புனிதத் துளிகள்  பட்டுப் பேயுருவம், பூத பிசாசு உருவங்கள் நீங்கின என்று மகாபுராணங்கள் கூறுகின்றன. இவை கபால மோசனம், பிசாசு மோசனம், பூத மோசனம், பூத வேதாளத் தீர்த்தங்கள் எனப் பல பெயர்களைப் பெற்றுள்ளன. காசி நகரில் இப்பெயர்களில் பல தீர்த்தங்கள் உள்ளன.

புனிதத் தலங்கள் யாவும் தீர்த்தக்கரையில் அமைந்திருப்பதால் திருத்தலங்களுக்கே தீர்த்தங்கள் என்ற பெயர் வழங்குகிறது, எடுத்துக்காட்டாக திருக்கழுக்குன்றத்திற்குப் பட்சி தீர்த்தம் என்பது பெயராகும். அனைத்து தலபுராணங்களிலும் தீர்த்தங்களின் பெருமைகளை விளக்கும் பகுதியைக் காண்கிறோம். இதில் தீர்த்தங்கள் அமைத்தவர், அதில் மூழ்கிப்பேறு பெற்றவர்களின் வரலாறு. மூழ்க வேண்டிய காலம் ஆகியன விவரித்துக் கூறப்பட்டுள்ளன.

தீர்த்தங்கள் ஆலயத்திற்கு ஒப்பாக விளங்குபவை. ஆலயங்களுக்குக் காவலர், தலமரம் முதலியன இருப்பது போலவே தீர்த்தங்களுக்கும் தனித்தனியே அதிதேவதை, தேவதை, காவலர், மரம் ஆகியன உள்ளன. எடுத்துக்காட்டாக வைத்தீசுவரன் கோயிலில் ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் கோண்டராம தீர்த்தத்திற்கு அதிதேவதை ராமர், காவல் தெய்வம் இலக்குவன், விருட்சம் வன்னி. கௌதம தீர்த்தத்திற்கு அதிதெய்வம் வாயுபகவான், காவல் தெய்வம் சந்திரன், விருட்சம் மாமரம். வில்வ தீர்த்தத்திற்கு அதிதெய்வம் இந்திரன், காவல் தெய்வம் தண்டபாணி, விருட்சம் வில்வம். முனிவர் தீர்த்தத்திற்கு அதிதெய்வம் சந்திரசேகரர், காவல் தெய்வம் கருடன். விருட்சம் ஆலமரம். அகங்சந்தான தீர்த்தத்திற்கு அதிதெய்வம் வைத்யநாதர். காவல் தெய்வம் அஸ்திரதேவர், விருட்சம் விளா என்று புராணங்கள் கூறுகின்றன. பொதுவான நிலையில் தீர்த்தங்களின் காவலராக பைரவர் விளங்குகின்றார். அவருடைய அனுமதியைப் பெற்ற பின்னரே தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

ஆறுகள் வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் இடங்கள் மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. இவ்விடங்கள் உத்திரவாகினி என்றும் கங்கையிலும் வீசம் (1/16) அளவு அதிகம் புண்ணியம் தருபவை என்றும் போற்றப்படுகின்றன. தீர்த்தங்களை அமைப்பதால் மிகுந்த புண்ணியம் கிடைப்பதுடன், பழியும், பாவமும் விலகும் என்பதால் தேவர்கள், அசுரர்கள், மாமன்னர்கள், முனிவர்கள், யக்ஷர், கின்னரர் முதலான  எல்லோரும் இப்பூ மண்டலம் முழுவதிலும் சிறப்புடன் தீர்த்தங்களை அமைத்துச் சிவபெருமானை வழிபட்டுள்ளனர். இவை அமைத்தவர்களின் பெயரால் சிறப்புப்பெற்று விளங்குகின்றன. ஆயுதங்கள், விலங்குகள், பறவைகள்கூட பூர்வ புண்ணிய வினைப் பயனால் தீர்த்தங்களை அமைத்துப் பேறு பெற்றுள்ளன.

தீர்த்தேஸ்வரங்கள் உயிர்களைப் பற்றியுள்ள வினைகளைத் தீர்த்து இன்பம் அருளும் இறைவன் தீர்த்தேசுவரன் என்று அழைக்கப்படுகின்றான். நடைமுறையில் தண்ணீர் வடிவாக விளங்கும் பெருமானை ‘தீர்த்தேஸ்வரர்’ என்று அழைக்கின்றோம். மேலும் பூமியால் வழிபடப்பட்டபோது இறைவன் பூமீசுரர் என்றும், அக்னியால் வழிபடப்பட்டபோது அக்னீசர் என்றும் வாயுவால் வழிபடப்பட்டபோது வாயுவேசர் என்றும் அழைக்கப்பட்டதுபோலவே தீர்த்தங்களால் வழிபடப்பட்டபோது தீர்த்தேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். தீர்த்தக் கன்னியர்களும் கடலரசர்களும் சிவலிங்கம் அமைத்து வழிபட்ட தீர்த்தேஸ்வரங்கள் எனப்படும் சிவாலயங்களைப் பாரத தேசம் முழுவதிலும் காண்கிறோம்.

அவற்றில் சில இங்கே: திருக்கயிலை தீர்த்தபுரி

கயிலைமலைச் சாரலிலுள்ள சிவத்தலங்களில் ஒன்று தீர்த்தபுரியாகும். இது கயிலை மலையின் சுற்றுப்பாதையில் உள்ளது.
பஞ்சாபில் பாயும் ஐந்து நதிகளில் ஒன்றான சட்லஜ் நதி,  இமயத்தில் தொடங்கி ஓடும் கரையில் உள்ளது. இதற்கு அருகில் தீர்த்தபுரி மலைச் சிகரங்கள் உள்ளன. சிவபெருமான் பஸ்மாசுரனை சங்கரித்த இடம் இதுவேயாகும். இங்கு, ஆங்காங்கே வெந்நீர் ஊற்றுக்கள் உள்ளன. இவற்றில் நீராடுவதால் மனஅமைதியும் உடல் தூய்மையும் உண்டாகின்றன. தீர்த்தபுரிச் சிகரங்களில் இருந்து உற்பத்தியாகும் தீர்த்தபுரி நதி சட்லஜ் நதியோடு கலக்கிறது. இங்குள்ள வெந்நீர் ஊற்றுகளில் வெந்நீரோடு வெண்மையான பொடி வருகிறது. அதை மக்கள் விபூதிப் பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர். இம்மலைத் தொடருக்கு அருகில் ‘வஜ்ர வாராகி தேவி’ ஆலயம் உள்ளது. திருக்கயிலை மலை யாத்திரையின் ஓர் அங்கம் ‘தீர்த்தபுரி’ தரிசனமாகும்.

