பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய கருவூலம்!




சிவலோக திருமடம் பணிகள் பாராட்டத்தக்கது. திருவாசகத்தின் சிறப்பை இயல், இசை, நாட்டியம், நாடகம் என பல வடிவில் அரங்கேற்றியது அருமை. வெளிநாடுகளில் திருவாசகத்தின் பெருமையை எடுத்துக்கூறியது ஆன்மிகத்திற்கு அழகு. நட்டாற்றீஸ்வரர், குடகின் மையப்புள்ளி.

புதிய கிளைகள் தோன்றாத தலவிருட்சம். ராசிக்கு உரிய விருட்சம். குள்ளமுனி பற்றி குறுந்தகவல். சித்திரையில் கம்மங்கூழ் நைவேத்தியம். ஆடியில் அகத்தியருக்கு மரியாதை. பரிசலில் சுவாமி உலா. முருகப்பெருமானின் ஞானக்கோலம்... ஆன்மிகம் வெறும் சஞ்சிகை அல்ல, ஆன்மிக பொக்கிஷம்!
- A.T. சுந்தரம், சென்னிமலை.

‘உள்ளம் உருகுதையா திருவாசகம் படிக்கையிலே...’ என்று பாட்டு நயமான தலைப்பில் மகேஸ்வரனுக்கு புகழ் மாலை சூட்டி மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தின் மாண்புகளை விவரித்த கட்டுரை குறித்து ஒரு வாசகம்:
‘‘சிவமயம் சிறப்பிதழுக்கு சூட்டப்பட்ட வைர மகுடம்!’’  சிவதாண்டவம் அட்டைப்படம் தொடங்கி சந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம்  தகவல்வரை கைலாயநாதனின் மகத்துவங்கள் கூறும் கட்டுரைகள், ஆலய வரலாறுகள் என அழகான தொகுப்பினைப் படித்து மனதில் இன்ப மயம்!
-அயன்புரம் த.சத்திய நாராயணன், பட்டாபிராம்

மனக்குழப்பமெல்லாம் தீர்த்தருளும் மகாதேவன் (வடகண்டம் ஆலயம்) சந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம் (லிங்கத ஹள்ளி), பூனைக்கும் நற்பேறளித்த பரமன் (கூறைநாடு புனுகீஸ்வரர் ஆலயம்) ஆகிய அரிய சிவாலயங்கள் குறித்த தகவல்கள் மனதிற்கு ரம்யத்தை அளித்திருந்தன.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

சிவமயம் ஸ்பெஷல் சிவபக்தர்கள் மனம் ஆனந்த தாண்டவம் ஆடியது அட்டைப்படம் படு சூப்பர்! ‘இறைவனின் முன்னேற்பாடு’ தலையங்கம் சிந்திக்க வைத்தது. தெளிவு பெறுஓம் ஆன்மிகக் குழப்பங்களைத் தெளியவைக்கிறது. அர்த்தமுள்ள இந்து மதம், வாழ்க்கைக் கல்வியின் வகுப்பறையாக உள்ளது. ஆன்மிகம் - என்றென்றும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய கருவூலம். எந்த காலத்திற்கும் ஏற்புடையதான கருத்துப் பெட்டகம்!
- வைரமுத்து, ராயபுரம்.

‘மன்னர் எவ்வழி, மக்கள் அவ்வழி!’ எனும் கருத்தை விளக்க, பி.என்.பரசுராமன் அவர்கள் கூறிய கதை அபாரம். ‘என்ன சொல்கிறது என் ஜாதகம்’ கேள்விகளுக்கான விளக்கங்களில் யதார்த்தமும், அன்பும், அக்கறையும், ஆதுரமும் பரிணமிப்பது சிறப்பு.
- மல்லிகா குரு, சென்னை-33.

அட்டையில் சிவபெருமானின் நடனம் கண்டு களிப்படைந்தேன். இறைவனே நேரில் வந்து காட்சி தந்தாற்போலிருந்தது. மனம் மகிழ்ந்த மகிழம்பூவானது. இதழாசிரியருக்குக் கோடானு கோடி நன்றிகள்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை-6.

பெங்களூருவில் லிங்கத ஹள்ளி சிவாலயத்தில் தென் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்படிக லிங்கமும், உலகின் மிகப்பெரிய பத்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றாகவும் முக்கண் முதல்வனாகிய சிவபெருமான் காட்சி நல்குவதை அறிய முடிந்தது. பேரையூர் நாகநாதர் திருக்கோயில் வரலாறு அறிந்து ஆனந்தம் அடைந்தோம்.
- இராம.கண்ணன், திருநெல்வேலி.