லை தீர்த்தபாலீச்சரம்

உருத்திரர்கள் தீர்த்தத்தினை விரும்பி அதில் உறைவதுடன் அதன் காவல் தேவதையாகவும் விளங்குகின்றனர். அதையொட்டி உருத்திரத்தலமான லாப்பூரில் உருத்திரர்கள் அமைத்து வழிபட்ட சிவாலயம் உள்ளது. இதில் பெரிய சிவலிங்கமாகத் தீர்த்தபாலீஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் பெயர் திரிபுரசுந்தரி என்பதாகும். இது லையில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று.

காசிநகர் தீர்த்தேச்சரம்

காசிநாதருக்குத் தீர்த்தராஜன் என்னும் பெயர் வழங்குகிறது. இங்குத் தீர்த்தராஜர் எனும் பெயரில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். மேலும் நதிதேவதைகள் அமைத்த யமுனேசர், கங்கேசர், சரஸ்வதீசர் முதலிய சிவாலயங்களும், கடலரசர்கள் அமைத்த சப்தசாகரேசம், சதுஸ்ர சாகரேசம் முதலிய சிவாலயங்களும் மணிகர்ணிகா முதலான தீர்த்தங்கள் அமைத்து வழிபட்ட மணிகர்ணிகேசர் முதலான சிவாலயங்களும் உள்ளன.

செழுநீர்த்திரள்

தீர்த்தங்களே திரண்டு சிவலிங்கமானதைப் பஞ்ச பூதத்தலங்களில் ஒன்றான திருவானைக்காவலில் காண்கிறோம். இது திருச்சியின் ஒரு பகுதியாகத் திகழும் திருத்தலமாகும். காஞ்சியில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபட்டதைப் போலவே அம்பிகை இங்கு தண்ணீரைத் திரட்டிச் சிவலிங்கமாக்கி வழிபட்டாள். இதையொட்டி பெருமான் அப்புலிங்கம், ‘செழுநீர்த்திரள்’ நீரானார் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றார். இங்குள்ள கருவறை காவிரியாற்றின் நீர் மட்டத்திற்குக் கீழே உள்ளது. இதனால் இதில் நீர் சுரந்துகொண்டே இருக்கின்றது. முன்னாளில் இங்கு அதிகமாக நீர் சுரந்து லிங்கத்தை மூடிக்கொள்ளும் என்றும் அதை இறைத்துவிட்டே தினப்பூஜைகள் நடைபெற்றனவென்றும் கூறுகின்றனர். இந்நாளில் நீர் சுரப்பது அதிக அளவு இல்லையென்றாலும் கருவறை எப்போதும் ஓரளவு நீருடன், ஈரமாகவே உள்ளது.

காஞ்சி நகர் தீர்த்தேசம்

காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்திற்கு அருகில் சர்வ தீர்த்தம் என்ற பெரிய திருக்குளம் உள்ளது. இதன் கரையிலுள்ள தீர்த்தேஸ்வரம் என்ற சிவாலயத்தில் சிவபெருமான் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.
தென்பாண்டி மண்டலத்தில் தாமிரபரணி ஆறு, குற்றால அருவி முதலான இடங்களில் நீராடும் துறைகளிலுள்ள பாறைகளில் சிவலிங்கம், நந்தி வடிவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இவையும் தீர்த்தேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றன. வெள்ளப்பெருக்கின்போது புரண்டோடும் தண்ணீர் இந்தத் திருவுருவங்களைத் தழுவிச் செல்கின்றன. திருக்குற்றாலத்தில் அருவியை ஒட்டியுள்ள பாறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட லிங்கங்கள் செதுக்கப்
பட்டிருப்பதைக் காணலாம்.

திருக்குளங்களைச் சிவனின் நீர்வடிவ மேனியாகவே போற்றி வணங்க வேண்டும் என்பதைக் குறிக்கும் வகையில் திருக்குளங்களின் நீர் மட்டத்தில் சிவலிங்கத்தை அமைத்துள்ளனர். இவருக்குத் தீர்த்தேஸ்வரர் என்ற பெயர் வழங்குகிறது.

சிதம்பரம் சிவகங்கைத் தீர்த்தத்தில் தண்ணீர் மட்டத்தில் லிங்கம் அமைந்துள்ளதைக் காண்கிறோம். திருவள்ளூரில் திருமால் ஆலயத்திற்குச் சொந்தமான பெரிய திருக்குளத்தின் வடமேற்குக் கரையில் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.

சென்னை-போரூருக்கு அருகிலுள்ள பரணிபுத்தூர், காஞ்சி மாவட்டம் கயப்பாக்கம், திருவள்ளூர், நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூர், பெரம்பலூர் மாவட்டம் சென்னிவனம் முதலிய இடங்களில் தீர்த்தேசுவரர் ஆலயங்கள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் கடம்பனூரில் பெருமான் சர்வ தீர்த்தேசுவரர் எனும் பெயரில் வீற்றிருக்கிறார்.

இறைவன் தீர்த்தங்களால் வழிபடப்பட்ட  தீர்த்தேசனாக எழுந்தருளியுள்ள ஆலயங்கள் மட்டுமின்றி புராணங்களில் சொல்லப்பட்டபடி முறையாக தீர்த்த யாத்திரை மேற்கொண்டு, காசி-ராமேசுவரம், கன்னியாகுமரிவரை சென்று ஊர் திரும்பியவர்களும் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் சிவலிங்கம் அமைத்துக் கட்டியுள்ள சிவாலயங்களையும் காண்கிறோம்.

தீர்த்தபுரிகள்

சில தலங்கள் தீர்த்தங்களால் சிறப்புப்பெற்று, தீர்த்தபுரி, தீர்த்த நகர் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றன. திருத்துறைப்பூண்டிக்கு நவகோடி தீர்த்தபுரம் எனும் பெயர் புராணத்தில் வழங்கப்படுகிறது. இவ்வூர்த் தலபுராணத்தில் இங்குள்ள மூலமூர்த்தி நவகோடி தீர்த்தேஸ்வரர் என்றும், தியாகேசர் தீர்த்தவிடங்கர் என்றும் அம்பிகை தீர்த்தவல்லி என்றும் குறிக்கப்பட்டுள்ளனர்.

தீர்த்தமலை

தருமபுரி மாவட்டத்தில் அரூருக்கு அருகில் தீர்த்தமலை எனும் திருத்தலம் உள்ளது. இங்குள்ள 3200 அடி உயரமுள்ள மலையின் மீது சிவபெருமான் தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் பெரிய சிவாலயத்தில் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் பெயர் வடிவாம்பிகை. இம்மலையில் குளம், சிற்றோடை, சுனை எனப்பல வடிவில் ஏராளமான தீர்த்தங்கள் உள்ளன. இதையொட்டி இம்மலை தீர்த்தமலை என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள தீர்த்தங்களில் ராம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், அக்னி தீர்த்தம், குமார தீர்த்தம், கெளரி தீர்த்தம் என்ற ஐந்தும் முதன்மை பெற்றதாகும். ராமபிரான் இங்கு வந்து தங்கியபோது சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்கு நீர் கிடைக்காததால் அனுமனிடம், கங்கை நீரைக்கொண்டுவரும்படிக் கூறினார். அனுமன் இமயத்திற்குச் சென்று ஒரு குடத்தில் கங்கையை எடுத்துக்கொண்டு வந்தார்.

அவர் வருவதற்குள் பூஜைக்குரிய காலம் நெருங்கிவிட்டதால் ராமர் தனது பாணத்தைப் பூமியில் செலுத்தித் துளையிட்டார். அதன் மூலமாக கங்கை பொங்கி வந்தாள். ராமர் மகிழ்வுடன் அந்நீரால் சிவபூஜை செய்தார். நேரம் கழித்து வந்த அனுமன் காலதாமதமாகி விட்டதற்கு வருந்தினான். ராமர். அனுமனே, ‘‘அதோ தெரியும் மலையின்மீது நீ எடுத்துவந்த குடத்தினை வை அதிலிருந்து கங்கை பொங்கி வழிவாள், அந்தப் பொங்கும் புனல் உன் பெயரால் அனும தீர்த்தம் என்றழைக்கப்படும்,’’ என்று கூறினார். அதன்படியே அனுமான் அமைத்த அனுமதீர்த்தம் உள்ளது. அது தீர்த்தகிரியிலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. சைவ எல்லப்ப நாவலர் பாடிய தீர்த்தமலை மான்மியம் எனும் நூலில் இத்தலத்திலுள்ள தீர்த்தங்களின் சிறப்பும், மகிமையும் விவரிக்கப்பட்டுள்ளன. இம்மலையின் அருகில் பெண்ணையாறு ஓடுகிறது.

இறைவன் அழைத்த தீர்த்தங்கள்

திருத்தலங்கள் தோறும் தீர்த்தங்களை அமைத்துத் தேவர்களும், மனிதர்களும் புண்ணியம் பெற்றுள்ளனர். சில தலங்களில் பக்தர்களின் பக்திக்கு இரங்கிச் சிவபெருமானே திருக்குளத்தை உண்டாக்கி அளித்ததையும் காண்கிறோம். அத்துடன் அதன் கரைகளில் அவர் தீர்த்தராஜன் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இப்பகுதியில் இறைவன் சமுத்திரம், பாற்கடல் சர்வ தீர்த்தங்கள் முதலியவற்றை அழைத்து தீர்த்தங்கள் உண்டாக்கிய வரலாறுகளையும் அதன் கரையில் அமைந்துள்ள சிவாலயங்களையும் பற்றி அறிந்துகொள்ளலாம்.

பாற்கடலை அழைத்தது தில்லை சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின்

பொன் தில்லை கூத்தைக்கண்டு பேறு பெற்றவர் வியாக்ர பாதர். இவருடைய குமாரர் உபமன்யு. ஒருசமயம் பசியால் வருந்திய உபமன்யு மிகவும் அழுதார். சிவபெருமான் அவருக்காக இரங்கிப் பாற்கடலை அழைக்க, அங்கே பாற்கடல் தோன்றியது. அதன் பாலைப் பருகிய உபமன்யு முனிவர் பசி தீர்ந்து மகிழ்ச்சி அடைந்தார். இதனை, மணிவாசகர் ‘பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்’ என்று குறித்துள்ளார்.

இந்தத் தீர்த்தம் பின்னாளில் மறைந்துவிட்டது. சிதம்பரம் வந்த மாணிக்கவாசகர் அது இருந்த இடத்தினையொட்டி ஆன்மநாத ஸ்வாமி ஆலயத்தை அமைத்தார். அங்கு அவர் தங்கியிருந்தபோது ஒருநாள் இரவில் இறைவன் ஒரு வேதியர் வடிவில் அவர் முன்னே தோன்றினார். ‘‘அன்பரே! இதுவரை தாங்கள் அவ்வப்போது அருளிச்செய்த திருவாசகத்தை மீண்டும் அருளிச்செய்க’’ என்றார். மணிவாசகர் சிவயோகத்தில் நிலை பெற்று மீண்டும் திருவாசகத்தை அருளிச்செய்தார். சிவபெருமான் அவற்றைப் பட்டோலையில் எழுதிக்கொண்டார்.

பின்னர் பெருமான் அவரிடம் ‘‘பாவை பாடிய வாயால் கோவையும் படுக’’ என்று கேட்டார். மணிவாசகரும் 400 பாடல்களைக் கொண்ட ‘‘திருச்சிற்றம்பலக் கோவையார்’’ எனும் நூலைப் பாடி அளித்தார். இடையிடையே அவருக்குத் தொண்டை வற்றியது. சிவபெருமான் முன்னிருந்த இடத்திலேயே பாற்கடலை மீண்டும் தோற்றுவித்தார். அந்தக் குளத்தின் பாலை அருந்தி அவர் பாடலைத் தொடர்ந்து பாடினார் என்று கூறப்படுகிறது. (இந்நாளில் இக்குளம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.)

இந்தத் தீர்த்தம் திருப்பாற்கடல் தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது. இதன் கரையில் அமைந்த ஆலயம் இந்நாளில் ஆவுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. இதில் ஆவுடையார், ஆவுடைநாயகி, (ஓடு ஏந்தி கவந்தி கட்டிய) மாணிக்கவாசகர், நந்தி ஆகிய திருவுருவங்கள் உள்ளன.

ஏழுகடலை அழைத்தது :

மதுரையில் பார்வதிதேவி, பாண்டிய மன்னனுக்கும் காஞ்சனமாலை தேவிக்கும் மகளாகத் தோன்றி தடாதகைப் பிராட்டி எனும் பெயரில் வளர்ந்து வந்தாள். பாண்டியன் மாண்ட பிறகு அவள் அந்நாட்டு அரசியானாள். சில நாட்கள் சென்றதும் அவளுக்கும் சோமசுந்தர பாண்டியனாகத் தோன்றிய சிவபெருமானுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு முருகப்பெருமான் மகனாகத் தோன்றினார். அவருக்கு ‘உக்ரகுமாரர்’ எனும் பெயரிட்டுக் கொஞ்சி மகிழ்ந்தனர்.

ஒருசமயம் பாண்டிமா தேவியான காஞ்சனமாலையாரின் அரண்மனைக்குக் கௌதம முனிவர் வந்தார். அவள் அவரை வணங்கி வரவேற்று, தான் செய்ய வேண்டிய தவங்களைப் பற்றிக் கூறுமாறு வேண்டினாள். அவர் புண்ணியச் செயல்களில் முதன்மை பெற்றது, சிவத்தலங்களில் சென்று நீராடுதலாகும். அதனினும் சிறந்தது கங்கை முதலிய நதிகளில் நீராடுதல். எல்லோராலும் எல்லா நதிகளுக்கும் சென்று நீராட முடியாது என்பதால் எல்லா நதிகளும் கலக்கும் கடலில் நீராடுதல் மிகவும் சிறப்புடையது என்றார்.

அவளுக்கு, கடலில் நீராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைத் தன் மகளான தடாதகைப் பிராட்டியாரிடம் கூறினாள். அவள் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுமாறு தமது கணவனான சோமசுந்தர பாண்டியரிடம் தெரிவித்தாள்.

சிவபெருமான், ‘நீராட நீங்கள் கடல்களைத் தேடிச்செல்ல வேண்டாம். உமக்காக அவற்றை நாம் இங்கேயே அழைப்போம்’ என்றார். பின்னர் ஏழு கடல்களையும் ஒரு சேர, ‘இங்கே வருக!’ என அழைத்தார்.

அக்கணமே ஏழுகடல்களும் ஏழு வண்ணங்களுடன் மதுரையின் கிழக்குப் பக்கத்திலிருந்த ஒரு குளத்தில் திரண்டன. அலை வீசும் அந்தக் கடல்களைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர். மீனாட்சி (தடாதகைப்) பிராட்டியார் தாயை அழைத்து உனது விருப்பம்போல் இங்கு நீராடி மகிழ்க என்றார். அப்போது அவள், ‘தீர்த்தங்களில் கணவனின் கையைப் பற்றிக்கொண்டு நீராட வேண்டுமென்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. உனது தந்தையார் உடனிருந்தால் நான் இன்னும் மகிழ்வுடன் நீராடுவேன்’ என்றாள்.

அதைக்கேட்ட சுந்தரபாண்டியரான சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் தன் மாமனாகிய மலையத்துவஜ பாண்டியனை, ‘இங்கே வருக’ என்றார். அவனும் அந்த சப்த சாகரக் கரையில் தோன்றினான்.

அவனிடம் ‘நீ உமது மனைவியுடன் கை கோர்த்து நீராடுக’ என்றார். காஞ்சனமாலை தனது கைம்பெண் கோலத்தை விலக்கி மங்கலக்கோலத்தில் கணவனுடன் சேர்ந்து நீராடி மகிழ்ந்தாள். அவர்கள் கரையேறியதும் புண்ணியப் பயனால் சிவசாரூப வடிவம் பெற்றனர். பின்னர் சோமசுந்தரப் பெருமானை வணங்கி யாவரும் காண, சிவலோகம் புகுந்தனர்.

ஏழுகடலும் ஒன்றாகத் தோன்றிய அந்தத்  திருக்குளம், மதுரையில் மீனாட்சி ஆலயத்திற்கு அருகில் சப்தசாகர தீர்த்தம் எனும் பெயரில் இருந்தது. (இந்நாளில் அந்தக் குளத்தைத் தூர்த்துப் பெரிய வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது) இதன் கரையில் சப்தசாகரேஸ்வரர் ஆலயமும், அதனுள் காஞ்சனமாலையின் திருவுருவமும் உள்ளன.

இந்த ஆலயத்தின் அருகில் திருவிளையாடற் புராண வரலாற்றை விளக்கும் ஐதீக சிற்பத் தொகுதியைக் காணலாம். சிம்மாசனத்தில் பெருமான் மீனாட்சி தேவியுடன் வீற்றிருக்கின்றார். அருகில் கௌதம முனிவர் நிற்கின்றார். சிறுகுளமான கடல் தீர்த்தத்தில் மூழ்குவது போன்று மலையத்துவஜ பாண்டியனின் கையைப் பிடித்துக்கொண்டு நிற்கும் காஞ்சனமாலை உள்ளாள். அடுத்து ஏழுகடல் மங்கையர் உள்ளனர். இவை கண்ணையும் கருத்தையும் கவர்வனவாகும்.

பாண்டிமாதேவியான காஞ்சனமாலையார் ஏழு கடலில் நீராடியதைப் போலவே, பஞ்சபாண்டவர்களின் அன்னையான குந்திதேவியும் ஏழு கடலில் நீராடி மகிழ்ந்ததாக நல்லூர்ப் புராணம் கூறுகிறது. மோட்டூர் எனும் ஊரில் ஓர் அரசனுக்காகச் சிவபெருமான் சப்தசாகரங்களையும் அழைத்ததாக டாக்டர்.உ.வே.சாமிநாதய்யர் குறித்துள்ளார். இறைவன்: உன்னதபுரீஸ்வரர். இறைவி: சிவப்பிரியா. தலமரம்: பனை.

சர்வ தீர்த்தங்களை அழைத்தது

பராசக்தி இறைவன் திருமேனியில் ஒருபாகமாகித் திகழும் வரம் வேண்டி காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்துகொண்டிருந்தாள். அப்போது சிவபெருமான் திருவிளையாடல் புரியக் கருதி உலகிலுள்ள தீர்த்தங்களெல்லாம் திரண்டு கம்பை நதியில் பெருக்கெடுத்து வருமாறு செய்தார்.

பெருகிய வெள்ளம், தான் பூஜிக்கும் லிங்கத்தை அழித்துவிடுமோ என்று அஞ்சிய உமாதேவியார், லிங்கத்தைத் தாவி அணைத்துக்கொண்டாள். அவளுடைய வளைகளும் முலைக் காம்புகளும் லிங்கத்தில் அழுந்தின. சிவபெருமான் வெளிப்பட்டு அவளை அணைத்துக்கொண்டு அவளுக்கு அருள்புரிந்தார்.

இறைவன் ஆணைப்படி பெருகிவந்த தீர்த்தங்கள் யாவும் காஞ்சியில் ஓரிடத்தில் தங்கி இறைவனை வழிபட்டன. அவை தங்கிய திருக்குளம் சர்வதீர்த்தம் எனப்பெயர் பெற்றது. அதன் கரையில் அந்தத் தீர்த்தங்கள் அமைத்து வழிபட்ட சிவபெருமான் சர்வ தீர்த்தேஸ்வரர் எனும்
பெயரில் வீற்றிருக்கின்றார்.

இப்படி அநேக தலங்களில் இறைவன் புனித தீர்த்தங்களையும், கடல்களையும் அழைத்துத் திருக்குளங்களை உண்டாக்கியதைத் தலபுராணங்களால் அறிய முடிகிறது. இறைவன், தீர்த்தங்களை அழைத்ததைப்போலவே முனிவர்களும்  தீர்த்தங்களை அழைத்து ஆறுகுளம் முதலியவற்றை உண்டாக்கினர்.

சப்தரிஷிகள் அழைத்த நிவாநதி

ஒருசமயம் சப்த ரிஷிகளான அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கௌதமர், காஸ்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களும் நடுநாட்டில் ஏழு இடங்களில் வந்து தங்கினர். அனைவரும் பூஜைக்கு நீர் வேண்டி புதிய ஆற்றை சிருஷ்டித்தனர். அந்த ஆறே வெள்ளாறு என்னும் நிவாநதியாகும். தேவாரத்தில் இந்த ஆறு குறிக்கப்பட்டுள்ளது. இது முனிவர்கள் தங்கியிருந்த இடங்களின் வழியாக  ஓடி மணிமுத்தாற்றில் கலந்தது. ஏழு முனிவர்களும் நீராடவும், நீரெடுக்கவும் ஏழு துறைகளை உண்டாக்கினர்.

இவை 1) ஆதித்துறை (காரியனூர்) 2) திருஆலந்துறை, 3) திருமாந்துறை, 4) ஆடுதுறை, 5) திருவதிட்டத்துறை (திட்டக்குடி) 6)  திருவரத்துறை, 7) திருக்கைத்துறை, (முடவன்துறை) ஆகியனவாகும். இவை ஒவ்வொன்றிலும் சப்தரிஷிகள் நிறுவி வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. இங்கு குறிக்கப்பட்டுள்ள அரத்துறை மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற திருப்பதியாகும். இறைவன் புராணத்தில் தீர்த்தேசுவரர் என்றும் நடைமுறையில் ஆனந்தீசுவரர் என்றும் அழைக்கப்படுகின்றார். அம்பிகை  அரத்துறை நாயகி என்கிற திரிபுரசுந்தரி.

நீரிடை நின்ற நிமலன்

தெய்வங்கள் நீரின் நடுவிலுள்ள தீவில் தனிமாளிகையில் வீற்றிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன. மகா கயிலாயத்தைச் சுற்றி பெரிய கடல்கள் இருப்பதாகச் சிவபுராணம் கூறுகிறது. விநாயகர் இட்சுசாகரம் எனும் கருப்பஞ்சாற்றுக் கடலின் மத்தியில் அமைந்துள்ள ஆனந்த பவனம் எனும் திருமாளிகையில் வீற்றிருப்பதாக விநாயக புராணம் கூறுகிறது. திருமால் பாற்கடலின் மத்தியில் பள்ளி கொண்டுள்ளார். இவ்வாறு அநேக தெய்வங்கள் நீரிடை வாழ்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டி நீர் நிலைகளின் நடுவே ஆலயங்களை அமைக்கும் வழக்கம் வந்தது.

சில தலங்களில் குளத்திற்கு நடுவே ஆலயங்களை அமைத்துள்ளனர். திருவாரூரில் கமலாயத் திருக்குளத்தின் நடுவே பெரிய சிவாலயத்தில் பெருமான் நாகநாதர் எனும் பெயரில் வீற்றிருக்கக் காண்கிறோம். திருப்பனந்தாள் காசி மடத்தில் குளத்தின் நடுவே விநாயகர் ஆலயம் உள்ளது.

ஆற்றின் நடுவே அமைந்த திட்டுகளிலும், ஆறுகளுக்கிடையே மேட்டுப் பகுதிகளிலும் ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டம் காங்கேயன் பாளையத்தை ஒட்டி ஓடும் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பெரிய பாறையில் சிவாலயம் உள்ளது. அகத்தியர் வழிபட்டுப் பேறு பெற்ற இத்தலம் நட்டாற்றீசுரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

பாலாறு கடலோடு  கலக்குமிடத்திற்குச் சற்று முன்பாக உள்ள பரமேசுவர மங்கலத்தில் ஆற்றுக்கு நடுவே மணல் திட்டில் கயிலாய நாதர் ஆலயம் உள்ளது. வெள்ளம் பெருகி வரும் காலங்களில் கரையில் இருந்தபடியே பூசனை செய்கின்றனர். காவிரி ஆற்றின் நடுவே மணல் திட்டில் அமைந்த ஊர் திருத்துருத்தி. குத்தாலம் என்றும் அழைக்கப்படும் அத்தலத்தில் பெருமான் ‘சொன்னவாறு அறிவார்’ எனும் பெயரில் திகழ்கிறார். காவிரிக் கரையில் பூந்துருத்தி எனும் தலம் உள்ளது. தாமிரபரணி ஆற்றின் நடுவே உள்ள பாறையில் குறுக்குத்துறை சுப்ரமணியர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்கள் நீரின் நடுவில் கோயில்களை அமைத்து மகிழ்ந்துள்ளனர். மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோயிலில் கடல்நீர் சுற்றித் தேங்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. அந்த நீரில் நாகர்கள் வந்து வழிபடுவதைக் குறிக்கும் வகையில் சுற்றிலும் நாகர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
 திருச்சியை அடுத்துள்ள திருப்பைஞ்சீவி எனும் தலத்தில் பல்லவர்கள் சிறுகுடைவரைக்கோயிலை அமைத்துள்ளனர். முத்துமலைத் தியாகர் வீற்றிருக்கும் இந்தச் சிற்றாலயத்தில் காவிரியில் வெள்ளம் வரும்போது சுற்றிலும் நீர் நிரம்பி விடும்.

திருந்துதேவன்குடி (நண்டாங்கோயில்), திருப்புகலூர், ஆலங்குடி முதலிய அநேக தலங்களில் சிவாலயங்களைச் சுற்றி அகழியை அமைத்துள்ளனர். இப்போது அந்த அகழியின் சில பகுதிகளைத் தூர்த்து ஆலயத்திற்கு நிரந்தரமான வழியாக அமைத்துள்ளனர். ஜோதிர் லிங்கங்களில் ஒன்று மகாகாளேஸ்வரர் ஆகும். இவர் அன்பர்களைக் காக்கப் பெரிய குளத்தின் மத்தியில் இருந்து ஜோதிவடிவமாக வெளிப்பட்டார் என்று
சிவபுராணம் கூறுகிறது.

சிவலிங்கங்களோடு இணைந்த சிறப்புமிக்க தீர்த்தங்கள்

சில ஆலயங்களில் மூலமூர்த்தியான சிவலிங்கத்திற்குக் குறிப்பிட்ட கிணற்றிலிருந்து கொண்டுவருகின்ற தண்ணீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தீர்த்தங்களைக் கொண்டு அபிஷேகம் செய்தால் இந்தச் சிவலிங்கங்கள் சில்லு சில்லாகப் பெயர்ந்துவிடும் என்கின்றனர்.

அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான திருக்கடவூரில் மார்க்கண்டேயரால் பூஜிக்கப்பட்ட சிவலிங்கம், அமிர்தகடேசுவரர் எனும் பெயரில் உள்ளது. இந்த மூலத்தான லிங்கம் அமுதத்தால் ஆனது. இந்த லிங்கத்திற்கு, இக்கோயிலுக்கு நேர் கிழக்கில் ஏறத்தாழ ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள (திருக்கடவூர் மயானம்) திருமெஞ்ஞானம் பிரம்மபுரீசுவரர் ஆலயத்திற்குத் தெற்கிலுள்ள அசுபதி தீர்த்தத்தால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. இத்தீர்த்தம் நான்குபுறங்களிலும் சுவர் எழுப்பிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதிலிருந்து தினமும் மாட்டுவண்டி மூலம் பெரிய செப்புப் பாத்திரங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து அபிஷேகம் செய்கின்றனர்.

காளத்தியிலுள்ள காளத்தியப்பர் லிங்கம் நாகங்களின் பாஷாணத்தால் உண்டாக்கப்பட்டதென்று கூறுகின்றனர்.  இதற்குச் சூரிய தீர்த்தம் எனும் கிணற்று நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

 இந்த நீருடன் பச்சை கற்பூரம் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த தீர்த்தத்தை சங்கு வடிவமான செப்புப் பாத்திரத்தில் முகந்து அன்பர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த சூரிய தீர்த்தம், ஆலயத்திலிருந்து சொர்ணமுகி ஆற்றிற்குச் செல்லும் வழியில் சிறு மண்டபத்திற்குள் உள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள சிறு சந்நதியில் சிவபெருமான் சிவசூர்யனாக எழுந்தருளியிருக்கிறார்.

தொண்டை நாட்டுத் திரிபுராந்தகத் தலமான திருவிற்கோலம் இந்நாளில் கூவம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு வீற்றிருக்கும் சிவலிங்கமூர்த்திக்குத் திரிபுராந்தகேஸ்வரர் என்பது பெயராகும். இந்தச் சிவலிங்க மூர்த்திக்கு இரண்டு கி.மீ. தொலைவில் ஓடும் கூவம் ஆற்றிலுள்ள திருமஞ்சன மேடை என்ற இடத்திலிருந்து நீர் கொண்டுவந்து நான்கு காலங்களிலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. வேறு தண்ணீரைக்கொண்டு அபிஷேகம் செய்தால் சுவாமி மீது சிற்றெறும்புகள் படர்ந்துவிடும் என்கின்றனர்.

காவிரிக்கரையிலுள்ள தலம் வாட்போக்கி எனும் ரத்தினகிரி மலையாகும். இங்குள்ள மலை மீது பெருமான் ரத்தினகிரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இப்பெருமானுக்கு தினமும் அபிஷேக பண்டாரத்தார் எனும் வகுப்பார் ஆண்டாண்டு காலமாக இவ்வாறு காவிரியிலிருந்து மலைக்கோயிலுக்கு நீர் எடுத்துச்சென்று அபிஷேக சேவை செய்து வருகின்றனர்.

திருத்தலங்களில் நிறைந்திருக்கும்  தீர்த்தங்கள்

குளங்களை அமைப்பதும், பராமரிப்பதும் மிகுந்த புண்ணியச் செயல்களாகும். முப்பத்திரண்டு அறங்களில் ஒன்று குளம் வெட்டுவதாகும். இக்கருத்தை ஒட்டிப் பெரிய தலங்களில் பல தீர்த்தங்கள் அமைக்கப்பட்டன. பெருந்தலங்களில் அதிக அளவு மக்கள் கூடி வழிபடுவதால் அவர்களின் தேவைக்கு ஏற்ப குளங்களும், நீர்நிலைகளும் இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

ஒவ்வொரு தலத்திற்கும் பாடப்பட்டுள்ள  தலபுராணங்களில் தீர்த்த மகிமை குறித்த அத்தியாயத்தில் அத்தலத்திலுள்ள தீர்த்தங்களின் சிறப்பும், அது உண்டாக்கப்பட்டதற்கான காரணம், அதை உண்டாக்கியவரின் சிறப்பு, அதில் இன்னின்ன காலங்களில் மூழ்குவதால் கிடைக்கும் பலன்கள் ஆகியவை விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. திருத்தலங்கள் தோறும் தேவர்கள், முனிவர்கள், அப்சரஸ்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள், அரசர்கள், நாகர்கள், ஆயுத புருஷர்கள் முதலியோர் சிறப்புடன் வழிபட்டு, தீர்த்தங்கள் அமைத்ததைத் தலபுராணங்களால் அறிய முடிகிறது.

தீர்த்த யாத்திரை என்றதுமே நினைவுக்கு  வருவது காசியும், ராமேஸ்வரமும் ஆகும். காசித்தலம் வருணா-அசி என்னும் இரண்டு ஆறுகள் கங்கையோடு கலக்குமிடத்தில் உள்ளது. இரண்டு நதிகளின் நடுவில் இருப்பதால் காசிக்கு ‘வாரணாசி’  எனும் பெயர் வழங்குகின்றது. காசி நகருக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றின் கரையிலும் விநாயகர், சூரியன், பைரவர் முதலிய பரிவாரங்களுடன் சிவமூர்த்தி வீற்றிருக்கின்றார்.இவற்றில் ஆனந்த கூபம், லோலார்க்க குண்டம், துர்க்காகுண்டம், பைரவகுண்டம், கெளரி குண்டம் என்பன மிக முக்கியமானவை. அன்பர்கள் தினமும் கங்கையில் நீராடி சிறிய கரகத்தில் கங்காநீரை எடுத்துக்கொண்டு சென்று விசுவநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இங்கு பஞ்ச குரோச யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்குள்ள தீர்த்தங்களில் நீராடி அவற்றின் அருகிலுள்ள சிவமூர்த்தங்களை வழிபடுகின்றனர்.

இந்தத் தீர்த்தங்களைத்தவிர, கங்கைக் கரையில் 64 கட்டங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் தனித்தனி பெயர்களுடன் சிவபெருமான் விநாயகர், பைரவர், அம்பிகை ஆகியோருடன் வீற்றிருக்கின்றார். கங்கைக் கரையிலுள்ள பஞ்ச கங்கா காட், அனுமன் காட், ஹரிச்சந்திரா காட், தசாஸ்வமேதா காட், மணிகர்ணிகா காட் என்பன சிறப்புடன் திகழ்கின்றன.

சேது எனப்படும் ராமேஸ்வரம், ஜோதிர்லிங்கத்தலங்களில் ஒன்றாகும். இங்கு ராமர், ராவணனைக் கொன்றதால் உண்டான பிரம்மஹத்தி தோஷத்தைச் சிவலிங்க வழிபாடு செய்து போக்கிக்கொண்டார். அவர் சிவபூஜை செய்ய சீதாதேவி வெண் மணலால் உருவாக்கிய லிங்கமே இந்நாளில் ராமலிங்கேசுவரராகத் திகழ்கிறது. இத்தலத்தில் ஆலயப்பிராகாரங்களில் தேவர்களும், தேவியர்களும் உண்டாக்கிய 36 தீர்த்தங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் சிறு கிணறு வடிவில் உள்ளன. சில இடங்களில் இரண்டு மூன்று கிணறுகள் அடுத்தடுத்து உள்ளன.

அக்னி தீர்த்தமாகிய கடலில் மூழ்கியபின், இவை அனைத்திலும் மூழ்கி இறுதியில் ஆலயத்தின் உட்பிராகாரத்திலுள்ள கோடி தீர்த்தத்தில் மூழ்குகின்றனர். இந்தத் தீர்த்தங்கள் அளவால் சிறியதாக தொட்டிபோல் இருப்பதால் இவற்றுள் இறங்கி நீராட முடியாது. வாளியால் நீரை முகந்து குளிக்கின்றனர். மூன்றாம் பிராகாரத்திலுள்ள லட்சுமி தீர்த்தம் பெரிய திருக்குளமாக விளங்குகிறது. இதன் கரையில் மகாலட்சுமியின் ஆலயம் உள்ளது.

காசி-ராமேஸ்வர தீர்த்த யாத்திரை மேற்கொள்பவர்கள் காசியில் விஸ்வநாதரை வழிபட்டுப் பிரயாகை என்னும் அலஹாபாத் திரிவேணியில் கங்கை நீரை எடுத்துவந்து ராமேஸ்வரம் ராமநாதருக்கு அபிஷேகம் செய்கின்றனர். அங்கே கடலாகிய அக்னி தீர்த்தத்தில் மூழ்கிக் கொஞ்சம் மண்ணெடுத்து அதைச் சிவலிங்கமாக பூசிக்கின்றனர். பின்னர் அந்த லிங்கத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் பிரயாகைக்குச் சென்று அங்கு கங்கை நீரில் கரைத்து விடுகின்றனர். அக்னி தீர்த்த மணல் லிங்கத்தைக் கங்கையில் விடுவதும், கங்கை நீரால் ராமநாதரை நீராட்டி வழிபடுவதுமே காசி-ராமேஸ்வர யாத்திரையின் முதன்மை நிகழ்ச்சிகளாகும்.

காஞ்சிபுரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தீர்த்தங்கள் உள்ளன.  இவற்றில் முக்கியமானவை நவகிரகங்களால் அமைக்கப்பட்ட பருதி தீர்த்தம், சோம (சந்திர) தீர்த்தம், மங்கள தீர்த்தம் முதலான ஒன்பது தீர்த்தங்கள்.  முனிவர்களால் அமைக்கப்பட்ட அகத்திய தீர்த்தம் வசிட்ட தீர்த்தம், வாம தீர்த்தம் முதலியனவும் சித்தர்களால் அமைக்கப்பட்ட சித்தாமிர்தம் இஷ்ட சித்தி தீர்த்தம் முதலியனவும், பார்வதி சிவலிங்கம் அமைத்து வழிபட்ட உலகாணி தீர்த்தம், கம்பாநதி, அவள் நீராடியபோது உண்டான மஞ்சளாறு முதலியனவும், சரஸ்வதி, லட்சுமி முதலியோரால் அமைக்கப்பட்ட லட்சுமி தீர்த்தம்  சரஸ்வதி தீர்த்தம், துர்க்கா  தீர்த்தம், காளி தீர்த்தம், தேவ மாதர்களால் அமைக்கப்பட்ட ஐவர் அரம்பையர் தீர்த்தம், பாம்புகளால் அமைக்கப்பட்ட வாசுகி தீர்த்தம், அனந்த தீர்த்தம், ஆதிசேட தீர்த்தம், மகாகாள தீர்த்தங்களும் ஐராவதத்தால் உண்டாக்கப்பட்ட ஐராவத தீர்த்தம் முதலியனவும் ஆகும்.

நளன் வழிபட்டுப் பேறு பெற்ற திருநள்ளாற்றில் பதிமூன்று தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் எட்டு அட்டதிக்குப் பாலகர்களால் உண்டாக்கப்பட்டவை. எஞ்சியவை பிரம்மன், வாணி, அன்னம், நளன், கங்கை ஆகிய ஐவரால் அமைக்கப்பட்டன. வேதாரண்யத்தில் (திருமறைக்காட்டில்) 96 தீர்த்தங்கள் இருந்ததாகப் புராணம் கூறுகின்றது. இவற்றில் கடல் தீர்த்தம், காசிக்கு இணையான மணிகர்ணிகா, வேதாமிர்தம் எனும் ஏரி, விசுவாமித்ர தீர்த்தம், விக்னேசுவர தீர்த்தம் முதலியன முக்கியமானவை. இவற்றில் பெரும்பாலானவை இப்போது காணக்கிடைக்கவில்லை.

திருவண்ணாமலையில் 360 தீர்த்தங்கள் இருந்ததாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. புராணங்களில் திக்பாலகர்களால் உண்டாக்கப்பட்ட எட்டு தீர்த்தங்களுடன், சுக்கிர தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம்,  திருமுலைப்பால் தீர்த்தம், பவளப்பாறை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம், அஸ்வினி தீர்த்தம் முதலிய குளங்களும், திருநதி, சோனைநதி, சேயாறு முதலிய ஆறுகளும் தீர்த்தங்களாகக் கூறப்பட்டுள்ளன.

இவற்றில் மூழ்கி அண்ணாமலையாரை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் அருணாசல புராணத்தில் விரிவாகக் குறிக்கப்பட்டுள்ளன. திருவிடைமருதூரில் 36 தீர்த்தங்கள் இருந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. இவற்றில் முதன்மை பெற்று காவிரியில் படித்துறையாக உள்ள இடம் கல்யாண தீர்த்தமாகும். இங்கு, சுவாமி தைப்பூசத்தில் தீர்த்தமளிப்பார். இதற்குப் பூசத்துறை, கல்யாண சிந்து என்பன பெயராகும்.

பல பெயர்கள் கொண்ட ஒரே தீர்த்தம்

ஒரு தலத்தில் பல தீர்த்தங்கள் இருப்பதைப்போலவே ஒரு பெரிய தீர்த்தக் குளத்துக்குள் பல பெயர்களுடன் பல தீர்த்தங்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக குடந்தை மகாமக தீர்த்தத்திற்குள் கிணறு வடிவில் பதினெட்டு தீர்த்தங்கள் உள்ளன.

இவை கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, குமரி, பாலி, சரயு, கோதாவரி, அக்னி, யம, வருண, வாயு, குபேர, ஈசான இந்திர ஆகியனவாகும். இக்குளத்தின் நடுவில் 66 கோடி கன்னியர்களால் அமைக்கப்பட்ட கன்னி தீர்த்தம், தேவ தீர்த்தம் முதலியனவும் உள்ளன. இதன் கரையில் மேலே குறிக்கப்பட்ட தேவதைகள் வழிபட்ட பதினாறு சிறு சிவாலயங்கள் உள்ளன.

சில தீர்த்தங்களின் நான்கு படித்துறைகளுக்கும் நான்கு பெயர்கள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக காஞ்சி கச்சபேசுவரர் ஆலயத்தில் உள்ள தீர்த்தத்தின் நான்கு படித்துறைகள் தர்ம சித்தி, மோட்ச சித்தி, அர்த்த சித்தி, காம சித்தி என்றும், நடுப்பகுதி இஷ்ட சித்தி என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் இதற்குத் தேவி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், சூரிய தீர்த்தம் எனும் பெயர்களும் உள்ளன. சில தீர்த்தங்களுக்கு ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு தனிப்பெயர்  வழங்குவதையும் காண்கிறோம்.

பூசை ச. அருணவசந்தன்